22

கீழாநெல்லி

1) வேறுபெயர்கள் -: கீழ்காய் நெல்லி, கீழ்வாய் நெல்லி.காட்டு நெல்லிக்காய், பூமியாமலக், பூளியாபாலி.

2) தாவரப்பெயர் -: PHYLLANTHUS AMARUS.

3) தாவரக்குடும்பம் -: EUPHORBIACEAE.

4) வளரும் தன்மை -: இது ஒரு குறுஞ் செடி, 60-70 செ.மீ.வரை உயரம் வளரும். மாற்றடுக்கில் இரு சீராய் அமைந்தசிறு இலைகளை உடையது. இலைக் கொத்தின் அடிப்புரத்தில் கீழ் நோக்கிய காய்கள் இருக்கும். இலைக்கொத்தின் மேற்புரத்தில் மேல் நோக்கிய காய்களை உடைய மேலாநெல்லியும் உண்டு. ஆகவே கீழா நெல்லி தான் என்பதறுகு, காய்கள் கீழ்நோக்கி அடிப்புரத்தில் இருக்கினவா என ஊர்ஜிதப்படுத்திய பின்னர் தான் இதனைப் பயன் படுத்த வேண்டும்.மிகவும் குறுகிய வயதுடைய இது இந்திய மருத்துவத்தில் அறிய மூலிகையாகக் கருதப்படுகிறது. ஆண்டு முழுதும் பயிரிடப்படும் இது மேல் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பயிர்களுள் ஒன்று. இது விதைத்த 3 – 4 மாதத்தில் அருவடைசெய்யலாம். விதை மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகறது.

5) பயன் தரும் பாகங்கள் -: செடி முழுதும், தண்டு, வேர், மற்றும் இலைகள்.

6) பயன்கள் -: மஞ்சக்காமாலை, மேகம், கண்நோய், பித்தநோய் சிறுநீர் பெருக்கியாகவும், வெப்பு அகற்றியாகவும் வீக்கம், கட்டி, ஆகியவற்றைக் கரைத்து நரம்பு சதை ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும் மருந்தாகவும் செயற்படும். தீராத தலைவலி, கல்லீரல் பழுது, இரத்த சோகை இவைகளுக்கு மருந்தாகும்.

கீழாநெல்லி செடி 4 ஏலக்காய் அரிசி, கறிமஞ்சள் தூள் இவை வகைக்கு ஒரு காசு எடை சேர்த்து ஈரவெங்காயம் ஒன்று சேர்த்து பசுவின் பால் விட்டரைத்து அரைத்த கல்கத்தை பால் மோர் ஏதேனும் ஒரு அனுபானத்தில் கலக்கி காலை மாலை கொடுக்க காமாலை நிச்சயம் குணமாகும்.

நல்லெண்ணைய் இரண்டு ஆழாக்கு கீழாநெல்லிவேர், கருஞ்சீரகம், நற்சீரகம் இவை வகைக்குகால் பலம் (9 கிராம்) பசும்பால் விட்டு அரைத்துகலக்கிக் காச்சி வடித்து தலை முழுகி வரலாம்இது கீழாநெல்லி தைலமாகும்.

கீழா நெல்லி சமூலம் 4 அல்லது 5 செடி,விஷ்ணுகிரந்தி ஒரு கைப்பிடி, கரிசாலை ஒரு கைப்பிடி,சீரகம், ஏலக்காய், பறங்கிச்சக்கை வகைக்கு 5 கிராம், ஆங்கூர் திராட்சை 20 கிராம், தண்ணீர் இரண்டு லிட்டர் விட்டு நாலில் ஒன்றாகக் சுறுக்கி வடிகட்டி வைத்துக் கொண்டு வேளைக்கு 60 முதல் 90 மில்லி தினம் இரு வேளை சாப்பிட்டுவர மஞ்சள் காமாலை குணமாகும்.

நெல்லி சமூலம் 30 கிராம் 4 மிளகுடன் சிதைத்து2 குவளை நீரில் பொட்டு ஒரு குவளையாகக்காச்சி மூன்று வேளையாகக் குடித்து வர சூடு,சுரம்,தேக எரிச்சல் தீரும்.

இலையில் உப்பு சேர்த்து அரைத்துத் தடவிக்குளிக்கச் சொறி சிரங்கு, நமச்சல் தீரும்.

கீழாநெல்லி இலை, மூக்கிரட்டை இலை, பொன்னாங்கண்ணி இலை, சம அளவு அரைத்து கழற்சிக் காயளவு மோரில் கலக்கி 45 நாள்கள் கொள்ள மாலைக்கண், பார்வை மங்கல், வெள்ளெழுத்து தீரும்.

இதன் இலைச் சாறு பொன்னாங்கண்ணி சாறு சமன் கலந்து நல்லெண்ணையுடன் கலந்து காச்சி தலை முழுக பார்வை கோளாறு தீரும்.

கீழாநெல்லி வேர், அசோகப்பட்டை, அத்திப்பட்டை ஆகியவற்றை இடித்து தூள் செய்து சம அளவு கலந்து வேளைக்கு 10 கிராம் வீதம் காலை மாலை வெந்நீருடன் 40 நாள் கொள்ள பெரும்பாடு, வெள்ளை, மாதவிடாய் தாமதம் உதிரச்சிக்கல் தீரும்.

கீழாநெல்லி இலை, கரிசிலாங்கண்ணி இலை தும்பையிலை சமன் அரைத்து பெரியோருக்கு புன்னைக் காயளவு, இளைஞ்யர்களுக்குக் கழற்சிக்காயளவு, சிறுவர்களுக்குச் சுண்டைக்காயளவு பாலில் பத்து நாள் கொடுத்துக் காரம் புளி நீக்கி, பால் மோர் சோறும் அரை உப்புமாகச் சாப்பிட காமாலை தீரும்.

கீழாநெல்லிசாறு, உந்தாமணிச் சாறு, குப்பைமேனி சாறு சமன் கலந்து நல்லெண்ணெயில் எரித்து நசியமிடப் பீனிசம், ஓயாத்தலைவலி நீர் வடிதல் ஆகியவை தீரும்.

ஓரிதழ் தாமரையுடன் சமன் கீழாநெல்லி சேர்த்தரைத்து நெல்லிக் காயளவு அதிகாலை 45 நாள்கள் சாப்பிட வாலிப வயோதிகம் நீங்கும்.

கீழா நெல்லியுடன் சமன் கரிசிலாகண்ணிச் சேர்த்து அரைத்து பசும் பாலுடன் 45 நாள்கள் சாப்பிடக் கல்லீரல் பழுது, பாண்டு, சோகை, இரத்தமின்மை தீரும்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

மூலிகை வளம் Copyright © 2015 by குப்புசாமி is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book