38
திருப்புகழ் பாடல் எண். 550
தனத்தான தத்தத் தனதானா
தனத்தான தத்தத் தனதானா
அறப்பாவை அத்தற் கருள்பாலா
அளித்தாது வெட்சித் திருமார்பா
குறப்பாவை அற்பிற் புணர்வோனே
குலத்தேவ வர்க்கப் பரிபாலா
மறப்பாத கத்துற் றுழல்வேனோ
மலர்த்தாள்வ ழுத்தக் க்ருபையீவாய்
சிறப்பான முத்திக் கொருவாழ்வே
திருப்பூவ ணத்திற் பெருமாளே
திருப்புகழ் பாடல் எண். 551
தானனதான தானனதான தானனதான தனதான
வானவராதி யோர்சிறைமேவ மாவலியேசெய் திடுசூரன்
மார்பிருகூற தாய்விடவாரி வாய்விடவேலை விடுதீரா
கானவர்பாவை காதலனான காசணிபார தனமார்பா
காலனைமோது காலகபால காளகளேசர் தருபாலா
தேனமர்நீப மாலைவிடாத சேவகஞான முதல்வோனே
தீயகுணாதி பாவிநினாது சேவடிகாண அருள்வாயே
போனகசாலை யாதுலர்வாழ வீதிகடோறும் நனிமேவு
பூவணமான மாநகர்வாழு நாதகுகேச பெருமாளே
(காளகளேசர் ழூ விசத்தைக் கண்டத்திலுடையவர்
போனகம் ழூ அன்னம்)
திருப்புகழ் பாடல் எண். 552
தந்தத்தத் தானன தானன
தந்தத்தத் தானன தானன
தந்தத்தத் தானன தானன தனதானா
பந்தப்பொற் பாரப யோதர
முந்தச்சிற் றாடைசெய் மேகலை
பண்புற்றுத் தாளொடு வீசிய துகிலோடே
பண்டைச்சிற் சேறியில் வீதியில்
கண்டிச்சித் தாரொடு மேவிடு
பங்குக்கைக் காசுகொள் வேசையர் பனிநீர்தோய்
கொந்துச்சிப் பூவணி தோகையர்
கந்தக்கைத் தாமரை யாலடி
கும்பிட்டுப் பாடிசை வீணையர் அநுராகங்
கொண்டுற்றுப் பாயலின் மூழ்கிய
சண்டிச்சிச் சீயென வாழ்துயர்
குன்றப்பொற் பாதக்ரு பாநிதி அருள்வாயே
அந்தத்துக் காதியு மாகியு
மந்திக்குட் டானவ னானவ
னண்டத்தப் பாலுற மாமணி ஒளிவீசும்
அங்கத்தைப் பாவைசெய் தேயுயர்
சங்கத்திற் றேர்தமி ழோதிட
அண்டிக்கிட் டார்கழு வேறினர் ஒருகோடி
சந்தத்திக் காளுநி சாசரர்
வெந்துட்கத் தூளிப டாமெழ
சண்டைச்சொற் றார்பட வேவயில் விடுவோனே
தங்கச்சக் ராயுதர் வானவர்
வந்திக்கப் பேரரு ளேதிகழ்
தம்பப்பொற் பூவண மேவிய பெருமாளே
*****