41

கொன்றை.
1) மூலிகையின் பெயர் -கொன்றை.
2) தாவரப்பெயர் -: CASSIA FISTULA.
3) தாவரக்குடும்பம் -: CAESALPINIACEAE.
4) வகைகள் – புலிநகக்கொன்றை, மயில்க்கொன்றை, சரக்கொன்றை, செங்கொன்றை, கருங்கொன்றை, சிறுகொன்றை, மந்தாரக் கொன்றை மற்றும் முட்கொன்றை,
5) வேறு பெயர்கள்- பெருங்கொன்றை,சிறுகொன்றை.
6) பயன் தரும் பாகங்கள் -: பட்டை, வேர், பூ, மற்றும் காய்.
7) வளரியல்பு – : கொன்றை தமிழ் நாட்டில் எல்லா மாவட்டங்களிலும் காணப் படும் சிறு மர வகையைச் சேர்ந்தது. பல கிளைகள் விடும், ஒவ்வொரு கிளையிலும் பல சிறு கிளைகள் தோன்றி அதில் கொத்துக் கொத்தாக இலைக் கொத்துக்கள் தோன்றும், இதன் இலை நெல்லி இலை போல இருக்கும். ஒரே காம்பில் பல இலைகள் ஒன்றுக்கொன்று எதிர் வரிசையாகத் தோன்றும் ஒவ்வொரு இணுக்கு சேருமிடத்திலும் ஒரு சிறு கிளை தோன்றி, அதில் பல நரம்புகள் தோன்றி அந்த நரம்புகளில் கொத்துக் கொத்தாக மொட்டுக்கள் விட்டு சிகப்பு நிறப் பூக்கள் மலரும். இந்த பூ ஆவரம்பூவின் வடிவத்திலிருக்கும்.இடையிடையே இலேசான மஞ்சள் நிறமும் கலந்திருக்கும். பூவின் நடுவில் 5-6 மகரந்த நரம்புகள் வெளியே நீண்டிருக்கும். நீண்ட உரிளைவடிவக் காய்களையும், உடைய இலையுதிர் மரம். இது விதை மூலம் இனப் பெருக்கம் ஆகின்றது.
மருத்துவப் பயன்கள்- மரம், நோய்நீக்கி உடல் தேற்றும். காய்ச்சல் தணிக்கும் மலமிளக்கும் வாந்தியுண்டாக்கும் உடல் தாதுக்களை அழுகாமல் தடுக்கும். பூ வயிற்று வாய்வகற்றும் நுண்புழுக் கொல்லும் மலமிளக்கும். காயிலுள்ள சதை (சரக்கொன்றைப் புளி) மலமிளக்கும்.
வேர்ப் பட்டை 20 கிராம் பஞ்சு போல் நசுக்கி 1 லிட்டர் நீரில் இட்டு கால் விட்டராகக் காய்ச்சி 5 கிராம் திரிகடுகு சூரணம் சேர்த்து காலையில் பாதியும் மாலையில் பாதியும் சாப்பிட காய்ச்சல் தணியும் இதய நோய் குணமாகும். நீண்ட நாள் சாப்பிட மேக நோய் புண்கள், கணுச்சூலை தீரும். ஒரு முறை மலம் கழியுமாறு அளவை திட்டப் படுத்திக் கொள்ள வேண்டும்.
10 கிரைம் சரக்கொன்றைப் பூவை அரை லிட்டர் நீரில் போட்டு 200 மி.லி. ஆகக் காய்ச்சி வடிகட்டிச் சாப்பிட வயிற்ற்றுப் புழிக்கள் கழிந்து நோயகலும். நீடித்துச் சாபிட மது மேகம் தீரும்.
பூவை வதக்கித்துவையலாக்கி உணவுடன் சாப்பிட மலச்சிக்கல் அகலும்.
காயின் மேலுள்ள ஓட்டைப் பொடித்துக் குங்கமப்பூ சர்க்கரை சமன் கலந்து பன்னீரில் அரைத்து பெரிய பட்டாணி அளவாய் மாத்திரை செய்து உலர்த்திக் கொண்டு மகப் பேற்றின் போது வயிற்றினுள் குழந்தை இறந்த நிலையில் 10 நிமிடத்திற்கு 1 மாத்திரை கொடுக்க இறந்த குழந்தையை வெளித்தள்ளும்.
