102


1. மூலிகையின் பெயர் :- கறிவேம்பு.

2. தாவரப்பெயர் :- MURRAYA KOENIGH.

3. தாவரக்குடும்பம் :- RETACEAE.

4. வேறு பெயர்கள் :- கறியபிலை, கருவேப்பிலை ஆகியவை.

5. பயன்தரும் பாகங்கள் :- இலை ஈர்க்கு, பட்டை மற்றும் வேர் ஆகியன.

6. வளரியல்பு :- கறிவேம்பு வீட்டுக் கொல்லைகளிலும் தோட்டங்களிலும் சாதாரணமாக வளர்க்கப்படுகிறது. இதன் பூர்வீகம் இந்தியா. பின் இலங்கையில் பரவிற்று. இது ஒரு உஷ்ணப் பிரதேச மரமாகும். இது பெருஞ்செடி வகுப்பைச் சேர்ந்தது. இது 12 அடி மூதல் 18 அடி வரை வளரக் கூடியது. மரத்தின் சுற்றளவு சுமார் 40 செ.மீ. கொண்டது. ஒரு இணுக்கில் 11 முதல் 21 சிறு இலைகள் இருக்கும். நேர் அடுக்கில் அமைந்துள்ள இலைகளைக் கொண்டது. இலை மணமுடையது. வெள்ளை நிறப்பூக்கள் கொத்துக்கொத்தாக இருக்கும். காய்கள் பச்சை நிறமாக உருண்டையாக இருக்கும். பழுத்த பின்னர் கருமை நிறமாக மாறும். விதைகள் விசத்தன்மையுடையது. 100 கிராம் இலையில் ஈரப்பதம் 66.3% கொழுப்பு 1.0% புரதசத்து 6.1% கார்போஹைட்ரேட்டுகள் 16.00% நார்சத்து 6.4% தாதுப்பொருள் 4.2% சி வைட்டமின் உட்பட அடங்கும். விதை மூலம் இனப் பெருக்கம் செய்யப்படுகிறது.

7. மருத்துவப்பயன்கள் :- கறிவேம்பு மருந்தாகப் பயன் படுத்துவதால் பசி மிகும், தாது பலம் பெருகும். வயிற்றில் வெப்பமுண்டாக்கி வாயுவைத் தொலைக்கும்.

கறிவேம்பு இலை சிறுதளவு, மிளகாய் இவற்றை நெய்யில் வதக்கிப் பழம்புளி, வறுத்த உப்பு சேர்த்து துவையலாக்கி முதல் கவளத்தில் பிசைந்து உண்ணக் குமட்டல், வாந்தி, அஜீரண பேதி, சீதபேதி, செரியா மாந்தம், வயிற்றுக் கோளாறு ஆகியவை தீரும்.

கறிவேம்பு இலைகளை நன்கு சுத்தம் செய்து நிழலில் உலர்த்தி எடுத்து, இதனுடன் தேவையன அளவு மிளகு, உப்பு, சீரகம், சுக்கு முதலியவை எடுத்து நன்கு பொடி செய்து சேர்த்து, சோற்றுடன் கலந்து, சிறிது நெய் சேர்த்து உண்டு வர மந்தம், பசியின்மை, மாந்த பேதி முதலியவை நீங்கி, உண்ட உணவை நன்கு சீரணிக்கவும் செய்யும்.

கறிவேம்பு இலையையும், மிளகையும் நெய்யில் வறுத்து வெந்நீர் விட்டு அரைத்து நன்கு கலக்கி, அந்நீரை சிறு குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்தத்திற்கு வயதுக்கு தக்கவாறு கொடுத்து வர, மாந்தத்தை நீக்கி பசியைத் தூண்டும்.

கறிவேம்பு ஈர்க்கு, வேம்பு ஈர்க்கு, முருங்கை ஈர்க்கு, நெல்லி ஈர்க்கு வகைக்கு 1 பிடி சுக்கு, மிளகு, சீரகம் வகைக்கு 20 கிராம் அரை லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராகக் காய்ச்சி வேளைக்கு 1 முடக்கு வீதம் தினம் 4 வேளைக் கொடுக்க சளி, இருமல், சுரம், வாதசுரம் தீரும்.

