4

1. சூரியன் பூசனைச் சருக்கம்

நவக்கிரகங்களுக்கும் தலைவராகச் சூரிய பகவான் விளங்குகிறார். ஒரு காலத்தில் பேரண்டத்தில் ஒரு பெரிய புரட்சி நிகழ்ந்தது. இதனால் சூரியனுடைய தலைமைப் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டு, பதவி பறிபோகும் நிலை ஏற்பட்டது.

தனது பதவியை நிலை நிறுத்திக் கொள்வதற்கான வழி வகையை சூரியன் ஆராய்ந்தார். அப்பொழுது இப்பேரண்டமே சிவலிங்கமாக திருப்பூவணத்தில் எழுந்தருளுகிறது என்பதை அறிந்தார். எனவே தனது பதவியைத் தக்க வைத்துக் கொள்ள திருப்பூவண நாதரை சித்திரை மாதத்திலே சித்திரை நட்சத்திரத்திலே, மணலைச் சிவலிங்கம் போலக் குவித்து, உரிய முறைகளைப் பின்பற்றிப் பூசை செய்தார். அவருக்கு அருள்புரிய உமாதேவி சமேதராகச் சிவபிரான் தோன்றியருளினார். சூரியன் விரும்பியபடி நவக்கிரகங்களுக்கு நாயகனாக என்றும் நிலைத்திருக்கும்படிச் சூரியனுக்கு அருள் வழங்கினார். திருப்பூவணத்தில் வசிப்பவர்க்கு அறமும் பொருளும் இன்பமும் வீடும் கிடைக்குமென்று அருளினார். ஐந்தெழுத்து மந்திரத்தையும் உபதேசம் செய்தருளினார்.

மணிகன்னிகை தீர்த்தம் இறைவனால் மந்திர தீட்சை கிடைக்கப்பெற்ற ஆதித்தனாகிய சூரியன், தான் கேட்டவுபதேசப் பொருளைச் சிந்தித்துத் ​தெளிந்து, சிவலிங்கத்துக்குத் தென்கிழக்கே (அக்கினித் திக்கிலே), தனது கையினாலே சதுரமாகக் குளம் தோண்டி, அதில், உற்பலமும் தாமரையும் உண்டாக்கி, ஐந்தெழுத்தைத் தியானித்து முறைப்படி வழிபட்டான். அத்தீர்த்தத்துக்கு மணிகன்னிகை என்னும் பெயரையிட்டான். தேவதச்சனை அழைத்து ஆலயம் அமைத்து, ஆவரண தேவதைகளையும் பிரதிட்டை செய்து, திருவிழா நடத்தித் தன்னுடைய உலகத்தை அடைந்தான்.

அகத்திய முனிவரும் அம்மணிகன்னிகைத் தீர்த்தத்தில் மூழ்கித் திருவைந்தெழுத்தை விதிப்படி உச்சரித்து திருப்பூவணநாதரை வணங்கி சமுத்திரத்தைக் குடிக்கும் வல்லமையைப் பெற்றார்.

குறிப்பு இத்தீர்த்தத்தின் சிறப்புகள் பின்வரும் சருக்கங்களிலும் மிகவும் வெகுவாகப் புகழ்ந்து கூறப்பட்டுள்ளன. தற்போது இத்தீர்த்தம் எவ்வாறு உள்ளது என்பது பற்றி குறிப்பு நான்காவது சருக்கமாகிய துன்மனன் சருக்க இறுதியிலே குறிப்பிடப்பட்டுள்ளது.

பாவநாச தீர்த்தம்

சிவலிங்கத்திற்கு முன்பு வைகைநதியில் ஒரு அம்பு செல்லும் தொலைவரையுள்ள ஆற்றிற்குப் பாவநாசதீர்த்தம் என்று பெயர். அதிலே முழுகினோர் சிவலோகம் பெறுவர். திருப்பூவணத் தலத்தைத் தரிசித்தோர் திருக்கைலாசமடைவர் என்று சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது.

இச்சருக்கத்தில் கூறப்பட்டுள்ள திருத்தலத்தின் வேறு பெயர்கள்

திருப்பூவணத்திற்குக் கிரேதாயுகத்திலே தேவிபுரம், புட்பவனம் என்றும், திரேதாயுகத்திலே இலக்குமிபுரம் என்றும், துவாபர யுகத்திலே பிரமபுரம் என்றும், கலியுகத்திலே பாஸ்கரபுரம், ஆனந்தவனம், முத்தியாச்சிரமம், ரகசியசிதம்பரம், தெட்சிணகாசி, சதுர்வேதபுரம், பிதிர்முத்திபுரம் என்னும் பெயர்கள் உண்டு. இங்கு வசிப்போருக்குச் செல்வத்தை நல்கும். பாவத்தைப் போக்கும். சிவஞானத்தை ஆக்கும். இப்பதியில் வணங்கிய பெருமையாலே விநாயகக்கடவுள் சிவார்ச்சனை செய்து முடித்தார்.

2. திரணாசனன் முத்திபெற்ற சருக்கம்

சைவபுராணம் முதல் பிரமவைவர்த்த புராணம் முடிய உள்ள பதினெட்டுப் புராணங்களிலும் சிறப்புடன் குறிப்பிடப்படுவது திருப்பூவணத் தலமாகும். பிரளயகாலத்தில் தோன்றிய அமிர்தக்கலசம் மகாவிஷ்ணுவால் மூன்று கூறாக உடைக்கப்பட்டது. முதலாவதைத் திருப்பூவணத்திலும். இரண்டாவது பகுதியைக் கும்பகோணத்திலும். அதன்பின் மூன்றாவது பகுதியை எல்லாத் திருத்தலங்களிலும் வைத்தார். அமிர்தத்தின் முதலாவது பகுதி திருப்பூவணத்திலுள்ள மணிகன்னிகைத் தீர்த்தத்திலே மலராய் வந்து வீழ்ந்தது. அத்தீர்த்தத்திற்கு மாயாதீர்த்தம் என்றும் மணிகன்னிகைத் தீர்த்தம் என்றும் இரண்டு பெயருண்டு. இத்தீர்த்தத்திலே நீராடுவோர்க்குப் பாவங்களெல்லாம் ஒழியும்.

திருப்பூவணத்தில் சிவலிங்கப் பெருமானை முதலிலே தரிசித்துப் பின்னர் தேவியாரைத் தரிசிக்க வேண்டும். இத்தலத்தில் அம்மையை முதலில் வணங்குபவர்கள் நரக உலகு அடைவர். மதுரை உட்பட மற்றபிற தலங்களில் முதன்முதலாக அன்னையை வணங்கியபின்னர்தான் சிவலிங்கத்தை வணங்கி வழிபடுகின்றனர். ஆனால். திருப்பூவணத்தில் மட்டும் அம்மையை முதன்முதலில் வணங்கக் கூடாது. ஏனென்றால். முதலாம் யுகத்திலே. கௌதமி ஆற்றங்கரையில் திரணாசனன் என்பவர் சிவபிரான் திருவடிகளை மனவாக்குக் காயங் களினால் வழிபட்டுவந்தார். அவர் தனது ஆசிரியரை வணங்கி எளிதாக முத்தி கிடைத்திட உபாயத்தைக் கூற வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். அதற்கு அவரது ஆசிரியரும் பல சிவத்தலங்களுக்கும் சென்று அங்குள்ள தீர்த்தங்களில் நீராடி முறைப்படிச் சிவலிங்க மூர்த்திகளைப் பேரன்போடு வழிபட்டால். பாவங்கள் ஒழிந்து முத்திபெறலாம் என்று கூறி அருளினார். உடனே திரணாசனன் துறவறம் பூண்டு சிவத்தலங்கள் பலவற்றிற்குச் சென்று. திருவாலவாயில் (மதுரையில்) வீற்றிருந்தருளும் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரரை வணங்கி. திருப்பூவணம் வந்து மணிகன்னிகைத்தீர்த்தத்தில் மூழ்கியெழுந்து உமாதேவியைத் தரிசித்துச் சிவலிங்கப் பெருமானைத் தரிசியாமல் தெற்குத்திசை நோக்கிச் சென்று திருச்சுழி என்னும் திருத்தலத்தை அடைந்து. முறைப்படிச் சிவலிங்கப் பெருமானை வழிபட்டு. மீண்டும் திருப்பூவணம் வந்து மணிகன்னிகைத் தீர்த்தத்தில் மூழ்கினான். அதனால் இராச்சதனாய் மாறிப் பசியினால் வருந்தினான். அப்பொழுது நாரத முனிவர் வந்து. அவனை நோக்கி. “நீ யாரென்று் கேட்டார். அப்பொழுது அவனுக்குச் சிறிது ஞாபகம் வந்தது. அவன். இத்தீர்த்தத்தில் மூழ்கிய அளவிலே நான் மனங்கலங்கியவன் ஆனேன்இதற்குக் காரணம் என்ன என்று புலப்படவில்லை என்று கூறினான். அதற்கு நாரதமுனிவர். பூவணநாதரை முதலிலே வழிபடாது தேவியாரை வழிபட்ட காரணத்தால். நீ இவ்வாறு ஆகிவிட்டாய். இனி. முதலிலே புட்பவனேசுவரரை வணங்கிப் பின்பு அம்மையை வணங்கினால் நற்கதி பெறுவாய். மேலும் புட்பவனேசுவரர் சந்நிதியிலே ஐநூறு விற்கிடை அளவுள்ள ஒரு பிரமதீர்த்தமுண்டு. அது முறை பிறழ்ந்த பாவமுதலியவற்றைப் போக்கும். அதிலே கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்திலே நீராடுதல் சிறந்ததாகும். ஆதலால். அத்தீர்த்தத்தில் நீ நீராடி புட்பவனேசுவரரை வழிபடுவாய் என்று கூறி வழிகாட்டினார். மேலும். காசி முதலிய பதிகளில் செய்த பாவங்கள் இப்பதியிற் போம். இத்திருப்பூவணத்திற் செய்த பாவம் இத்திருப்பூவணத்திலே ஒழியு மென்றும் கூறித் திருமால் உலகம் சேர்ந்தார். நாரதமுனிவர் அருளிய வழியே திரணாசனன் புட்பவனேசுவரரையும் தேவியாரையும் வழிபட்டுத் திருக்கைலாசபதவி சேர்ந்தனன். இவ்வாறு பிரமவைவர்த்த புராணத்திலே எழுபத்தோராம் அத்தியாயத்திலே கூறப்பட்டுள்ளது.

