15

“நானெல்லாம் அந்தக் காலத்துல எப்படிப் படித்தேன் தெரியுமா?”

“எங்க தாத்தா அந்தக் காலத்துல பேசுன இங்கிலீஸ் பார்த்து வெள்ளைக்காரனே மிரண்டு போயிடுவானாம்(?)”

“அரசாங்க உத்யோகத்துக்கு என்னை வீட்டுல வந்து கெஞ்சுனாங்க. எங்க வீட்டுல தான் வேண்டாம்ன்னு சொல்லிட்டாங்க? “

இது போன்ற வசனங்களை நிச்சயம் உங்கள் குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் பேசக்கேட்டு கடந்து வந்துருப்பீங்க. ஆனால் இவர்கள் சொல்வதில் எத்தனை சதவிகிதம் உண்மை என்பதை நம்மால் கண்டுபிடிக்க முடியாது. ஒரு வேளை நம் அப்பா தாத்தா சொன்னபடி படித்து நல்ல பதவி மற்றும் பொருளோடு வாழ்ந்திருந்தால் நிச்சயம் நாம் பொருளாதார ரீதியாக இப்போது இருப்பதை விட இன்னமும் கூடக் கொஞ்சம் வளமாய் வாழ்ந்திருக்க முடியும். என்ன செய்வது? அவர்கள் பேசுவதை மட்டும் கேட்கும் சூழ்நிலையில் மட்டும் தானே வாழ்ந்திருப்போம்.

நான் ஒரு விசயத்தில் மட்டும் தொடக்கம் முதல் உறுதியாய் உள்ளேன். குழந்தைகளிடம் எக்காரணம் கொண்டு என் (எங்கள்) பழைய பஞ்சாங்கத்தினை அவர்களிடம் சொல்வதில்லை.

குறிப்பாக என்னைப் பற்றிப் பெருமையாய் எந்த இடத்திலும் சொல்லிக் கொண்டதும் இல்லை.

நான் கடந்து வந்த பாதையில் நான் பெற்ற இழப்புகளை, என் பலவீனங்களைப் பற்றி அவர்களுக்குப் புரியும் அளவிற்குச் சொல்லிவிடுகின்றேன். கல்வி ரீதியாக நான் இன்னமும் பெற்று இருக்க வேண்டிய தரத்தினை நான் ஏன் அடையவில்லை? அதன் காரணம் என்ன? போன்ற பின்புலங்களைச் சொல்கின்றேன்.

தொலைக்காட்சியில் வரும் விளம்பரங்களைப் பற்றி, அதற்குப் பின்னால் உள்ள ஏமாற்றுத் தனங்களைச் சொல்லிக் கொடுக்கின்றேன். நமக்கு இருக்கும் ஆசைகளும், பிறரால் உருவாக்கப்படும் ஆசைகளுக்கும் உண்டான வித்தியாசங்களைச் சொல்லி புரிய வைக்கின்றேன்.

நமக்கு என்ன வருமானம்? நாம் எந்த அளவுக்கு ஒரு பொருள் மேல் ஆசை வைக்க முடியும்? அப்படி இல்லாமல் அதிகப்படியான ஆசை வைத்துப் பொருட்களை வாங்கும் எங்கெங்கு கடன் வாங்க வேண்டும்? அதன் விளைவுகள் எப்படியிருக்கும் போன்ற விசயங்களைச் சொல்லிக் கொடுக்கின்றேன்.

இதையெல்லாம் விடச் சிக்கனமாக இருந்தால், சேமிக்கும் பழக்கம் நம் வாழ்வில் என்ன மாறுதல்கள் உருவாக்கும் என்று நடைமுறை வாழ்க்கையை அவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பதோடு நாங்கள் இருவரும் குழந்தைகளுக்கு முன் உதாரணமாக இருக்க முயற்சிக்கின்றோம்.

இதனை இன்றுவரைக்கும் கடைபிடித்துக் கொண்டு இருக்கின்றோம். என்னைச் சார்ந்த உறவுகள், அவர்கள் வாழ்க்கை முறை, அவர்களை எப்படி அழைக்க வேண்டும்?

அவர்களின் வாழ்க்கை பின்புலம் என்று நடைமுறை வாழ்க்கையைப் பற்றிச் சமயம் கிடைக்கும் போதெல்லாம் சொல்லிவிடுவதுண்டு. காரணம் உண்டு?

