உ
சிவமயம்
முனைவர் நா, வள்ளி, M.A., B.Ed., Ph.D., P.G.Dip.in Epigraphy & Archacology முதல்வர். இராமசாமி தமிழ்க் கல்லூரி, காரைக்குடி – 3 |
7, லெட்சுமணன் செட்டியார் தெரு, காரைக்குடி — 1 |
ஆய்வுரை
“வடிவேறு திரிNலம் தோன்றும் தோன்றும்
வளர்சடை மேல் இளமதியம் தோன்றும் தோன்றும்“
எனத் தாண்டக வேந்தராகிய அப்பர் பெருமானடிகள் சிவனைக் கண்ணாரக் கண்டு களித்து வழிபட்ட தலம் திருப்பூவணம். தேவாரப் பாடல் பெற்ற பாண்டிநாட்டுப் பதினான்கு தலங்களுள் இத்தலத்திற்கெனத் தனிச்சிறப்புகள் உண்டு. மதுரை உட்பட மற்றைய தலங்களுக்கு மூவர் முதலிகளில் ஓரிருவர் பாடல்களே கிடைத்திருக்க, இத்தலத்திற்குத்தான் அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவர் பதிகங்களும் கிடைத்துள்ளன. அதுமட்டுமல்ல மணிவாசகப் பெருமானும், கருவூர் தேவரும், அருணகிரிநாதரும் பாடிப்பரவி இருக்கிறார்கள். பொன்னனையாள் என்ற தேவரடியாருக்காக, மதுரைச் சொக்கநாதர் இரசவாதம் செய்தருளியது இத்தலத்தில்தான்.
இத்தலத்து இறைவன் மீது கந்தசாமிப் புலவர் என்பார் திருப்பூவணப் புராணம், திருப்பூவணநாதர் உலா, புட்பவனநாதர் வண்ணம், திருப்பூவணத் தலவகுப்பு, மூர்த்தி வகுப்பு ஆகிய பல நூல்களைப் பாடியுள்ளார். அவற்றுள் திருப்பூவணப் புராணம், திருப்பூவணநாதர் உலா தவிர மற்றைய நூல்கள் கிடைத்தற்கு அருமையாக உள்ளன. இந்த இரண்டு நூல்களையாவது பாதுகாக்க வேண்டும், அனைவரும் படித்துப் பயன்பெற வேண்டும் என்ற உயரிய நோக்கோடு, அழகப்பா பல்கலைக் கழகத்தில் உதவிப்பதிவாளராகப் பணியாற்றும் திரு.கி. காளைராசன் அவர்கள் திருப்பூவணப் புராணத்தையும், இத்தலத்தோடு தொடர்புடைய திருவிளையாடற் புராணத்தையும் உரைச் சுருக்கத்தோடும் மற்றும் இத்தலத்தோடு தொடர்படைய பிற இலக்கியப் பகுதிகளையும், புராண வரலாற்றுச் செய்திகளையும் செம்மையாகத் தொகுத்து நூலாக்கம் செய்துள்ளார்.
இங்கு, காளைராசனுக்கும் திருப்பூவணத்திற்குமுள்ள தொடர்பைச் சொல்லியே ஆகவேண்டும். ஆன்மீகத்தில் மிகுந்த நாட்டமுடைய அவர் மெய்ஞானத்தை விஞ்ஞானத்தோடு இணைத்துப் பார்ப்பதில் ஆர்வமுடையவர். அவரது இளமைப் பருவம் திருப்பூவணத்தில்தான் கழிந்தது. திருப்பூவணநாதர் இளமையிலேயே அவரை ஆட்கொண்டு விட்டார்.
“பிறந்து மொழிபயின்ற பின்எல்லாம் காதல்
சிறந்து நின் சேவடியே சேர்ந்தேன்“
என்று காரைக்காலம்மையார் சொல்வது போல, காளைராசன் அவர்களுக்கு பேச்சு, மூச்சு எல்லாமே திருப்பூவணம்தான். தான் வளர்ந்த மண்ணுக்கு, தன்னை வளர்த்த மண்ணுக்கு ஏதேனும் செய்தே ஆகவேண்டும் என்ற அவரது ஆவலின் விளைவே இந்நூல்.
ஆன்மீக நூல்கள் பல வெளிவருவதற்கு உறுதுணையாக இருக்கின்ற திருமலை திருப்பதி தேவஸ்தானம், இந்நூல் வெளிவரவும் பொருளுதவி செய்துள்ளமை மிக்க மகிழ்ச்சிக்குரியது.
“மூர்த்தி தலம் தீர்த்தம் முறையால் தொடங்கினார்க்கு ஓர் வார்த்தை சொலச் சற்குருவும் வாய்க்கும் பராபரமே” என்ற தாயுமானவரின் வாக்குப்படி மூர்த்தி, தலம், தீர்த்தம் பற்றிய செய்திகளை முறையாகத் தொகுத்து எழுதியுள்ள திரு,கி,காளைராஜன் அவர்களது முயற்சி சிறக்க வாழ்த்துக்கள்,
காரைக்குடி
18-09-2008