3. மணிகன்னிகைச் சருக்கம்

திருப்பூவணத் திருத்தலமானது விராட்புருடனுக்கு முகமண்டலமாகும். அப்பதியிலுள்ள தீர்த்தத்தில். விஷ்ர் முதலாவது வைத்த அமிர்தக்கூறு மணிமயமாய் வீழ்ந்தபடியால். அதற்கு மணிகன்னிகையென்று பெயர். அதிலே நீராடு வோர். பத்துப் பிரமகற்பகாலம் அமிர்தம் உண்டு தேவலோகத்தில் வாழ்வார்கள். இத்தீர்த்தத்திலே எல்லாத் தேவர்களும் இருடிகளும் வசிக்கின்றார்கள். அதிலே மூழ்கிச் சூரியலிங்கத்தைத் தரிசனம் செய்வோர். காலனைக் காணாமல். காலகாலர் கயிலையைக் காண்பர். அத்தீர்த்தமாடுதலும். அச்சிவலிங்க தரிசனம் செய்தலும் அறஞ் செய்வோர்க்கே கைகூடும். இத்தலத்தினைத் தரிசனம் செய்வோரின் அனைத்துப் பாவங்களும் ஒழிந்துவரும்.

சுய அறிவுடனோ அல்லது அறிவின்றியோ ஒரு கணப் பொழுதாவது திருப்பூவணத்தில் வசித்தால் சிவ உருவம் பெறுவர். ஒரு தளிரோ கனியோ புட்பவனேசருக்குப் பக்தியோடு கொடுப்போர் முத்தி அடைவர். மற்றைய தலத்தினின்று வயோதிகத்தைச் சிந்தித்து இத்தலஞ் சேர்ந்து இறந்தவர்களுக்குச் சிவபிரான் தாரகமந்திரமாகிய பிரணவ மந்திரத்தை உபதேசம் செய்தருளுவர்ஃ ஆதலால் இத்தலத்தில் யாவரும் வசித்தல் வேண்டும். காசியின் தட்பவெப்பத்தினால் பெரிதும் உடல் வருந்தும். திருப்பூவணத்தில் சமநிலையிலான தட்பவெப்பம் நிலவுவதால். உடல் வருத்தமுறாதுஃ ஆதலாற் காசிப்பதியினும் புட்பவனம் ஏற்றதாகும். பஞ்சாமிர்தம். பஞ்சகவ்வியம் முதலியவற்றைச் சூரியலிங்க மூர்த்திக்கு அபிடேகம் செய்தால் சிவனருள் பெறலாம். மணிகன்னிகா தீர்த்தக் கரையினில் பிதிர்சிரார்த்தம் முதலியன செய்தால் நெடுங்காலம் பிதிர்கள் பெரிதும்மகிழ்வார்கள்.

முன்னம் ஒரு காலத்தில் அந்தணனின் இறந்த உடலில் உள்ள ஒர் அங்கத்தைக் கழுகு திருப்பூவணத்தில் இட்டதனால் அவன் நற்கதியடைந்தான். எனவே. பிதிர்கள் முத்தியடையும் வண்ணம் அவர்கள் இறந்த பின்னர். அவர்களது அங்கங்களை இங்கே போடவேண்டும்.

4. துன்மனன் சருக்கம்

மாதா. பிதா. குரு. அந்தணர் இவர்களை இகழ்ந்தவர்களும். மற்றும் இதுபோன்ற மன்னிக்கமுடியாத கொடிய பாவங்களைச் செய்தவர்களும் நரகத்தில் சேர்ந்து பெருந் துன்பங்கட்கு ஆட்படுவர். அகிம்சை. உண்மைகூறல் முதலிய தர்மங்களை உடையவர் சொர்க்கத்தில் சுகங்களைப் பெறுவர். ஆனால் துன்மனன் என்னும் கள்வன் இப்பிறவியில் செய்யாத பாவங்களேதுமில்லை. செய்த புண்ணியமெதுவும் இல்லை. அவனது பூர்வபுண்ணியத்தினாலே. ஒருசமயம் திருப்பூவணத்திலே பங்குனி உத்திரத் திருவிழா நடைபெறுவதைக் கேள்வியுற்று திருடும் நோக்கத்தோடு இத்தலம் வந்தடைந்தான். தேரில் எழுந்தருளியிருந்த இறைவனைத் தரிசித்து விட்டு. நடுநிசியில் மற்றபிற கள்வர்களுடன் திருடிவரும் போது காவலர்களால் விரட்டியடிக்கப்பட்டான். இரவில் வழிதெரியாமல் ஓடிய திருடர்கள் மணிகன்னிகைத் தீர்த்தத்தில் வீழ்ந்து இறந்தனர். இருப்பினும் தீர்த்தத்தின் சிறப்பினால் அவர்கள் சிவலோகம் சேர்ந்தனர்.

ஐந்து மாபாதகங்களையும் செய்த தீயோர்களுக்கே சிவப்பேறு கிடைத்தது என்றால். நற்புத்தியுடனும் உண்மையான பக்தி நோக்கத்துடனும் இத் தீர்த்தமாடுவோர் சிவலோகம் சேர்வதில் சிறிதும் ஐயமில்லை.

மணிகன்னிகா தீர்த்தம் இருந்த இடம் இத்தீர்த்தம் தற்போதைய முருகன் கோயிலின் (முன்பு சௌந்தரநாயகி அம்மன் கோயில் கொண்டிருந்த இடம்) முகப்பிலும். பெருமாள் கோயிலின் அருகிலும் இருந்துள்ளது.

தீர்த்தத்தின் இன்றைய நிலைபற்றிய குறிப்பு மணிகன்னிகா தீர்த்தம் பற்றிப் பலவாறாகப் புகழ்ந்து புராணங்களில் கூறப்பட்டுள்ளதால். அந்திமக்காலத்தில் நிர்க்கதியாய் நின்ற பலர் இத்தீர்த்தத்தில் வந்து மூழ்கி உயிரை விட்டனர். இதனால் இத்தீர்த்தத்தில் வீழ்ந்து இறப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே சென்றது. அரசியல் செல்வாக்கு மிகுந்தோர் தீர்த்தம் ஆட வரும்போது அவர்கள் எதிரேயே பிணத்தைத் தூக்கிச் செல்லும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும் தங்களது வீட்டிலிருந்த முதியோர் களும் இவ்வாறு தீர்த்தத்தில் மூழ்கி இறந்துவிட்டனரே என்ற வருத்தங்களும் பொதுமக்களிடம் அதிகம் இருந்தது. இக்காரணங்களால் தீர்த்தம் முழுவதுமாக மூடிமறைக்கப்பட்டுவிட்டது. பின்னர் இவ்விடத்தில் தென்னந்தோப்பு இருந்துள்ளது. தற்போது மக்கள் குடியிருப்புகள் உள்ளன.

திருக்கோயிலின் உள்ளேயே ஆடிவீதியில் அக்கினித்திக்கில் ஒரு கிணறு ஒன்று வெட்டப்பட்டுள்ளது. இக்கிணறே தற்போதைய மணிகன்னிகா தீர்த்தமாகக் கருதப்படுகிறது. இதிலும் தற்போது தண்ணீர் போதுமான அளவு இல்லை. தற்போது ஆலயத்தின் தண்ணீர்த் தேவைகளுக்காக ஆழ்குழாய்க் கிணறு(bடிசந றநடட) ஒன்று தோண்டப்பெற்று தண்ணீர் வழங்கப்படுகிறது.

