1

ஒவ்வொருவருக்கும் இருபது வயதில் இந்த உலகம் அழகாகத் தான் தெரியும். சாதிப்பதற்கான சாத்தியக்கூறுகளைப் பற்றியே அதிகம் யோசிக்க வைக்கும். வானத்தைக் கூட வில்லாக வளைத்து விட முடியும் என்று நம்ப வைக்கும். மொத்தத்தில் தன்னம்பிக்கை ததும்பி வழியும். ஏறக்குறைய கடலை கரையோரம் நின்று ரசிக்கும் மனப்பாங்கு.

ஆனால் கடலில் இறங்கி உள்ளே நுழைவதற்குள் முப்பது வயது டக்கென்று வந்து விடும். வானம், கடல், அலைகள் என்று ரசிப்பதற்காக இருந்த அத்தனையும் அப்படியே மாறி கணக்குகளின் வழியே ஒவ்வொன்றையும் யோசிக்கத் தோன்றும். நாம் சம்பாரிக்க என்ன வழி? என்ற அலை தான் மனதில் ஓயாமல் அடித்துக் கொண்டேயிருக்கும்.

அப்போது நம்மிடமிருந்த ரசனைகளை வேறொரு அலை இழுத்துச் செல்லும். மீதியிருக்கும் ஆர்வத்தை மற்றொரு அலை வந்து அலைக்கழிக்கும். கொஞ்சம் கொஞ்சமாக நம்முடைய குழந்தைத்தனம் மாறியிருப்பதை அப்போது தான் நாம் உணரத் தொடங்கியிருப்போம். ஆனாலும் இரவு பகலாக ஏதொவொன்றுக்காக நம் மனம் கெஞ்சிக் கொண்டேயிருக்கும். இந்த அலை மட்டும் இடைவிடாமல் தினசரி வாழ்க்கையில் நம்மைத் தாக்கிக் கொண்டேயிருக்கும். .

இந்தச் சமயத்தில் தான் எண்ணிக்கையில் அடக்க முடியாத கணக்கு அலைகள் நம் வாழ்க்கையில் அறிமுகமாகின்றது. அதுவே நம்மை இழுத்துச் செல்லும். அந்த அலை காட்டும் வழியில் நம் பயணம் தொடங்கும். இது கற்றுத் தரும் பாடங்களே நம் வாழ்க்கையை வழி நடத்தும். நம்மிடம் இருந்த கலையார்வம், கலாரசனை அத்தனையும் மறையத் தொடங்கும். வாழ்க்கையில் ஜெயித்தே ஆக வேண்டிய கட்டாயம் உருவாகின்றது. “இனி நம் தலையைக் காப்பாற்றிக் கொண்டால் போதும் ” என்ற நிலையில் திருமணம் என்றொரு படகு நமக்குக் கிடைக்கின்றது.

மூச்சு வாங்கி, மூச்சடைந்து இனி நாம் மூழ்கி விடுவோமோ? என்ற சூழ்நிலையில் இது நமக்கு ஆசுவாசத்தைக் கொடுக்கும். பல சமயம் தள்ளு காற்று நம்மை இழுத்துக்கொண்டு செல்லும். பலரும் இதனை அதிர்ஷ்டம் என்கிறார்கள். பயணம் சுகமாகவே இருக்கும். ஆனால் திடீரென்று வாழ்க்கையின் சூழ்நிலை மாறும். தொட்டதெல்லாம் பிரச்சனையாக மாறும். இப்போது தான் எதிர்காற்றில் பயணம் செய்வது எப்படி? என்ற அனுபவம் கிடைக்கத் தொடங்குகின்றது. அப்போது தான் நமக்குள் இருக்கும் சக்தியின் ரூபமே நமக்குப் புரிபடத் தொடங்கும். சில வருடங்களில் படகில் குழந்தைகளும் வந்தமர “பாரம் சுமப்பவர்களே என்னிடம் வாருங்கள்” என்ற புலம்பல் அலை நமக்கு அறிமுகமாகின்றது.

