87

1. மூலிகையின் பெயர் -: நாவல்.

2. தாவரப் பெயர் -: EUGENIA JAMBOLANA.

3. தாவரக் குடும்பப் பெயர் -: MYRTACEAE.

4. வேறு பெயர்கள் -: நாகை, நம்பு, சம்பு, சாதவம், ஆருகதம், நேரேடு, நவ்வல், நேரேடம், சாட்டுவலம், சாம்பல், சுரபிபத்திரை முதலியன.

5. வகைகள் -: வெள்ளை நாவல், கருநாவல், கொடிநாவல், குழிநாவல், மற்றும் சம்பு நாவல்.

6. பயன்தரும் பாகங்கள் -: இலை, பட்டை, பழம் மற்றும் வேர் முதலியன.

7. வளரியல்பு -: நாவல் ஒரு பெரிய மரவகையைச் சேர்ந்தது. இந்தியாவில் எல்லாப் பகுதிகளிலும் வளரும். இந்தியாவில் எல்லாப் பகுதிகளிலும் வளரும். சிறப்பாக ஆற்றோரப் படிகைகளில் மற்றும் கடற்கறையோரங்களில் நன்கு வளரும். பம்பாய் மாநிலத்தில் எங்கும் உள்ளது. ஈரமான தென் கர்நாடகா, ராயல் சீமைப் பகுதிகளிலும் வளர்க்கப்படுகிறது. மரம் பலம் வாய்ந்ததாக இருக்கும். இலைகள் ஒரே மாதிரி இருக்காது. மாறுபட்டு இருக்கும். இலை நுனி கூர்மையானது. அரசு இலை போல் இருக்கும். இலைப்பரப்பு வழவழப்பாக ஒளிரும் தன்மையடன் இருக்கும். ஒளி ஊடுருவிச் செல்கின்ற புள்ளிகள் நிறைந்தவை. நகப்பழம் உருண்டையாகத் தோன்றும். பரிமானங்கள் ஒரே மாதிரி இருக்காது. கனியின் நிறம் கரு நீலம். மிகுந்த சாற்றுடன் இருக்கும். உண்ணக்கூடிய பழம். சிறிது துவர்ப்பாக இருக்கும். 100 கிராம் பழங்களில் உள்ள உணவுச் சத்துக்களின் விவரம் -: மாவுச் சத்து 19.7 கி., புரதச்சத்து 0.7 கி., கொழுப்பு 0.1 கி., கால்ஷியம் 20 மி.கி., பாஸ்பரஸ் 10 மி.கி., இரும்பு 1 மி.கி., ஆகியவை. இது விதை மூலம் இனவிருத்தி செய்யப்படுகிறது.

8. மருத்துவப் பயன்கள் -; தளர்ச்சி அடைந்த நாடி நரம்புகளை ஊக்கப்படுத்தும். இதன் துவர்ப்பு குருதியை உன்டாக்கும். கட்டாக வைக்கும். குருதிக் கசிவை நீக்கும். தாதுக்களை உரமாக்கும். பழம் குளிர்ச்சி தரும். சிறுநீரைப் பெருக்கும். கொட்டை நீரிழிவைப் போக்கும். தீட்டு-விலக்கு தள்ளிப் போகும், விந்து கட்டும்.

நாவல் கொழுந்துச்சாறு ஒரு தேக்கரண்டி, 2 ஏலரிசி, லவங்கப்பட்டைத்தூள் மிளகளவு சேர்த்துக் காலை, மாலை கொடுக்க செரியாமை, பேதி, சூட்டு பேதி தீரும்.

இலை, கொழுந்து, மாங்கொழுந்து சமன் அரைத்து நெல்லிக்காயளவு தயிரில் கலக்கிக் கொடுக்கச் சீதபேதி, கடுப்புடன் போகும் நீர்த்த பேதி, இரத்த பேதி, கடுப்புடன் போகும் நீர்த்தபேதி ஆகியவை தீரும்.

