24

என்ன பாலர் பள்ளிக்குக் கல்விக்கட்டணம் ஐம்பதாயிரமா? என்று கொண்டு போய்ச் சேர்ப்பவரிடம் கேட்டுப் பாருங்கள்? டக்கென்று பதில் வந்து விழும்.

நல்ல பள்ளிக்கூடம் என்றால் செலவு செய்வதில் என்ன தப்பு?

உங்கள் கேள்விக்குறி உங்களையே கேலிக்குறியாக மாற்றி விடும்.. இதற்குப் பின்னால் உள்ள சில எளிமையான காரணங்களை மட்டும் இங்கே பார்த்து விடலாம். ஒரு குடும்பம் கிராமத்தில் வாழும் போது அவர்கள் சார்ந்திருப்பது பெரும்பாலும் விவசாயம் சார்ந்த தொழிலில் மட்டுமே. தொடக்கத்தில் மழையை நம்பியதோடு கிணற்றுப் பாசனத்தை நம்பி விவசாயம் இருந்தது.

தொடர்ந்து கண்மாய்ப் பாசனம், ஏரிப்பாசனம், ஆற்றுப்பாசனம் என்பது வரைக்கும் தொடர்ந்தது. எளிமையான வாழ்க்கை, இயல்பான பழக்கவழக்கங்கள். மொத்தத்தில் ஆசைக்கும் அச்சத்திற்கும் இடையே வாழ்ந்த வாழ்க்கை. கனவுக் கோட்டைகள் ஏதும் தேவையில்லாத வாழ்க்கை. இன்று எல்லாமே மாறி விட்டது.

இன்று தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கணக்குகளில் காவேரி ஆற்றுப் பாசனமென்பது அதோகதியாகிவிட்டது.

பருவமழையும் பெய்யெனப் பெய்யும் மழையில் இருந்து மாறிவிட்டது. ஆழ்குழாய் தண்ணீர் வற்றிப் போனதோடு மிச்சம் மீதி இருக்கும் நீரை எடுக்க முடியாத சூழ்நிலையில், வராத மின்சாரத்தை நினைத்து கருகும் பயிர்களைப் பார்த்து மனம் ஏங்கும் நிலைக்குக் கொண்டு வந்து விட்டது. கூடவே உடல் உழைப்பை விரும்பாத மக்களும், தங்களுடன் இந்த விவசாய வேலைகள் முடிந்து போகட்டும் என்ற எண்ணம் கொண்ட பெற்றோர்களும் சேர்ந்து இன்று அலுலவக வேலைகளை மட்டுமே விரும்பும் காலகட்டத்தில் வந்து நிற்கின்றோம். மிச்சமென்ன?

கிடைத்தவரைக்கும் லாபம் என்று எண்ணிக் கொண்டு விற்றுவிட விவசாயப் பூமிகள் வந்த விலைக்கு விற்கப்பட்டு குடியிருப்பு கட்டிடங்களாக மாறி வருகின்றது. கடைசியாக ஒவ்வொருவரும் நகர்புறங்களை நோக்கி நகரத் தொடங்கி விடுகின்றனர். கிடைத்த வேலையில் ஒட்டிக் கொண்டுவிட மாதம் தோறும் கிடைக்கும் பணம் அதிக நம்பிக்கைகளைத் தந்து விட நுகர்வு கலாச்சாரத்தின் ‘குடி’மகனாக மாறி விடுகின்றனர்.

நகரத்தில் கிடைத்த வாய்ப்புகளை முறைப்படி பயன்படுத்திக் கொண்டவர்கள் தங்களின் முதல் தலைமுறைகளைக் கல்வி ஏணியில் ஏற்றிவிடச் சமூகத்தில் அந்தஸ்து முதல் அதிகாரம் வரைக்கும் அத்தனையும் எளிதாகக் கிடைத்து விடுகின்றது. அவரவர் வசிக்கும் நகரங்களில் கிடைக்கும் ஏராளமான வாய்ப்புகளில் இந்தக் கல்வி குறித்த சிந்தனைகள் அதிகமாக உருவாகி ஒவ்வொருவரும் தங்கள் குழந்தைகளுக்கு சிறப்பான கல்வி என்ற எண்ணத்துக்கு வந்து விடுகின்றனர்.

இந்த இடத்தில் தான் கல்வி வியாபாரிகளின் சேவைகளுக்கும் அரசாங்க பள்ளிகளின் செயலற்ற தன்மைக்கும் போட்டி உருவாகின்றது.

கல்வி என்பது அரசாங்கம் பொது மக்களுக்குக் கொடுக்க வேண்டிய கடமை அல்ல. தனியார் மூலம் கொடுக்கப்படும் போது அரசுக்குச் சுமை குறைகின்றது என்ற அரசின் கொள்கையினால் இன்று கல்வியின் நிலையே தலைகீழாக மாறியுள்ளது. படிக்காதவர்கள் மேதைகளாக மாறுவதும் படித்தவர்கள் அடிமை வாழ்க்கை வாழ வேண்டியதுமான சூழ்நிலை தான் இந்தியாவில் உள்ளது.