நம் வாழ்க்கைக்குத் தேவையெனக் கருதியிருந்த ரசனையான விசயங்களும், ரசிக்க வேண்டிய தருணங்களும் நம்மை விட்டுச் முழுமையாகச் சென்ற பிறகே நாம் மனதிற்குள் வைத்துள்ள கணக்குகள் இப்போது நம் பயணத்திற்கு உதவக்கூடிய துடுப்பாக மாறுகின்றது.

அனுபவங்கள் தரும் வலிகளே நமக்கு வாழ்க்கைத் துணையாக மாறத் தொடங்குகின்றது.

இதனை நாற்பது வயதை கடந்தவர்களும், கடந்து அதற்கு மேலே வந்தவர்களும் இதனை உணர்ந்தே இருக்கக்கூடும். ஒவ்வொருவருக்கும் நாற்பது வயது தொடங்கும் போது மூச்சு முட்டும். பலருக்கும் இந்த வாழ்க்கை போராட்டங்கள் பழகிப் போயிருக்கும்.

“விதி வலியது” என்றதொரு அசரிரீ குரல் வானத்தில் இருந்து ஒலிக்கும். நம் வாழ்க்கையே செக்கு மாட்டுத்தனமாக மாறியிருக்கும். ஆனாலும் நாற்பது வயதை கடந்து சாதித்தவர்களும் இங்கே அதிகம். சாதனைகள் என்றதும் இது வெறுமனே பணம் சார்ந்ததாக எடுத்துக் கொள்பவர்கள் ஒரு பக்கம்.

எனக்குப் பிடித்த வாழ்க்கையை நான் வாழ்ந்திருக்கின்றேன் என்பவர்கள் மறு பக்கம். நான் விரும்பியபடியே என் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றேன் என்பவர்கள் இங்குக் குறைவான எண்ணிக்கையில் இருந்தாலும் அவர்களைப் போன்றவர்களால் எழுத்துலகம் நாள்தோறும் வளர்ந்து கொண்டே இருக்கின்றது. கலையார்வம் கொண்டவர்களால் மட்டுமே இங்கே கணக்கற்ற படைப்புகளையும் தர முடிகின்றது.

இந்தச் சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும் ஓராயிரம் வழித்தடங்கள். எது சரி? எது தவறு? என்று இன்னமும் எவராலும் இறுதியிட்டு கூறமுடிவதில்லை.

பணத்தையே சுற்றிச் சுற்றி வந்தாலும், மனைவியுடன் கொஞ்சிக் கொஞ்சி வாழ்ந்தாலும், குழந்தைகளை உயிராக நேசித்தாலும் தற்போதையை நவீன வாழ்க்கையில் ஒவ்வொருவரும் தனித்தனி தீவுகளாகத்தான் வாழ வேண்டியுள்ளது. இதுவே தான் நான் எழுதுவதற்கான காரணங்களையும் உருவாக்கின்றது. தங்களுக்குக் கிடைத்த வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளும் போது பலரின் ஆச்சரியமான திறமைகள் வெளியே தெரிய வருகின்றது.

நானும் என் எழுத்துத் திறமைகளைக் கடந்த நான்கு ஆண்டுகளாகப் படிப்படியாக வளர்த்து வந்துள்ளேன். காரணம் ஒருவர் தன் வாழ்க்கையில் சந்திக்கும் அனுபவங்கள் எந்த அளவுக்கு அவரைச் செதுக்கி உருவமாக மாற்றுகின்றதோ அதே அளவுக்குத்தான் அவரின் தனிப்பட்ட சிந்தனைகளும் காலப்போக்கில் மாறிக் கொண்டே வருகின்றது.

பணத்தேடல்களுக்கு அப்பாற்பட்டு தனது ரசனை உள்ளத்தைக் காப்பாற்றி வைத்திருப்பவர்களிடம் பொறாமை உணர்வு மேலோங்குவதில்லை. உண்டு களித்து உறக்கம் தவிர்த்து ஓயாமல் காட்டு ஓநாய் போலவே உலகத்தைப் பார்த்துக் கொண்டிருப்பவர்களால் ஒரு நாளும் நிம்மதியாகவும் வாழ முடிவதும் இல்லை. நாற்பது வயதில் தன் விருப்பங்களை விடத் தான் சார்ந்திருக்கும் குடும்ப உறவுகளுக்குச் சரியானவனாக இல்லாத போது அந்த வாழ்க்கை நரக வாழ்க்கையாக மாறிவிடுகின்றது.

