5

திருவிளையாடற்புராணம் என்பது மதுரையில் வீற்றிருக்கும் சோமசுந்தரக் கடவுள் தன்னுடைய அடியவர்களுக்கு அருள்புரிந்த சிறப்புக்களை எடுத்துக் கூறுவது. திருவிளையாடற்புராணக் கதைகளை புலியூர் நம்பி என்பவரும். பரஞ்சோதி முனிவர் என்பவரும் பாடி யுள்ளனர்.

இப்பகுதியில் திருவிளையாடற் புராணங்களில் திருப்பூவணத் துடன் தொடர்புடைய பகுதிகள் எடுத்துரைக்கப் பெற்றுள்ளன.

திருவிளையாடற்புராணத்தில் 36 வது படலமாகிய இரசவாதம் செய்த படலத்திலும் 49 வது படலமாகிய திருவாலவாயான படலத்திலும் திருப்பூவணம் தொடர்பான செய்திகள் இடம் பெற்றுள்ளன.

இரசவாதம் செய்த படலம்

பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடற் புராணத்தில் முப்பத்தாறாவது படலமாக இரசவாதஞ் செய்த படலம் உள்ளது. இதில் திருப்பூவணத்து இறைவன் திருமேனியைச் செய்திடத் தேவையான தங்கத்தை இரசவாதம் மூலமாகப் பெற்றிடும் முறையை. மதுரை ஈசன் சித்தர் வடிவில் நேரில் வந்து அருளியுள்ளார்.

அன்னமிட்ட கை

முன்பு திருப்பூவணத்தில் பொன்னனையாள் என்ற சிவபக்தை இருந்தாள். இவள் சிறந்த நடன மாது. நாட்டிய இலக்கணப்படித் தினமும் இறைவன் முன் நடனமாடுவது இவளது வழக்கம். தனக்குக் கிடைக்கும் வருமானத்தை எல்லாம் அன்னதானத்திற்குச் செலவு செய்தாள். தினமும் சிவனடியார் பலரும் வந்து உணவருந்திச் செல்வதைக் கண்டு மகிழ்ந்தாள்.

திருத்தர் பூவண வாணரைச் சேவித்துச் சுத்த

நிருத்த மாடிவந் தடியரைப் பொருளென நினையுங்

கருத்த ளாயருச் சித்தவர் களிப்பவனி சுவையூண்

அருத்தி யெஞ்சிய தருந்துவா ளஃதவ ணியமம்

அப்படியிருக்கையில் அவளுக்குத் திருப்பூவணம் கோயிலில் வைத்துப் பூசிப்பதற்கு இறைவனின் திருமேனியைத் தங்கத்தில் செய்து கொடுக்க வேண்டும் என்று பேராவல் பூவணநாதரின் அருளாசியினால் உண்டானது. ஆனால் கிடைக்கும் பொருள் எல்லாம் அன்னதானத் திற்கே செலவானது. தங்கத்திற்கு எங்கே போவது? குலபூடண பாண்டியனுக்கு எடுக்க எடுக்கக் குறையாத பொற்கிழியை வழங்கிய மதுரை சோமசுந்தரக் கடவுளை மனதில் நினைந்து வேண்டினாள்.

