காட்டாமணக்கு.
1. மூலிகையின் பெயர் -: காட்டாமணக்கு.
2. தாவரப்பெயர் -: JATROPHA CURCAS.
3. தாவரக்குடும்பம் -: EUPHORBIACEAE.
4. பயன்தரும் பாகங்கள் -: இலை,பால், பட்டை, எண்ணெய் ஆகியவை.
5. வேறுபெயர்கள் -: ஆதாளை, எலியாமணக்கு ஆகியவை.
6. வகைகள் -: ஜெட்ரோபா சிளான்டிலிட்டரா, ஜெ.காசிப்பிட்டோலியா, ஜெ.பட்டாரிக்கா போன்றவை.
7. வளரியல்பு -: காட்டாமணக்கு சுமார் 5 மீட்டர் உயரம் வரை வளர்க்கூடிய சிறிய மரம். இது வெப்ப மண்டலம் மற்றும் மித வெப்ப நாடுகளில் நன்றாக வளர்க்கூடியது. தமிழ் நாட்டில் பெரும்பாலான கிராமங்களில் வேலிக்காக இது பயிர் செய்யயப்படுகிறது. இது 30-35 வருடங்கள் வரை வளர்ந்து பயன் தரக்கூடியதாகும் இது தென் அமெரிக்காவை தாயகமாகக் கொண்டு பின்னர் போர்த்து கீசியர்களால் ஆப்பிரிகா மற்றும் ஆசிய நாடுகளிக்கு கொண்டு வரப்பட்டவை. வரட்சியைத் தாங்கி வளர்க்கூடிய பயிராக இருப்பதாலும் தரிசு நிலங்களில் பயிரிடக் கூடிய பயிராகக் கருதப்படுகிறது. இதன் இலைகள் நன்கு அகலமாக விரிந்து 3-5 பிளவுகளை நுனியில் கொண்டதாகவும் நல்ல கரும்பச்சை நிறத்திலும் இருக்கும். 8 செ.மீ. நீளமும் 6 செ.மீ.அகலமும் உடையதாக இருக்கும். இதன் மலர்கள் கொத்தாகப்பூக்கும் தன்மையுடையது. இதன் தண்டு மிருதுவாகவும் 6 செ.மீ.முதல் 23 செ.மீ.வரை நீளமுடையதாகும். பூக்கள் மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் இருக்கும். பொதுவாக வெப்பமான காலங்களில் பூக்கும் காய்கள் கரு நீல நிறத்திலும் பெரிதாக இருக்கும். ஒரு கொத்தில் சுமார் 10 க்கு மேலான காய்கள் இருக்கும். காய்கள் பச்சை நிறத்திலிருந்து 4 மாதங்களில் மஞ்சளாக மாறி விதைகள் முற்றி வெடிக்கும். விதையிலிருக்கும் வெள்ளையான சதையிலிருந்து பயோ டீசல், எண்ணெய், புண்ணாக்கு கிளிசரால் கிடைக்கும்.
8. மருத்துவப் பயன்கள் -: இலை தாய் பாலையும் உமிழ் நீரையும் பெருக்கும், பால் இரத்தக்கசிவை நிறுத்தவும், சதை நரம்பு வீக்கத்தைக் குறைக்கவும் பயன்படும். இது சோப்புத் தயாரிக்கவும், இதில் ‘ஜெட்ரோபைன்’ எனப்படும் ஆல்க்கலாய்டு புற்று நோய் எதிர்ப்பிற்கும், தோல் வியாதிகளுக்கும் கால்நடைகளின் புண்களுக்கும் ஈக்களினால் உண்டாகும் தொல்லைகளுக்கும் மருந்தாகப் பயன்படுகிறது. இயற்கை பூச்சிக் கொல்லியாகவும், உராய்வு காப்பு பொருள் தயாரிக்கவும், உருவமைப்பு செய்யும் பொருட்களுக்கும், அழகு சாதனப் பொருட்களாகவும் மின் மாற்றி எண்ணெயாகவும் நீண்ட தொடர் எரிசாராயமாகவும், தோல் பதனிடவும், ஒரு வகை பிசின் தயாரிக்கவும், நூற்பாலைகளில் பயன்படும் எண்ணெயாகவும் தீ தடுப்பு சாதனங்களாகவும் பயன்படுகிறது. மேலும் இந்த மரத்தின் பட்டையிலிருந்து எடுக்கப்படும் கருநீல வண்ணம் துணிகளுக்கும், மீன் வலைகளுக்கும் நிறம் கொடுப்பதற்குப் பயன்படுகிறது. காட்டாமணக்கு இலைகள் பட்டுப்பூச்சிகளுக்கு உணவாகப்பயன்படுகிறது.
இலையை வதக்கி மார்பில் கட்டப் பால் சுரக்கும். ஒரு படி நீரில் ஒரு பிடி இலையை போட்டு வேகவைத்து இறக்கி இளஞ்சூட்டில் துணியில் தோய்த்து மார்பில் ஒத்தடம் கொடுத்து, வெந்த இலைகள் வைத்துக் கட்டப் பால்சுரப்பு உண்டாகும்.
விளக்கெண்ணையில் வதக்கிக் கட்டக் கட்டிகள் கரையும் வலி அடங்கும்.
இளங்குச்சியால் பல் துலக்கப் பல் வலி, பல் ஆட்டம், இரத்தம் சொரிதல் தீரும்.
காட்டாமணக்கு எண்ணெயுடன் தேங்காய் எண்ணெய் கலந்து பூச புண், சிரங்கு ஆறும்.
பாலை வாயில் கொப்பளிக்க வாய்புண் ஆறும். பாலைத் துணியில் நனைத்து இரத்தம் கசியும் புண்களில் வைக்க இரத்தப் பெருக்கு நிற்கும். புண் சீழ் பிடிக்காமல் ஆறும்.
வேர்ப்பட்டையை நெகிழ அரைத்துச் சுண்டைக்காயளவு பாலில் கொடுத்து வரப் பாண்டு, சோகை, காமாலை, வீக்கம், வயிற்றுக் கட்டி, பெருவயிறு, குட்டம் ஆகியவை தீரும்.