இதுவே சம்பாரிப்பதே முதல் கடமை என்கிற ரீதியில் நம்மைக் கொண்டு வந்து நிறுத்தி விடுகின்றது. அதைத்தவிர வேறொன்றை பேசுவதும் நினைப்பதும் தேவையற்றது என்று இன்றைய சமூகத்தால் சுட்டிக்காட்டப்படுகின்றது.

இந்தியச் சூழல் மட்டுமல்ல. வளரும் நாடுகளில் இயல்பாக வாழ வேண்டிய வாழ்க்கையைக் கூடப் போராடித்தான் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்கிற நிலையில் வாழ்பவர்கள் அத்தனை பேர்களுக்கும் வாழ்க்கையென்பது சுற்றியுள்ள ரசனைகளை ரசிப்பதற்கல்ல. உயிர் பிழைத்திருப்பதற்கு மட்டுமே..

இங்கே கோடுகளை நாம் கிழிப்பதில்லை. மற்றவர்களால் கிழிக்கப்பட்டு அதற்குள் சிக்கிக் கொள்ள வேண்டியவர்களாக மாறிப் போகின்றோம். இந்தச் சமயத்தில் தான் நம்முடைய அத்தனை விருப்பங்களும் அடிபட்டு அடைய முடியாத கனவுகளை அடை காக்கும் கோழி போல வைத்துக் கொண்டு வாழ்கின்றோம். இந்தியாவில் வேலைகேற்ற படிப்பில்லை. படிப்பிற்கேற்ற வேலையும் கிடைப்பதில்லை. இந்த நிலையில் தான் பிழைப்புக்காக ஒரு துறையில் நுழைந்து நுகத்தடி பூட்டப்பட்ட மாடுகள் போல வாழத் தொடங்கி விடுகின்றோம்.

பிழைப்புக்காக மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கும் அவரவர் சார்ந்த துறையில் எத்தனை பேர்களுக்குத் திருப்தி கிடைத்தது? என்பதை யோசிக்கும் போது இறுதியில் ஒவ்வொருவருக்கும் மிஞ்சுவது “நாமும் இந்த உலகில் வாழ்ந்துள்ளோம்” என்பதே. நம் முன்னால் இருக்கும் ஒவ்வொரு போட்டிகளும் பூதாகரமாக நமக்குத் தெரிய காலப் போக்கில் பந்தயக் குதிரையாக மாறி விடுகின்றோம். நமக்கான விருப்பங்கள் அத்தனையும் பின்னுக்குப் போய் விடுகின்றது. இலக்கில்லா பயணம் போல இந்த வாழ்க்கை ஓடிக் கொண்டே இருக்கின்றது.

ஒவ்வொருவரும் “பொருள்வாதி”களாகவே வாழ்கின்றோம். அதுவே சரியென்று சமூகம் உணர்த்துவதால் அவ்வாறே வாழ ஆசைப்படுகின்றோம். நம் விருப்பங்கள், மனைவி,, மகள் மகன் என்று தொடங்கி இந்த ஆசைகள் விரிவடைந்து கொண்டே போகின்றது. இன்று பேரன் பேத்திகளுக்கும் சொத்து சேர்க்க வேண்டும் என்று விரிவடைந்து வந்து விட்டதால் பறக்கும் மனிதர்களாகவே மாறிவிடுகின்றோம்.

ரசிக்க நேரமில்லாமல் ருசிக்க விருப்பமில்லாது இந்த வாழ்க்கையை விரும்பியே வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஏக்கத்தைச் சுமந்து ஏக்கத்தோடு வாழ்ந்து “ஏதோ வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்” என்கிற ரீதியில் இந்த வாழ்க்கை முடிந்தும் போய் விடுகின்றது.

