3

அறிமுக உரை

அனைத்துத் திருத்தலங்களும் மூர்த்தி, தலம், தீர்த்தம் மற்றும் விருட்சம் ஆகியவற்றால் சிறப்பாகப் பேசப்படுகின்றன. ஆனால். மிகவும் தொன்மையான பல திருத்தலங்கள். தலபுராணத்தாலும் இலக்கியத்தாலும் சிறப்புப் பெற்று விளங்குகின்றன. இவ் அனைத்துச் சிறப்புகளையும் ஒருங்கே பெற்ற திருத்தலமாகத் திருப்பூவணம் திகழ்கிறது. இத்தலத்திற்கென்று வடமொழியில் புராணம் ஒன்று உள்ளது. அதனைத் தமிழ் மொழியில் மொழிபெயர்த்துக் கந்தசாமிப் புலவர் பாடியுள்ளார்.

கடம்பவனபுராணம். திருவிளையாடற் புராணம் ஆகியவற்றிலும் திருப்பூவணத் திருத்தலத்தின் பெருமைகள் விரிவாகப் பாடப் பெற்றுள்ளன. மூவர் தேவாரம், திருவாசகம். தேவர் திருவிசைப்பா மற்றும் திருப்புகழ் ஆகியவற்றில் திருப்பூவணம் சிறப்பித்துக் கூறப் பெற்றுள்ளது.

திருப்பூவணப் புராணம் இயற்றிய கந்தசாமிப்புலவர் திருப்பூவணநாதர் உலா, திருப்பூவணநாதர் மூர்த்தி வகுப்பு, தலவகுப்பு என்ற நூல்களையும் எழுதியுள்ளார்.

திருப்பூவணப் புராணம் (வடமொழி)

துறவியரும். ரிஷிகளும் பிரமனை அணுகி, தவம் மற்றும் வேள்வி செய்வதற்கேற்ற புனித இடத்தைக் காட்டுமாறு வேண்டிக் கொண்டனர். அதற்கேற்பப் பிரமனும் ஒரு சக்கரத்தை உருண்டோடச் செய்து அது நின்று விழும் இடமே தவத்திற்கு ஏற்ற புண்ணிய பூமியாகும் என்றார். அவ்விடம் நைமிசாரண்யம்என்று அழைக்கப்படுகிறது. இங்குதான் வியாச முனிவர் புராணங்களையும் மகாபாரதத்தையும் இயற்றினார். வியாசமுனிவர் சூதமுனிவருக்குக் கூறிய புராணங்கள் பதினெட்டு ஆகும். இப்புராணங்களில் பிரம்மகைவர்த்த புராணம் என்பதும் ஒன்று. இப் புராணத்தின் எழுபதாம் அத்தியாயம் முதல் எண்பத்துநான்காம் அத்தியாயம் வரை திருப்பூவணத்தலபுராணம் பற்றி எடுத்துக் கூறப்பட்டுள்ளது.

திருப்பூவணப் புராணம் (வடமொழியில்) தோன்றிய வரலாறு

நைமிச வனத்திலே, மிகுந்த தவமுடைய சௌநகர் முதலான முனிவர்கள் பலர் சிவபிரான் திருவடியை அடைவதற்குக் கூறப்பட்ட வரலாற்றுக் கதைகளை ஆராய்ந்து கொண்டிருந்தனர். அப்பொழுது அங்கே சூதமுனிவர் என்பவர் வந்தார். மற்றைய முனிவர்கள், அவரை வணங்கி வரவேற்று அமரச்செய்தனர். பின்பு அவரிடம் நீங்கள் முன்பு ஒருமுறை சுவேதவன (திருவெண்காடு) சேத்திரமான்மியத்தைக் கூறும்போது இடையிலே புட்பவன மான்மியத்தை சுருக்கிச் சொன்னீர்கள். இப்பொழுது அதனை விரிவாக விளக்க வேண்டு மென்று முனிவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

