99

1. மூலிகையின் பெயர் :- கல்யாண முருங்கை.

2. தாவரப்பெயர் :- ERYTHRINA INDICA.

3. தாவரக்குடும்பம் :- FABACEAE.

4. பயன் தரும் பாகங்கள் :- இலை, பூ, விதை, பட்டை ஆகியன.

5. வளரியல்பு :- கல்யாண முருங்கையின் பிறிப்பிடம் கிழக்கு ஆப்பிருக்கா. பின் தென் ஆசியா, வட ஆஸ்திரேலியா, இந்தியபெருங்கடல் தீவுகள் மற்றும் புயூஜி தீவுகளில் பரவிற்று. தாய்லேண்டு, வியட்னாம், பங்களதேஸ், வட சீனா மற்றும் இந்தியாவில் வளர்த்தனர். கல்யாண முருங்கை தமிழமெங்கும் வேலிகளில் வைத்து வளர்க்கிறார்கள். மிழகுக்கொடிகளைப் படரவிட இதை வளர்ப்பார்கள். காப்பிப் பயிர்களுக்கு இடையில் நிழலுக்காக வளப்பார்கள். இது சுமார் 85 அடி உயரம் வரை வளரக்கூடியது. இதன் இலைகள் அகன்றும் பெரிதாகவும் இருக்கும். இதன் மலர்கள் அதிகசிவப்பாக இருக்கும். இதன் இதழ்களை பெண்களின் உதடுகளுக்கு அக்காலத்தில் உவமையாக ஒப்பிடுவார்கள். ‘முருக்கிதழ் புரையும் செவ்விதழ்’ என வரும். உருட்டு விதைகளையும் முட்களையும் கொண்டமென்மையான கட்டைகளையும் உடைய மரம். விதைகள் கருப்பாக இருக்கும். முருக்க மரம் என்றும் வழங்கப்பெறும். கட்டைகளை வெட்டி ஈரத்தில் நட்டால்
உயிர் பிடித்துவளரும். விதை மூலமும் இனப்பெருக்கம் செய்யப்படும்.

மருத்துவப்பயன்கள் :- இது துவர்ப்பும் கசப்பும் கலந்த சுவையுடையது. இலை சிறுநீர் பெருக்கி, மலமிளக்கி,
தாய்பால் பெருக்கி, வாந்தி, வயிற்றுவலி, பித்த சுரம்,
உடல் வெப்பம், வாய் வேக்காடு, வயிற்றுப்புழு, ஆகிய
வற்றை நீக்கும். மாதவிலக்குத் தூண்டல் செய்கையும்
உடையது. பூ கருப்பைக் குறை நீக்கியாகவும், பட்டை கோழையகற்றி யாகவும், விதை மலமிளக்கி குடற்பூச்சிக் கொல்லியாகவும் செயற்படும்.

மாதவிலக்கில் கடுமையான வலி இருப்பவர்கள் கல்யாண முருங்கையின் இலைச்சாறு 50 மில்லி 10 நாள் சாப்பிட வலி தீரும்.

இதன் இலைச்சாறு 15 மி.லி. ஆமணக்கு நெய் 15 மி.லி. கலந்து இரு வேளை மூன்று நாள் குடிக்க வயிற்றுக் கடுப்பு குணமாகும்.

இலைச் சாறு 50 மி.லி. தேன் 20 மி.லி. கலந்து சாப்பிட மலக் கிருமிகள் வெளியேறும்.

இதன் இலைச்சாறு நாளும் 50 மி.லி. 40 நாள் குடித்து வர பெண் மலடு நீங்கி கரு தரிக்கும். நீர்த்தாரை எரிச்சில் குணமாகும். உடலும் இளைக்கும்.

இலையை நறுக்கி, வெங்காயம் போட்டு தேங்காய் நெய் விட்டு வதக்கி 5 முறை சாப்பிட பருவமடையும், குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு பால் சுரக்கும்.

சுவலாசகாசம் என்பது ஆஸ்துமா, இலைச் சாறு 30 மி.லி.யுடன் பூண்டுச்சாறு 30 மி.லி.சேர்த்து அரிசி கஞ்சியில் கலந்து 30 நாள் சாப்பிட ஆஸ்துமா குணமாகும். புலால், புகை, போகம் தவிர்க்கவும்.

60 மி.லி.இலைச்சாற்றுடன் 15 கிராம் உப்பு சேர்த்து காலை அருந்த பேதியாகும். பேதியில் பூச்சி வெளியேறும்.

இலைச் சாறு, தேங்காய், மஞ்சள் சேர்த்து அரைத்து மேல் பூச்சாகப் பூசி குளிக்க சொறி சிரங்கு தீரும்.

இலைச்சாறு 10 மி.லி.யுடன் வெந்நீர் 10 மி.லி. கலந்து குழந்தைக்கும் கொடுக்க கீரிப்பூச்சி வெளியேறும். கபம், இருமல் தீரும்.

வயிற்றுக் கடுப்புத் தீர 10 கிராம் மரப்பட்டையை 100 மி.லி. பாலில் ஊறவைத்து ஒரு மணிக்கு 20 மி.லி. வீதம் கொடுக்க நிற்காத வயிற்றுக் கடுப்பு குணமாகும்.

இலையை வதக்கி இளஞ்சூட்டுடன் வைத்து நாளும் கட்டிவர அரையாப்புக் கட்டி, வீக்கம் கரையும்.

சாறு 1 தேக்கரண்டி மோரில் கலந்து குடிக்க நீர்தாரை அழற்சி, நீர் எரிச்சல் தீரும்.

இலைச்சாற்றில் 5 அரிசி எடை விதைப்பருப்பு, சூரணம் சேர்த்து சாப்பிட குடற் பூச்சிகள் வெளியேறும்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

மூலிகை வளம் Copyright © 2015 by குப்புசாமி is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book