5. தருமஞ்ஞன் முத்தி பெற்ற சருக்கம்

தென் திசையில் தாமிரபரணி நதிக்கரையிலே வேர்வனம் என்னும் ஊரின் மேற்குத் திசையிலே கோலாகலமென்னுங் கிராமத்திலே. வேதசர்மா என்னும் பெயருள்ள ஒரு பிராமணன் இருந்தான். அவன் நான்கு வேதங்களையும் ஆறு சாத்திரங்களையும் கலைகளையும் ஓதியுணர்ந்தவன். கடமைகளை வழுவாது செய்து ஐந்தெழுத்து மந்திரத்தை விதிப்படி மெய்யன்பொடு ஓதுபவன். பிள்ளைகள் மற்றும் பேரன் பேத்திகளுடன் குபேரனுக்கு ஒப்பாக வாழ்பவன். அவனுக்கு மூப்புப் பருவம் வந்து இயற்கை மரணமடைந்தான். அவனுடைய புத்திரன் தருமஞ்ஞன் என்னும் பெயருடைய ஒருவன் தந்தையைப் போல வேதம் முதலியவற்றை ஓதியுணர்ந்து ஒழுக்கத்திலே வழுவாதவனாக இருந்தான். தன்னுடைய தந்தைக்கு இறுதிக் கடமைகளை அன்புடன் முடித்துப் பிதாவின் அஸ்தியை ஒரு குடத்திலே அடைத்துத் துணியினாலே வாயை மூடி அரக்கு முத்திரை வைத்துக் கங்கைநதியிலே இடும் வண்ணம் எண்ணி. அவனது மாணாக்கனோடு வடதிசை நோக்கிச் சென்றான். செல்லும் வழியில் உள்ள சிவத்தலங்களிலே பெரியோர்களுக்குத் தானங்கள் கொடுத்துத் தீர்த்தங்களிலே நீராடி. மதுரையை அடைந்து அங்குள்ள தீர்த்தங்களிலே மூழ்கித் தானங்கள் கொடுத்து மூன்று தினம்தங்கி அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரரைத் தரிசித்துப் பின்னர் திருப்பூவணம் வந்துசேர்ந்தான். சிவலிங்கப் பெருமானைத் தரிசித்து. மணிகன்னிகைத் தீர்த்தக்கரையை அடைந்து. வயிரவக் கடவுளை எள்ளு. அருகு. அட்சதை இவைகளினாலே பூசித்து. அஸ்திக் குடத்தை அக்கரையிலே வைத்துவிட்டுத் தீர்த்தத்திலே மூழ்கினான். மூழ்கும்போது பெருமழை பெய்தமையால் விரைந்தெழுந்து கரையேறும் பொழுது. கால் இடறி அஸ்திக் குடம் அத்தீர்த்தத்திலே விழுந்தது. உடனே அக்குடத்தை யெடுத்துப் பார்த்தான். அதனுள்ளே இருந்த எலும்பு முழுவதும் தாமரை மலரும். உற்பல மலருமாக இருக்கக் கண்டு பெரிதும் மகிழ்ந்து பர்ணசாலைகளிலே வசிக்கின்ற முனிவர்களிடம் போய் நிகழ்ந்தவற்றைக் கூறினான். அவர்களும் இத்தலம் காசியைவிடச் சிறப்புடையதாம் என்றனர். உடனே தருமஞ்ஞன் என்னுடைய பிதாமுதலியோர் நற்கதியடைந்தனர்என்று கூறிச் சிவாலயஞ் சேர்ந்து. சிவலிங்கப் பெருமானைத் தரிசித்து வணங்கித் துதித்த பொழுது. சிவபெருமான் இடபாரூடராய்த் தோன்றிக் காட்சி கொடுத்துத் தருமஞ்ஞனுக்கும் நற்கதியை அருளி மறைந்தருளினார். தருமஞ்ஞனைப் புகழ்வோரும் அவன் கதையைப் படிப்போரும் பாவங்கள் நீங்கிச் சுவர்க்கலோகம் சேர்வர்.

6. உற்பலாங்கி பதியை அடைந்த சருக்கம்

துங்க பத்திரை நதிக்கரையில் உள்ள ஒரு புண்ணிய கிராமத்திலே. கோபாலனென்னும் பிராமணனுக்கு உற்பலாங்கி என்ற பேரழகுடைய மகள் ஒருத்தியிருந்தாள். அவளுக்குத் திருமணம் செய்விக்க வேண்டும் என்று அப்பிராமணன் நினைத்துக் கொண்டிருந்தபோது. அவர்கள் வீட்டு வாயிலில் அழகு பொருந்திய ஏழைப் பிராமணன் ஒருவன் வந்து அன்னப்பிச்சை கேட்டு நின்றான். அவனைக்கண்ட கோபாலன். தன் மகளுக்கு ஏற்ற வரன் இவனே என்று முடிவு செய்து. அவனிடம் தன் கருத்தைச் சொல்லி கலந்துரையாடினான். அவனும் அதற்கு இசைந்து உற்பலாங்கியை மணமுடிக்க விருப்புற்றான். கோபாலன் தன் மனைவியிடம் கலந்து ஆராய்ந்த பின்னர் மணப்பந்தல் அமைத்து. சில சடங்குகளைச் செய்தான். பின்னர் தன் மகளைக் கன்னிகாதானம் செய்யும் முன் மணமகன் மரணமடைந்தான். இவ்வாறு இருபது நபர்கள் கன்னியாகிய உற்பலாங்கியைத் திருமணம் செய்துகொள்ளும் முன் மரணமடைந்தார்கள். இவளுடைய பெற்றோரும் சிறிது காலத்தில் காலமடைந்தனர். அதன் பின் உற்பலாங்கி தனக்கேற்ற நாயகனை அடையும் பொருட்டுப் பல சிவதீர்த்தங்களிலே மூழ்கி இறைவனை வழிபட்டு வந்தாள். இறுதியாகத் திருப்பூவணம் வந்து சேர்ந்தாள். திருப்பூவணத்தில் மணிகன்னிகைத் தீர்த்தத்திலே நீராடினாள். அத்தீர்த்தக் கரையில் காலவமுனிவர் என்பவரைக் கண்டு வணங்கித் தான் வந்த நோக்கத்தைக் கூறினாள். அதனைக் கேட்டறிந்த முனிவர் உற்பலாங்கிக்கு இத்தகைய துன்பங்கள் ஏற்படக்காரணம் முற்பிறவியிலே கௌரிதேவியின் விரதம் மேற்கொண்டு விரதத்தை முறைப்படி முடிக்காமல் விட்டதால் இப்பிறவியிலே இத்துன்பங்கள் நேர்ந்ததெனச் சொன்னார். மணிகன்னிகை தீர்த்தத்தில் நீராடிவிட்டதால் இப்பாவங்கள் நீங்கி மங்களம் உண்டாகும். மேலும் நீ. “இத்தீர்த்தத்தில் மலர்ந்துள்ள தாமரை மலரையும். உற்பல மலரையுங் கொண்டு உமாதேவியாரை விதிப்படி பூசனை செய்து வழிபட்டால் அம்மை நேரில் எழுந்தருளி மங்களந்தந்தருளுவார்என்று முனிவர் சொல்லியருளினார். உற்பலாங்கியும் அவ்வாறே செய்து தேவியாரின் திருவருளினாலே நல்ல கணவன் வாய்க்கப் பெற்று. தீர்க்க சுமங்கலியாயிருந்தாள். “இத்தீர்த்தத்திலே இடபராசியில் சந்திரன் இருக்கும் செவ்வாய்க்கிழமைகளில் அமங்கலிகள் நீராடினால் மறுபிறப்பிலே தீர்க்க சுமங்கலிகளாக வாழ்வர்“. சுமங்கலிகள் நீராடினால் பிள்ளைப்பேறு அடைவார்கள். இத்தகைய புண்ணிய தீர்த்தங்கள் உடையது திருப்பூவணத் திருத்தலமாகும்.