இன்று ஒவ்வொரு தனியார் நடத்தும் கல்வி நிறுவனங்களும் சிபிஎஸ்சி பாடத்திட்டத்திற்கே முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள்.

எட்டாக்கனியாக இருந்த மெட்ரிகுலேஷன் படிப்பென்பது இன்று நடுத்தரவர்க்கத்திற்கு இயல்பானதாககவே மாறியுள்ளது. எப்போதும் போல அரசாங்கப் பள்ளிகள் என்பது எந்த மாற்றமும் இன்றி இருந்தாலும் இந்தப் பள்ளிக்கூடங்களிலும் ஜெயித்து வருபவர்களை அரசாங்கம் கூட ஆதரிக்கத் தயாராக இல்லை.

நம்முடைய மனோபாவங்களின் உள்ளே பார்த்தால் வண்டலாகச் சுயநலம் குவிந்து கிடக்கும். அரசாங்க மருத்துவமனைகள் தரமற்றது. அரசு பள்ளிக்கூடங்கள் தகுதியற்றது. ஆனால் அரசு வேலை என்பது கிடைத்து விடாதா? என்று ஏக்கத்தில் வாழவைப்பது.

ஏன் பெற்றோர்களின் மனோநிலை மாறியது?.

நகர்ப்புறத்தில் வசிப்பவர்கள் மட்டுமல்ல, வளர்ந்து கொண்டிருக்கும் கிராமப் பகுதிகளில் வசிப்பவர்கள் கூடத் தமது குழந்தைகள் ஆங்கில வழிப்பள்ளியில் படித்துவிட்டால் நிச்சயம் எதிர்காலம் சுபீட்சமாக இருக்கும் என்றே உறுதியாக நம்புகின்றார்கள். அரசுப் பள்ளிகளில் படிக்க வைத்த பெற்றோர்கள் கூடத் தங்களிடம் பணம் கட்ட வசதியிருந்தால் தனியார் பள்ளிக்கூடங்களில் சேர்த்து விடலாமே என்ற ஏக்கத்தில் தான் இருக்கின்றனர்.

இந்தியாவில் உள்ள சில கல்வி அமைப்பை முதலில் பார்த்து விடலாம்.

இந்தியாவில் கல்வி என்பது இரண்டாகப் பிரிகின்றது.

ஒன்று மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.

மற்றொன்று மாநில அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிக்கூடங்கள்.

இதிலும் மேலும் இரண்டு பிரிவுகள் பிரிகின்றது.

ஒன்று அரசாங்கத்தின் நேரிடையான கண்காணிப்பில் இருக்கும் பள்ளிகள்.

அடுத்து அரசாங்கத்தின் நிதி உதவியை மட்டும் பெற்றுக் கொண்டு தனியார் நிர்வாகத்தில் இருக்கும் பள்ளிகள்.

இது தவிர மற்றொன்றும் உண்டு.

சிறுபான்மையினரின் கல்விக்கூடங்கள்.

மேலே சொன்ன இரண்டுக்கும் இந்தச் சிறுபான்மையினர் கல்விக் கூடங்களுக்கும் உள்ள ஒரே வித்தியாசம் என்னவென்றால் அரசாங்கத்தின் எந்தக் கொள்கையும் இவர்களைக் கட்டுப்படுத்தாது. ஆனால் அரசாங்கத்தின் அத்தனை பலன்களும் இவர்களுக்குப் போய்ச் சேர்ந்து கொண்டேயிருக்கும். வரம் வாங்கி வந்து கல்வியைச் சேவையாகச் செய்து கொண்டிருப்பவர்கள்.

இந்தச் சிறுபான்மை இனம் என்பது முக்கியமாகக் கிறிஸ்துவம், இஸ்லாம்,

இது தவிர மொழி ரீதியாக உள்ளவர்கள் என்று இதில் வருகின்றனர். உதாரணமாகச் சௌராஷ்டிர மொழி தொடங்கிப் பல மொழிகள் பேசுபவர்கள் போன்றவைகள் இதில் வருகின்றார்கள்.

பெரும்பான்மையாக மொழி பேசும் மாநிலங்களில் சிறுபான்மையினராக ஒரு குறிப்பிட்ட மொழி பேசுபவர்கள் இருக்கும் அத்தனை பேர்களுக்கும் இது பொருந்தும்.

அரசாங்கம் சொல்லும் இட ஒதுக்கீடு போன்ற எந்தச் சமாச்சாரமும் இது போன்ற நிறுவனங்களுக்குள் வராது, செல்லுபடியாகாது.

அடுத்து இந்தியாவில் உள்ள கல்வித்திட்டங்களைப் பார்த்து விடுவோம்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

கொஞ்சம் காசு கொஞ்சம் கல்வி by ஜோதிஜி திருப்பூர் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book