98


1. மூலிகையின் பெயர் :- நாயுருவி.

2. தாவரப்பெயர் :- ACHYRANTHES ASPERA.

3. தாவரக்குடும்பம் :- AMARANTACEAE.
4. பயன்தரும் பாகங்கள் :- எல்லா பாகமும் (சமூலம்)பயனுடையவை.

5. வேறு பெயர்கள் :- காஞ்சரி, கதிரி,மாமுநி, நாய்குருவி, அபாமார்க்கம் முதலியன.

6. வளரியல்பு :- நாயுருவியின் பிறப்பிடம் சைனா. தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் தானே வளரும் செடி. தரிசு நிலங்கள் வேலியோரங்களில், காடு மலைகளில் தானே வளர்கிறது. இதன் இலைகள் முட்டை வடிவமாக இருக்கும். இதன் தண்டிலிருந்து கதிர் போல் செல்லும், அதில் அரிசி போல் முட்கள் ஒட்டிக் கொண்டிருக்கும். இதன் பூக்களில் பச்சை நிரமும் கலந்து காணப்படும். இதன் காய்களில் ஐந்து விதைகள் இருக்கும். விதை ஒட்டும் தன்மையுடையதால் விலங்குகள், மனிதர்களின் துணிகள் மீது ஒட்டிக்கொண்டு சென்று வேறு இடங்களில் விழுந்து முழைக்கும். எதிரடுக்கில் அமைந்த காம்புள்ள நீண்ட கதிர்களையும் உடைய சிறு செடி. இவற்றின் தண்டும் இலையும் சிவந்து காணப்படும் வகை செந்நாயுருவி எனப்படும். செந்தாயுருவியே அதிக மருத்துவப்பயன் உடையது. மூலிகைகளில் பெண் தன்மையும், தெய்வத்தன்மையும் இதற்குண்டு. புதன் மூலிகை என்பர். அட்டகர்ம மூலிகை என்றும் கூறுவர். செந்நாயுருவியே தெய்வீக ஆற்றல் பெற்றது. விதை மூலம் இனவிருத்தி செய்யப்படுகிறது.

7. மருத்துவப் பயன்கள் :- நாயுருவி சிறுநீர் பெருக்குதல், நோய்நீக்கி உடல் தேற்றுதல். சதை நரம்பு இவற்றைச் சுருங்கச் செய்தல் ஆகியவை இதன் பொது மருத்துவ கணங்களாகும்.

நாயுருவிச் செடியின் இலையையும், காராமணிப் பயிரையும் சம அளவு எடுத்து மைய அரைத்து நீர்க்கட்டு உள்ளவர்களிடையே தொப்புள் மீது பற்றுப் போட நீர் கட்டு நீங்கி குணமாகும்.

நாயுருவிச்செடியின் இலைகளை இடுத்துச் சாறு எடுத்து இரண்டு சொட்டு காதில் விட்டால் காதில் சீழ் வடிதல் நிற்கும்.

கதிர்விடாத இதன் இலையை இடித்துச் சாறு பிழிந்து சம அளவில் நீர் கலந்து காய்ச்சி நாளும் மூன்று வேளை 3 மி.லி. அளவு 5-6 நாள் சாப்பிட்டு பால் அருந்தவும். இதனால் தடைபட்ட சிறுநீர் கழியும். சிறுநீரகம் நன்கு செயல்படும். சிறுநீர்த் தாரை எரிச்சல் இருக்காது. சூதகக்கட்டு-மாதவிலக்கு தடைபடுவது நீங்கும். பித்த பாண்டு, உடம்பில் நீர் கோத்தல், ஊதுகாமாலை, குருதி மூலம் ஆகியன குணமாகும்.

இதன் இலையை அரைத்து நெல்லிக்காய் அளவு எருமைத் தயிரில் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் இரத்தமூலம் குணமாகும். மேக நோய், சிறுநீரில் வெள்ளை ஒழுக்கு, பேதி குணமாகும்.

ஆறாத புண்-ராஜ பிளவை, விடக்கடி ஆகியவற்றிக்கு இதன் இலையை அரைத்துக் கட்டி வர குணமாகும்.

இதன் இலையைப் பருப்புடன் சேர்த்து சமைத்து வாரம் இருமுறை சாப்பிட்டு வர நுரையீரல் பற்றிய சளி, இருமல் குணமாகும்.

விட்டுவிட்டு வரும் சுரத்திற்கு நாயுருவி இலைகளுடன் மிளகு, பூண்டு சேர்த்து அரைத்து மாத்திரைகளாக உருட்டி, உலர்த்திக் கொடுக்கக்குணமாகும்.