சித்தர் வடிவில் சிவபெருமான்

இந்த பக்தையின் விருப்பத்தை அறிந்த மதுரை சோமசுந்தரப் பெருமான். அதனைப் பூர்த்தி செய்ய திருவுள்ளம்கொண்டு சித்தர் வடிவில் திருப்பூவணத்தில். பொன்னனையாள் வீட்டிற்கு எழுந்தருளினார். அன்னதானம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. தாதியர்கள் உணவு உண்ண வாருங்கள் எனச் சித்தரையும் அழைத்தனர். அதற்கு சித்தர் பெருமான். உங்களது தலைவியை இங்கே அழையுங்கள் எனக் கூறினார். பொன்னனையாள் வந்தாள். சித்தரது பாதங்களில் தனது தலை பதியுமாறு பணிந்து உணவு உண்ண அழைத்தாள். அதற்குச் சித்தர். உனது முகம் வாட்டத்துடன் காணப்படுகின்றதேஸ உனது மனக் கவலைதான் என்ன? என்று கேட்டார். பொன்னனையாளும். எங்கள் தலைவனாம் திருப்பூவணத்து இறைவனது திருவுருவினைச் செய்வதற்கு உள்ளத்தில் பெருவிருப்பம் கொண்டு மெழுகினால் கருக்கட்டி வைத்துள்ளேன். அதனைப் பொன்னினால் செய்து முடிக்கக் கருதிய எனக்கு நாள்தோறும் கையில் வரும் பொருள் முழுவதும் அடியார்களுக்கு அன்னம் இடுவதிலேயே செலவாகி விடுகின்றது. நான் என்ன செய்வேன்? என்று தனது கவலையை கூறினாள்.

அதற்குச் சித்தரும். நீ தானத்துள் சிறந்த அன்னதானத்தை நாள்தோறும் செய்து வருகின்றாய். உன் பெயருக்கு ஏற்றவாறு அழிவில்லாத இறைவனின் திருவுருவத்தைத் தங்கத்தினால் செய்யப் பெறுவாயாக என வாழ்த்தினார். பின்னர். அனைத்து உலோகப் பாத்திரங்களையும் கொண்டு வரச்செய்து. திருநீற்றினைத் தூவினார். இவற்றைத் தீயிலிட்டுக் காய்ச்சுங்கள் தங்கம் கிடைக்குமெனக் கூறி அருளினார். பொன்னனையாள் அச்சித்தர் சுவாமியை வணங்கி இன்றைய இரவு இங்கேயே தங்கித் திருவமுது செய்து இரசவாதம் செய்து முடித்தபின்னர் அதிகாலை எழுந்து செல்லலாம் என வேண்டினாள். மீனாட்சி அம்மையைப் பிரியாத சோமசுந்தரரே சித்தர் வடிவில் வந்துள்ளதால் அவர் யாம் மதுரையில் விளங்கும் சித்தராவோம்எனக் கூறி மறைந்தார். சித்தர் கூறிய சொற்களும். மறைந்தருளிய தன்மையையும் கண்ட பொன்னனையாள். வந்தவர் மதுரை வெள்ளியம்பலத்தில் கால்மாறி ஆடியருளும் அம்பலவாணரே எனக் கண்டு பக்தியால் நெகிழ்ந்து. தனது கவலையை இறைவனே நேரில் வந்து நீக்கினார் எனக் களிப்புற்றவளாகிச் சித்தர் கூறியபடியே செய்ய உலோகப் பாத்திரங்களைத் தீயிலிட்டுப் புடம் செய்தனள். ஆணவமலம் கெட்டு இறைவனின் திருவடியை அடைந்தவர் சிவமாக விளங்குதல் போல உலோகங்களின் களிம்பு நீங்கிப் பொன்னாக மாறின. அப்பொன்னைக் கொண்டு இறைவனுக்குத் திருவுருவம் வார்ப்பித்தாள்.

அச்சோ அழகிய பிரனோ இவன்

ிடைத்த தங்கத்தைக் கொண்டு வடிவே இல்லாத இறைவனின் திருவுருவத்தைச் செய்திட்டார். இறைவனின் அழகான திருவுருவத்தைக் கண்டு அச்சோஸ அழகிய பிரனோ இவன்என்று இறைவனின் கன்னத்தைக் கிள்ளி முத்தமிட்டாள். அதனால் இறைவனின் திருமேனியில் தழும்பு உண்டானது. இத் திருவுருவத்தை இன்றும் கோயிலில் தரிசித்திடலாம். பொன்னனையாள் இறைவனின் கன்னத்தைக் கிள்ளுவது போன்ற சிற்பம் கோயில் மகா மண்டபத்தில் உள்ள கல்தூணில் செதுக்கப்பட்டுள்ளது.

