25

வெட்டிவேர்.

1) மூலிகையின் பெயர் -: வெட்டிவேர்.

2) வேறுபெயர்கள் -: குருவேர், உசிர், வீராணம்.
3) தாவரப்பெயர் -: CHRYSOPOGON ZIZANIOIDES.
4) தாவரக்குடும்பம் -: POACEAE.
5) தாவர அமைப்பு -: இது அனைத்துவகை மண்ணிலும் வளரும்.வெட்டிவேர் புல் இனத்தைச் சேர்ந்தது. இது பெரும்பாலும் மணற்பாங்கான இடங்களிலும், ஆற்றுப் படுகைகளிலும் சிறப்பாக வளரும். நாணல் மற்றும் தர்ப்பைப் புற்களைப் போல்வளரும். இது நான்கு முதல் ஐந்து அடி உயரம் வரை வளரும்.வேர் கொத்துக் கொத்தாக இருக்கும். இதன் வேரை வெட்டி எடுத்த பின் புல்லையும் வேரையும் வெட்டி நடுவில் உள்ள துண்டை மீண்டும் புதிதாக நட்டு பயிரிடுவதால் வெட்டி வேர் என வழங்கப்படுகிறது. இதன் வேர் கருப்பு நிறமாக மணத்துடன் இருக்கும். இதனை பெண்கள் மணத்திற்காக தலையிலும் அணிவதுண்டு. இது உடலின் வேர்வையும், சிறு நீரையும் பெருக்கி வெப்பத்தை அகற்றி உடலுக்கு உரமாக்கியாகவும் செயல்படுகிறது. இதை ஒரு வருடத்தில் வெட்டி எடுக்கலாம்.வேர் குச்சிகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகின்றது.இதன் பூ ஊதா நிறத்தில் இருக்கும். இதன் வேர் இரண்டு முதல் நான்கு மீட்டர் ஆழம் வரை செல்லும்.இது லெமன்கிரேஸ், பாம்ரோஸா புல் போன்று வளரும். வெட்டிவேர்மண் அரிப்பைத் தடுக்கும். மாடுகள் இதன் புல்லைத் தின்னும்.
6) பயன் தரும் பாகம் -: வேர் மட்டும்.
7) மருத்துவப் பயன்கள் -: வெட்டி வேர் குளிர்ச்சியைத் தருவதுடன் நல்ல நறு மணத்தையும், உச்சாகத்தையும் தரக்கூடியது. வெட்டி வேர் சிறந்த மருத்துவப் பயனுடையது. இதிலிருந்து எடுக்கப் படும்.தைலமும் நறு மணம் கொண்டது. இதனை மணமூட்டியாக தைலங்களிலும். குளியல் சோப்புகளிலும், பயன் படுத்துவதுண்டு. இந்த எண்ணெய்யை கை,கால் பிடிப்புகளுக்குத் தடவி வர நல்ல குணம் தெரியும்.இது காய்ச்சல் மற்றும் வயிற்றில் ஏற்படும் நோய்களைக் கட்டுப்படுத்தும். நாவறட்சி, தாகம் நீக்குவதுடன் மன மகிழ்ச்சி உண்டாகும். வாந்தி பேதிக்கும் இது நல்ல மருந்தாகும்.
வெட்டி வேரை நன்கு உலர்த்தி பொடிசெய்து கொண்டு 200 மி.கி. முதல் 400 மி.கி. அளவு எடுத்து நீரில் ஊறப்போட்டு அந்த ஊறல் நீரை 30 மி.லி. முதல் 65 மி.லி. அளவு வீதம் அருந்தி வர காச்சல் மற்றும் வயிற்றில் ஏற்படும் நோய்கள் கட்டுப் படும்.
வெட்டி வேரைக்கொண்டு செய்யப்படும். விசிறியைக் கொண்டு வீசி வர உடல் எரிச்சல், நாவறட்சி தாகம், இவை நீங்கும். மனம்மகிழ்ச்சிய்ம் உண்டாகும்.
கோடை காலத்தில் வெட்டி வேரைக் கொண்டு செய்யப்படும் தட்டிகளை ஜன்னல்களில் கட்டி வர அறையின் வெப்பத்தைக் குறைத்து மனத்தையும் குளிர்சியையும் தரும்.
வெட்டிவேரை இரண்டுபிடி எடுத்து ஒரு மண் பாண்டத்தில்போட்டு நன்கு காச்சிய சுடுநீரில் திருநீற்றுப்பச்சை விதையைப்போட்டு வைத்து வெயில் நேரத்தில் குடித்து வர, சூட்டினால் உண்டான தேக எரிச்சல், தாது நஷ்டம், கழுத்துவலி, கோடைக்கொப்பளங்கள், சொட்டுச் சொட்டாக சிறுநீர் இறங்குதல்முதலிய உஷ்ண வியாதிகள் யாவும் தணியும். வெட்டி வேரைக்கொண்டு குழித்தைலம் இறக்கி அதனை 1 முதல் 2 துளி சர்கரையில் கலந்து கொடுக்க வாந்தி பேதி குண்மாகும்.
கோடைகாலத்தில் நீர் எரிச்சல், தேக எரிச்சல், வயிற்றுக் கடுப்பு, முதலிய நோயால் அவதிப் படுபவர்கள் வெட்டிவேரை சுத்தம் செய்து உலர்த்திப் பொடிசெய்து கொண்டுஅதனுடன் பெருஞ்சீரகம் பொடி செர்த்து சம அளவு எடுத்துவெந்நீரில் 200 மி.கி. அருந்தி வர குணம் தெரியும். வெட்டிவேரை இருக்கைகளிலும், குடிநீரில் போட்டும் பயன் படுத்துகிறார்கள்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

மூலிகை வளம் Copyright © 2015 by குப்புசாமி is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book