7. பாஸ்கரபுரச் சருக்கம்

காசிபமுனிவருக்கும் அதிதிக்கும் மகனாகப் பிறந்த சூரியன். துவட்டாவின் மகளாகிய பிரபையை மணந்து வாழ்ந்துவந்தான். அவள் சூரியனின் வெப்பத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாதவளாய்த் தனது நிழலைத் தன்னைப் போலப் பெண்ணாக மாற்றிச் சூரியனிடத்தில் நிறுத்திவிட்டுப் பெண்குதிரை வடிவமெடுத்து. வட நாட்டிற்குச் சென்று ஒரு வனத்தில் சூரியனின் வெம்மையைப் பொறுக்கும்படிச் சூரியனை நினைத்துத் தவம் மேற்கொண்டாள். இதனை உணர்ந்த சூரியன் ஆண்குதிரை வடிவமெடுத்து அவள் இருக்குமிடத்தை அடைந்து அவளைக் கலந்தான். பிறகு சூரியனும் பிரபையும் ஆகாய வழியாகச் செல்லும் போது தேவர் முதலியோரைச் சந்தித்துச் சூரியமண்டலத்தினைக் கடைந்து செப்பம் செய்தனர். அப்போது பொறி ஒன்று தோன்றி முதலில் திருப்பூவணத்தில் விழுந்தது. பின்பு மற்றைய தலங்களுக்குப் விரிந்து பரந்தது. இதனால் இவ்வூர் பாஸ்கரபுரம் என்னும் பெயர் பெற்றது என்பர். சூரியனும் பிரபையும் திருப்பூவணக் கோயிலையும். மற்ற கோயில்களையும் தரிசித்தது போன்றே நாமும் உபவாசம். விரதம். ஜபம் ஆகியவற்றை அன்புடன் செய்தால் முத்தி பேறு எய்துவது நிச்சயமாகும் எனக் கூறப்படுகிறது. இத்தகைய சிறப்புக்களை உடையது திருப்பூவணத்திருத்தலமாகும்.

8. சர்வ பாவ விமோசனச் சருக்கம்

இச் சருக்கத்திலே ஒவ்வொரு திங்களிலும் இத் திருப்பூவணத் தீர்த்தமாகிய மணிகன்னிகைத் தீர்த்தத்திலே நீராடி. ஈசனை வழிபடும் முறைகள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.

சித்திரை மாதத்தில். முதலில் வைரவக் கடவுளை வணங்கிப் பின் சிவபெருமானை வழிபட்டுச் சூரியோதயத்திற்கு முன் மணிகன்னிகைத் தீர்த்தத்திலே நீராடினால் கொலை முதலிய பாவங்கள் நீங்கும். குட்ட நோயுடையோர் மற்றும் கொடிய நோயுடையோர் இத்தீர்த்தத்திலே நீராடினால். அந் நோய்கள் ஒழியப் பெறுவர்.

வைகாசி மாதத்தில் புதன்கிழமைகளில். இத் தீர்த்தத்தில் மூழ்கி நீராடினால். பொருட்களவின் பாவம் போகும். இதே திங்களில் இங்கு பொருட்களைத் தானம் செய்வோருக்குப் புத்திரர்கள் எள்.தயிர். பால். உளுந்து மற்றும் வெல்லம் இவைகளுடன் அறுசுவைக் கறியமுது செய்விப்பார்கள். சந்தனம். பொட்டு மற்றும் ஆபரணம் முதலியவற்றைத் தானம் செய்வோர்கள் சுகம் அனுபவிப்பர்.

மாசிமாதத்திலே மாமக காலத்தில் மூழ்குவோர் பாவங்களைப் போக்குவர்.

மார்கழி மாதத்தில் நீராடு வோர். சொர்க்கம் சேர்ந்து 14 இந்திரப் பட்டம் வரை வாழ்ந்து பூலோகத்தில் அரசராவர் என்று கூறப்படுகிறது

கார்த்திகை மாதத்தில் நீராடுவோர் சிவபுரம்சேர்வர். இவ்வாறாக மணிகன்னிகைத் தீர்த்தத்தின் சிறப்புக்களாக ஒவ்வொரு மாதமும் நீராடினால் கிடைக்கும் பலன்பற்றி இச்சருக்கத்திலே கூறப்பெற்றுள்ளது.

9. பிரமசாப விமோச்சனச் சருக்கம்

திருக்கயிலாய மலையில் உள்ள திருமண்டபத்தில் தேவர் முதலியோர் சூழ்ந்திருக்கச் சிவனும் உமாதேவியாரும் வீற்றிருந்தனர். நந்திதேவர் துதிசெய்து கொண்டு இருந்தார். அரம்பை. மேனகை. ஊர்வசி. திலோத்தமை முதலிய தேவரம்பையர்கள் திருநடனம் புரிந்தார்கள். அவர்களில் ஊர்வசி தனித்தாடியபோது சிவபிரான் மகிழ்ந்திருந்தார். அவ்வேளையில் ஊர்வசியின் இடையில் உடுத்தியிருந்த ஆடை சற்றே ஒதுங்கியது. இதனால் மற்றவர்கள் அனைவரும் அஞ்சித் தலைகவிழ்த்தனர். ஆனால் பிரமன் ஒருவன் மட்டும் அவ்விடத்தை உற்று நோக்கினான். அதனை உணர்ந்த சிவபிரான். சினங்கொண்டு நமது சந்நிதியிலே நிற்க உனக்கு அருகதையில்லை எனக் கூறினார். உடனே பிரமன் சிவனது பாதங்களில் விழுந்து தொழுதான். அவனது அன்பை உணர்ந்த சிவபிரான் இது போன்று நமது சந்நிதியில் தவறுகளை இழைப்போர் நரகவாசியாவான் என்று கூறித் தவறை உணர்ந்த பிரமனுக்குப் பிராயச் சித்தமாக திருப்பூவணத்திலே தேவியினால் பூசிக்கப்பட்ட மகாலிங்கத்தைப் பூசித்தால் கருணை புரிவதாக அருளிச்செய்தார். பிரமனும் அவ்வாறே திருப்பூவணம் வந்து இறைவனை வழிபட்டான். அங்கே தவஞ் செய்துகொண்டிருந்த விஷ்ர்வைக் கண்டு தான் பூமிக்கு வந்த வரலாற்றைக் கூறி உரையாடினான். பிரமன் தேவகம்மியனை வரவழைத்து புட்பவனேசுவரருக்கு ஆலயம் அமைக்கும்படிச் சொல்ல. அவனும் அவ்வாணைப்படித் திருக்கோயில் அமைத்தான். பிரமன் அத்திருக்கோயிலினுள் புகுந்து சிவலிங்கத்தைப் பூசித்து சிவயோகத்தில் இருந்தான். அதனை உணர்ந்த சிவபிரான் பிரமனுக்குக் காட்சியருளி அவன் செய்த பாவத்தைப் போக்கி இப்பூவணத்தில் வசிப்பவருக்கும் பாவம் தீரும்படி அருளினார். திருப்பூவணத்தில் இறைவன் சுயம்புலிங்கமாய்த் தோன்றியருள. அங்கு பிரமனால் கோயில் கட்டப்பட்ட வரலாற்றைக் கதையாகக் குறிப்பிடுகிறது இச்சருக்கம்.

10. இலக்குமி சாப விமோசனச் சருக்கம்

இச்சருக்கத்தில் வைகுண்டத்தில் இலக்குமி செய்த பாவத்தைப் போக்க இத்தலம் வந்த வரலாறு கூறப்படுகிறது.

வைகுண்டத்தில் ஆடிப்பாடிய அரம்பை. வித்தியாதரன் முதலியோருக்கு வேண்டிய வரங்களை அருளி சயனமண்டபத்தில் இலக்குமிதேவி திருவடிப் பணிசெய்ய. விஷ்ர் நித்திரை புரிந்திருந்தார். அவ்வேளையில் வாலகில்லி என்ற முனிவர் வந்துள்ள செய்தியை. சேடியர் மூலம் கேள்விப்பட்ட இலக்குமி தேவி. அம்முனிவர் குள்ளமானவராய் (குரூபிகளாய்) இருத்தல்பற்றி எள்ளி நகையாடினாள். அதனால் கோபமுற்ற முனிவர் விஷ்ர்வையும் மதியாது வைகுண்டத்தை விட்டு வந்தவழியே திரும்பிச் சென்று விட்டார். அப்பொழுது நித்திரை நீங்கிய விஷ்ர் பெருமான் இதுவரை நான் அந்தணர்களுக்கு அன்பன் என்பதை நீ இப்போது மாற்றி விட்டாய். உயர்ந்த குலமகளாய்க் கணவன் கருத்தின் வழி ஒழுகுபவளாயினும் அந்தணர்களை அவமரியாதை செய்தால் அவள் குலத்திற்குக் கேடு விளைவிப்பவளாவாள் என்று சபித்தார். அச்சாபத்தையடைந்து இலக்குமி தேவி திருப்பூவணம் சேர்ந்து தவம் செய்தாள். விஷ்ர் மூர்த்தி பயந்து விரைந்து சென்று முனிவரிடம் தன் மனைவி நகைத்ததைப் (கேலியாகச் சிரித்ததைப்) பொறுத்துக் கருணை புரிய வேண்டும் என்று வேண்டினார். அதற்கு அம்முனிவர் இலக்குமியானவள் பன்னிருவருடம் மணிகன்னிகையில் மூழ்கித் தவம் செய்ய. விஷ்ர்வாகிய நீ போய் புட்பவனேசுவரரைப் பூசித்தால் அவமதித்த அபராதமும் சாபமும் நீங்கி வைகுண்டத்தில் வாழ்வாய் எனப் பாவ விமோசனம் கூறினார்.