பொன்னனையாள் இறைவனின் கன்னத்தைக் கிள்ளி முத்தமிடுதல்

நையுநுண் ணிடையி னாளந் நாயகன் கபோலத் திட்ட

கையுகிர்க் குறியுஞ் சொன்ன காரணக் குறியுங் கொண்டு

வெய்யவெங் கதிர்கால் செம்பொன் மேனிவே றாகிநாலாம்

பொய்யுகத் தவர்க்குத் தக்க பொருந்துரு வாகி மன்னும்

ிருப்பூவணம் கோயில் இறைவனின் திருமேனியைச் செய்திட மதுரை ஈசனே நேரில் சித்தர் வடிவில் வந்து. இரசவாதம் செய்து தங்கம் தயாரித்துக் கொடுத்தது இத்திருத்தலத்தின் தனிச் சிறப்பாகும்.

அழகிய நாயகர் (கன்னத்தில் நகக்குறியுடன் உள்ள இறைவன் திருமேனி)

இறைவனது திருவுள்ளத்தில். அடியவர்களில் அடிமையென்றும் ஆடிப்பிழைப்பவர் என்றும் பேதங்கள் ஏதும் இருப்பதில்லை. இறைவன் மனம் விரும்புவதெல்லாம் அன்பும். தொண்டும் பக்தியும் தான் என்பதை அறியுமாறு கூறப்பட்டுள்ளது. மேலும் சிவனடியார்களுக்கு அன்னதானம் செய்வதால் நமது பாவங்கள் அனைத்தும் ஒழிந்து நமக்கு இறைவன் நேரில் காட்சி தந்து அருளுவான் என்பதும் கூறப்பட்டுள்ளது.

பொன்னனையாள் தங்கத்தினால் ஆன இறைவனது திருவடிவத்தைப் பிரதிட்டை செய்து தேர்த்திருவிழா முதலியன நடத்தி இனிது வாழ்ந்தாள். சிலகாலம் சென்ற பின்னர் வீடுபேறு அடைந்தாள்.

மதுரையில் திருவிளையாடற் புராணக்கதைத் தொடர்பான விழாக்கள் இன்றும் நடைபெற்று வருகின்றன. அவ்வாறாக நடைபெறும்போது இரசவாதம் செய்த படலம் நடைபெறும் நாளில் சோமசுந்தரக் கடவுள் மதுரையிலிருந்து திருப்பூவணத்திற்கு எழுந்தருளி வந்தார். பல ஆண்டுகளுக்கு முன்னர் இவ்வாறு திருப்பூவணம் வந்த சோமசுந்தரக் கடவுளைக் குறிப்பிட்ட நேரத்தில் மீண்டும் மதுரை ஆலயத்திற்குக் கொண்டு சேர்ப்பது முடியாததாகிவிட்டது. இக்காரணத்தினால் அதற்கு அடுத்த ஆண்டுகளில் இத்திருவிளையாடற் தொடர்பான விழாவினை மதுரைக் கோயிலிலேயே வைத்து நடத்தி வருகின்றனர். இப்போது வாகன வசதிகளும். நவீன தொலைத்தொடர்பு வசதிகளும் கூடியுள்ளதால் முன்புபோல் இப்போது காலதாமதம் ஏற்பட வாய்ப்பில்லை. எனவே இரசவாதம் செய்த படலம் தொடர்பான திருவிழாவினை மீண்டும் திருப்பூவணத்தில் நடத்திடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. (பக்கம் 69 பார்க்க)

திருவாலவாயான படலம்

திருப்பூவணத்தில் கோட்டை என்ற பகுதியில் தான் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு தொன்மைக்காலங்களில் உயரமான மதில்களாலான கோட்டை இருந்திருக்கிறது. இதனைப் பொன்மதில் சூழாலயஞ் சேர் பூவணத்தின் வளம் யாவர் புகலற்பாலார்என்று கந்தசாமிப்புலவர் பாடியுள்ளார். இக்கோட்டை தோன்றிய வரலாறு திருவிளையாடற்புராணத்தில் 49 வது படலமான திருவாலவாயான படலத்தில் விரிவாகக் கூறப்படுகிறது.

