80

1. மூலிகையின் பெயர் -: பனை.

2. தாவரப் பெயர் -: BORASSUS FLABELLIFERA.

3. தாவரக்குடும்பம் -: ARECACEAE.

4. வகைகள் -: இது கூந்தல் பனை, மற்றும் கரும்பனை என இரு வகைப்படும்.

5. பயன் தரும் பாகங்கள் -: நொங்கு, பனம்பழம், பனங்கிழங்கு, பனை ஓலை, குருத்து, பனை கருக்கு, பனைப்பால், முற்றிய மரம் முதலியன.

4. வளரியல்பு -: பனை கற்பக மரமாகும். கூந்தல் பனை, கரும்பனையில் கரும்பனையே மருத்துவ குணமுடையதாகும். பனை இந்தியாவில் தமிழ் நாட்டிலும், ஜாப்னா மற்றும் இலங்கையிலும் அதிகமாகக் காணப்படும். இது எல்லா மண்வளத்திலும் வளர்க்கூடியது. வரட்சியைத் தாங்கி வளரக்கூடியது. பனை வைத்தவனுகுப் பயன் தராது என்பர். இதன் வளர்ச்சி ஆரம்பத்தில் மெதுவாக வளரும். நூறு ஆண்டுகள் உயிருடன் இருக்கும். இது தொண்ணூறு அடிக்கு மேல் வளரும். பனங்கை ஓலை 9 -10 அடி நீளம் வரை நீண்டிருக்கும். பக்கவாட்டில் அடுக்கடுக்காக பனங்கை வளர்ந்திருக்கும். இது விதை மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது.

5. மருத்துவப் பயன்கள்- பனை உடலுக்கு ஊட்டத்தை அளிப்பது. குளிர்ச்சி தருவது. வெப்பத்தைத் தணிப்பது, துவர்ப்பும் இனிப்பும் கலந்த சுவை உடையது.

பனை மரத்தின் பால் தெளுவு-தெளிவு எனப்படும். சுண்ணாம்பு கலவாதது கள் எனப்படும். வைகறை விடியல் இந்தப் பாலை 100 -200 மி.லி. அருந்தி வந்தால் போதும். உடல்குளிர்ச்சி பெறும். ஊட்டம் பெறும். வயிற்றுப் புண் நிச்சையம் ஆறிவிடும். புளிப்பேறிய கள் மயக்கம் தரும், அறிவை மயக்கும் ஆனல் உடல் நலத்தைக் கொடுக்கும். சுண்ணாம்பு சேர்த்த தெளிவு எல்லோருக்கும் சிறந்த சுவையான சத்தான குடிநீராகும். அதைக் காய்ச்சினல் இனிப்பான கருப்பட்டி கிடைக்கும்.

நுங்கு வெயிலின் கொடுமையைக் குறைக்க மனிதனுக்குக் கிடைத்த அரு மருந்தாகும். எல்லா வயதினருக்கும் ஏற்ற சிறந்த சத்துணவாகும். நுங்கின் நீர் வேர்க்கருவிற்குத் தடவ குணமாகும்.

பனம்பழம் சிறந்த சத்துணவாகும். உயிர் சத்து நிறைந்தது. பித்தம் தருவது. சுட்டு சாப்பிடலாம்.

பனங்கொட்டையை மிருதுவான மண் அல்லது ஈர மணலில் புதைத்து வைத்து இரண்டு மூன்று இலை விட்ட பின் தோண்டி கொட்டைக்குக் கீழ் உள்ள நீண்ட கிழங்கை எடுத்து வேக வைத்துச் சாப்பிட்டால் மிகச் சிறந்த ஊட்ட உணவாகும். சிறு குழந்தைகளுக்கு உடலைத் தேற்றும்.

பனை மரத்தின் அடி பாகத்தில் கொட்டினால் நீர் வரும் அதை கருப்படை, தடிப்பு, ஊரல், சொறி உள்ளவர்களுக்கு அதன் மீது தடவினால் குணமடையும். ஐந்தாறு முறை தடவ வேண்டும்.

பனையோலை வேய்த இருப்பிடம்ஆரோக்கிய வாழ்வைத் தரும். வெப்பம் அண்டாது. இதில் விசிறி, தொப்பி, குடை, ஓலைச்சுவடி தயார் செய்யப் பயன் படும். கைவினைப் பொருள்கள் செய்யலாம். இந்தோனேசியாவில் ஓலையை எழுதும் பேப்பராகப் பயன் படுத்தினார்கள். அதைப்பக்குவப்படுத்த கொதிநீரில் வேக வைத்து மஞ்சள் பொடி இட்டு ஓரத்தில் ஓட்டைகள் போட்டு ஏட்டுப் புத்தகம் உண்டாக்கினார்கள்.

கண்ணில் புண் ஆனால் பனை குருத்து மட்டையைத் தட்டிப் பிழிந்த சாறு மூன்று நாள் விட குணமடையும் எரிச்சில் தீரும்.
அடிப்பனை வெட்டிசோறு செய்தார்கள். பனங்கையில் பிரஸ் செய்தனர். கயிறுகள் தயார் செய்தனர். வேலிக்கும் பயன் படுத்தினர். பனையின் எல்லாபாகமும் உபயோகப் படுத்தினார்கள்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

மூலிகை வளம் Copyright © 2015 by குப்புசாமி is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book