பிறகு விஷ்ர் பெருமான் முனிவரிடம் அவர் வந்த காரணத்தை வினவினார். அதற்கு வாலகில்லி முனிவரும் நாங்கள் செய்யும் வேள்வியை நீ காத்தல் வேண்டும் எனக்கூறினார். இதனால் அங்ஙனமே முனிவர்கள் வேள்வியைக் காத்தருளினார். பின்பு திருப்பூவணம் சேர்ந்து சிவலிங்கப் பெருமானைப் பூசித்ததினால் இலக்குமிக்கு உண்டான அபராதமும் சாபமும் நீங்கப் பெற்று அவளோடு வைகுண்டம் சேர்ந்து வாழ்ந்தார்.

சித்திரை மாதத்திலே ஆதிவாரத்திலே (ஞாயிற்றுக்கிழமைகளில்) விஷ்ர் தம் பெயரால் உண்டாக்கிய சிவலிங்கத்தை மணிகன்னிகைத் தீர்த்தத்திலே மூழ்கி வழிபட்டால் பாவம் நீங்கி விஷ்ர்பாதத்தில் முத்தி பெறுவர்.

11. உமாதேவி திருஅவதாரச் சருக்கம்

ஒருசமயம். தட்சன் பிரமாவிடம் முழுமுதற் கடவுள் யார் என வினவினான். அதற்குப் பிரமாவும் சிவன்தான் என்று கூறினார். இப்பதிலைக் கேட்ட தட்சன். படைத்தல். காத்தல். அழித்தல் ஆகிய முத்தொழில்களும் முறையே மூவர்களுக்கும் உரியதாய் இருக்க. சிவனை மட்டும் முதற்கடவுள் எனக் கூறுவது என்பது பொருந்தாது எனக் கூறினான். அதனைக் கேட்ட பிரம்மா என்னையும் விஷ்ர்வையும் உண்டாக்கிப் பின்பு இவ்வுலகத்தைப் படைக்கவும். காக்கவும் சிவபெருமான் அதிகாரம் கொடுத்தார். ஆதலால் அவரே முழுமுதற் கடவுள்அவரை நோக்கி நீ தவஞ் செய்வாய்ஸ எனக் கூறியருளினார். அவ்வாறு தட்சனும் தவஞ் செய்ய. சிவபெருமான் எழுந்தருளினார். தட்சனும். சிவபெருமானிடம் அவரை நோக்கி உம்மை வணங்குவோர் அனைவரும் என்னை வணங்கவும். என்பணி செய்யவும். யான் உன்னை மாத்திரம் பணியவும். இந்திரபதம். பிரம்மபதம். விஷ்ர்பதம். அசுரபதம் முதலிய எல்லாம் என்னுடைய ஆணைவழி ஒழுகும்படி நான் தலைவனாய் இருக்கவும் எனக்குப் புதல்வர் புதல்வியரைக் கொடுத்து அவர்கள் இறக்காமல் இருக்கவும். உமாதேவி எனக்கு மகளாகப் பிறக்கவும். நீர் அத்தேவியைத் திருமணம் புரியவும் வரமருள வேண்டும்என வரங்கள் கேட்டான். சிவபெருமானும் அவ்வாறே வரங்கள் அருளினார். வரம் பெற்ற தட்சன் பிரமாவை அழைத்து மகாபுரம்என்னும் நகரை அமைத்தான். அந் நகரிலிருந்து அரசாட்சி செய்து. வேதவல்லியை மணந்து கொண்டான். பின்பு புத்திரர்களைப் பெற்று விவாகம் செய்து கொடுத்து பாக்கியத்தோடு வாழ்ந்து கொண்டிருந்தான். அந் நேரத்தில் திருக்கைலாயத்தில் உமா தேவியார் சிவனை வணங்கி உயிர்களுக்கு முத்தியருளும் முறையை அருளிச் செய்ய வேண்டும் என்று விண்ணப்பம் செய்த போது. சிவபிரான். உமாதேவியாரைப் படைத்து முத்தி கொடுப்பதாகக் கூறினார். பின்பு காளிந்தி நதியிலே தாமரை மலரிலே வலம்புரிச்சங்கு வடிவாய் நீ தவம் புரிந்தால். தட்சன் உன்னைக் குழந்தையாகக் கொண்டு வளர்ப்பான் எனக்கூறி அருளினார். பிறகு நான் வந்து உன்னை மணம் செய்து கொண்டு இக்கயிலைக்கு வருவோம் என்றார்.

உமாதேவியாரும் அந்த ஆணைப்படித் தவஞ் செய்ய. வேதவல்லியோடு தட்சன் நீராடிய போது. கமலமலரிலே தங்கிய சங்கினைக் கண்ர்ற்றுக் கைகளினால் அள்ளிய போது. உமாதேவியார் குழந்தை வடிவாகினார். அக்குழந்தையைத் தங்கள் மகளாக வளர்த்து வந்தனர். உமாதேவியின் ஆறாவது பருவமாகிய (26முதல் 31 முடிய) தெரிவைப் பருவத்தில் கன்னிமாடத்தில் சிவபிரானை நோக்கித் தவஞ் செய்து கொண்டிருந்தாள். சிவனும். பிராமணன் வடிவம் கொண்டு வர. அவரை வணங்கி உபசரித்தாள். பிரமச்சாரிப் பிராமணனாக வந்த சிவபெருமானும். தேவியிடம். உன்னை மணம் செய்யும் பொருட்டு வந்தோம் எனக் கூறினார். அதற்கு அஞ்சிய தேவியார் வஞ்சக வேடம் தாங்கி வந்தாய் போலும் எனச் சினந்து கூறினார். மேலும் நான் சிவனை மணம் புரியும்பொருட்டுத் தவம் செய்கிறேன் என்றும் கூறினார். அப்போது. “இறைவன் வந்து மணம் புரிதல் அருமைஎனத் தேவியை இகழ்ந்தார். இதனால் தேவியார் மேலும் வருந்தி. அருந்தவம் செய்வேன் எனக் கூறினார். சிவன் தன் உண்மை வடிவை வெளிப்படுத்தத் தேவியார். கண்ணீர் ஒழுக அவரைத் தரிசித்தார். இந்நிகழ்ச்சிகளைக் கண்ர்ற்ற சேடியர் ஓடிச் சென்று தட்சனிடம் சொல்லினர். தட்சனும் சிவனுக்கே தனது மகளை மணம் செய்து கொடுப்பேன் என உறுதிபூண்டான்.

12. திருக் கலியாணச் சருக்கம்

தட்சன் உமா தேவியாருக்குத் திருமணம் செய்விக்கும் பொருட்டு. அனைத்து வேலைகளையும் துவக்கி. புத்திரிகளையும் வரவழைத்தான். விஷ்ர் பிரம்மா ஆகியோரும் வந்தனர். சிவன் உமாதேவியார் தவஞ்செய்யும் இடத்திற்கு எழுந்தருளினார். அப்போது. தட்சன் சிவபெருமானைத் திருமண மண்டபத்திற்கு எழுந்தருள வேண்டுமென வேண்டினான். அவ்வாறே எழுந்தருளிய சிவபிரானுக்கு. வேதவல்லி பசும்பால் வார்த்து பாதபூசை செய்தாள். தேவர்கள் சூழ உமாதேவியார் திருமணக்கோலம் கொண்டு சிவபிரான் அருகே அமர்ந்தார். பிரம்மா அக்கினி வளர்த்துத் திருமணச் சடங்குகளை முடிக்கும் போது. சிவபிரான் மறைந்தருளினார். பெரிதும் வருந்திய உமாதேவி அருந்தவம் செய்தார். தட்சன் தேவர்களை அனுப்பிவைத்துவிட்டுச் சிவனை நிந்தித்துக் கொண்டிருந்தான். இவ்வாறு இருக்கும் போது. சிவபிரான் உமாதேவியாருக்குக் காட்சியளித்து அவரை இடபவாகனத்திலே அமரச் செய்து கைலாயத்திற்கு அழைத்துச் சென்றார். இவ்வாறு தட்சனுக்குக் காட்சியளிக்காமலேயே உமாதேவியாரைக் கவர்ந்து சென்றதால். தட்சன் தேவர்களை அழைத்து. இன்று முதல் சிவபிரானை நீங்கள் வழிபடக்கூடாது என ஆணையிட்டான்.

