71

வெற்றிலை.

1. மூலிகையின் பெயர் -: வெற்றிலை.

2. தாவரப் பெயர் -: PIPER BETEL.

3. தாவரக்குடும்பம் -: PIPER ACEAE.

4. வேறு பெயர் -: தாம்பூலம், நாகவல்லி, வேந்தன், திரையல் என்பன.

5. வகைகள்-கம்மாறு வெற்றிலை, கற்பூரவெற்றிலை மற்றும் சாதாரண வெற்றிலை என்பன.

6. பயன்தரும் பாகங்கள் -: கொடியின் இலை மற்றும் வேர்.

7. வளரியல்பு -: இது இந்தியாவில் வெப்பமான இடங்களிலும் சதுப்பு நிலங்களிலும், வளர்கிறது. இது ஒரு கொடி வகையைச் சேர்ந்தது. இதன் இலைகள் இதயவடிவில் பெரிதாக இருப்பதோடு நுனி கூர்மையாகவும் இருக்கும். வடிகால் வசதி இருக்கவேண்டும். அகத்தி மரங்களை இடையில் வளர்த்தி அதில் கொடிகள் வளர வளர கட்டிக்கொண்டே செல்வார்கள் மூங்கில் களிகளையும் பயன்படுத்துவார்கள். இதை ஆற்றுப் படுகைகளில் வியாபார ரீதியாக அதுகம் பயிரிடுகிறார்கள். கருப்பு நிறமுடன் நல்ல காரமாக இருப்பது கம்மாறு வெற்றிலை. கற்பூர மணத்துடன் சறிது காரமாகவும் இருப்பது கற்பூர வெற்றலையாகும். வெற்றிலைக்கு நல்ல மணமும் , காரமும் உண்டு. இது கொடி பதியம் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.

8. மருத்துவப் பயன்கள் -: பொதுவான குணம். சீதம் நீக்கும், வெப்பம் தரும், அழுகல் அகற்றும், உமிழ்நீர் பெருக்கும், பசி உண்டாக்கும், பால் சுரக்க வைக்கும், காமத்தைத் தூண்டும். நாடி நரம்பை உரமாக்கும், வாய் நாற்றம் போக்கும்.

வெற்றிலைச் சாறு சிறுநீரைப் பெருக்குவதற்கும் பயன்படுகிறது. வெற்றிலைச்சாற்றுடம் நீர் கலந்த பாலையும், தேவையான அளவு கலந்து பருகி வர சிறு நீர் நன்கு பிரியும்.

வெற்றிலையை கடுகு எண்ணெயில் போட்டு லேசாக சூடு செய்து மார்பில் வைத்துக் கட்டிவர மூச்சுத் திணறல் மற்றும் இருமலுக்கு சுகம் தரும்.

குழந்தைகளுக்கு வரும் சுரம், சன்னிக்கு, வெற்றிலைச் சாற்றில் , கஸ்தூரி, கோரோசனை, சஞ்சீவி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை மத்தித்து தேனுடன் கொடுக்க குணமாகும். சளி, இருமல், மாந்தம், இழுப்பும் குணமாகும்.

வெற்றிலையை அனலில் வாட்டி அதனுள் ஐந்து துளசி இலையை வைத்துக் கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து 10 மாத குழந்தைக்கு 10 துளிகள் காலை, மாலை கொடுக்க சளி, இருமல் குணமாகும். அனலில் வாட்டிய வெற்றிலையை மார்பிலும் பற்றாகப் போட சளி குறையும்.

குழந்தைகளுக்கு மலர்ச்சிக்கல் ஏற்பட்டால் வெற்றிலைக் காம்பை ஆமணக்கு எண்ணையில் தோய்த்து ஆசன வாயில் செலுத்த உடனடியாக மலம் கழியும்.

