2

தமிழகத்தில் கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்கு முன்னர் சமணமும் புத்தமும் தலையெடுத்து வளர்ந்தோங்கி இருந்தன. மதுரை ஆண்ட பாண்டிய மன்னனை மீண்டும் சைவத்திற்கு மாற்றும் பொருட்டு, மங்கையர்க்கரசியார் திருஞானசம்பந்தரை அழைத்து வரச் செய்தார். திருஞானசம்பந்தர் மதுரைக்குச் செல்லும் முன்னர் மதுரையின் கிழக்கு எல்லையான திருப்பூவணத்திற்கு வருகிறார். வைகை ஆற்றின் வடகரையில் திருக்கோயில் உள்ளது. தென் கரையில் அம்பாள் ஆடிமாதம் தவம் செய்த இடம் உள்ளது. இந்த இடத்திற்கு வந்த திருஞானசம்பந்தர் அங்கிருந்து வடகரையில் உள்ள திருப்பூவணநாதரை வணங்கி வழிபடுகிறார். அப்போது வைகை ஆற்றின் மணல்களெல்லாம் சிவலிங்கங்களாகக் காட்சி யளித்துள்ளன. எனவே ஆற்றுமணல்களை மிதிக்க அஞ்சிய திருஞான சம்பதர் அங்கிருந்தபடியே பதிகம் பாடி இறைவனை வழி படுகிறார். பாடல் கேட்ட சிவபெருமான், நந்தியைச் சற்றே சாய்ந் திருக்கச் சொல்லி ஆற்றின் மறுகரையில் நின்று பாடிய திருஞான சம்பந்தருக்குக் காட்சியருளியுள்ளார். இதனால் திருப்பூவணத் தில் இன்றும் நந்தி மறைக்காது. ஆற்றின் வடகரையில் உள்ள ஆடித்தபசு மண்டபத்தில் இருந்தபடியே தென்கரையில் உள்ள சிவலிங்கத்தை வழி படலாம்.

திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரும் பாண்டிய நாட்டில் இறைவனைப் பாடிப் பணிந்த இடங்கள் பலவாகும். அவற்றுள் அவர்களின் பாடல்கள் கிடைக்கப் பெற்ற திருத் தலங்கள் பதினான்கு ஆகும். இந்தப் பதினான்கு திருத்தலங்களையும் பாண்டி பதினான்கு என்று சிறப்பித்துக் கூறுகின்றனர்.

1)மதுரை, 2)திருப்பரங்குன்றம், 3)திருவிராமேச்சுரம், 4)திருவாடானை, 5)திருப்புத்தூர், 6)திரு ஏடகம், 7) திருநெல்வேலி, 8)குற்றாலம், 9) ஆப்பனூர் (மதுரையின் வடகரையில் உள்ள ஊர்) 10)திருச்சுழியல், 11)திருப்புனவாயில், 12)கொடுங்குன்றம் (பிரான்மலை), 13)காளையார் கோயில், 14) திருப்பூவணம்.

இப்பதினான்கு பதிகளில் மிகவும் பழமையானது பாண்டியநாட்டின் தலைநகராக விளங்கும் மதுரை ஆகும். ஆனால் மதுரை மாநகரம் இந்திரனுடனான போரினாலும், கண்ணகி இட்ட தீயினாலும், வையை ஆற்றுப் பெருக்கினாலும் அழிந்தழிந்து மீண்டும் மீண்டும் உயிர் பெற்றது. ஆனால், திருப்பூவணத் திருத்தலம் தொன்மைக்காலம் முதல் அழிவிற்கு உட்படாமல் அப்படியே பழமையுடன் உள்ளது.

பார்வதி தேவியார் தான் அறிந்து செய்த பாவம் போக்க இத்திருத்தலம் வந்து பாரிசாத மரத்தின் அடியிலிருந்து தவம் செய்தார். அப்போது சிவபெருமான் அம்மரத்தின் அடியில் சிவலிங்கமாய் முளைத்து. உமையம்மையின் பாவத்தை நீக்கியருளினார்.

1) இச்சிவலிங்கத்தைக் கதிரவன் (சூரியன்) வழிபட்டு, நவக்கிரகங்களுக்கும் தலைவனாக இருக்கும் வரம் பெற்றுள்ளான்.