13. தட்சன் வேள்வியழித்த சருக்கம்

பார்வதிதேவியின் தந்தையாகிய தட்சன் நடத்திய யாகத்திற்கு அவளது கணவன்பரமேஸ்வரனுக்கு அழைப்பு இல்லை. இதனால் அழையா விருந்தாளியாக யாகத்திற்குச் செல்லக்கூடாது என்பது ஈசன் விருப்பம். இருப்பினும் தனது தந்தை நடத்தும் யாகத்திற்குச் சென்று தந்தைக்கு முறைப்படி எடுத்துக் கூறி. ஈசனையும் அழைக்கச் செய்யவேண்டும் என்பது உமையம்மையின் விருப்பம். இதனால் பார்வதி பரமேசுவரருடன் தர்க்கம் செய்தார்.

தட்சன் சிவபிரானை விலக்கி திருமால் முதலிய தேவர்கள் சூழ வேள்வி செய்யத் துவங்கினான். இதனை நாரதர் சிவனிடம் தெரிவித்தார். அப்போது உமாதேவியார். சிவனின் திருஉள்ளம் உணராமல் தட்சனின் யாகசாலையை அடைந்தார். தன் மகள் வேள்விக்கு வந்திருப்பதைக் கண்ட தட்சன் மிகுந்த கோபமுற்று. நீ கயிலைமலைக்குத் திரும்பிச் செல்லலாம் எனக் கூறினான். உமா தேவியார் கடுஞ்சினம் கொண்டு அவ்வேள்வி அழிய உன்னுடைய தலையும் ஒழிந்திடுக எனச் சபித்தார். பின்பு மூலாக்கினியை எழுப்பி அதிலே மூழ்கி தட்சன் வளர்த்த யாககுண்டத்திலே அவதரித்தாள். இந்நிகழ்ச்சிகளை திருநந்தி தேவர் வழியாக அறிந்த சிவபிரான். நெற்றிக் கண்ணிலிருந்து வீரபத்திரக் கடவுளைப் படைத்து தட்சனின் சிரத்தை அறுத்து. அவனது வேள்வியையும் அழித்துவிடு யாமும் வருவோம் என்று திருவாய் மலர்ந்தருளினார். வீரபத்திரக் கடவுளும் அவ்வாணைப்படி. தட்சனது தலையை அறுத்து யாக குண்டத்திலே போட்டார். அப்போது சிவன் எழுந்தருளினார். உடனே திருமால் வணங்கிப் பிரார்த்தனை செய்தமையால். வீரபத்திரக் கடவுள் முகமாகச் சிவபெருமான் தேவர்களைப் பிழைப்பித்தார். பின் பிரம்மா வணங்கிக் கேட்டுக் கொண்டபடி ஆட்டின் தலையைத் தக்கனுக்கு அமைத்து எழுப்பினார். சிவபிரான் பார்வதி தேவியாருடன் திருக்கயிலாய மலை சேர்ந்து யோகியாய் எழுந்தருளினார். ஈசனின் விருப்பத்திற்கு மாறாகச் சென்றதும். அவரை எதிர்த்துச் சண்டைச் செய்ததும் இறைவி அறிந்து செய்த பாவங்கள் அல்லவா? இப்பாவங்களை இறைவியே செய்துவிட்டாரேஸ இவ்வாறு அறிந்து செய்த பாவத்தைப் போக்க பிராயச்சித்தம் செய்ய வேண்டுமென பார்வதி தேவி விரும்பியிருந்தார்.

14. உமைவரு சருக்கம்

சிவபெருமானும் நீ போய்த் திருப்பூவணத்தலத்தில் தவம் செய். அங்கே ஒரு மூல லிங்கம் தோன்றும். அதனை நீ பூசித்தால். தாம் வெளிப்படுவதாகக் கூறி உமா தேவிக்கு அருள்புரிந்தார். உமா தேவியாரும் அவ்வாறே பாரிசாத மரத்தை வளர்த்து அதன் நிழலிலே தவஞ் செய்தார். அம்மரத்தின் அடியிலே சிவலிங்கம் முளைத்தது. அதனையறிந்து பூசித்து வழிபட்டார். சிவனும் வார்த்தை கடந்த பாவத்தை மாற்றி அமர்ந்திருந்தார்.

இதுவே திருப்பூவணத்தில் சுயம்புலிங்கமாய்ச் சிவபிரான் தோன்றிய வரலாறு ஆகும். இவ்விடத்தில் தினையளவு தானம் செய்தாலும் அது புண்ணியத்தைச் சேர்க்குமிடமாகும்.

இங்கே வேதம் உணர்ந்த அந்தணன் ஒருவன் சிவார்ச்சனை செய்து உடலினை வெறுத்து. இலைக்கறி மாத்திரம் உண்டு சிவ யோகத்தில் அமர்ந்திருந்தான். பெருமழை பெய்யும் ஒரு நாள் இரவிலே ஒரு பிராமணன் அச்சிவயோகியின் பர்ணசாலையை அடைந்தான். சிவயோகியும் வணங்கி அவரை வரவேற்று தனக்கிருந்த இலைக்கறியில் ஒரு பங்கை அவருக்கும் கொடுத்து உண்பித்தான். பிராமணனும் அவ்விலைக் கறியை உண்டு மகிழ்ந்தார். அதனால். சிவபிரானும் திருஉள்ளம் மகிழ்ந்து அருளினார். இலைக்கறி படைத்த அந்தணர் முன்னே சிவன் தோன்றி பிறவி அறுமாறு அருள் செய்தார். அவனுக்கு மரணம் நேரிட்டபோது வேதாந்த முடிபாகிய சித்தாந்தத்தை உபதேசித்தார். எனவே இத்திருப்பூவணத் திருத்தலத்திற்கு ஒப்பான எந்த ஒரு தலமும் இல்லை எனக் கூறப்படுகிறது் .

15. சுச்சோதி தீர்த்தயாத்திரைச் சருக்கம்

கோதாவிரி நதிக் கரையிலே. போகவதி நகரத்திலே. தேவவன் மாவென்னும் அரசன் ஒருவன் ஆட்சி செய்திருந்தான். அவனுக்குச் சுச்சோதி முதலான நான்கு புத்திரர்கள் இருந்தார்கள். அவர்களுக்குத் திருமணம் செய்வித்து. மூத்த புத்திரனாகிய சுச்சோதி என்பவனுக்கு முடிசூட்டி முறைப்படி அரசாட்சியை அவனிடம் ஒப்புவித்துவிட்டு தருமசீலையென்னும் மனைவியோடு வனத்தை அடைந்து தவம் செய்தான். பின்னர் அவனும் அவனது மனைவியும் சிவபதமடைந்தனர். அவ்விருவருக்கும் சுச்சோதி கர்ம காரியங்களை முடித்தபின் நாரதமுனிவர் அவனைச் சந்தித்து. “உன் முன்னோர்கள் நீ செய்யுந் தில (எள்) தருப்பணத்தை நேரிலே பெறும்வரை தருப்பணஞ் செய்வாய்என்று கூறினார். சுச்சோதி அரசனும். தன் சேனைகள் சூழப் புறப்பட்டுப் பிரயாகை. அரித்துவாரம். அவந்தி. மாளவம். காகோலம். நீலகண்டம். திரிகூடவீசம் ஆகிய வடநாட்டுத் தலங்களிலும். காஞ்சீபுரம். தில்லைவனம் ஆகிய தென்நாட்டுத் தலங்களிலும் முறைப்படியாகத் தீர்த்தங்களாடிச் சிவபிரானைத் தரிசித்துப் பிதிர்களை நோக்கித் தில தருப்பணஞ்செய்தான். பின்னர் பாண்டியநாட்டிலே திருவாலவாய் சேர்ந்து. பொற்றாமரைக் குளத்திலே மூழ்கி அவனது முன்னோர்களுக்குத் திலதருப்பணஞ்செய்து மீனாட்சி சமேத சுந்தரேசுவரரை வழிபட்டு அங்கே தங்கினான். அவ்வாறு தங்கியிருக்கும் போது. ஒரு தினம் இத்தனை தலங்களில் திலதருப்பணம் செய்தும் முன்னோர்கள் நேரில் வந்து அவற்றைப் பெற்றுக் கொள்ள வில்லையேஸ ஒருவேளை. “நாரதமுனிவர் கூறிய வார்த்தை விநோதமோ் என்று கருதி மனம் வருந்தியிருந்தான். அப்போது நாரதமுனிவர் அங்கு வந்து இத் திருவாலவாய்க்குக் கிழக்குத் திசையில் திருப்பூவணம் என்னும் தலம் உள்ளது. அத்தலம் சிவபிரானுக்கும். முனிவர்களுக்கும். பிதிர்களுக்கும் திருவுள்ளம் மகிழத்தக்க தலமாக உள்ளது. “நீ அங்கே சென்று உன் பிதிர்களுக்குத் தில தருப்பணம் செய்தால் அதனை அவர்களே நேரில் வந்து பெற்று முத்திடையவார்கள் என்றார். அங்ஙனமே அரசன் திருப்பூவணஞ் சேர்ந்தான்” .