மனிதர்களின் நாற்பது வயதை “நாய் வயது” என்கிறார்கள். கவ்வியிருப்பது “ஆசை” என்ற எலும்பென்றும் தெரிந்தும் அதையே தான் தூக்கிக் கொண்டு அலைகின்றோம்.

இதுவே காலப்போக்கில் கவலைகளாக மாறுகின்றது. இந்தக் கவலைகள் தான் வழிகாட்டியாக மாறுகின்றது. நம்மை அழைத்துச் செல்கின்றது. அதுவே நம்மை உருக்குலைக்கவும் செய்கின்றது. அறுபது வயதை மற்றொரு குழந்தை பருவத்தின் தொடக்கம் என்கிறார்கள்.

அறுபது வயதிற்கு மேல் ஒருவர் ஆரோக்கியத்துடன் வாழும் பாக்கியம் அமையப் பெற்றவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். இயற்கை கொடுத்த வரம் அல்லது இயல்பில் உருவாக்கிக் கொண்ட பழக்கவழக்கம் தந்த பரிசு. மனிதனுக்கு ஆசைகளும், ரசனைகளும் எந்த அளவுக்கு முக்கியமோ அதை வாழ்வின் கடைசி வரை அனுபவிக்க உடல் ஆரோக்கியம் அதை விட முக்கியம். ஆனால் தற்போது கண்களை விற்றே சித்திரம் வாங்கிக் கொண்டிருக்கின்றோம்.

லாபமோ? நட்டமோ? தேவையோ? தேவையில்லையோ? நானும் எனது வாழ்க்கைத் தடங்களைக் கடந்த நான்கு ஆண்டுகளாக வலைபதிவில் எழுதி வந்துள்ளேன். ஒவ்வொரு சமயத்திலும் நான் பார்க்கும் சமூகத்தைப் பற்றி ஆவணப்படுத்தி வந்துள்ளேன். இதற்கு என்ன தேவை? என்ற நினைப்பு இல்லாமலேயே “கற்றதையும் பெற்றதையும்” கணக்கில்லாமல் எழுதியுள்ளேன். இன்று வரையிலும் எழுதிக் கொண்டு வருகின்றேன்.

இந்தப் பயணத்தில் ஒவ்வொரு சமயத்திலும் ஒவ்வொருவரும் என்னை நகர்த்தி வந்துள்ளார்கள். சொல்ல முடியாத அன்பை ஏதோவொரு வழியில் எனக்குக் காட்டியிருக்கின்றார்கள். என்னை வழி நடத்தி கற்றுத் தந்தும் இருக்கின்றார்கள். தமிழ் வலைதளங்களைத் திரட்டும் திரட்டிகள், என் எழுத்துக்களை உலகம் முழுக்கப் பரவியிருக்கும் தமிழர்களின் பார்வைக்குக் கொண்டு சேர்க்க உதவியது.

இங்கு அத்தனை பேர்களுக்கும் ஏதோவொரு திறமை இருக்கத்தான் செய்கின்றது. ஆனால் அடையாளம் காணப்படாமல் ஒதுங்கிப் போனவர்கள் தான் அதிகம். அவரவர் உழைப்பை மீறி சில சமயங்கள் இங்கே அதிசயங்கள் நிகழ்வதுண்டு. அதில் நானும் ஒருவனாக இன்று வரையிலும் தாக்குப்பிடித்து நிற்பதற்குக் காரணம் நண்பர்களே.

ஆனால் என் அப்பாவுக்கு நண்பர்கள் என்றால் ஆகாது. நட்பு வட்டத்தை ஆதரிக்கவும் மாட்டார். அவர் என்னுள் உருவாக்கிய தாக்கம் தான் என்னை நாற்பது வயதில் எழுத வைத்தது, அவர் மூலம் கற்றுக் கொண்ட பல அனுபவ பாடங்கள் மூலம் தான் என் வாழ்க்கைக்குத் தேவையான நேர்மையைக் கற்றுத்தந்தது. அதை விட எங்கள் குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்பதைக் கற்றுக் கொடுத்தவரும் என் அப்பா தான் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா?

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

கொஞ்சம் காசு கொஞ்சம் கல்வி Copyright © 2015 by ஜோதிஜி திருப்பூர் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book