29

“அப்பா வர்ற சனிக்கிழமையன்று பள்ளிக்கு செல்ல வேண்டும்”

மூவரும் ஒரே குரலில் சொன்னார்கள். ஒருவர் உடனே சுவற்றில் மாட்டியிருந்த காலண்டரில் அடுத்து வரும் சனிக்கிழமை நாளை பெரிதாகச் சிவப்புக் கலரில் வட்டம் போட்டு வைத்தார். மற்றொருவர் அலைபேசி அலாரத்தில் அந்தத் தேதியை தயார் செய்து வைத்தார். உசாரான பா(ர்)ட்டீங்க?

அன்று தான் காலாண்டு பரிட்சைக்கான மதிப்பெண்கள் (RANK CARD) தருவார்கள். பெற்றோர்கள் பள்ளிக்குச் செல்ல வேண்டும். முன்பு பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கூட்டமொன்றை வருடந்தோறும் நடத்தினார்கள். கடந்த மூன்றாண்டுகளாக அது நிறுத்தப்பட்டு விட்டது. முக்கியக் காரணம் பெற்றோர்களின் மனோபாவம். நிர்வாகத்தால் ஈடுகொடுக்க முடியவில்லை.

அதற்குப் பதிலாகக் காலாண்டு, அரையாண்டு பரிட்சை ரேங்க் அட்டை கொடுக்கும் போது ஒவ்வொரு பெற்றோர்களையும் பள்ளிக்கு நேரிடையாக வரவழைத்து விடுகின்றார்கள். மாணவர்களின் தரம் குறித்து, குறைபாடுகளைப் பற்றிப் பேச முடியும். இந்தச் சமயத்தில் பெற்றோர்களின் பார்வையில் பள்ளி குறித்த அவரவர் எண்ணங்களை எழுதித்தர ஒரு விண்ணப்ப படிவம் போல ஒன்றை கொடுக்கின்றார்கள்.

அந்தத் தாளில் சகல விபரங்களும் கொடுக்கப்பட்டிருக்கும். எந்தப் பாடம் பிரச்சனையாக இருக்கின்றது? எந்த ஆசிரியர் பாடம் நடத்துவது புரியவில்லை? போன்ற பல கேள்விகள். கடைசியாக நம் எண்ணங்களை அதில் பதிவு செய்ய முடியும். ஒவ்வொரு கேள்விக்கும் நான்கு பதில்கள். ஏதோவொன்றை டிக் செய்ய வேண்டும். அதன் பிறகு குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட அறையில் இருக்கும் வகுப்பாசிரியரை சந்திக்கச் செல்ல வேண்டும். முழுமையாகப் பேச முடியும். நமக்குரிய அத்தனை சந்தேகங்களையும் கேட்கலாம்.

சென்ற வருடம் சென்றிருந்த போது நடந்த சம்பவங்கள் நினைவுக்கு வந்தது. சென்ற வருடம் பணியாற்றிய சில ஆசிரியைகள் தாக்கு பிடிக்க முடியாமல் சென்று விட்டார்கள். நானும் ஒரு வகையில் காரணம். இரண்டு நாளைக்கு ஒரு முறை பள்ளியில் நடக்கும் அத்தனை விசயங்களையும் கேட்டு தெரிந்து கொள்வதுண்டு.

அந்தந்த வகுப்பாசிரியர்களின் தரம் நமக்குப் புரிந்து விடும். திருத்தப்படாத வீட்டுப்பாடங்கள், திருத்திய போதும் தாமதமாக வழங்கிய நோட்டுகள். உடனே பரிட்சை வைக்கும் அவசரங்கள் என்று அனைத்தையும் ஆசிரியையின் பார்வைக்கு எடுத்துச் செல்வதோடு பலன் இல்லையெனில் உடனடியாகப் பள்ளிக்கூட நிர்வாகியின் பார்வைக்கு எடுத்துச் சென்று விடுவதுண்டு. என்னால் பாதிக்கப்பட்ட ஆசிரியை வீட்டிலிருந்து நான்கு சந்து தாண்டி தான் இருக்கின்றார். இன்று வரையிலும் சாலையில் என்னைச் சந்தித்தாலும் தலையைத் திருப்பிக் கொண்டு தான் செல்கின்றார்.

ஆசிரியர் தொழில் என்பதே மன அழுத்தம் மிகுந்த தொழில் தான். மத்தளத்திற்கு இரண்டு பக்கம் இடி போலத்தான் செயல்பட வேண்டும். சந்தேகமே இல்லை. ஆனால் ஆசிரியர்களுக்குத் தகுந்த திட்டமிடுதல் இல்லையெனில் பாதிக்கப்படுவது வகுப்பில் உள்ள மொத்த குழந்தைகளுமாக இருப்பதால் பலருக்கு இந்தத் திட்டமிடுதலை சொல்லி புரியவைத்தாலும் எடுத்துக் கொள்வதில்லை.