16. சுச்சோதி பிதிர்களை முத்தியடைவித்த சருக்கம்

நாரத முனிவர் அருளியபடித் திருப்பூவணஞ் சேர்ந்த சுச்சோதிராசன். மணிகன்னிகைத் தீர்த்தத்திலே நீராடிச் சிவலிங்கப் பெருமானை வழிபட்டு வரும் நாளிலே. ஒருநாள். காலவமுனிவரைக் கண்ர்ற்று வணங்கி. அவரது ஆசிர்வாதம் பெற்று. வைகைநதி முதலிய தீர்த்தங்களிலே அமாவாசைதினத்திலே நீராடி. தன்னோடு வந்த மூவாயிரம் முனிவருக்கும் அறுசுவைக் கறியமுதுடன் திருவமுது செய்வித்து. திருப்பூவணேசருக்குப் பூசைகள் நடத்தி. மணிகன்னிகைத் தீர்த்தத்தை அடைந்து நீராடி. சங்கற்பம் பண்ணிப் பிதிர்களை ஆவாகித்து. “என்னுடைய பிதிர். பிதாமகர். பிரபி அனைவரும் எனக்கெதிரிலே தோன்றி நான் கொடுக்கும் எள்ளையும். தண்ணீரையும் பிண்டத்தையும் ஏற்றருளவேண்டும்ஃ ஏற்றருளாவிடின். எனதுயிரை விட்டுவிடுவேன்என்று அனைவரும் கேட்கும்படியாகச் சொல்லிப் பிண்டம் கொடுத்தான். அப்போது மற்றவர்களுக்குத் தோன்றாமல் அவ்வரசனுக்கு மட்டும் பிதிர்கள் அனைவரும் தேவவடிவங்கொண்டு எதிரிலே தோன்றிப் பிண்டத்தை உண்டு அரசனை ஆசிர்வதித்தனர். இதனால் அரசன் மகிழ்ந்தான். பின்னர் அவனது முன்னோர்கள் சிவபிரான் திருவடிநிழலிற் சேர்ந்தார்கள். சிவபிரான் திருவருளினாலே சுச்சோதிராசன் சீவன் முத்தி பெற்றான். மூவாயிரம் முனிவர்களும் பிதிர்கள் பொருட்டுத் தானஞ் செய்தமையால் அம்முனிவர்களுடைய பிதிர்களும் நற்கதி பெற்றனர். இக்காரணத்தாலே இத்தலமானது பிதிர்முத்திபுரம் என்று பெயர் பெற்றது. புட்பவனேசர் திருக்கோயிலுக்கு நிருதித்திக்கிலே (தென்மேற்குத்திசை) சுச்சோதிராசன் தன்னுடைய தந்தை தேவவன்மாவின் பெயராலே ஒரு சிவலிங்கத்தை நிறுவினான். பின்பு அவ்வரசன் மூவாயிரம் முனிவர்களோடு போகவதி நகரஞ் சேர்ந்தான்.

திருப்பூவணத் தலத்திலே பிதிர்களுக்குத் திலதர்பணஞ் செய்வோர் அளவில்லாத பயன் பெறுவர்என்ற கருத்தும் பிதுர் முத்திபுரம்என்ற பெயர் ஏற்பட்டதற்கான காரணமும் இச் சருக்கத்தில் கூறப்பட்டுள்ளது.

திதி தருப்பணம் செய்தல் திருப்பூவணத்தில் 1) _ கோவிந்தராஜன் ஐயங்கார். 2) _ கிருழூண ஐயங்கார் மற்றும் 3) _ ரெங்கநாத ஐயங்கார் இவர்களது குடும்பத்தினர் பரம்பரை பரம்பரையாகத் திதி மற்றும் தர்ப்பணங்களைச் செய்து வருகின்றனர். திருக்கோயில் அருகே உள்ள அக்ரகார வீதியில் இவர்களது வீடுகள் உள்ளன.

17. தீர்த்தச் சருக்கம்

கார்த்திகை மாதம் பிறக்கும் புண்ணிய காலத்திலும். ஞாயிற்றுக்கிழமைகளிலும் சூரியோதயத்திற்கு முன்னே. மணிகுண்டத் தீர்த்தத்திலே. சூரிய மந்திரம் உச்சரித்து மூழ்குவோர். அவர்கள் விரும்பியவற்றை அடைந்து. முடிவிலே சிவலோகஞ்சேர்வர். அம்மணிகுண்டத்திலே மூழ்கி அந்தணர்களுக்கு உடல் உழைப்பைத் தானஞ் செய்வோர் குன்ம(குட்டநோய்)முதலிய நோய்கள் நீங்கி. முடிவிலே சூரியஉலகம் அடைவர். அத்தீர்த்தத்திலே. மார்கழி மாதத்தில் செவ்வாய்க்கிழமைகளில் மனைவியுடன் மூழ்குவோர் புத்திரப்பேறு அடைவர். திருவைந்தெழுத்தை உச்சரித்து அசுவதி நட்சத்திரத்திலே மூழ்குவோர் இறுதியிலே சிவலோகம் அடைவர். முழுநிலவு நாட்களில் பிரமதாண்டவ மூர்த்தியைப் (திருப்பூவண நடராசரை) பூசிப்போர் மகேசர் உலகத்திலே ஒரு கர்ப காலம் வரையிலே தங்கிப் பின்பு சிவலோகம் சேர்வர். மக(ஆவணி) மாதத்திலே சூரியோதய காலத்திலே. சூரிய மந்திரம் உச்சரித்துச் சிவபிரான் திருமுன்னர் நாடகஞ் செய்வோர் இறுதியிலே நற்கதி பெறுவர். சூரியோதயத்திற்கு முன் வைகை நதியிலே மூழ்கி. சிவராத்திரியிலே உறக்கமின்றி நான்கு யாமமுஞ் சிவபூசை செய்து. தானங்கள் செய்வோர் இறுதியிலே சிவலோகம் சேர்ந்து வாழ்வர். மணிகன்னிகைத் தீர்த்தத்தில் இடப(வைகாசி)மாதத்தில் விசாக நட்சத்திரத்திலும். தட்சணாயத்தில் கிரகண காலத்திலும் நீராடுவோர். பல வகையான தானஞ் செய்த பயனைப் பெறுவர். சிவசந்நிதியில் இரண்டம்பு செல்லுந் தூரத்தில் வசிட்ட தீர்த்தத்தில் மூழ்குவோர் இறுதியிலே பிரமபதம் பெறுவர். சூரியோதயத்திலே இந்திரத் தீர்த்தத்திலே. பங்குனி மாசம் உத்தர நட்சத்திரத்தில் மூழ்குவோர் யாகபலத்தை அடைவர். பன்னிரண்டு தினங்கள் மூழ்குவோர் சாகயாகபலனைப் பெறுவர். ஒரு மாதம் மூழ்குவோர் அசுவமேத யாகப் பலனைப் பெறுவர். அத்தீர்த்தத்தைப் பருகுவோர் அக்கினி nக்ஷாம பலனை அடைவர்.

இவ்வாறு திருப்பூவணத் திருத்தலத்தில் உள்ள தீர்த்தங்களையும். அவற்றில் எந்த நாட்களில் எவ்வாறு நீராட வேண்டும் என்பது பற்றியும். அவ்வாறு நீராடி இறைவனை வணங்குவதால் ஏற்படும் பலன்களை எல்லாம் குறிக்கும் வண்ணம் இச்சருக்கம் அமைந்துள்ளது.

18. நளன் கலிமோசனச் சருக்கம்

நளச்சக்கரவர்த்தி வேட்டையாடி முடித்து வேடரோடு மதியஉணவு உண்டு மரநிழலிலே நித்திரை செய்தான். அப்பொழுது. மரத்திலிருந்து கீழே வீழ்ந்த பாம்பு தீண்ட. உடல் கருத்ததாகக் கனவு கண்டு விழித்தான். கனவிற்குப் பிராயச்சித்தம் செய்தும் நளராசனுக்கு ஊக்கமுண்டாகவில்லை. பின்பு நளராசன் சூதாடி எல்லாவற்றையுந் தோற்றுத் துன்பமுற்று. மனைவி புத்திரர்களை விட்டு வனம் புகுந்தான். புகுந்தபின்னர் நகுடன் என்பவன் பாம்பாகித் தீண்டினமையால் உடல் முழுவதும் ஒளி மழுங்கிக் கருமையுற்றான். பின்னர் நளராசன் இருதுபன்ன மன்னனிடம் தேர்ப் பாகனாகச் சேர்ந்திருந்தான். அவனுடன் தமயந்தி சுயம்வரத்திற்குச் சென்று அவளை மனைவியாக அடைந்தான். மீண்டும் சூதாடி வென்று. அரசாண்டு. மனைவி மைந்தருடன் நால்வகைச் சேனைசூழத் தீர்த்தயாத்திரைக்குப் புறப்பட்டான். பிறகு கேதாரம் காசி முதலிய தலங்களை அடைந்து. தீர்த்தமாடிச் சிவலிங்க மூர்த்திகளைத் தரிசித்துக் கொண்டு. மதுரையை அடுத்துத் திருப்பூவணம் சேர்ந்து சுவாமியையும் அம்மையையும் தரிசனஞ் செய்து வழிபட்டான். திருப்பூவணத்தின் மகிமையையும் அப்பதிக்குத் தான்வந்த பின்னர்த் தனக்குண்டாகிய மனநிம்மதியையும் உணர்ந்து ஈசனை வணங்கி இத்திருப்பூவணத்தலத்திலேயே தங்கினான். தானங்கள் கொடுத்து புட்பவனேசருக்கு மகோற்சவம் நடத்தினான்.