சென்ற (2011) கல்வியாண்டு இறுதியில் குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கூடத்தில் ஒரு சுற்றறிக்கையை வீட்டுக்கு கொடுத்து அனுப்பியிருந்தார்கள். அடுத்த ஆண்டு முதல் சிபிஎஸ்சி கல்வித் திட்டம் தொடங்குகின்றது. உங்கள் குழந்தைகளை அதில் சேர்ப்பீர்களா? என்று கேள்வியாய் கேட்டு இருந்தார்கள். வீட்டுக்கு வந்ததும் குழந்தைகள் ஆர்வமாய் என்னிடம் கொண்டு வந்து கொடுத்த போது ஒரு நொடி கூட யோசிக்காமல் நோ என்ற காலத்தில் டிக் செய்தேன். வீட்டுக்காரம்மாவுக்குக்கூடச் சற்று வருத்தம்.

ஏன் அந்தப் பாடத்திட்டத்தில் சேர்த்தால் பின்னால் நல்லது தானே? என்றார்.

” இந்தக் கேள்வியை அப்படியே மனதில் வைத்துக் கொள். இந்த வருடம் நம் குழந்தைகள் முதல் பரிட்சை எழுதும் போது உனக்கு நாக்கு தள்ளப் போகின்றது? அப்போது நீயே புரிந்து கொள்வாய்”என்றேன்.

காரணம் தொடக்கம் முதல் குழந்தைகளின் பாடத்தில் பெரும்பாலும் நான் தலையிடுவதில்லை. வீட்டுக்காரம்மா பொறுப்பு என்று நான் ஒதுங்கி விடுவதுண்டு. மூன்றாம் வகுப்பு வரையிலும் இப்படித்தான் இருந்தது. காரணம் குழந்தைகளை எந்திரம் போலவே படிக்க வைத்து ஒப்பிக்க வைத்து அதைத் திருத்தி. எனக்கு எரிச்சலான சமாச்சாரம். என்ன செய்வது நம்முடைய கல்வித்திட்டம் இப்படித்தானே இருக்கிறது? ஆனால் எனக்குத் தெரியும்.

மூன்றாம் வகுப்புக்குச் செல்லும் குழந்தைகளின் கல்வியில் நாமும் இனி தலையிட வேண்டியிருக்கும் என்று மனதில் யூகித்து வைத்தபடியே இப்போது இரவு நேரங்களில் குறிப்பிட்ட நேரம் செலவழிக்க வேண்டியுள்ளது. குறிப்பாக அவர்கள் படிக்கும் பாடத்தில் உள்ள ஹிந்தி மொழிக்கு நான் மட்டும் அதிகக் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இது போன்ற பாடங்களுக்கு ஒழுங்கான ஆசிரியர்கள் தேவை. ஆனால் பள்ளிக்கூடங்களில் இதை ஒரு கௌரவமாகத் தான் வைத்துள்ளார்கள்.

எனக்கு ஹிந்தி மொழி எழுதப்படிக்கத் தெரியும் என்பதால் குழந்தைகளுக்கு உதவ முடிகின்றது. ஹிந்தி மொழியின் அடிப்படை தெரியாத பெற்றோர்களுக்கு?

40 குழந்தைகள் ஒரு வகுப்பறையில் இருக்கிறார்கள். ஒவ்வொரு வகுப்புக்கும் செக்சன் வாரியாக ஈ வரைக்கும் பிரித்து வைத்துள்ளார்கள். போட்டிகள் அதிகமாகவே இருக்கும்.

ஒரு வகுப்பாசிரியர் நிச்சயமாக 40 குழந்தைகளின் மேலும் தனித்தனியாகக் கவனம் செலுத்த முடியாது. ஒவ்வொரு ஆசிரியர்களும் எந்திரம் போலவே செயல்பட வேண்டியள்ளது. அவர்களைப் பொறுத்தவரையிலும் சிலபஸ் முடிக்க வேண்டும். இதைப்போலவே ஒவ்வொரு மாணவர்களும் எந்திரம் போலவே மாறி தேர்வு சமயங்களில் துப்பி விட்டு வரவேண்டியுள்ளது.

தமிழ்நாட்டில் பெரும்பாலும் ஒவ்வொருவர் வீட்டிலும் பேசும் மொழி தமிழ்மொழி.

ஆனால் குழந்தைகள் படிப்பதோ ஆங்கில வழிக்கல்வி.