“சித்தம் போக்கு சிவன் போக்கு” என்கிற ரீதியில் தான் செயல்படுகின்றார்கள். ஒரு வாரம் முழுக்கத் திருத்தப்படாமல் வைத்திருந்து ஒரே நாளில் வழங்கப்படும் போது அணையைத் திறந்தவுடன் வெளிப்படும் வேகமான தண்ணீரில் மாட்டிய ஜந்து போல மாணவர்கள் மலங்க மலங்க முழிக்கின்றார்கள். சரியான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைத் தயார் படுத்தி விடுகின்றார்கள். சராசரி பெற்றோர்கள் தடுமாறி பிள்ளைகளைப் படுத்தி எடுக்கத் தொடங்கி விடுகின்றார்கள்.

உடனடியாக வகுப்புத் தேர்வு என்கிற பெயரில் வைக்கப்படும் பரிட்சையில் குறைந்த மதிப்பெண்கள் பெறும் போது மாணவர்கள் படும் பாடு சொல்லி மாளாது. காரணம் தாமதமாக வழங்கப்படும் நோட்டுக்கள் என்பதைச் சற்றுத் தாமதமாகத்தான் கண்டு கொண்டேன்.

இவர்கள் புத்தகங்களை வைத்து படித்த போதிலும் பல சமயம் தடுமாறி விடுகின்றார்கள்.

அழுத்தப்பட்ட சுமையைத் தாங்க முடியாமல் அவர்களின் தவிப்பு என்பது எழுத்தில் எழுத முடியாது.

காரணம் இந்திய கல்வி முறையென்பது எழுதியதை படித்து வாந்தி எடுப்பது தான் நடைமுறையாக இருக்கிறது. சொந்தமாக எழுதும் போது மதிப்பெண்கள் குறைவாக வழங்கப்படுவதைப் பார்த்துக் கொண்டேயிருப்பதாலும் உண்டான மன உளைச்சலை ஒரு நாள் சென்று கொட்டிய விளைவால் அந்த வருடம் சில ஆசிரியைகளின் தலைக்கு மேல் கத்தி தொங்கத் தொடங்கியது.

வருட இறுதியில் அதுவே அவர்களைப் பதம் பார்க்கவும் தொடங்கி விட்டது.

காரணம் அவர்களுக்கு வழங்கப்பட்ட எந்த வாய்ப்புகளைப் பொருட்படுத்த தயாராக இல்லை என்பதோடு மாணவர்களைக் குறை சொல்வதையே வழக்கமாகக் கொண்டிருந்தனர். இந்த முறை வகுப்புவாரியாகப் பிரித்து வைத்து, ஒவ்வொரு வகுப்பிற்கும் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கியிருந்தார்கள்.

காலையில் இருவருக்கும். மதியம் ஒருவருக்கும் என்று பிரித்து வைத்திருந்த காரணத்தால் முழுமையாக வீட்டில் இருக்க வேண்டிய சூழ்நிலை. இவர்களைப் பொறுத்தவரையிலும் மகத்தான மகிழ்ச்சி. காரணம் மதிப்பெண்கள் குறித்த பயமில்லை என்பதோடு அந்தந்த வகுப்பாசிரியர்களிடம் பெற்றுள்ள சிறப்புச் சலுகைகள். நன்றாகப் படிப்பவர்கள் தான் வகுப்புத்தலைமை. இது தவிர ஸ்மார்ட் போர்ட்டுக் கிளாஸ் நடக்கும் சமயத்தில் கணினி இயக்க முன்னுரிமை.

முழுப் பாடத்தையும் மாணவர்களுக்கு வாசித்துக் காட்டுதல் போன்ற பல சலுகைகள். இவர்களுக்கு வகுப்பில் கௌரவம் சார்ந்த விசயங்கள். வீட்டில் இரண்டு பேர்கள் இந்த வேலைகளைச் செய்வதால் அவர்களுக்குத் தாங்க முடியாத பெருமை. ஒருவருக்கு அது குறித்த கவலை மனதிற்குள் இருந்தாலும் அதிகமாக அலட்டிக் கொள்வதில்லை.

“நீ ஏண்டா முயற்சி செய்யவதில்லை?” என்றால் டக் கென்று பதில் வரும்.

“முதல் ரேங்க் எடுக்குறவுங்க தான் இந்த வேலை செய்யனும்ன்னா மத்தவங்க எல்லாம் முட்டாளாப்பா? மொதல்ல மிஸ்களை நல்லாப் பேசச் சொல்லுங்கப்பா? யாருமே பாடத்தைத் தவிர வேறு எதையுமே பேச மாட்டுறாங்க. எங்களையும் உள்ளே பேச விட மாட்டுறாங்க.”

