2

வேலிப்பருத்தி.
1) மூலிகையின் பெயர் -: வேலிப்பருத்தி.

2) தாவரப்பெயர் -: DAEMIA EXTENSA.

3) தாவரக்குடும்பம் -: ASCLEPIADACEAE

4) வேறு பெயர்கள்-: உத்தம கன்னிகை மற்றும் உத்தாமணி.

5) பயன் தரும் பாகம் -: இலை,வேர் முதலியன.

6) வளரியல்பு -: தமிழகமெங்கும் வேலிகளில் தானே படர்ந்து வளர்கிறது. இதயவடிவ இலைகளை மாற்றடுக்கில் கொண்டு பசுமை நிற வெகுட்டல் மணமுடைய பூங்கொத்துக் களையும் மென்மையான முட்களைக்கொண்ட இரட்டைக் காய்களையும், பாலுள்ள பிசுபிசுப்பான ஏறுகொடி. முட்டைவடிவ விதைகளில் பட்டுப் போன்ற பஞ்சுகள்காணப்படும். இதனை உந்தாமணி என்றும்குறிப்பிடுவதுண்டு.காய்கள் காய்ந்து வெடித்துப் பஞ்சுகளுடன் விதையும் சேர்த்துப் பறந்து சென்று வேறு இடங்களில் இனப் பெருக்கம் செய்யப்படுகிறது.

7) மருத்துவப்பயன்கள் -: இது நெஞ்சிலே இருக்கின்ற கோழையை அகற்றி வாந்தியை உண்டாக்குவதோடு புழுக்களைக் கொல்லும் தன்மையுடையது.
இதன் இலையை இடித்துப் பிழிந்த சாற்றை ஒரு தேக்கரண்டி வீதம் அருந்தி வர ஆஸ்த்துமாவுக்கும் பாம்புக் கடிகளுக்கும் குணம் ஏற்படும்.
நாள்பட்ட புண்களுக்கு இதன் இலையை அரைத்துக் கட்டி வந்தால் புண்கள் எளிதில் ஆறும்.
பெண்களுக்கு மாதவிலக்கின் போது உண்டாகும் வயிற்று வலிக்கு வேலிப் பருத்தி இலைச்சாற்றைத் தேனுடன் கலந்து அருந்தி வர குணம் தரும்.
குழந்தைகளுக்கு வயிற்றில் புழுத் தொந்தரவு அதிகமாக இருந்தால் இதன் இலையைக் குடிநீரிட்டு ஒரு பாலாடை அளவு கொடுத்து வர புழுக்கள் வெளியாகும்.
கால் வீக்கங்களுக்கும், உடம்பில் அடிபட்ட வீக்கங்களுக்கும், இதன் இலைச் சாற்றையும், சுண்ணாம்பையும் கலந்து பூசி வர அவை குணமாகும்.
இதன் இலைச்சாற்றுடன் தேன் கலந்து அருந்தி வர இருமல் தணியும்.
இதன் இலையை நன்கு அரைத்து எடுத்த விழுதை நகச்சுற்று, கண்ட மாலை இவைகளுக்குப் பற்றிட்டுவர நல்ல குணம் தரும்.
காணாக்கடி, அரிப்பு, தடிப்புக்கு இதன் இலைச்சாறு தடவலாம்.
இலையை வதக்கித் துணியில் கட்டி ஒத்தடம் கொடுக்கக் கீல் வாதம், முடக்கு வாதம், வாதக் கடைச்சல், இடுப்புவலி மிதலியன குணமாகும்.
இலைச்சாற்றுடன் சுக்கு, பெருங்காயம்,பொடித்துக் காயச்சி இளஞ்சீட்டில் பற்றிட வாத வலி, வீக்கம் குணமாகும், யானைக்கால் நோய்தொடக்க நிலையில் இருந்தால் 40,50 நாள்களில் குணமாக்கலாம்.
இதன் வேரை உலர்த்தித் தூள் செய்து 2 முதல் 4 சிட்டிகை வரை பாலில் கொடுக்க குழந்தைகளின் வாயுத் தொல்லைகள் நீங்கிப் பேதியாகும், பூச்சி, கிருமிகள் சாகும்.
இதன் இலைச்சாற்றில் 7முறை மிளகை ஊறவைத்து வெய்யிலில் உலர்த்தித் தூள் செய்து 2 முதல் 4 அரிசி எடை பால் அல்லது தேனில் கொடுக்கக் குழந்தைகளின் செரியாமை, வாந்தி, மந்தம், மாந்த இழப்பு, கை,கால் சில்லிட்டுப் போதல், சுரம் முதலிய சகல குழந்தை வியாதிகளுக்கும் கொடுக்கலாம்.
5 கிராம் வேரைப் பாலில் அரைத்துக் கலக்கி வடிகட்டிக் காலை மட்டும் 3 நாள் கொடுக்க நஞ்சுக் கடி, கரப்பான், கிரந்தி, சூலை, பிடிப்பு, வாயு முதலியவை போகும்.
உந்தாமணி, பொடுதலை, நுணா,நொச்சி ஆகியவற்றின் இலைகளைவகைக்கு 1 பிடி வதக்கிப் பிழிந்த சாறு 10 மி.லி. கொடுக்கச் சளியோடு கூடிய மாந்தம் தீரும்.
தக்க வயதடைந்தும் பெண் ருதுவாகாவிட்டால் வேலிப்பருத்தி இலைகள் ஆறு எண்ணம் எடுத்துச் சுத்தப்படுத்தி மூன்று மிளகு சேர்த்து அம்மியில் மைபோல் அரைத்து கழற்சிக்காய் அளவு பத்து தினங்கள் தொடர்ந்து உடகொண்டு வர ருதுவாகாத பெண்கள் ருது ஆவார்கள்.

‘ஆலித் தெழுந்தநோ யத்தனையும் தீருமேவேலிப் பருத்தியதன் மெல்லிலையால்-வேலொத்துக்கண்டிக்கும் வாதஞ்சன்னி தோஷ மும்போமுண்டிக்கும் வாசனையா மோது’

‘உத்தா மணியிலையா லும்வயிற்றுக் குன்மமொடுகுத்தாம் வலியும் குளிரும்போம்-பற்றிதுதியதன்று சொறிசிரங்குந் தொல்லுலகில் நாளும்புதியன் மூலின் புகல்.’

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

மூலிகை வளம் Copyright © 2015 by குப்புசாமி is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book