மூல நோய்க்கு நாயுருவி இலைக் கொழுந்தைப் பறித்து அதனுடன் சிறிது மஞ்சள் கலந்து அரைத்து மூலத்தில் வைத்துக் கட்டி வர இதம் தரும்.

இதன் இலைச்சாறு 100 மி.லி.+100 மி.லி.எள் நெய் சேர்த்துக் காய்ச்சி சாறு சுண்டியவுடன் வடித்து வைக்கவும். காதில் வலி, எழுச்சி, புண், செவிடு ஆகியன குணமாக இதனைச் சொட்டு மருந்தாக இரு வேளை காதில் விடவும். மூக்கில் சளி, புண்ணுக்கும் இச்சொட்டு மருந்தினைப் பயன் படுத்தலாம்.

இதன் இலைச் சாறு பிழிந்து 30-50 மி.லி.அளவு குடித்து 7 நாள் உப்பில்லாப் பத்தியம் இருக்க வெறி நாய்கடி, பாம்புக்கடி விடம் தீரும். அரைத்துக் கடிவாயில் வைத்துக் கட்டலாம்.

இதன் இலையுடன் சம அளவில் துளசி சேர்த்து அரைத்து நெல்லியளவு இருவேளை கொடுக்க வண்டு, பிற பூச்சிக்கடி குணமாகும்.

நாட்பட்ட மலர்ச்சிக்கல் உடையவர்கள் நாயுருவி இலைகளை குடிநீரிட்டு அருந்தி வந்தால் பேதியாகும்.

துத்திக் கீரை வதக்கலில் நாயுருவி விதைச் சூரணம் 20 கிராம் கலந்து உணவில் சேர்துண்ண மூலம் அனைத்தும் தீரும்.

விதையைச் சோறு போல் சமைத்து உண்ணப் பசி இராது. ஒரு வாரம் ஆயாசமின்றி இருக்கலாம். மிளகு, சீரகம் வறுத்துக் குடிநீர் காய்ச்சிக் குடிக்கப் பசி உண்டாகும்.

நாயுருவி வேரால் பல் துலக்கப் பல் தூய்மையாகி முக வசீகரம் உண்டாகும் மனோசக்தி அதிகமாகும், நினைத்தவை நடக்கும், ஆயுள் மிகும், காப்பி, டீ, புகை, புலால் கூடாது.

நாயுருவிச் சாம்பல், ஆண் பனை பூ பாளை சாம்பல் சம அளவு சேர்த்து நல்ல நீர் விட்டுக் கரைத்து 1 பொழுது ஓய்வாய் வைத்திருக்க நீர் தெளிந்திருக்கும். அதை அடுப்பேற்றிக் காய்ச்ச உப்பு கிடைக்கும். இவ்வுப்பில் 2 அரிசி எடை தேன், நெய், மோர், வெண்ணெய் இவற்றில் ஏதேனும் ஒன்றில் கொடுக்க என்புருக்கி, நீரேற்றம், குன்மம், பித்தப்பாண்டு, ஆஸ்துமா ஆகியவை தீரும். தூதுவேளை, கண்டங்கத்திரி, ஆடாதொடை இவற்றின் குடிநீர்களை துணை மருந்தாகக் கொள்ளலாம்.

இதன் சாம்பலுடன் கடுகெண்ணையும் சிறிது உப்பும் சேர்த்துப் பல் துலக்கினால் பல் பலம் பெரும் வலியிருந்தால் குறையும். இதன் சாம்பலில் பொட்டாஸ் உள்ளதால் இதை அழுக்குத் துணி துவைக்கப் பயன் படுத்திவர்.

இதனை எரித்த சாம்பல் 5 கிராம் தேனில் காலை கொடுக்க மாத விலக்குத்தடை நீங்கும் விலக்காகும்.

இதன் இலைச்சாற்றில் ஏழுமுறை துணியைத் தோய்த்து உலர்த்தி திரி சுற்றி விளக்குத்திரியாகப் போட்டு நெய் தடவி எரியும் புகையை அதில் படிய பிடிக்கவும், புகைக் கரியை ஆமணக்கு நெய் விட்டு மத்தித்து கண்ணில் தீட்ட கண் பார்வைக் கோளாறு தீரும். குளிர்ச்சி தரும்.

வயிற்றுவலி, அஜீரணம், புளித்த ஏப்பம், உடல் வீக்கம் உடையவர்கள் நாயுருவி வேரைக் காசாயமிட்டு அருந்தி வருவது நல்லது.

சிறுநீர் அடைப்பு உள்ளவர்கள் நாயுருவி சமூலத்தைக் குடிநீரிட்டு 60 மி.லி. முதல் 120 மி.லி. வீதம் அருந்தி வர சிறுநீரைப் பெருக்கும்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

மூலிகை வளம் Copyright © 2015 by குப்புசாமி is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book