2) பிரம்ம தேவன் அறிந்து செய்த பாவத்தை நீக்கிய திருத்தலம்

3) மகாவிஷ்ர் சலந்திரனைக் கொல்ல சக்கராயுதம் பெற்ற திருத்தலம்.

4) காளிதேவி, சிவலிங்கம் வைத்து பூசித்த திருத்தலம்

5) திரணாசனன் என்பவன் வீடு பேறு அடைந்துள்ளான். துன்மஞ்ஞன் என்ற மாபாவி நற்கதி அடைந்துள்ளான்.

6) தருமஞ்ஞன் என்ற அந்தணன் கொண்டு வந்த அஸ்திக் கலசத்தில் இருந்த எலும்புகள் பூவாய் மாறிய திருத்தலம்.

7) உற்பலாங்கி என்ற பெண். நல்ல கணவனை அடையப்பெற்று தீர்க்க சுமங்கலியாய் வாழும் வரம் பெற்றுள்ளாள்.

8) அறிந்து செய்த பாவங்களை அகற்றும் திருத்தலம்

9) செங்கமலன் என்பவனின் பாவங்கள் அனைத்தையும் நீக்கிய திருத்தலம்

10) திருமகளின் (இலக்குமி தேவியின்) சாபம் தீர்ந்த இடம்

11) பார்வதி தேவியார் இறைவன் திருவருள் வேண்டித் தவம் செய்த திருத்தலம்

12) சுச்சோதி என்ற அரசனுடைய பிதுர்கள் (இறந்துவிட்ட முன்னோர்கள்) நேரில் வந்து பிண்டம் (இறந்தவர்களுக்குப் படைக்கப்படுவது) பெற்றுக்கொண்டு, அவனை ஆசிர்வதித்த திருத்தலம்

13) தீர்த்தங்கள் பல உள்ள திருத்தலம்

14) சலந்திரன் என்ற தவளைக்குச் சக்கரவர்த்தியாய் இருக்கும் வரம் அருளப்பட்ட திருத்தலம்

15) நள மகாராசாவிடமிருந்த கலிகாலத்தின் கொடுமையை அகற்றி அவனுக்கு மனச்சாந்தி அளித்த திருத்தலம்

16) மாந்தியந்தின முனிவருக்கும் தியானகாட்ட முனிவருக்கும் சிவபெருமான் சிதம்பர நல் உபதேசம் வழங்கிய இடம்

17) தாழம்பூ பொய்சொன்ன பாவம் நீங்க வேண்டி, சிவபெரு மானை வணங்கி வழிபட்ட திருத்தலம்

18) மூவேந்தர்களும் (சேர, சோழ, பாண்டிய மன்னர்கள்) ஒன்றாக வந்து வழிபட்டுத் திறை செலுத்திய திருத்தலம்

19) திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் (அப்பர்), சுந்தரர் ஆகியோர் வணங்கி வழிபட்டுத் தேவாரம் பாடிய திருத்தலம்

20) மாணிக்கவாசகர் பாடிய திருத்தலம்

21) கருவூர்த் தேவர் திருவிசைப்பா பாடல் பெற்ற திருத்தலம்

22) அருணகிரி நாதர் திருப்புகழ் பாடல் பெற்ற திருத்தலம்

23) மதுரை சிவபெருமான் சித்தர் வடிவில் வந்து இரசவாதம் செய்து திருவிளையாடல் நடத்திய திருத்தலம்.

24) பொன்னனையாளுக்கு அருள் வழங்கிய திருத்தலம்.

25) கோரக்க சித்தர் மற்றும் கத்தரிக்காய் சித்தர் முதலான சித்தர்கள் வாழும் சிவபூமி

இவ்வாறு மிகவும் தொன்மைமிக்கதாகவும், அதிகச் சிறப்புகளுடையதாகவும் திருப்பூவணத் திருத்தலம் விளங்குகிறது. இங்கு சுயம்பாகத் தோன்றிய சிவலிங்கத்தின் அருமை பெருமைகளும். சௌந்தர நாயகித் தாயாரின் அன்பும், அருளும் எடுத்துக் கூறப் பெற்றுள்ளன.