முனிவர்களின் வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் திருப்பூவணப் புராணத்தைச் சூதமுனிவர் சொல்லியருளினார். இப் புராணத்தை யார் முதன்முதலில் யாரிடம் கூறினார்கள் என்ற விவரத்தை,

நந்தி முகன் றம்பியரு ணந்திதனக் குரைப்ப நந்தி சநற்குமாரன். வெந்துயரமற வெடுத்துவிரித்துரைப்பனவன் வேதவியாதற்கோதப். புந்தியுணர்ந்தவன் சூதமுநிக்குரைத்தபுட்பவனபுராணந்தன்னை

என்ற பாடலில் கந்தசாமிப் புலவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

திருப்பூவணப் புராணம் (தமிழ்மொழியில்) தோன்றிய வரலாறு

அற்றமில்கலையி னுண்ணறிவின் மேலையோர்

பொற்றிருப்பூவணப் புராணமாண்புற

முற்பகவர் வடகலை மொழிபெயர்த்து நீ

நற்றமிழான் முறை நவிற்று கென்னவே

திருப்பூவணப் புராணம் வடமொழியில் உள்ளது. அதனை அனைவரும் அறிந்துகொள்ளத் தமிழில் பாடுக, என்று கேட்டுக் கொண்ட காரணத்தினால். தமிழில் மொழிபெயர்த்துப் பாடுவதாகக் கந்தசாமிப்புலவர் தனது அவையடக்கப் பாடலில் குறிப்பிட்டுள்ளார்.

புத்தகவடிவில் புராணம் ஏட்டுச்சுவடியில் இருந்த புராணத்தை புத்தகமாக அச்சிட்டு வெளியிட வேண்டுமென. மதுரை திருஞானசம்பந்த தேசிக சுவாமிகள் ஆதீனத்து அம்பலவாண சுவாமிகள் விருப்பம் தெரிவித்துள்ளார்கள். அதன்படி. தேவகோட்டை

மு. அண்ணாமலைச் செட்டியார் அவர்கள்,

ராம. சுப்பிரமணியச் செட்டியார் அவர்கள்,

வீர. சொக்கலிங்கச் செட்டியார் அவர்கள்

இம்மூவர்கள் பொருளுதவி பெற்று, மதுராபுரியில் வாசித்த .இராமசுவாமிப்பிள்ளை என்று அழைக்கப்பட்ட ஞானசம்பந்தப்பிள்ளையால் அகப்பட்ட பிரதி கொண்டு. சென்னை இந்து தியலாஜிகல் அச்சுக்கூடத்தில் மன்மதவருடம் (1896ம் ஆண்டு) மாசிமாதம் விலை ரூபாய்.கவ (Rs.1 1/4)க்கு அச்சிடப்பெற்றுள்ளது.

இப்புத்தகத்தின் முகவுரையில் “…. …. இப்பாடலடங்கிய ஏட்டுப்பிரதி ஒன்றே கிடைத்தமையால், அதுகொண்டு ஒருவாறு பார்வையிட்டு அச்சிடப்பட்டதுஎன்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதைப்போன்றே. 1993ம் ஆண்டின் இறுதியில். இந்நூலாசிரியர் (கி.காளைராசன்) தனது M.Phil. ஆய்வினை மேற்கொண்டார். ஆய்விற்குத் திருப்பூவணப் புராணப் புத்தகம் தேவைப்பட்டது. ஆனால் திருப்பூவணத்தில் யாரிடமும் இப்புத்தகம் கிடைக்க வில்லை. பல நூலகங்களில் கேட்டும் கிடைக்கப் பெறவில்லை. இறுதியாகக் காரைக்குடியில் உள்ள இராமசாமி தமிழ்க்கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றிய தமிழாகரர் தெ.முருகசாமி அவர்கள் திருப்பூவணப் புராணப் புத்தகத்தைக் கொடுத்து உதவினார்கள். புத்தகம் அச்சிடப்பெற்று நூறு ஆண்டுகளுக்கும் மேலானதால், காகிதங்கள் மிகவும் பழையதாய் இருந்தன. தொட்டால் ஒடிந்துவிடும் நிலையிலிருந்த, அப்புத்தகத்தை நுணுகிப் படித்தே இந்நூலாசிரியர் திருப்பூவணப் புராணப் பாடல்களை கணிணியில் அச்சேற்றியுள்ளார்.