இப்போதுள்ள மெட்ரிகுலேஷன் சிலபஸில் உள்ள பாடங்களைப் படித்துக் குழந்தைகளைப் புரிய வைப்பதற்குள் முழி பிதுங்கி விடுகின்றது. இன்னும் அடுத்தடுத்த வகுப்புகள் செல்லும் போது எப்படி இருக்கும்? இதுவே கிராமப்புறம் சார்ந்த மாணவர்களின் பெற்றோர்கள் ஆசைப்பட்டு ஆங்கிலவழி கல்வி கூடங்களில் சேர்க்கின்றார்களே?

அந்த மாணவர்களுக்குப் பெற்றோர்கள் எப்படி உதவ முடியும்?

கேள்விகளுக்கு நன்றாகப் பதில் எழுதினால் முதல் ரேங்க். அந்தப் பாடத்தில் உள்ள விசயங்கள் புரிந்ததா? இல்லையா? அதன் மூலம் என்ன உணர்ந்து கொண்டார்கள்? போன்றவைகள் எல்லாம் இங்கே அவசிமில்லாமல் போய்விடுகின்றது. ஆனால் இந்த இடம் தான் எனக்கு முக்கியமாகப் படுகின்றது. இரண்டு நாளைக்கு ஒரு முறை வகுப்பாசிரியர் நடத்தும் பாடங்களைக் குழந்தைகளை விட்டே சப்தமாகப் படிக்க வைத்து அதன் தமிழ் அர்த்தங்களை, அந்தப் பாடம் சொல்லும் கருத்துக்களைப் புரியவைக்கின்றேன்.

இதனால் என்ன லாபம்? நாம் பள்ளிக்கூடத்தில் படிக்கும் போது, ஒரு பத்தி ஒன்றை கேட்டு இடையே வெறும் கோடு மட்டும் போட்டு வார்த்தைகளை, வாக்கியங்களை நிரப்பச் சொல்வார்கள். நாம் தமிழ்வழிக்கல்வி மூலம் படித்து வந்த போது நமக்கு இருந்த ஆங்கிலப் பாடத்தில் மட்டும் தான் இப்படி வரும்.

மற்றபடி தமிழ்பாடங்களில் இது போன்ற கோடிட்ட இடங்களில் நன்றாகவே எழுதிவிட்டு வந்திருப்போம்.

ஆனால் ஆங்கிலப் பாடங்களில் நிச்சயம் ஒத்தையா ரெட்டையா என்று யோசித்து ஏதோவொன்றை நிரப்பிவிட்டு வந்துருப்போம். காரணம் அதன் தமிழ் அர்த்தம் நமக்குத் தெரியாது. நான் கண்களை மூடிக்கொண்டு சாமியை நினைத்துக் கொண்டு கீழே கொடுக்கப்பட்ட வார்த்தைகளில் ஒன்றை தேர்ந்தெடுத்து அதில் நிரப்பி வந்து இருக்கின்றேன்.

ஆனால் எந்தச் சாமியும் உதவவில்லை.

எல்லாமே தப்பு தான்.

விடைத்தாள் வரும் போது அந்தப் பகுதியில் முட்டை தான் வாங்கியுள்ளேன்.

ஆனால் என் குழந்தைகள் இது போன்ற விசயங்களில் அட்டகாசமாக எழுதிவிட்டு வந்து விடுகிறார்கள். காரணம் முழுமையாக அர்த்தம் புரிந்த மகிமையிது. இதை விட மற்றொரு ஆச்சரியம். குழந்தைகளுடன் படிக்கும் மற்றக் குழந்தைகளின் அம்மாக்கள் மகள்களிடம் தொலைபேசி வாயிலாகச் சந்தேகம் கேட்டு அவர்கள் குழந்தைகளுக்குப் பாடம் நடத்துகிறார்கள் இதை என்னவென்று சொல்வது?

இதில் நான் பெருமைப்பட்டுக் கொள்ள ஒன்றுமில்லை. குழந்தைகளுக்கு உதவும் சூழ்நிலையில் பெற்றோர்கள் இருக்க வேண்டும். அல்லது அந்த அறிவை வளர்த்துக் கொள்ளவாவது வேண்டும்.