தலத்தின் பெயர்

முன்பு அனைத்து இலக்கியங்களிலும் திருப்பூவணம் என்று வழங்கப்பட்ட இத்திருத்தலம். தற்போது திருப்புவனம் என்று அழைக்கப்படுகிறது.

தலஇருப்பிடம்

வைகையாற்றின் தென்கரையில் மதுரைஇராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் மதுரையிலிருந்து 18 கி.மீ. தூரத்தில் உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில், மானாமதுரை வட்டத்தில் பேரூராட்சியாக உள்ளது.

திருப்பூவணத்திலிருந்து கிழக்கே 22 கி.மீ. தூரத்தில் சிவகங்கையும், தென்கிழக்கே 20 கி.மீ. தூரத்தில் மானாமதுரையும், மேற்கே 25 கி.மீ. தூரத்தில், திருப்பரங்குன்றமும், வடமேற்கே 18 கி.மீ. தூரத்தில் மதுரையும், தெற்கே 35 கி.மீ. தூரத்தில் திருச்சுழியும், வடக்கே 15 கி.மீ. தூரத்தில் (மாணிக்கவாசகர் பிறந்த) திருவாதவூரும் உள்ளன. (திருவாதவூர் அருகில் 108 வைணவத்திருத்தலங்களில் ஒன்றான திருமோகூர் உள்ளது). இவ்விடங்களிலிருந்து பேருந்துகள் வழியாகத் திருப்பூவணத்​தை (திருப்புவனத்தை) எளிதில் அடையலாம்.

மதுரை மாட்டுத்தாவணிப் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் அரைமணி நேரத்தில் திருப்பூவணத்தை அடையலாம். மானாமதுரை. பரமக்குடி, கமுதி, இராமநாதபுரம், இராமேசுவரம் செல்லும் அனைத்துப் பேருந்துகளும் திருப்பூவணம் வழியாகச் செல்கின்றன.

மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து இவ்வூருக்கு நகரப்பேருந்துகள் அதிகம் உள்ளன. மானாமதுரை, சிவகங்கை, திருவாதவூர் ஆகிய ஊர்களிலிருந்தும் நகரப்பேருந்துகள் உள்ளன. இவ்விடங்களிலிருந்து நகரப்பேருந்தில் திருப்பூவணத்​தை அடைந்திடச் சுமார் 1மணி நேரமாகும். திருப்பூவணத்​தில் கோட்டை பேருந்து நிறுத்தத்திற்கு மிக அருகில் (சுமார் 200மீ) திருக்கோயில் உள்ளது.

திருப்பூவணத்தின் வடக்கே வைகையாறு ஓடுகிறது. ஆற்றின் வடகரையில் உள்ள மடப்புரம்காளிஅம்மன் கோயில் தற்போது மிகவும் பிரசித்தி பெற்று விளங்கிவருகிறது. இதனால், மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து மடப்புரத்திற்குத் தினமும் அதிகமான எண்ணிக்கையில் நகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் மிகவும் அதிகமான எண்ணிக்கையில் நகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் பயணம் செய்தும் திருப்பூவணத்தை எளிதில் அடையலாம். மடப்புரம் செல்லும் நகரப் பேருந்தில் வருவோர், “திருப்புவனம் சந்தைபேருந்து நிறுத்தம் எனக்கேட்டு இறங்க வேண்டும். அங்கிருந்து சுமார் 200 மீட்டர் தூரத்தில் திருக்கோயில் உள்ளது. அல்லது மடப்புரம் காளிகோயில் நிறுத்தத்திற்கு முன்னால் உள்ள ஆடித்தபசுமண்டபத்தில் இறங்கி ஆற்றின் வடகரையிலிருந்தபடியே தென்கரையில் கோயில் கொண்டிருக்கும் பூவணத்து ஈசனை வழிபடலாம்.