இப்படலத்தில் நான்மாடக் கூடலான மதுரையைத் திருவாலவாய் ஆக்கிய திருவிளையாடல் கூறப்பட்டுள்ளது. அதுலகீர்த்திப் பாண்டியனுக்கு மகனான கீர்த்தி பூசண பாண்டியன் மதுரையை ஆட்சி செய்யும்போது ஏழுகடல்களும் தமக்குக் காவலாக விளங்கும் கரையைக் கடந்து பொங்கி எழுந்தது. இதனால் எல்லா உலகங்களும் நீரில் மூழ்கின. ஆயினும் மீனாட்சியம்மை திருக்கோயிலின் இந்திரவிமானம். பொற்றாமரைக்குளம் மற்றும் சோமசுந்தரக் கடவுளின் திருவிளையாடலில் தோன்றிய இடபமலை. பசுமலை. யானைமலை. நாகமலை. பன்றிமலை என்பன அழியாது விளங்கின.

ஈசன். பிரளயம் வற்றிய பின்னர் மீண்டும் உலகங்களும் உயிர்களும் உண்டாகுமாறு செய்தார். அப்போது சந்திரனது குலத்தில் பாண்டியர்களைத் தோற்றுவித்தார். அப் பாண்டியவம்சத்தில் வங்கிய சேகர பாண்டியன் தோன்றினான். ஒருசமயம். வங்கிய சேகர பாண்டிய மன்னன் மதுரை மக்களெல்லாம் வசிக்கத்தக்க தகுதியுடையதாக நகரினை உண்டாக்க வேண்டுமென விருப்பமுற்று. மதுரை நகரின் பழைய எல்லைகளை வரையறுத்துத் தரவேண்டும்என இறைவனிடம் வேண்டி நின்றான். மன்னனது விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் பொருட்டு வானில் இருந்து ஒரு விமானத்தில் இறங்கிய சோமசுந்தரக்கடவுள் ஒரு சித்தமூர்த்தியாகி அற அருட்கடலாகித் தோன்றினார். பாம்பினால் அரைஞார்ம் கோவணமும் அணிந்திருந்தார். பிளவுடைய நாக்கையுடைய பாம்பினையும் குழையும் குண்டலமும். காலில் சதங்கை கோர்த்த கயிறும் கை வளையும் உடையவராகத் திகழ்ந்தார். அவ்வாறு வந்த சித்தமூர்த்தியானவர் தனது கையில் கட்டியிருந்த நஞ்சுடைய பாம்பை ஏவி நீ. இம் மன்னனுக்கு மதுரையின் எல்லைகளைக் காட்டு எனக் கட்டளையிட்டார்.

பாம்பு எல்லையைக் காட்டுதல் கண்டவர்களுக்கு அச்சத்தினை உண்டாக்கும் படியான அப்பாம்பும் விரைந்து சென்றது. கிழக்குத் திசையில் திருப்பூவணம் சென்று வாலை நீட்டிப் பெரிய அம்மாநகர்க்கு வலமாக நிலத்தில் படிந்து உடலை வளைத்து. வாலைத் தன் வாயில் வைத்துப் பெரிய வளையமாக்கி அதன் உட்புறப் பகுதியே மதுரை நகரின் பழைய எல்லையென பாண்டிய மன்னனுக்குக் காட்டியது. சித்தமூர்த்தியானவர் தம்முடைய திருக்கோயிலில் எழுந்தருளினார். பாண்டிய மன்னன். பாம்பு வளைத்து எல்லையை வரையறுத்துக் காட்டியபடி மதில் சுவர் உண்டாக்க எண்ணினான்.

