40


சீந்தில் கொடி.

1) மூலிகையின் பெயர் -: சீந்தில் கொடி.

2) தாவரப்பெயர் -: TINOSPORA CARDIFOLIA.

3) தாவரக்குடும்பம் -: MENISPERMACEAE.

4) வேறு பெயர்கள்- அமிர்த வல்லி, சோமவல்லி, சாகாமூலி சஞ்சீவி, ஆகாசவல்லி போன்றவை.(GUDUCHI).

5) பயன் தரும் பாகங்கள் -: கொடி, இலை மற்றும் வேர்.

6) வளரியல்பு – : சீந்தில் கொடி தமிழ் நாட்டில் எல்லா மாவட்டங்களிலும் வளர்கிறது. வரட்சியைத் தாங்கக்கூடியது.உயரமான மரங்களில் காடுகளில் அதிகமாகப் படரும் ஏறு கொடி. கடல் மட்டத்திலிருந்து ஆயிரம் அடியில் வளரக் கூடியது. இதய வடிவ இலைகளையும் தக்கையான சாறுள்ள தண்டுகளையும் காகிதம் போன்ற புறத் தோலையும் உடைய ஏறு கொடி. கொடியின் தரை தொடர்பு அகற்றப் பட்டால் கொடியின் மெல்லிய விழுதுகள் வளர்ந்து தரையில் ஊன்றி கொடிதழைக்கும். இது கோடையில் பூக்கும். பூ ஆண், பெண் என்ற இருவகையுண்டு. மஞ்சள் நிரத்தில் இருக்கும்.பெண் பூ தனியாக இருக்கும். அவரை விதை போன்று சிவப்பு நிற விதைகள் உண்டாகும். விழுதுகள் 30 அடி நீளங்கூட வளரும். விதையை விட தண்டு கட்டிங் மூலம் இனப் பெருக்கம் சிறப்பாக இருக்கும்.

7) மருத்துவப்பயன்கள் -: முதிர்ந்த கொடியை நறுக்கி இடித்து நல்ல நீரில் கரைத்து வடிகட்டி அசையாது சில மணி நேரம் வைத்திருந்து நீரை வடித்துப் பார்க்க அடியில் வெண்ணிறமான மாவு படிந்திருக்கும். மீண்டும் நீர் விட்டுக் கரைத்து தெளிய வைத்து இறுத்து எடுத்து உலர்த்தி வைக்கப் பளிச்சிடும் வெண்ணிறப் பொடியாயிருக்கும். இதுவே சீந்தில் சர்க்கரை எனப் படும். இது ஓர் கற்ப மருந்தாகக் கருதப்படுகிறது. உணவுக் கட்டுப் பாட்டுடன் நீண்ட நாள் சாப்பிட பல பிணிகளும் நீங்கும் என்பதாம்.

சீந்தில் உடற்பலம், சிறுநீர், காமம், தாய்ப்பால், பித்தம் ஆகியவற்றைப் பெருக்கும். முறை நோய் மஞ்சள் காமாலை, வாதம், கேன்சர், அல்சர், ஈரல் நோய் ஆகியவை தீர்க்கும், உடல் தேற்றும்.

சீந்தில் சர்க்கரை, கல்லீரல், மண்ணீரல் ஆகியவைகளை உரம் பெறச் செய்யும். பிற மருந்தின் சேர்கையுடன் நீரிழிவு, காமாலை, பாண்டு, சோகை, வீக்கம், இருமல், கபம், சளி, வாந்தி, காய்ச்சல்,மூர்ச்சை ஆகியவற்றைத் தீர்க்கலாம்.

சீந்தில் கொடி, நெற்பொறி வகைக்கு 50 கிராம் 1 லிட்டர் நீரிலிட்டு 150 மில்லியாக வற்றக் காய்ச்சிக் காலை, மதியம், மாலையாக 50 மி.லி. யாகக் குடித்து வர மேக வெப்பம், தாகம் தீரும்.