ஒரு பிடி இலையுடன் சிறிது சீரகம், மஞ்சள் சேர்த்து அரைத்து புன்னைக் காயளவு வெறு வயிற்றில் 45 நாட்கள் கொடுக்கப் பிட்ட மிகுதியால் வந்த பிதற்றல் பைத்தியம் தீரும்.

கறிவேப்பிலைப் பொடியுடன் சிறிது சர்கரைப் பொடி கலந்து காலை மாலை 1 தேக்கரண்டி சாப்பிட்டு வர நீர் கோவை சூதக வாய்வு தீரும்.

கருவேப்பிலை ஈர்க்கின் மேல் தோலை தாய்பால் விட்டு இடித்து சாறு பிழிந்து, அதனுடன் சிறுதளவு கிராம்பு, திப்பிலி, பொடிசெய்து சேர்த்து, வாந்தி இருக்கும் குழந்தைகளுக்குக் கொடுத்து வரலாம். இது சீரண சக்தியைத் தூண்டும்.

கருவேப்பிலையின் வேர்பட்டையை ஊற வைத்த ஊறல் குடிநீரை அறுபது மி.லி. அளவு இரண்டு வேளை அருந்தி வந்தால் வாந்தி நிற்கும்.

அஜீரணக் கழிச்சல், சீதக்கழிச்சல் உடையவர்கள் கருவேப்பிலை இலையை ஒரு கைப்பிடி அளவு பச்சையா உண்டு வருவது நல்லது.

கருவேப்பிலையை முறைப்படி குடிநீராகக் காய்ச்சி அருந்தி வந்தால் இது வெப்பகற்றியாகச் செயல்பட்டு, சுரத்தைக் குணப்படுத்தும்.

கருவேப்பிலை இலைச் சாற்றுடன் சிறிதளவு எலுமிச்சை சாறும் தேவையான அளவு சர்கரையும் கலந்து அருந்தி வர, அஜீரணத்தால் ஏற்படுகின்ற வாந்தி ஒக்காளம் முதலியவைகளுக்கு நல்ல குணம் தரும்.

கருவேப்பிலை இலைத்துளிரிலிருந்து எடுக்கப்பட்ட சாற்றுடன் தேன் கலந்து அருந்த பேதி, சீதபேதி, மூலம் இவைகளுக்கு நல்லது.

பரம்பரையின் காரணமாக ஏற்பட்ட நீரழிவிற்கு, உடல் பருமன் காரணமாக ஏற்பட்ட நீரழிவிற்கும், தினமும் பத்து கருவேப்பிலை இலைகளை காலையில் மட்டும் மூன்று மாதங்களுக்கு தொடர்ந்து அருந்தி வர நல்ல பலன் கிடைக்கும்.

கருவேப்பிலை இளநரையைத் தடுக்கும் ஒரு அற்புதமான மருந்தாகும். இதில் மயிர்கால்களை வலுவூட்டும் சத்து இருக்கிறது. மேலும் இந்த கருவேப்பிலையின் சாறு கண்களைப் பாதுகாத்து ஒளி ஊட்டி, கண்புரை நோய் ஏற்படாமல் தடுக்கிறது.

கருவேப்பிலை இலையை சமையலில் அதிகமாகச் சேர்ப்பது நம் நாட்டு வழக்கம். குழம்பு, கூட்டு, மிளகுநீர், கறிவகைகள், கருவேப்பிலைப் பொடி, நீர்மோர், துவையல் முதலியவைகளில் கருவேப்பிலை சேர்க்கப்படுகிறது.

உடுமலைப்பேட்டை அருகே சந்தோஸ் பாமில் உள்ள திரு.மதுராமகிருட்டினன் (கோவை மாவட்ட மூலிகை வளர்ப்போர் சங்க பொருளாளர்) தனது உரவினர் பெண்ணுக்கு உடம்பில் வெள்ளைத்தழும்புகள் இருப்பதற்கு தினமும் 10-12 கருவேப்பு இலைகளை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு உடல் முழுதும் கோமையம் பூசி சிறிது நேரம் கழித்து குழித்து வருவதால் வெண் தழும்புகள் மறைய ஆரம்பிப்பதாகச் சொன்னார்.

————————————————(தொடரும்)

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

மூலிகை வளம் Copyright © 2015 by குப்புசாமி is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book