தமிழில் புராணம் எழுதிய ஆசிரியர் வரலாறு

கந்தசாமிப்புலவரின் ஊர் திருப்பூவணமாகும். இவரைப் பற்றிய வரலாறு ஏதும் தெரியவில்லை. இவர் திருவாப்பனூர் புராணமும். திருப்பூவணநாதர் உலாவும் இயற்றியுள்ளார். இவர் காலத்திலேயே இந்நூல்களுக்கு நன் மதிப்பிருந்துள்ளதற்கு ஆப்பனூர் புராணப் பாயிரச் செய்யுளும், திருப்பூவணநாதர் உலாவின் சிறப்புப் பாயிரச் செய்யுளும் சான்று தருகின்றன.

இவர் திருப்பூவணப் புராணத்தில் பாயிரம் பாடும்போது, சகாத்த வருடம் 1543ல் தமிழில் மொழிபெயர்த்துப் புட்பவனபுராணத்தை இயற்றியதாகக் குறிப்பிடுகிறார். இதனை ஆங்கில வருடத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது சகாப்த வருடம் 1543+78=1620-1621ம் ஆண்டைக் குறிப்பிடுகிறது. இப்புத்தகம் 2008ம் ஆண்டு எழுதப்பெற்றது. இதனால் இவர் இன்றைக்குச் சரியாக (2008-1620=388) 388 ஆண்டுகளுக்கு முன் திருப்பூவணப் புராணத்தை இயற்றியுள்ளார் என்பதை அறிய முடிகிறது.

இவர், நைமிசாரணியச் சருக்கம், சவுநகர் சூதரை வினவிய சருக்கம், திருக்கைலாயச் சருக்கம், ஆற்றுச் சருக்கம், திருநாட்டுச் சருக்கம், திருநகரச் சருக்கம் ஆகிய சருக்கங்களைப் பாடிப் பாயிரம் பாடிய பின்னர் இருபது சருக்கங்களில் திருப்பூவணப் புராணத்தைப் பாடியுள்ளார். அவை பின்வருமாறு,

1. சூரியன் பூசனைச் சருக்கம்

2. திரணாசனன் முத்தி பெற்ற சருக்கம்

3. மணிகன்னிகைச் சருக்கம்

4. துன்மனன் சருக்கம்

5. தருமஞ்ஞன் முத்தி பெற்ற சருக்கம்

6. உற்பலாங்கி பதியை யடைந்த சருக்கம்

7. பாற்கரபுரச் சருக்கம்

8. சர்வ பாவ விமோசனச் சருக்கம்

9. பிரம சாப விமோசனச் சருக்கம்

10. இலக்குமி சாபவிமோசனச் சருக்கம்

11. உமாதேவி திருஅவதாரச் சருக்கம்

12. திருக்கலியாணச் சருக்கம்

13. தக்கன் வேள்வியழித்த சருக்கம்

14. உமை வரு சருக்கம்

15. சுச்சோதி தீர்த்த யாத்திரைச் சருக்கம்

16. சுச்சோதி பிதிர்களை முத்தியடைவித்த சருக்கம்

17. தீர்த்தச் சருக்கம்

18. நளன் கலிமோசனச் சருக்கம்

19. திருவிழாச் சருக்கம்

20. சிதம்பரவுபதேசச் சருக்கம்

என இருபது சருக்கங்களாகும்.

திருப்பூவணப் புராணத்தில், மொத்தம் 1437 பாடல்கள் உள்ளன. இப்பாடல்களை விருத்தப் பாவில் எழுதியுள்ளதாகக் கந்தசாமிப் புலவர். அவையடக்கம் ஐந்தாம் பாடலிலே குறிப்பிட்டுள்ளார்.

*****

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

திருப்பூவணப் புராணம் Copyright © 2015 by மு​னைவர். கி. காளைராசன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book