ஆனால் எத்தனை வீட்டில் பெற்றோர்கள் இதில் கவனம் செலுத்துகிறார்கள் என்பது மில்லியன் டாலர் கேள்வி. தொலைக்காட்சி என்பது இன்று ஏறக்குறைய அனைவர் வீட்டிலும் இருக்கிறது. உங்களுக்குத் தெரிந்த ஒரு நூறு குடும்பத்தில் உள்ள பெற்றோர்களிடம் கேட்டுப் பாருங்கள். எத்தனை பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை டிஸ்கவரி, நேஷனல் ஜியோகிரபிக், அனிமல் போன்ற சேனல்களைப் பார்க்க உதவுகிறார்கள் என்று?

நிச்சயம் இருக்காது. குறிப்பிட்ட நாலைந்து சேனல்கள் மட்டும் தான் ஓடிக் கொண்டு இருக்கிறது. பிசாசு போல் ஆட்டிப் படைக்கும் சுட்டி டிவி சேனல்களுக்குக் குழந்தைகள் அடிமையாகவே மாறியுள்ளார்கள். இது தவறல்ல என்றாலும் இதன் அளவீடுகளைப் பெற்றோர்கள் தான் குழந்தைகளுக்குப் புரிய வைக்க வேண்டும்.

மூன்று ஆண்டுகள் போராட்டத்திற்குப் பிறகு இப்போது இந்த வருடம் தான் குழந்தைகள் குறிப்பிட்ட நிகழ்ச்சி டிஸ்கவரி சேனலில் வரும் என்று சொல்லி காத்திருந்து பார்க்கும் சூழ்நிலையை உருவாக்க முடிந்தது. இது தவிர ஆங்கிலச் சேனல்களை அறிமுகம் செய்து வைத்துக் கொண்டிருக்கின்றோம்.

நம் குழந்தைகள் ஆங்கிலம் பேச வேண்டும் என்பதில் மட்டும் ஒவ்வொரு பெற்றோர்களுக்கும் ஆசை இருக்கின்றது. இதுவே பல தனியார் பள்ளிகளைக் கொள்ளை அடிக்க வைத்துக் கொண்டு இருக்கிறது.

தற்போது கல்வி என்பது பெற்றோர்களுக்கு ஒரு கௌரவம் சார்ந்த விசயமாக மாறியுள்ளதால் இந்தப் பள்ளிக்கூடத்தில் என் மகள் மகன் படிக்கின்றான் என்று மற்றவர்களிடம் பெருமையாய் பேச உதவுகின்றது.

சமகாலத்தில் குழந்தைகளின் உடைகள் மேல், அதுவே பெண் குழந்தைகள் என்றால் அவர்களுக்கு மேக்கப் செய்து அனுப்பவதில் அதிகக் கவனம் செலுத்தும் தாய்மார்கள் தங்களை நிறைய மாற்றிக் கொள்ள வேண்டும். இதுக்கு மேலாக அப்பாக்கள் கொஞ்ச நேரமாவது குழந்தைகளுடன் உரையாட வேண்டும். எதார்த்த வாழ்க்கையை அவர்களுக்குப் புரியவைக்க வேண்டும்.

அடிப்படையில் அந்தக் குழந்தைகளின் பாடங்களின், 200 மடங்கு கவனம் செலுத்த வேண்டும். காரணம் குழந்தைகளின் எதிர்காலம் என்பது உலகளாவிய போட்டிச் சூழலில் உள்ளது. இதில் பள்ளிக்கூடம், ஆசிரியர், மற்றும் குழந்தைகள் மேல் மட்டும் குறையைக் கண்டு கொண்டுருக்காமல் உண்மையான அக்கறையை நாம் தான் தொடங்கி வைக்க வேண்டும். அல்லது அந்தக் குழந்தைகள் மேல் திணிக்கும் அழுத்தத்தையாவது நாம் குறைத்துக் கொள்ள வேண்டும். காரணம் இன்று ஆங்கில வழிக்கல்வி மூலம் படிக்க வைக்கும் பெற்றோர்கள் மனதிற்குள் இருக்கும் ஆசைகளுக்கு பலிகிடா போலவே இந்தக் குழந்தைகளை படுத்திக் கொண்டிருக்கிறார்கள்? ஒரு பயிர் வளர்வதற்கே எத்தனை விதமான அக்கறையை நாம் செலுத்த வேண்டியுள்ளது. நம் குழந்தைகளின் உடல் மன ஆரோக்கியத்திற்குப் பெற்றோர்கள் தான் முழுமையான உரமாக இருக்க வேண்டும்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

கொஞ்சம் காசு கொஞ்சம் கல்வி Copyright © 2015 by ஜோதிஜி திருப்பூர் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book