கண்வலிக்கிழங்கு.
1) மூலிகையின் பெயர் -: கண்வலிக்கிழங்கு
2) தாவரப்பெயர் -: GLORIOSA SUPERBA.
3) தாவரக்குடும்பம் -: LLIACEAE.
4) வேறு பெயர்கள் -: கலப்பைக்கிழங்கு, செங்காந்தள்மலர்,வெண்தோன்றிக் கிழங்கு, கார்த்திகைக் கிழங்கு, காந்தள்மலர்ச்செடி, நாபிக்கொடி, போன்றவை.
5) வகை -: க்ளோரியோசா சிற்றினங்கள், சிங்களேரி என்பன.
6) மூலப்பொரிட்கள் -: கோல்ச்சிசின் (Colchicines) மற்றும் சுப்பர்பின் (Superbine)
7) தாவர அமைப்பு -: இதற்கு வடிகால் வசதியுடைய மண்ஏற்றது. செம்மண், பொறை மண் ஏற்றது. மண்ணின் அமிலத்தன்மை 6.0 – 7.0 ஆக இருத்தல் நல்லது. கடினமான மண்உகந்தது அன்று. சிறிது வரட்சியைத் தாங்கும். வேலி ஓரங்களில்நன்றாக வளரும். இதன் பிறப்பிடம் இந்தியா. மற்ற நாடுகளான ஆசியா, ஆப்பிரிக்கா, இந்தோசீனா, மடகாஸ்கர், இலங்கை, அமரிக்கா போன்ற நாடுகளிலும் வளர்ந்து வருகின்றது. மருந்துப்பயன் கருதி வியாபார நோக்குடன் இந்தியாவில் சுமார் 2000 ஹெக்டரில் சாகுபடியாகிறது. தமிழ் நாட்டில் சேலம், கரூர், திண்டுக்கல், ஈரோடு, தஞ்சை, நாகை ஆகிய மாவட்டங்களில் தற்சமயம் பரவலாகப் பயிரிடுகின்றனர். சுமார் 1000 ஹெக்டர்கள்.பொதுவாக இதைக் கலப்பைக் கிழங்கு என அழைப்பர்கள்.இதன் கிழங்கு ‘V’ வடிவில் காணப்படும். கிழங்கு நட்ட 180 நாட்களில் பலன் தர ஆரம்பிக்கிறது. தமிழ் நாட்டில் ஜூன், ஜூலை மாதங்களில் (ஆடிப்பட்டம்) நடுவார்கள். இது கொடிவகையைச் சார்ந்தது ஆகும். இது பற்றி வளர்வதற்கு ஊன்றுகோல் தேவை. மூங்கில் கம்பு மற்றும் இரும்புக் கம்பிகளைக்கொண்டு ஒரு மீட்டர் அகலத்திற்கு 2 மீட்டர் உயரத்திற்கு பந்தல் அமைத்து அதன் மேல் கொடியை படரவிடவேண்டும். அல்லது காய்ந்த வலாரி மார் பயன்படுத்தலாம். நட்ட 30, 60, மற்றும் 90 நாட்களில் களை எடுத்தல் சிறந்தது. முதலில் நட்ட பின்பு நீர் பாச்ச வேண்டும், பின் 20 – 25 நாட்கள் இடைவெளியில் பாச்சினால் போதுமானது. ஆனால் சராசரி மழையளவு 70 செ.மீ. இருந்தால் போதுமானது. செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் பூக்கும். இதன் கிழங்கு ஒவ்வொன்றும் சுமார் 100 கிராம் வரை இருக்கும். கோடை காலத்தில் கிழங்குகள் ஓய்வுத்தன்மை பெற்று மழைக் காலங்களில் மட்டுமே கொடிகள் துளிர்த்து பூத்துக் காய்க்கும். இதன் பூ பளிச்சென்று ஆரஞ்சு, மஞ்சள் வண்ணப் பூக்களைக்கொண்ட கொடியாகும். விளைந்த காய்கள் பச்சை நிறத்திலிருந்து இளம்பச்சை அல்லது பழுப்பு நிறமாக மாறி, காய்களின் தோல் கருகிவிடும். இத்தருணத்தில் காய்களைப்பறிக்க வேண்டும். காய்கள் மதிர்ச்சி பெற்ற பின் பாசனம்அவசியமில்லை.