கோட்டை வாயில் அமைத்தல் கிழக்கு எல்லைகாட்டிய இடத்தில் மன்னன் இவ் எல்லையின் வாயிலில் சக்கரவாள மலையை அடியோடு தோண்டி எடுத்து வைத்தது போன்று முகில் தவழும்படியான பெரிய மதிலை அமைத்தான். மதுரைக்குக் கிழக்கில் சோலைகள் சூழ்ந்த திருப்பூவண நகரானது எல்லையாக இருக்கும்படி அம்மதில்களை அமைத்தான். அந்த உயரமான. நீண்ட மதிலை ஆலவாய் மதில் என்று கூறுவர். நான்கு பெரிய வாயில்களுக்கும். தெற்கில் திருப்பரங்குன்றமும். வடக்கில் ஆனைமலையும். மேற்கில் திருவேடகமும். கிழக்கில் சோலைகள் சூழ்ந்த பூவண நகரம் எல்லைகளாக இருக்கும்படி அம்மதில்களை அமைத்தான். ஆலத்தை தனது வாயிற் கொண்ட அந்தப் பாம்பு சித்தர் வடிவில் தோன்றிய இறைவனின் பாதங்களை வணங்கி இனி இந்த நகரமானது தன்னுடைய பெயரால் ஆலவாய்என்று விளங்கவேண்டுமென விண்ணப்பஞ் செய்தது. சித்தராய்த் தோன்றிய இறைவனும் அவ்வாறே ஆகுக என்று வரமருளினார். இதனால் மதுரை மாநகரம் திருவாலவாய்என்ற பெயரில் விளங்குவதாயிற்று . பின்னர் அப்பாம்பானது இறைவனுடைய திருக்கரத்தில் கங்கணம் ஆனது. இவ்வாறு திருப்பூவணத்தில் மதுரைமாநகரக் கிழக்கு வாயிலாகக் கோட்டை அமைக்கப்பட்டது. அன்று கோட்டை இருந்த இடமே இன்று பெயரளவில் கோட்டை என்று அழைக்கப்படுகின்ற பகுதியாகும். இதனால் திருப்பூவணம் என்பது மதுரை நகர் புணர்நிர்மானிக்கப்படுவதற்கு முன்பே சிறப்புடன் விளங்கி வந்துள்ளமை ​தெளிவாகிறது. இதனால் திருப்பூவணத்தின் பழைமை நன்கு விளங்கப்பெறுகிறது.

திருவிளையாடற் பயகரமாலை

இரசவாதம் செய்த திருவிளையாடற் புராண வரலாறு. திருவிளையாடற்பயகர மாலையில்.

மணிதிகழ் மாடமலிமது ராபுரி வாழ்சித்தரேந்

துணிவுட னின்னன்பு கேட்டணைந் தோமென்று சொல்லிப் பின்ன

ரணிதிகழ் பூவணப் பொன்னனை யாளுக்கன் றாணிப் பொன்னைப்

பணிவிடைக் கீந்தசொக் கேபர தேசி பயகரனே

என்று பாடப்பெற்றுள்ளது.

கடம்பவன புராணம்

பொன்னனையாளுக்கு அருள் புரிந்த திருவிளையாடல் கடம்பவன புராணத்திலும்

பூவணத்திற் பொன்னனையாள் பதியி லாண்முன்

புனிதனுருக் கும்பிடு வாள் மெழுகு சாத்தி.

மேவணநற் பொருள்பெறாள் சொக்குண டென்று

மிகவருந்துங் காற்சித்த ராச்சென் றாண்டு.

மாவணவல் லிரும்புதரச் சொல்லித் தீயின்

மாட்டென்று பரிசனஞ்செய் தொளிந்தான் றந்து.

பாவணத்தாள் சொலிச் செய்நிறை யுருக்கண்டான்

மெய்ப் பத்தியெழில் கண்டள்ளி முத்தங் கொண்டாள்.”

என்று கூறப்பட்டுள்ளது.

இவ்வாறாக திருப்பூவணத் தலபுராணம். திருவிளையாடற் புராணம். திருவிளையாடற் பயகரமாலை. கடம்பவன புராணம். பெரியபுராணம் ஆகிய புராணங்களில் திருப்பூவணத்திருத் தலத்தின் பெருமைகள் எடுத்துரைக்கப் பெற்றுள்ளன.

*****

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

திருப்பூவணப் புராணம் Copyright © 2015 by மு​னைவர். கி. காளைராசன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book