6

திருமுறைத் திரட்டுக்களான மூவர்தேவாரம். திருவாசகம். திருவிசைப்பா போன்ற பக்தி இலக்கியங்களிலும். திருப்புகழிலும் திருப்பூவணத்து இறைவன் சிறப்பித்துப் பாடப் பெற்றுள்ளார்.

தேவாரத்தில் திருப்பூவணம்

சைவத்தையும் தமிழையும் தழைக்கச் செய்தவர்கள் சமயகுரவர் நால்வராவர். இவர்கள் முறையே திருஞானசம்பந்தர். திருநாவுக்கரசர். சுந்தரர். மாணிக்கவாசகர் எனத் திருக்கோயில்களில் வரிசைப் படுத்தப்பட்டுள்ளனர். இவர்களது சிறப்புக்களையும். இவர்கள் திருப்பூவணநாதரை வணங்கிய வரலாற்றையும். இவர்களது பாடல்களில் காணப்படும் திருப்பூவணத் திருத்தலத்தின் அழகையும். பூவணநாதரின் அருளையு[ம் தொகுத்து விளக்கும் முயற்சி மேற்கொள்ளப்பெற்றுள்ளது.

இந் நால்வருள். திருஞானசம்பந்தர். திருநாவுக்கரசர் மற்றும் சுந்தரர் ஆகிய மூவரும் இறைவனை வணங்கிப் பாடிய பாடல்கள் தேவாரத் திரட்டாக உள்ளன.

தேவாரத்தில் இடம் பெற்றுள்ள பாண்டிய நாட்டுத் திருத்தலங்கள் பதினான்கு ஆகும். தேவாரம் பாடிய சமயகுரவர்களும் வைகை ஆற்றின் வடகரையிலிருந்தே தென்கரையில் உள்ள திருப்பூவண நாதரை வணங்கி வழிபட்டுள்ளனர் என்று புட்பவனநாதர் வண்ணம்என்ற நூலில் கந்தசாமிப் புலவர் கூறுகிறார்.

செப்பு மூவர்சொல் தமிழ்த்துதிக்க விருப்பமொடுவந்து வையை

மணற்சிவ லிங்கமென மனத்தோணி முன்பு வடகரைக்கவர்

நின்று தமிழ்பாடு பொழுதேயிடப மாமுதுகு சாயும்வகையே

செய்துமுன் மூவர் தரிசிக்க மகிழ்நேசர்.

-(புட்பவனநாதர் வண்ணம்)

திருஞானசம்பந்தர்

சமயகுரவர்களுள் முதல்வராகிய இவ்வருளாளர் சோழநாட்டில் சீர்காழியில் சிவபாத இருதயருக்கு மகனாக அவதரித்தார். தமது மூன்றாவது வயதில் தோடுடைய செவியன்என்னும் திருப்பதிகம் பாடித் தமக்குப் பால் கொடுத்தருளிய அம்மையையும் அப்பனையும் சுட்டிக் காட்டினார். அதுமுதல் பல திருத்தலங்களுக்கும் சென்று பதிகம் பாடிப்பரவிப் பல அருட்செயல்கள் புரிந்து சைவத்தைத் தழைக்கச் செய்தார்.

திருஞானசம்பந்தர் திருப்புத்தூரில் ஈசனை வழிபட்டுத் திருப்பூவணத்து வைகையாற்றின் வடகரையை வந்தடைந்தார். ஆற்றினைக் கடக்க எத்தனித்த போது ஆற்றின் மணல்களெல்லாம் சிவலிங்கங்களாகக் காட்சியளித்துள்ளன.

திருஞானசம்பந்தர் நின்று பாடிய இடத்தில் உள்ள ஆடித்தபசு மண்டபம் (கி.பி. 2005ல் எடுக்கப்பட்ட பழைய படம்) இந்நூலாசிரியரது முயற்சியால். அருளாளர்கள் சிலரது உதவியுடன் இம்மண்டபம் புனர்நிர்மாணம் செய்யப்பட்டுவருகிறது. (செப்டம்பர் 2008ல் எடுக்கப்பட்ட படம்)

எனவே திருஞானசம்பந்தர் ஆற்றின் அக்கரையிலிருந்தே மறுகரையில் உள்ள திருப்பூவணநாதரைப் பதிகம் பாடிப் பணிந்து வணங்கினார். திருஞானசம்பந்தருக்குக் காட்சியளிக்க விரும்பிய ஈசன் நந்தியை மறைக்காமல் இருக்கும்படிக் கட்டளையிட்டார். நந்தி வலதுபுறமாகச் சற்று சாய்ந்துகொள்ள ஞானசம்பந்தர் இறைவனைத் தரிசித்து வழிபட்டார். இதனால் திருப்பூவணம் கோயிலில் நந்தி மறைப்பதில்லை. வைகை ஆற்றின் தென்கரையில் இருந்து திருஞானசம்பந்தர் வழிபட்ட இடத்தை ஆடித்தபசு மண்டபம் என்று அழைக்கின்றனர். இப்போதும் இம்மண்டபத்திலிருந்து திருப்பூவணநாதரை வழிபடலாம். நந்தி மறைக்காது.

ஈசனை மறைக்காமல் வலதுபுறம் சாய்ந்திருக்கும்நந்திதேவர்

திருஞானசம்பந்தர் திருப்பூவணம் மீது இருபத்திரண்டு பாடல்கள் இயற்றியுள்ளார். இவர் இயற்றிய முதல் பதினொரு பாடல்களும் ஒன்றாம் திருமுறையில் தொகுக்கப் பட்டுள்ளன. இப்பாடல்கள் தென்றிருப்பூவணமேஎன்று முடியுமாறு பாடப் பெற்றுள்ளன. அடுத்த பதினொரு பாடல்களும் மூன்றாம் திருமுறையில் தொகுக்கப் பட்டுள்ளன. இப்பதிகத்தில் உள்ள பாடல்களில் ஐந்து பாடல்கள் அடிதொழ நன்மை யாகுமேஎன்று முடியுமாறு பாடப் பெற்றுள்ளன.

ஒன்றாம் திருமுறையில் உள்ள முதல் பத்துப் பாடல்களில் தென்திருப்பூவணமேஎன்று முடியும்படிப் பாடப்பட்டுள்ளன. எனவே. இப்பாடல்கள் ஆற்றின் மறுகரையில் இருந்து பாடப் பெற்றிருக்க வேண்டும். மேலும் மூன்றாம் திருமுறையில் உள்ள பாடல்களில் அடிதொழ நன்மை யாகுமேஎன்றும் அடிதொழப் பீடை இல்லையேஎன்றும் பூவண நாதரின் திருவடியைப் பாடியுள் ளதால். இப்பாடல்கள் அனைத்தும் திருப்பூவணம் திருக்கோயிலில் பாடப் பெற்றிருக்கவேண்டும்.

*****

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

திருப்பூவணப் புராணம் Copyright © 2015 by மு​னைவர். கி. காளைராசன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book