உடனே மற்ற இரண்டு பேரும் இது போன்ற சமயத்தில் சேர்ந்து கொண்டு ரவுண்டு கட்டத் தொடங்கி விடுவார்கள்.

“இவளுக்கு எப்பப் பார்த்தாலும் கிளாஸ் ரூம்ல கதையளக்கணும்ப்பா. மிஸ் பாடத்தை நடத்தும் போது அதைக் கவனிக்காமல் மற்ற எல்லா வேலைகளையும் பார்த்துக் கொண்டிருப்பாள்.” உடனே சிறிய போர்க்களம் உருவாகும்.

அமளி வெள்ளத்தில் நாங்கள் இருவரும் அடித்துச் செல்ல நான் தான் இவளை கரை சேர்த்தாக வேண்டும். வாய் வார்த்தைகள் கை கலப்பில் தொடங்கிப் பாயத் தொடங்கும் போது அவளுடன் வெளியே ஓடித் தப்பிக்க வேண்டும்.

தெரிந்தோ தெரியாமலோ குழந்தைகளின் அறிவை கற்பூர புத்தி, கரிப்புத்தி, வாழைமட்டை என்று என்று என் ஆசிரியர்கள் சொன்னது இப்போது நினைவுக்கு வருகின்றது. இது சரியா? தவறா? என்று தெரியவில்லை. ஆனால் குழந்தைகளின் இயல்பில் இருக்கும் அறிவுத்திறனையும் இவர்களைச் சந்திக்க வரும் மற்றத் தோழிகளின் குணாதிசியங்களையும் பார்க்கும் போது பல சமயம் இது சரியோ? என்று தோன்றுகின்றது.

ஒருவர் பாடப் புத்தகங்களை வீட்டில் வந்து தொடுவதே இல்லை. வீட்டுப் பாடங்களைக் கூடப் பள்ளியிலேயே அவசர அவசரமாக முடித்து விட்டு வந்து விடுவார். படிக்க வேண்டியது எதுவும் இல்லையா? என்றால் அதெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று தெனாவெட்டாகப் பதில் அளித்த போது தொடக்கத்தில் சற்று குழப்பமாகவே இருந்தது.

இதென்ன வினோதமான பழக்கமென்று? ஆனால் பாடத்திட்டத்திற்கு அப்பால் அவள் வளர்ந்து நிற்பதை உணர்ந்து கொண்ட போது அதற்குப் பிறகு அவளைத் தொந்தரவு செய்ய முடியவில்லை.

வீட்டுக்குள் இறைந்து கிடக்கும் புத்தகங்களில் ஏதோவொன்றில் மூழ்கி கிடப்பாள். சிறுவர் மலர், வார மலர், நீதிக்கதைகள், குழந்தைகள் கதைகள் என்று ஏதோவொன்று. படிக்க ஏதுமில்லை என்றால் பழைய பத்திரிக்கைகள்.

காரணம் தினந்தோறும் காலையில் வரும் பத்திரிக்கைகளையும் ஒரு கை பார்த்து விடுவதுண்டு. சென்ற ஆண்டு இவரைப் பற்றி வகுப்பாசிரியர் ஒரு வினோதமான குற்றச்சாட்டை வைத்தார்.

“ரொம்பச் செல்லம் கொடுக்குறீங்களோ?” என்றார்

குழப்பத்துடன்” ஏனுங்க” என்றேன்?

“மொத்த மதிப்பெண்கள் 800. வாங்கியிருப்பது 780. அவ தான் ஏ ஒன் கிரேடு அதாவது முதல் ரேங்க். அவ நினைச்சுருந்தா இன்னும் பத்து மார் கூட வாங்கியிருக்க முடியும். ஆனால் அதைப் பற்றிக் கண்டு கொள்ளவே மாட்டுறா? நாங்க சொல்லும் போது தலையாட்டுறா? அப்புறம் மறுபடியும் அவ போக்குல தான் போய்க்கிட்டு இருக்கா?” என்றார்

வகுப்பாசிரியருக்கு மகளின் மதிப்பெண் என்பது அவரது கீரிடத்தில் வைக்கப்படும் வைரக்கல்.

எனக்கோ அது முக்கியமென்றாலும் அது மட்டுமே முக்கியமல்ல என்பதை அவரிடம் எப்படிச் சொல்ல முடியும்?

சிரித்துக் கொண்டு அமைதியாக இருந்தேன்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

கொஞ்சம் காசு கொஞ்சம் கல்வி Copyright © 2015 by ஜோதிஜி திருப்பூர் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book