"

28

மூன்று நாட்கள் தொடர்ச்சியாகப் பள்ளிக்கு விடுமுறையிருந்தால் வீட்டில் கட்டாயம் இந்த உரையாடல் நடக்கும்.

“என்னங்கடா…… எதுவும் படிக்க, எழுத வேண்டியது எதுவும் இல்லையா?” என்று கேட்டால் சட்டென்று மூவரும் ஒரே குரலில் சொல்வார்கள்.

“கிளாஸ் டெஸ்ட் எதுவும் இல்லப்பா”

அன்றும் இன்றும் மாணவர்களைப் பரிட்சைகள் தான் படிக்க வைத்துக் கொண்டிருக்கின்றது. என்னுடன் ஒன்பதாம் வகுப்பு வரை படித்த ஒருவனுக்குப் பரிட்சை என்றால் காய்ச்சல் வந்து விடும். மற்றப் பரிட்சைகளில் கண்டு கொள்ளாத ஆசிரியர்கள் காலாண்டு அரையாண்டு சமயத்தில் இழுத்து வந்து உட்கார வைத்து விடுவார்கள்.

பரிட்சைத்தாளில் ஏதாவது எழுதி வை என்பார்கள். ‘ஆல் பாஸ்‘என்கிற ரீதியில் வந்தவன் பத்தாம் வகுப்பில் ஓடியே போய்விட்டான். மாறிய உலகில் இன்னமும் மாறாமல் நமது கல்வித்திட்டம் இப்படித்தான் இருக்கின்றது. சமீப காலமாகத்தான் தனியார் பள்ளிக்கூடங்களில் பத்தாம் வகுப்பில் முழுமையான தேர்ச்சி போய்விடும் என்ற பயத்தால் கழித்துக் கட்டி வெளியேற்றுவதும் மறைமுகமாக நடந்து கொண்டிருக்கின்றது.

+2 வகுப்பை எளிதாக ஊதித்தள்ளி கல்லூரிக்குள் நுழைந்தவரா? மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள் பார்க்கலாம்? தினந்தோறும் பாடங்களை ஆர்வத்துடன் தான் படித்தேன் என்று? ஆம் என்றால் நீங்கள் கடைசி ஐந்து சதவிகித மாணவர்களில் ஒருவராக இருக்கக்கூடும். நாம் பார்க்கப் போவது மீதி உள்ள 95 சதவிகித மாணவர்களைப் பற்றியே.

இந்த 95 ல் நானும் ஒருவன். என் குழந்தைகளும் அப்படி இருந்து விடக்கூடாது என்பதற்காகப் பாடத்திற்கு அப்பால் உள்ள விசயங்களைப் பல முறை அவர்களுடன் உரையாடுவதுண்டு. நக்கலாய், நையாண்டியுடன் ஜாலியாய் பேசுவதுண்டு. சுற்றி வளைத்துப் பாடம் சொல்லும் கருத்தை மெல்ல அவர்களுக்குள் புகுத்துவதுண்டு.

மாறாத ஆசிரியர்களைப் போல நம் பாடத்திட்டங்களும் மாறவில்லை.இங்கே சாபங்கள் தான் மாணவர்களுக்கு வரமாக உள்ளது. இதற்குள் நின்று கொண்டு சிறப்பான தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே இங்கே எதிர்காலம் பிரகாசமாக உள்ளது. பிரகாசமென்பது உடனடியாக வேலை வாய்ப்பு கிடைக்கக்கூடிய துறைக்குச் செல்லக்கூடிய படிப்பில் சேர உதவுவது.

நான் படித்த போது தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், வரலாறு என ஐந்தே பாடங்கள். அறிவியல் பாடத்தில் இயற்பியல், வேதியியல், உயிரியல். இது தவிர வரலாறு பாடத்தில் தனியாகப் புவியியல். இன்று பாடத்திட்டங்களின் தன்மை மாறியுள்ளது. ஆனால் அதே பழைய கள். ஆனால் ஒழுகும் குப்பிகள்.

பள்ளிக்கூடங்களில் தமிழ்ப்பாடங்களை வெறுத்தவர் எவருமே இருந்திருக்க மாட்டார்கள். நிச்சயம் ஒவ்வொரு தமிழாசிரியர்களும் நல்ல கதை சொல்லிகளாகத்தான் இருந்திருப்பார்கள். வரலாற்றுச் சம்பவங்களில் சுவாரசியம் இருந்ததோ இல்லையோ, ஆனால் வரலாற்றுப்பாடத்தை நடத்திய ஆசிரியர் சம்பவங்களைத் தொடர்பு படுத்தி ஆர்வமுடன் சொல்லத் தெரிந்திருந்தால் சில சமயம் சுவராசியமாக இருந்துருக்க வாய்ப்புண்டு.

