32

பேய்மிரட்டி.
1) மூலிகையின் பெயர் -: பேய்மிரட்டி.
2) தாவரப்பெயர் -: ANISOMELES MALABARICA.
3) தாவரக்குடும்பம் -: LAMIACEAE.
4) வேறு பெயர்கள் -: இரட்டைப் பிரமட்டை, இரட்டை பேய்மிரட்டி,எருமுட்டைப் பீ நாறி, சற்று வட்டமான இலையுடைய இனம் ஒற்றைப்பேய் மிரட்டி எனவும், வெதுப்படக்கி எனவும் அழைக்கப்படுகிறது.
5) தாவர அமைப்பு -: இது தமிழகமெங்கும் தானே வளர்கிறது. எதிரடுக்கில் அமைந்த வெளிரிய வெகுட்டல் மணமுடைய நீண்ட இலைகளையும் வெளிரிய கருஞ்சிவப்பு மலர்க் கொத்தினையும்உடைய செடி. சுமார் மூன்றடி உயரம் வளரும். வரட்ச்சியைத் தாங்கக்கூடியது. விதை மற்றும் தண்டுகள் மூலம் இனப் பெருக்கம் செய்யப்படுகிறது.
6) பயன் படும் பாகங்கள் – செடி முழுதும். (சமூலம்)
7) மருத்துவப் பயன்கள் -: பசி மிகுத்தல், குடல் வாயுவகற்றல்,வியர்வை பெருக்குதல், காச்சல் தணித்தல், சதை நரம்பு ஆகியவற்றைசுருங்கச் செய்தல், அசிவு தணித்தல் ஆகிய குணங்களையுடையது.
பேய் மிரட்டியினால் கணமாந்தம், பேதி, வயிற்று நோய், கரப்பான்,கோரசுரம் போம்.
பேய்மிரட்டிப் பூண்டால் கழிச்சல், மாந்த சுரம், வீக்கம், பேய்மிரட்டு என்னும் படியான கிரக தோஷம் முதலியன போம் என்க.
உபயோகிக்கும் முறை -: இதன் சமூலம் கசப்புச் சுவையுள்ளது இதைக் கியாழமிட்டுக் கொடுக்க வாந்தி பேதி, இருமல், சீதசுரம்போம். ஒரு பலம் சமூலத்தைத் தட்டி ஒரு மட்குடுவையில் போட்டு அரைப்படி சலம் விட்டு 1/8 படியாகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி வேளைக்கு அரை அவுன்ஸ் வீதம் தினம் 2 வேளை கொடுக்கலாம். அல்லது கால் ரூபாய் எடை ஓமத்தையும் கால் ரூபாய் எடை மிளகையும் ஒரு புது சட்டியில் போட்டு அடுப்பிலேற்றி வறுத்துக் கரியான சமயம் கால் படி சலம் விட்டு ஒரு பலம் பேய்மிரட்டி இலையைக் குறுக வரித்து சேர்த்து நாலில் ஒன்றாகக் காய்ச்சி வடிகட்டி வேளைக்கு அரை அவுன்ஸ் வீதம் தினம் 3 வேளைகொடுக்கலாம். இத்தகையக் கியாழங்கள் குழந்தைகளுக்குப் பல் முளைக்கும் சமயம் காணுகின்ற பேதியைக் குணப்படுத்த இன்றியமையாத தாகும். இதன் மூலத்தை ஒரு பெரிய பாண்டத்தில் போட்டுச் சலம் விட்டு கொதிக்க வைத்து வேதுபிடிக்கச் சுரம், தலைவலி முதலியன போம்.
இலையைக் கொதிக்க வைத்து வேது பிடிக்க விடாத வாதசுரம் தீரும்.
இலைச் சாற்றை 5 துளி வெந்நீரில் குழந்தைகளுக்குக் கொடுக்க பல் முளைக்கும் போது ஏற்படும் பேதி தீரும்.
இலையை நீரில் கொதிக்க வைத்துக் காலை, மாலை குடிக்கச்சீத வாதசுரம், முறை சுரம், மலக்கழிச்சல் தீரும்.
ஒரு பிடி நெற்பொறி, 2 இலை நீரில் காய்ச்சி மணிக்கு ஒருமுடக்குக் கொடுத்து வரக் காலரா தீரும்.
10 கிராம் மிளகையும் 3 கிராம் ஓமத்தையும் புது சட்டியிலிட்டுவறுத்துக் கருகிய சமயம் அரை லிட்டர் நீர் சேர்த்துகொதிக்கும் போது 40 கிராம் பேய் மிரட்டி இலைகளைச்சிதைத்துப் போட்டு 125 மி.லி. யாகக் காய்ச்சி 15 மி.லி.யாக மூன்று வேளை கொடுத்து வர குழந்தைகள் பல் முளைக்கும் போது காணும் மாந்தம் குணமாகும்.
இந்த இனத்தில் இலை நீளமாக இருப்பதை இரட்டைப் பைய்மிரட்டி என்றும் இலை வட்டமாக இருப்பதை ஒற்றைப் பேய் மிரட்டி என்றும் கூறுவதுண்டு. இவை முறையே ஆண் பெண் எனக் கருதப் படுகின்றன. ஆண் பிள்ளைகளுக்குக் காணுகின்ற நோயிக்கு பெண் இலையும் பெண்களுக்குக் காணுகின்ற நோய்களுக்கு ஆண் இலையும் சிகச்சைக்கு ஏற்றது என்பது அறிவாளர்களின் கருத்து.
பேய்பூதகண தோஷங்களுக்கு வேப்பிலையைக் கொண்டு மந்திரித்து அடிப்பதைப் போல் பேய் மிரட்டி இலைகளையும் கத்தையாகக் கட்டிக் கொண்டு அடிப்பது வழக்கம் ஆகையால் இது பேய் மிரட்டி எனக் கூறப்பட்டது.
பேய் மிரட்டியின் இலையானது வெதுப்படக்கும் என்றும் வெளுப்பான பேதி, கிலேஷ்மகிரகணி, தாபம், ரூட்சை,அள்ளு மாந்தம், வாதாதிக்கம், உட்சுரம், ரத்த தாதுவிலுண்டாகின்ற மலினம் ஆகியவற்றைப் போக்கும் என்க.
பேய்மிரட்டியின் பச்சிலையை அகல் விளக்கின் திரியாகப் போட்டு விளக்கேற்றி வைத்தால் பச்சை இலை எறிகிறது. உண்மைதான். சந்தேகம்
உள்ளோர் பரிசோதனை செய்து பார்க்கலாம்.
(குறிப்பு – புகைப்படம் எனது மூலிகைத் தோட்டத்தில் தற்சமயம் எடுத்தவை)

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

மூலிகை வளம் Copyright © 2015 by குப்புசாமி is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book