ஒரு கொடியில் சுமார் 150 பூக்கள் வரை பூக்கும். பூக்கள் விரிகின்ற சமயம் தன் மகரந்தச் சேர்க்கை மிகவும் குறைவாக இருப்பதால் அயல் மகரந்தச் சேர்க்கை உண்டாக்க, பூக்கள் விரிந்து மகரந்தம் வெளிப்படும் சமயத்தில் அரையடி நீளமுள்ள மெல்லிய குச்சி நுனியில் சிறிது பஞ்சைக் கட்டிக் கொண்டு பூக்களில் வெளிப்படும். மகரந்தத்தைப் பஞ்சால் தொடும் போது மகரந்தத்தூள் பஞ்சின் மீது ஒட்டிக் கொள்ளும், இதனைக் கொடிகளில் உள்ள மற்ற பூக்களின் சூல் பகுதியின் மீது தொட்டு அயல் மகரந்தச் சேர்க்கை ஏற்படுத்தலாம். இதைக் காலை 8 – 11 மணிவரை செய்வதால் உற்பத்தி பெருகும். நான்கு மாதத்தில் பூத்துக் கொடி காய்ந்து விடும்.அப்போது காய்களை அறுவடை செய்ய வேண்டும். செடி ஒன்றிக்கு 100 கிராம் விதை மற்றும் ஒரு கிலோ கிழங்கு வீதம் கிடைக்கும். ஒரு ஏக்கருக்கு 500 கிலோ கிடைக்கும்.காய்களைப் 10 -15 நாட்களுக்கு நிழலில் உலர்த்தி விற்பனைக்கு அனுப்பலாம். விதைகளைக் காற்றுப் புகாதவாறு பைகளில் சேமித்து வைப்பது நல்லது. விதைகள்ஒரு கிலோ ரூ.500-00 க்கு மேல் 1000 வரை விலை போகும்.இது ஒரு முக்கிய ஏற்றுமதிப் பொருளாகும். இதன் விதைமற்றும் கிளங்குகளின் வாயிலாகப் பயிர் செய்யலாம்.எனினும் கிழங்குகள் மூலமே வணிக ரீதியில் பயிர் பெருக்கம் செய்யப்படுகிறது.
8) பயன் படும் பாகம் – விதைகள் கிழங்குகள் ஆகியவை.
9) மருத்துவப் பயன்கள் – வாதம், மூட்டுவலி, தொழுநோய்குணமாக்கப் பயன்படுவதுடன் பேதி, பால்வினை நோய்வெண்குஷ்டம், ஆகியவற்றிக்கும் நல்லதோர் மருந்து.பிரசவ வலியைத் தூண்டும் மருந்தாகவும், சக்தி தரும்டானிக்காகவும் இருப்பதுடன், தலையில் வரும் பேன்களை ஒழிக்கவும் பயன் படுகிறது.
சுபர்பின் மற்றும் கோல்சிசின் ஆகிய மருந்துப் பொருட்கள் இதில்கிடைக்கின்றன. குடற்புழுக்கள், வயிற்று உபாதைகள் மற்றும் தேள், பாம்புக்கடிகளுக்கு நல்லதொரு மருந்து. இக்கொடியினைக் காட்டிலும் விதைகளில் தான் அதிகஅளவு கோல்சிசின் மருந்து காணப்படுவதால் விதைகள்மிகுதியான ஏற்றுமதி மதிப்பைப் பெற்றுள்ளன. அண்மை காலத்தில் ‘கோல்சிசின்’ மூலப் பொருளைக்காட்டிலும் இரண்டு மடங்கு வீரியமான ‘கோல்ச்சிகோஸைடு’ கண்டுபிடிக்கப்பட்டு மூட்டு வலி மருத்துவத்தில் மிகவும் பயன்படுத்துப் படுகிறது. இது ஐரோப்பிய நாடுகளில் கௌட்எனும் மூட்டுவலி நிவாரணத்திற்குப் பெரிதும் பயன்படுகிறது. மிக நுண்ணிய கிரிஸ்டல்களாக யூரிக் அமிலம்மூட்டுக்களில் தங்குவதால் இந்த ‘கௌட்’ வருவதாகவும்,இந்த மருந்து அவ்வாறு யூரிக் அமிலம் மிக நுண்ணிய கிரிஸ்டல்களாக தங்காவண்ணம் பாதுகாக்கிறது. இதனால்தொடர்ந்து மூட்டுவலி உண்டாகும் வட்டத்தினை இதுமுறித்து விடுவதாகச் சொல்லப்படுகிறது.
கலப்பைக் கிழங்கால் பாம்பின் விஷமிறங்கும், இன்னும் தலைவலி, கழுத்துவலி, குட்டம், வயிற்று வலி, சன்னி, கரப்பான் முதலியன நீங்கும் என்க.
உபயோகிக்கும் முறை -: இந்தக் கிழங்கை 7 வித நஞ்சுபதார்த்தங்களில் ஒன்றாகக் கூறப்படுகின்றது. இது பாம்புக்கடி, தேள்கொட்டு, தோல் சம்பந்தமான வற்றிக்குச் சிறந்தது.