வெற்றிலையை அரைத்து கீல்வாத வலிகளுக்கும், விதைப்பையில் ஏற்படும் வலி, வீக்கம் முதலியவைகளுக்கு வைத்துக் கட்ட நல்ல பலன் தரும்.

கம்மாறு வெற்றிலைச் சாறு 15 மி.லி. அளவு வெந்நீரில் கலந்து கோடுக்க வயிற்று உப்புசம், மந்தம், சன்னி, சீதளரோகம், தலைவலி, நீர் ஏற்றம் வயிற்று வலி குணமாகும்.

வெற்றிலையில் சிறிது ஆமணக்கு எண்ணெய் தடவி லேசாக வாட்டி கட்டிகளின் மேல் வைத்துக்கட்டி வர கட்டிகள் உடைந்து சீழ் வெளிப்படும். சிறப்பாக இதை இரவில் கட்டுவது நல்லது.

சுக்கு, மிளகு, திப்பிலி சம அளவு கலந்த திரிகடுக சூரணத்துடன் வெற்றிலைச் சாறு தேன் கலந்து சாப்பிட ஆஸ்துமா குணமாகும். 5 கிராம் சூரணம்+10 மி.லி. வெற்றிலைச்சாறு தேன் 10 கிராம் கலந்து காலை, மாலை நோயிக்குத் தக்க வாறு 48-96 நாள் சாப்பிட வேண்டும்.

குழந்தை பெற்ற பின்னர் தாய்க்கு அதிகமாக பால் சுரக்க வெற்றிலையை சிறிது ஆமணக்கு எண்ணெய் விட்டு வதக்கி மார்பில் வைத்துக் கட்டி வர தாய்பால் அதிகமாகச்சுரக்கும்.

வெற்றிலைச் சாறு நான்கு துளி காதில் விட எழுச்சியினால் வரும் வலி குணமாகும்.

விடாது மூக்கில் ஒழுகும் சளிக்கும் வெற்றிலைச்சாற்றை மூக்கில் விட குணமாகும்.

ஒரிசாவில் சில பகுதிகளில் பெண்கள் குழந்தைகள் பிறக்காமல் தடுக்க 10 கிராம் வெற்றிலை வேரையும், மிளகையும் சம அளவு வைத்து அரைத்து 20-40 நாட்கள் சாப்பிட்டு வருகிறார்கள்.

வெற்றிலையின் வேரை சிறுதளவு எடுத்து வாயிலுட்டு மென்று வர குரல் வளம் உண்டாகும். எனவே இசைக்கலைஞர்கள் இதனை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.

நுரையீரல் சம்பந்தமான நோய்களிக்கு வெற்றிலைச்சாறும், இஞ்சிச் சாறும் சம அளவு கலந்து அருந்திவர நன்மை ஏற்மடும்.

சிறுவர்களுக்கு அஜீரணத்தைப் போக்கி பசியைத் தூண்ட வெற்றிலையோடு மிளகு சேர்த்து கஷாயம் செய்து கொடுத்து வரலாம்.

“வெற்றிலைக்கு முன்னம் பெறும் பாக்கை வாயிலிட்டால்
குற்றமுறும் உறவோர் கூட்டம்போம்-வெற்றிலையை
முன்னிட்டுப் பாக்கருந்த மூதறிவோர் தம் மார்பின்
மன்னிட்டு வாழும் பூ மாது

அடைக்காய் தின்பதில் ஊறுமுதல் நீர் நஞ்சாம்
அதி பித்தம் இரண்டாவதூறு நீரே
கடையமிர்தம் மூன்றாவதூறு நீர் தான்
கனமதுர நான்காவதூறு மந்நீர்
மடையெனவே ஐந்தாறிற் சுரந்துள் ஊறி
வருநீர் களைச் சுகித்து
தடையுருப் பித்தமொடு மந்த நோயும்
தளர்பாண்டு நோயும் உண்டாம் தரம் சொன்னோம்.”

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

மூலிகை வளம் Copyright © 2015 by குப்புசாமி is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book