19. திருவிழாச் சருக்கம்

நளச்சக்கரவர்த்தி. திருப்பூவணேசருக்குத் திருவிழா நடத்தத் தொடங்கி. வளர்பிறையிலே புனர்பூச நட்சத்திரத்திலே இடபக் கொடியேற்றி இரத உற்சவம் நடத்தித் தீர்த்த விழாவும் செய்வித்தான். பின்பு சிவலிங்கப் பெருமானைத் தரிசித்து விடை பெற்றுக் கொண்டு தனது நகரத்தையடைந்து வாழ்ந்திருந்தான்.

அறியாமல் செய்த பாவம் திருப்பூவணத் திருத்தலத்தை வணங்கிய உடனேயே ஒழிந்துவிடும். அறிந்து செய்த பாவங்கள் இத்தலத்தில் ஒருமாத காலம் தங்கி இறைவனை வழிபட்டால் நீங்கும். அந்தணரை நிந்தித்த பாவமுதலியன. அப்பதியில் ஆறுமாத காலம் தங்கி வழிபட்டால் தீரும். சித்திரை மாதத்தில் முழுமதி நாளில் மணிகன்னிகைத் தீர்த்தத்திலே மூழ்கித் திருப்பூவணேசருக்குத் திருப்பூமாலை சாத்தினால். சிந்தித்தன எல்லாஞ் சித்திக்கும். வைகாசி மாதம் முழுமதிநாளில் விசாக நட்சத்திரத்தில் புட்பவனேசருக்குப் பட்டுப் பரிவட்டங் கொடுத்தவர். பாவங்கள் நீங்கிச் சந்ததியுடன் சக்கரவர்த்தியாய் வாழ்ந்து. சிவலோகஞ் சேர்வர். உத்தராயணம். தட்சிணாயணம். மாதப்பிறப்பு காலம். “கிரகணகாலம் முதலிய புண்ணிய காலங்களிலே மணிகன்னிகை முதலிய தீர்த்தங்களாடித் தானஞ் செய்வோர். பாவங்கள் ஒழிந்து எட்டுவிதமான போகங்களை அனுபவிப்பர்” .

20. சிதம்பர உபதேசச் சருக்கம்

வசிட்டர் முதலாகிய முனிவர்கள். நான்கு வேதங்களையும் ஓதி உணர்ந்து தங்குதற்கிடமானதால். புட்பவனம். சதுர்வேதபுர மெனப் பெயர் பெறும். அப்பதியிலே. வியாச முனிவரிடம் உபதேசம் பெற்ற மாந்தியந்தின முனிவரும். தியானகாட்ட முனிவரும் சிவபிரானை நோக்கித் தேவவருடம் நூறு வரையும் அருந்தவம் புரிந்தனர். (சிங்க சித்தர் மற்றும் குரங்கு சித்தர் திருப்பூவணத்தில் தவம் செய்யும் காட்சி அம்மன் சந்நிதியின் தீர்த்தத்தொட்டி அருகே உள்ளது). அதற்குச் சிவபிரான் இடபாரூடராகத் தோன்றினார். அம்முனிவர்கள் தரிசித்துத் துதிக்க. அத்துதிக்கு மகிழ்ந்தருளிய சிவபிரான். முனிவர்கள் வேண்டியவரத்தை வினவினார். அம் முனிவர்கள். “இத்திருப்பூவணத்திலே ஐந்தெழுத்து மந்திரத்தை எங்களுக்கு உபதேசித்து ஆனந்த தாண்டவஞ் செய்தருள வேண்டும்என்று வேண்டினர். அதற்குச் சிவபிரான். “கான்மீர நாட்டில் உள்ள முனிவர்கள் பொருட்டுத் தில்லைவனத்திலே திருநடனஞ் செய்வோம் அதை நீங்களும் தரிசிக்கலாம்என்று அருளினார். இத்தலத்திலே பிரணவமாகிய திருவைந்தெழுத்தை உங்களுக்கு உபதேசித்து. உங்கள் இருதயக்கமலமாகிய அம்பலத்திலே திருநடனஞ் செய்வோம்.” என்று கூறிப் பிரணவத்தை உபதேசித்தருளினார். அதனை முனிவர்கள் சிந்தித்து. சிவபிரான் திருநடனத்தையும் அவர்களது இருதயக் கமலத்திலே தரித்துப் பின்பு தில்லைவனஞ் சேர்ந்து சிவபிரானுடைய ஆனந்த தாண்டவத்தைத் தரிசித்தனர். (குரங்கு சித்தர். பன்றி சித்தர். சிங்க சித்தர் ஆகியோர் திருப்பூவணத்தில் தவம் இயற்றிய காட்சி பெரிய நந்திக்கு அருகே உள்ள தூணில் உள்ள சிற்பம்).

இப்புராணக் கருத்தைத் திருநாவுக்கரசர். திருக்கயிலாச நாதர் காட்சிதரும் இடங்களைத் தொகுத்துக் கூறும் திருப்பாசுரத்தில்.

புலிவலம்புத்தூர் புகலூர் புன்கூர்

புறம்பயம் பூவணம் பொய்கைநல்லூர்

என்று எடுத்துப் பாடுகிறார். உமாதேவி. விஷ்ர் பிரமன். சூரியன் முதலியோரும் மற்ற முனிவர்கள். இராக்கதர்கள் முதலியோரும் புத்தி முத்தியின் பொருட்டுச் சிவபிரானை அர்ச்சித்துப் பாவங்களைப் போக்கினமையால். இத்திருப்பூவணம் மகாபாபவிமோசனபுரமென்று பெயர் பெறும்.

சிவபிரானோடு காளிதேவி சபதங்கூறி ஆடிய பாவத்தைப் போக்கும் பொருட்டுத் திருப்பூவணத் திருக்கோயிலுக்கு. வடதிசையிலே தன் பெயராலே காளிசுரலிங்கம் என ஒன்று நிறுவிப் பூசித்தாள்.

பனிரெண்டுவருடம் மழையில்லாத காலத்திலே. சலந்தரன் என்னும் தவளை திருப்பூவணத்திலே. அலரியடியில் தங்கியிருந்தது. அவ்வலரியில் பூத்த மலர் சிவபிரான் திருவடியில் ஏறினதால். சிவபிரான் அத்தவளைக்குச் சக்கரவர்த்தியாய் இருக்கும் வரம் அருளினார். வரம் பெற்ற சலந்திரன். பூமியை ஆண்டு தேவர்களை வருத்தினான். அதனால் அவனை அழிக்கச் சிவபிரான் விஷ்ர்வுக்கு இத்தலத்திலே சக்கரப்படையை அருளிச் செய்து. சலந்தரனைக் கொல்வித்தார். எனினும். முன்பு அலரிமலர் சூடுதற்குக் காரணமானதால் சலந்தரனுக்கு முத்தி அருளினார்.

தாழம்பூ வழிபட்ட திருத்தலம்

ஈசனின் அடிமுடி தேடிய கதையில் ஈசனின் தலையிலிருந்து கீழே விழுந்த தாழம்பூ பிரமனுக்கு ஆதரவாக இறைவனிடம் பொய் சொல்வது தவறு என்று அறிந்தும் பொய் சொன்னது. தான் அறிந்து செய்த பாவம் போக்க திருப்பூவணம் வந்து ஆற்றின் கரையில் ஒதுங்கியிருந்து ஈசனை வணங்கிப் பாவ விமோசனம் பெற்றது. இவ்வாறு அமூறிணை உயிர்களின் வேண்டுதலுக்குக்கூட செவிசாய்த்து அவற்றின் பாவங்களையும் போக்க வல்லவர். அனைத்து உயிர்களின் மீதும் அன்புடையவர். வினை தீர்க்கும் பரிவு உடையவர் திருப்பூவணநாதர்.

இவ்வாறு திருப்பூவணப் புராணம். திருப்பூவணத்தின் பல்வேறு சிறப்புகளையும் பாடியுள்ளது.

*****

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

திருப்பூவணப் புராணம் Copyright © 2015 by மு​னைவர். கி. காளைராசன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book