சரக்கொன்றைப் புளியை உணவுக்குப் பயன்படுத்தும் புளியுடன் சமன் கலந்து உணவுப் பாகங்களில் பயன்படுத்த மலர்ச்சிக்கல் அறும்.
கொன்றைப் புளியை நீரில் அரைத்துக் கொதிக்க வைத்துப் பற்றுப் போட கணுச் சூலை, வீக்கம் ஆகியவை தீரும்.
சரக்கொன்றைப் பூவையும் கொழுந்தையும் சமனளவு அரைத்துக் கொட்டைப் பாக்களவு பாலில் கலக்கி உண்டு வந்தால் வெட்டை, காமாலை, பாண்டு ஆகியவை தீரும்.
கொழுந்தை அவித்துப் பிழிந்த சாற்றில் சர்க்கரை கலந்து 200 மி.லி. கொடுக்க வயிற்றிலுள்ள நுண்புழுக்கள், திமிர் பூச்சிகள் அகலும்.
பூவை எலுமிச்சைச்சாறு விட்டரைத்து உடலில் பூசி வைத்திருந்து குளிக்கச் சொறி, கரப்பான், தேமல் ஆகியவை தீரும்.
கொன்றை மரத்தின் வேர்ப்பட்டையைக் கொண்டு வந்து கழுவிச் சுத்தம் செய்து பொடியாக நறுக்கி, ஒரு கை பிடியளவு எடுத்து ஒரு சட்டியில் போட்டு ஒரு டம்ளர் அளவு தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து நன்றாகாக் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, காலை மாலையாகக் கொடுத்து வந்தால் வாய்வு சம்பந்த மான வலிகள், வாத சம்பந்தமான வலிகள் உடலில் தோன்றும் அரிப்பு, சிறு சிரங்குகள், மேக கிரணம் இவைகள் படிப்படியாக மறைந்து விடும்.
கொன்றை மரத்தின் பட்டையை நறுக்கி, அதில் ஒரு கைப் படியளவும், தூது வேளைக் கொடியின் இலை,பூ, காய்,வேர் இவைகளில் வகைக்கு 5 கிராம் வீதமும் எடுத்து அதையும் பொடியாக நறுக்கி, வெய்யிலில் காயவைத்து இடித்து சலித்து ஒரு சீசாவில் போட்டு வைத்துக் கொண்டு. மொச்சைக் கொட்டையளவு தூளைஎடுத்து, ஒரு டம்ளர் காச்சிய பசும் பாலில் போட்டுக் கலந்து, காலையிலும் மாலையிலும் சாப்பிட்டு வந்தால் சுவாசகாசம் படிப்படியாக் குறைந்து அறவே நீங்கி விடும்.
கொன்றைப் பூக்களில் கைப்பிடியளவு எடுத்து ஒரு சட்டியில் போட்டு 100 கிராம் நல்லெண்ணையை விட்டு நன்றாகக் காயவைத்து பூக்கள் சிவந்து வரும் சமயம் இறக்கி, எண்ணணெய் ஆறியபின் வடிகட்டி ஒரு சீசாவில் விட்டு வைத்துக் கொண்டு காது சம்பந்தமான ஏற்படும் கோளாறுகளுக்கு, காலை மாலை ஒரு காதுக்கு இரண்டு துளி வீதம் விட்டு பஞ்சடைத்து வந்தால் , காது சம்பந்தமான கோளாறுகள் குணமாகும்.இலைகளை கண் இமைகளின் மேல் இரவு படுக்குமுன் வைத்துக் கட்டி காலையில் அவிழ்த்துவிட வேண்டும் இந்த விதமாக ஐந்து நாட்கள் கட்டி வந்தால் கண் சம்பந்தமான எல்லாக் கோளாறுகளும் குணமாகும்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

மூலிகை வளம் Copyright © 2015 by குப்புசாமி is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book