அறிவியலின் மாற்றங்களை உணராதவர்களும், கணக்கு என்பதைக் கல்லில் உரிக்கும் நாறாக மாற்றியவர்களையும் வைத்துப் படித்த பாடங்கள் எதுவும் மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்டியிருக்கும் என்றா நம்புகின்றீர்கள்?

ஆங்கில வகுப்பு என்பது பேதி வர வைப்பது. ஷேக்ஸ்பியரைப் பற்றி நடத்தும் போதெல்லாம் டூரிங் டாக்ஸியில் பார்த்த பழைய படங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தது தான் இப்போது என் நினைவிற்கு வருகின்றது. ஆங்கில இலக்கணமென்பது ஆலகால விஷமாகத் தான் நடத்தியவர்கள் புரியவைத்தார்கள்.

மொத்தத்தில் பத்து மாத கஞ்சியை ஊற வைத்து ஊட்டி விட்டால் எப்படியிருக்கும்? இப்போதும் அப்படித்தான் இருக்கின்றது. 2013 ஆம் ஆண்டின் இந்திய தொழில் நுட்பத்தின் சாதனையான செவ்வாய்க்கு ஏவப்பட்ட மங்கள்யான் குறித்து மாணவர்கள் தங்கள் பாடங்களில் படிக்க இன்னும் ஐந்து வருடங்கள் ஆகலாம்.

பாடத்திட்டத்தை எழுதும் ஆசிரியருக்கு அது குறித்து எந்த அளவுக்குத் தெரிகின்றது என்பதை விட அதை எப்படி மாணவர்களுக்குப் புரிய வைப்பது? எதையெல்லாம் சுட்டிக்காட்ட வேண்டும்? எப்படி சுருக்கப்பட வேண்டும்? போன்றவற்றை உணர வாய்ப்பில்லாமல் பாடத் திட்டங்கள் தயாரிப்பது தான் மாணவர்களுக்கு வந்து சேர்கின்றது.

அதுவும் மதிப்பெண்களுக்காகத் தயாரிக்கப்பட்ட பட்சணம் போலத்தான் இருக்கும். ஐந்து அல்லது பத்து மதிப்பெண்களுக்கு படித்து எழுதியதும் இந்தச் சாதனைகள் மனப்பாடத்தில் மறந்தே போய்விடும்.

இதே தவறுகள் தான் இங்கே 25 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கின்றது.

கல்வித்துறை, திட்டங்கள், அதிகாரிகள், வல்லுனர்கள், விற்பனர்கள் என்ற ஏராளமான பட்டாளங்கள் இங்குண்டு.ஆனால் இறுதியில் மாணவர்களுக்கு மிஞ்சுவது எரிச்சலும் ஏமாற்றமும் மட்டுமே.

மூன்று நாட்கள் விடுமுறை விட்டாலும் புத்தகப்பைகள் ஏதோவொரு மூலையில் அனாதை போலத்தான் வீட்டில் கிடக்கும். தினந்தோறும் வகுப்பில் வைக்கும் பரிட்சைகளும், பொதுத் தேர்வுகளுக்கும் பயந்தே தான் இங்கே குழந்தைகள் படிக்கின்றார்கள். பாடத்திற்கு அப்பால் உள்ள தேடல்களை எந்தப் பாடமும் சொல்லித் தருவதில்லை என்பதை விட அது குறித்த புரிதல்களும் ஆசிரியர்களுக்கே இருப்பதில்லை.

ஆசிரியர்களைக் கேட்டால் ‘எங்கள் சுமை உங்களுக்குப் புரிவதில்லை‘ என்கிறார்கள். புத்தகத்தை வைத்தே எழுதும் தேர்வுகளை வெளிநாட்டில் வைத்திருப்பது போல இங்கே பிட் வைத்து எழுதும் ‘தன்முனைப்பு‘ மாணவர்களை நம் கல்வித்திட்டம் தந்துள்ளது.

தேர்வு என்ற பெயரில் பயத்தை உருவாக்கி, அதையே வளர்த்து பள்ளிப் பாடங்கள் என்றால் பயம் என்கிற நிலைமைக்கு வளர்ந்துள்ளோம்.

மாணவர்களுக்குக் கற்றுத்தர வேண்டிய ஆசிரியர்களுக்கு அவர்களின் தரம் குறித்து அறிய தேர்வு வைத்த போது தேறியவர்கள் எத்தனை பேர்கள்? எத்தனை எதிர்ப்பு உருவானது? அவர்களின் தேர்ச்சி சதவிகிதத்தைப் பார்த்த பிறகு தான் நம்முடைய ஆசிரியர்களின் உண்மையான தரமே புரிகின்றது.

இவர்கள் தான் தரமான மாணவர்களை உருவாக்க வரி கட்டும் அளவுக்கு மாத ஊதியம் பெற்று உழைத்துக் கொண்டிருக்கின்றார்கள்

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

கொஞ்சம் காசு கொஞ்சம் கல்வி Copyright © 2015 by ஜோதிஜி திருப்பூர் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.