இருப்புப் பாதை வழி

மதுரையிலிருந்து இராமேசுவரம் செல்லும் இருப்புப் பாதை திருப்பூவணம் வழியாகச் செல்கிறது. எனவே தொடர்வண்டியில் வருவோர் மதுரையிலிருந்து இராமேசுவரம் செல்லும் வழியில் சுமார் ஒரு மணிநேரப் பயணத்தில் திருப்பூவணத்தை அடையலாம். இராமேசுவரத்திலிருந்து மதுரை செல்வோர். மதுரைக்கு முன்னால் திருப்பூவணத்தில் இறங்கி இறைவனை வழிபட்டுச் செல்லலாம். தொடர்வண்டி நிலையத்திலிருந்து திருக்கோயில் சுமார் அரை கி. மீ. தூரத்தில் உள்ளது.

புவியியல் அமைப்பு

புவியியல் அமைப்பினை அடிப்படையாகக் கொண்ட வாஸ்து இலக்கணப்படி. பாண்டிய நாட்டின் வாஸ்து முகமண்டலமாக விளங்குகிறது திருப்பூவணத் திருத்தலம். தற்போதைய அறிவியல் முறையில். ஓர் இடத்தின் இருப்பிடத்தை பூமத்திய ரேகைக்கு இணையான அட்சரேகைக் கோடுகளாலும். வடதுருவம் மற்றும் தென்துருவம் இரண்டையும் இணைக்கும் தீர்க்கரேகைக் கோடுகளாலும் கணக்கிடுகின்றனர். இதன்படித் திருப்பூவணம் பூமத்திய ரேகையிலிருந்து 9.49பாகை வடஅட்சரேகையிலும். 78.15பாகை கிழக்குத் தீர்க்கரேகையிலும் (9°49’19.26″N….78°15’20.55″E) அமைந்துள்ளது.

1)திருப்பூவணநாதர்(சிவலிங்கம்) பாரிசாதப்பூவால் ஆனது. (The Siva Lingam is a fossil of Parijatha Flower). 2) மதுரை கோயில் அமைப்பைப் போன்றே சிவலிங்கத்திற்கு வலப்புறம் அம்பாள் கோயிலும் (தற்போதைய முருகன் கோயில்) அதன் எதிரே தீர்த்தமும் உள்ளன. 3) மதுரையின் கிழக்கு வாயிலாகத் திருப்பூவணம் உள்ளது. இதனால் திருப்பூவணநாதரை வணங்கிய பின். மதுரை மீனாட்சி சமேத சோமசுந்ரேசுவரரை வணங்குவது மிகுந்த சிறப்புடையது. 4) திருஞானசம்பந்தர் திருப்பூவணநாதரை வணங்கி அருள் பெற்ற பின்னரே மதுரை சென்று சமணர்களை வென்றுள்ளார். 5) அம்பாள் ஆடிமாதம் தவம்செய்த இடத்திலே ஆடித்தபசு மண்டபம் கட்டப்பெற்றுள்ளது. 6) இந்த இடத்திலிருந்துதான் திருஞானசம்பந்தர். ஆற்றின் வடகரையில் உள்ள திருப்பூவணநாதரை வணங்கிப் பதிகம் பாடியுள்ளார். 7)அப்போது ஆற்றின் மணல்கள் எல்லாம் சிவலிங்கங்களாகக் காட்சியளித்துள்ளன. நந்தியைச் சாய்ந்திருக்கச் சொல்லி சிவபெருமான் காட்சியளித்துள்ளார். 8)திருப்பூவணம் திருக்கோயில் சிதம்பரத்தைப் பார்த்தபடி அமைக்கப்பட்டுள்ளது. நந்தி மறைக்காத காரணத்தால் திருப்பூவணநாதர் சந்நிதியிலிருந்து வணங்கினால் சிதம்பரத்தை திசைநோக்கி வணங்கியதாகும். 9) இடமிருந்து வலமாக பெருமாள், முருகன், அம்மன், விநாயகர், திருப்பூவணநாதர் ஆகிய ஐந்து சந்நிதிகளும் ஒரே வீதியில் முன்பு இருந்திருக்கின்றன. இதுபோன்ற அமைப்புமுறையானது திருப்பரங்குன்றம் கருவரையில் உள்ள அமைப்புடன் ஒத்துள்ளது.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

திருப்பூவணப் புராணம் Copyright © 2015 by மு​னைவர். கி. காளைராசன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book