விதையைத் தூள் செய்து 2 முதல் 4 கிராம் அளவு தினமும் உட்கொள்ள, நாளடைவில் நீரிழிவு நோயில் அதி சர்கரை அளவு குறைந்து வரும். சில பாஷாண மருந்துகள் செய்யவும் இதன் உறுப்புகள் பயன்படுகின்றன.

நாவல்கொட்டை சூரணம் 2 கிராம் நீருடன் காலை, மாலை கொடுக்க மதுமேகம், அதிமூத்திரம் தீரும்.

நாவல் மரப்பட்டைத் தூளை மோரில் கலந்து குடிக்க, பெண்களுக்கு ஏற்படும் இரத்தப் போக்கு தீரும்.

இப்பட்டையை அரைத்து அடிபட்ட காயம், வீக்கம் முதலியவற்றின் மேல் போட, அவை குறையும்.

நாவல் பட்டைச்சாறு எட்டி நஞ்சுக்கு மாற்று மருந்து, கொழுந்து சிவனார் வேம்பு கிழங்கின் நஞ்சை முறிக்கும். கழிச்சலைப் போக்கும்.

நாவல் கொட்டையுடன் மாங்கொட்டையும் சேர்த்து சம அளவு உலர்துதிய சூரணத்தில் 5 மில்லி கிராம் மோரில் சாப்பிட்டு வர 3-6 நாளில் சீதபேதி என்ற வயிற்றுக் கடுப்பு, வயிற்றோட்டம் குணமாகும். நீரிழிவும் குணமாகும்.

மா நாவல் மரப்பட்டையைச் சம அளவில் மண் சட்டியில் போட்டுக் காய்ச்சிய கசாயத்தை 30 மி.லி. அளவு காலை, மாலை சாப்பிட்டாலும் சீதபேதி, ஆசன எரிச்சில் குணமாகும். பட்டை கசாயத்தில் வாய் கொப்பளித்தால் வாய் புண் ஆறும்.

காப்பி, டீ அதிக அளவில் குடித்தால் அடிக்கடி பித்த வாந்தி வரும். இதற்கு நாவல்பட்டைக் கசாயம் கற்கண்டு சேர்த்து

3-6 வேளை 10-20 மி.லி அருந்த வாந்தி நிற்கும். செரிமானம் நன்கு நடைபெரும்.

நாவல்பட்டை கசாயம் 5-6 நாள் 30 மி.லி. குடிக்க ஆறாத புண் ஆறும். புண்ணையும் இதனால் கழுவலாம். நாவல் பட்டை எரித்த சாம்பலை தேங்காய் எண்ணெயில் மத்தித்துப் போட ஆறாத புண்கள் ஆறும்.

நாவல் தளிரை அரைத்து சிறு குழந்தைகளுக்கு மேலே பூசி குளிப்பாட்ட கிரகதோசம்-வெப்பத்தாக்குதல் குணமாகும். மிளகு சேர்த்து அரைத்துக் கொடுக்க மலங்கட்டும்.

நாவல் பழத்தைத் தனியாகவே சாப்பிடலாம். இதயத்திற்கு மிகுந்த பலத்தைக் கொடுக்கும். இதயத் தசைகள் உறுதிப்படும். குருதி ஊறும். குருதி கெட்டிப்படும். ஆசன எரிச்சில் தீரும். மலக்கட்டு ஏற்படும். அதிக அளவில் சாப்பிட்டால் ஜலதோசம், சன்னி வரும். தொண்டைக் கட்டி-டான்சில் வளரும். வீங்கும். பேச முடியாமல் தொண்டை கட்டிக் கொள்ளும்.

நாவல் பழத்திலும் சர்பத் செய்யலாம். பழரசம் அரை லிட்டர் கற்கண்டு 300 கிராம் கலந்து, குங்குமப்பூ 2 கிராம், பச்சைக் கறுபூரம் ஒரு கிராம், ஏலம் ஒரு கிராம், பன்னீர் 50 மி.லி. கலந்து காய்ச்சி பதமாக வடித்து வைத்து உபயோகிக்கலாம்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

மூலிகை வளம் Copyright © 2015 by குப்புசாமி is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book