முதிர்ந்த கொடிகளை உலர்த்திப் பொடித்து காலை, மாலை அரைத் தேக்கரண்டி பாலுடன் சாப்பிட்டு வர உடல் உரம் பெறும். பனங்கற்கண்டுடன் சாப்பிட மதுமேகத்தால் தோன்றும் கை, கால் அசதி, மிகுதாகம், உடல் மெலிவு, விரல்களில் சுருக் சுருக்கென்று குத்துதல் ஆகியவை தீரும்.
———————————————————-(மூலிகை தொடரும்)
வள்ளலார் பிரகாஷ் முகநூலிலல் கூறியது–பிரசவத்தின் போது சாகாமூலி என்ற சீந்தில் கொடியின் சிறு துண்டை தாயின் கால் கட்டை விரலில் கட்டி விடுவர்.இதனால் பிரசவகாலத்தில் தாய், சிசு இருவரும் நலமாக பிறக்கின்றனர். பிறக்கும் குழந்தைக்கு எந்த நோய் கிருமியும் தாக்கப்படுவதில்லை. இது உண்மை இன்று கிராமபுறங்களில் இதை செய்கின்றனர்.அதனால் தான் இதற்கு சாகா மூலி என்ற பெயர் வந்துள்ளது. ( 2-6-2015.)

4-6-2015-

பெண்களை அதிகமாக தாக்கக்கூடியது மார்பக புற்றுநோய். இந்த நோயில் இருந்து பெண்களை காப்பாற்றும் அரிய வகை மூலிகை செடிதான் சீந்தில் கொடி என்று அழைக்கப்படும் வஞ்சிக் கொடியாகும். சித்த வைத்தியத்தில் வஞ்சிக் கொடி முக்கியத்துவம் பெற்றுள்ளது. சீந்தில் கொடிக்கு, வஞ்சி மரம், ஆகாச வல்லி, அமிர்தவல்லி, சோமவல்லி, சாகா மூலி என்று பல பெயர்கள் உண்டு. பெயரைக் கேட்டாலேயே நடுநடுங்க வைக்கும் எய்ட்ஸ் மற்றும் வெட்டை, மேகம் போன்ற கொடிய நோய்களை குணமாக்கும் மருந்து வஞ்சிக் கொடியில் உள்ளது.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்குவதற்கு வஞ்சிக் கொடியை சாப்பிட கொடுப்பதும் அந்த கால வழக்கமாகும். வஞ்சிக்கொடி சர்க்கரை நோயாளிகளுக்கும், எய்ட்ஸ் நோயாளிகளுக்கும் நல்ல மருந்து என்று அகத்திய முனிவர் அன்றே எழுதி வைத்திருக்கிறார். இன்றைய விஞ்ஞான மருத்துவ ஆராய்ச்சியிலும் மேற்கண்ட மருத்துவ ஆற்றல் உண்மையென்று உணரப்பட்டுள்ளது. மார்பக புற்றுநோயால் ஏற்படும் அடைப்பின் காரணமாக உருவாகும் மஞ்சள் காமாலை, காச நோய்களில் இருந்து நோயாளிகளை பாதுகாக்கக்கூடிய மருந்து சீந்தில் கொடியில் உள்ளது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
சீந்தில் கொடியிலிருந்து தயாரிக்கப்படும் மருந்து, சிறுநீரக செயல் இழப்பு, ஆண்மைத்தன்மை குன்றுதல், கல்லீரல் கோளாறு ஆகிய நோய்களுக்கு கொடுக்கப்படுகிறது. சிறு உபாதைகளான மலச்சிக்கல், வயிற்றுக் கோளாறுகள், நாள்பட்ட காய்ச்சல் மற்றும் சீதபேதியை குணமாக்கும். வெட்டை நோயை விரட்டும். இந்திரியம் தானாக வெளியேறுவதை தடுக்கும். இந்த கொடி கசப்புச் சுவை கொண்டது. ஏதாவது ஒரு மரத்தைப் பற்றிக் கொண்டு ஒட்டுண்ணியாகப் படரக்கூடியது. ஆலமரத்தைப் போலவே இதன் பிரதான கிளைகளிலிருந்தும் மெல்லிய கிளைகள் விழுதுகள் போலத் தொங்குகின்றன.
தண்டுப் பகுதியில் ஆங்காங்கே வெண்மை வண்ணத்தில் சில முண்டுகள் தெரிகின்றன. வெற்றிலையைப் போன்ற தோற்றம் கொண்டவை இதன் இலைகள். சீந்தில் கொடியின் அனைத்துப் பாகங்களும் கசக்கும்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

மூலிகை வளம் Copyright © 2015 by குப்புசாமி is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book