உலர்ந்த கிழங்கை தினந்தோரும் புதிய கோமையத்தில் 3 நாள் வரையில் ஊறப்போட்டு மெல்லிய வில்லைகளாகஅரித்து உப்பிட்ட மோரில் போட்டு இரவு காலத்தில் ஊறவைப்பதும் பகலில் உலர்த்துவதுமாக 7 நாள் செய்யஅதிலுள்ள நஞ்சு விலகும். பாம்பு கடித்தவர்களுக்கு இதில்ஒரு சிறிய துண்டை மென்று தின்ணும் படியாகக் கொடுக்க விஷம் கால் அல்லது அரை மணி நேறத்திறுகுள் இறங்கும். உத்தேசித்த படி குணம் ஏற்பட வில்லையென உணரின் 3 மணி நேரத்திற்குப் பின் மீண்டும் ஒரு முறை முன் போல் கொடுக்க உடனே குணப்படும்.
இந்தக் கிழங்கை நன்றாய் அரைத்து ஒரு மெல்லிய சீலையில் தளரச்சியாக முடிச்சுக்கட்டி ஒரு மட்பாண்டத்தில் குளிர்ந்த சலத்தை வைத்துக் கொண்டு அதனில் முடிச்சை உள்ளே விட்டுப் பிசைந்து பிசைந்து சலத்தில் கலக்கி வர மாவைப் போன்ற சத்து வெளியாகும். முடிச்சை எடுத்து விட்டுச் சிறிது நேரம் சலத்தைத் தெளிய வைத்து கலங்காமல் தெளிவு நீரை வடித்து விட்டு மீண்டும் சிறிது சலம்விட்டுக் கலக்கி முன் போல் தெளியவைத்து வடிக்கவும் இப்படி 7 முறை செய்து உலர்த்தி அரைத்துச் சீசாவில் பத்திரப்படுத்தவும். இதனை தேகத்தின் சுபாவத்திற்கு ஏற்றவாறு, 1 அல்லது 2 பயனளவு ரோகங்களுக் குரிய அனுபானத்தில் கொடுத்துவரக் குஷ்டம், வயிற்றுவலி,சன்னி, சுரம், வாதகப சம்பந்தமான பல ரோகங்கள் குணமாகும். இந்த பிரோகத்தில் சரிவரக் குணம் ஏற்படா விடின் சிறிது மருந்தை அதிகப் படுத்திக கொள்ளவும்.ஒரு சமயம் கொடுத்த அளவில் ஏதேனும் துர்குணம் செய்திருப்பதாக உணரின் கால தாமதம் செய்யாமல் மிளகு கியாழத்தைக் கொடுத்து மருந்தின் வீறை முறித்துவிட வேண்டும்.
பிரசவ வேதனைப் படுகின்ற பெண்களுக்கும் நஞ்சுக்கொடி கீழ் நோக்காமல் வேதனைப் படுகின்ற பெண்களுக்கும் பச்சைக் கிழங்கை அரைத்துத் தொப்புழ், அடிவயிறு, உள்ளங்கை, உள்ளங்கால் முதலிய ஸ்தானங்களில் தடவிவைக்க உடனே வெளியாகும். உடனே தடவி வைத்துள்ள பாகத்தைச் சலம் கொண்டு சுத்தப்படுத்தவும். நஞ்சுக்கொடிக்காகச் சிகிச்சை செய்யும் போது கருஞ்சீரகத்தையும், திப்பிலியையும், சமனெடையாகச் சலம் விட்டு அரைத்துசிறு சுண்டைக்காய் பிரமாணம் வைன் சாராயத்தில் கலக்கிஉள்ளுக்குக் கொடுத்தால் சாலச்சிறந்தது.
இந்தக் கிழங்குடன் கருஞ்சீரகம், கார்போகஅரிசி, காட்டுச்சீரகம், கஸ்தூரி மஞ்சள், கிளியுரம்பட்டை, கௌலா, சந்தனத்தூள் முதலியவற்றைச் சமனெடை சிறிய அளவாகசலம் விட்டு நெகிழ அரைத்துச் சொறி, சிரங்கு, ஊறல்,படை, முதலியவற்றிக்குத் தேய்த்து நீராடிவரக் குணமாகும்.
அரைப்பலம் பச்சைக் கிழங்கைச் சிறு துண்டுகளாக அரிந்து 5 பலம் வேப்பெண்ணெயில் போட்டுச் சிறு தீயாக எரித்துக் கிழங்கு வில்லைகள் மிதக்கும் தறுவாயில் ஆர விட்டு வடித்து சீசாவில் பத்திரப் படுத்துக. இதனைப் பாரிசவாயு, தலைவலி, கழுத்து நரம்புகளின் இசிவு, கணுச் சூலை முதலியவற்றிக்குத் தேய்க்கக் குணமாகும்.