39

36. இரசவாதஞ் செய்த படலம்

(கலி நிலைத்துறை)

திருப்பூவணத் தலத்தின் பெருமை

1856 வரதன் மீனவன் படையிடை வந்துநீர்ப் பந்தர்

விரத னாகிநீ ரருத்திய வினையுரை செய்தும்

பரத நூலிய னாடகப் பாவையா ளொருத்திக்

கிரத வாதஞ்செய் தருளிய வாடலை யிசைப்பாம்.

1857 பருங்கை மால்வரைப் பூழியன் பைந்தமிழ் நாட்டின்

இரங்கு தெண்டிரைக் கரங்களா லீர்ம்புனல் வையை

மருங்கின னந்தன மலர்ந்தபன் மலர்க?ய்ப் பணியப்

புரங்க டந்தவ னிருப்பது பூவண நகரம்

1858 எண்ணி லங்குறை சராசர மிலிங்கமென் றெண்ணி

விண்ணி னாள்களும் கோள்களும் விலங்குவ தியாக்கைக்

கண்ணி னான்கதிர் முதற்பல கடவுளர் பூசை

பண்ணி வேண்டிய நல்வர மடைந்ததப் பதியில்

பொன்னனையாளின் தன்மை

1859 கிளியு ளார்பொழிற் பூவணக் கிழவர்தங் கோயில்

றளியு ளார்தவப் பேறனா டாதுகு பூந்தார்

அளியு ளார்குழ லணங்கனா ளந்தரத் தவர்க்குங்

களியு ளார்தர மயக்குறூஉங் கடலமு தனையாள்

1860 நரம்பி னேழிசை யாழிசைப் பாடலு நடநூல்

நிரம்பு மாடலும் பெண்ணல நீர்மையும் பிறவும்

அரம்பை மாதரை யொத்தன ளறனெறி யொழுகும்

வரம்பி னாலவர் தமக்குமே லாயினாண் மன்னோ

1861 ஆய மாதர்பேர் பொன்னனை யாளென்ப வவடன்

நேய வாயமோ டிரவிரு ணீங்குமு னெழுந்து

தூய நீர்குடைந் துயிர்புரை சுடர்மதிக் கண்ணி

நாய னாரடி யருச்சனை நியமமு நடாத்தி

1862 திருத்தர் பூவண வாணவரைச் சேவித்துச் சுத்த

நிருத்த மாடிவந் தடியரைப் பொருளென நினையுங்

கருத்த ளாயருச் சித்தவர் களிப்பவின் சுவையூண்

அருத்தி யெஞ்சிய தருந்துவா ளமூதவ ணியமம்

1863 மாத ரிந்நெறி வழங்குநாண் மற்றவ ளன்பைப்

பூத லத்திடைத் தெருட்டுவான் பொன்மலை வல்லி

காத னாயகன் றிருவுருக் காணிய வுள்ளத்

தாத ரங்கொடுத் தருளினார் பூவணத் தையர்

1864 ஐயர் தந்தபே ரன்புரு வாயினாண் மழுமான்

கையர் தந்திரு வுருவினைக் கருவினாற் கண்டு

மைய கண்ணினாள் வைகலும் வருபொரு ளெல்லாம்

பொய்யி லன்புகொண் டன்பர்தம் பூசையி னேர்வாள்

1865 அடியர் பூசனைக் கன்றியெஞ் சாமையா லடிகள்

வடிவு காண்பதெப் படியென்று மடியிலச் செழியற்

கொடிவில் பொற்கிழி நல்கிய வள்ளலை யுன்னிப்

பிடிய னாளிருந் தாளமூ தறிந்தனன் பெருமான்

சிவபெருமான் சித்தர் வடிவம் கொண்டு வருதல்

1866 துய்ய நீறணி மெய்யினர் கட்டங்கந் தொட்ட

கையர் யோகபட் டத்திடைக் கட்டினர் பூதிப்

பையர் கோவண மிசையசை யுடையினர் பவளச்

செய்ய வேணிய ரங்கொரு சித்தராய் வருவார்

1867 வந்து பொன்னனை யாண்மணி மாளிகை குறுகி

அந்த மின்றிவந் தமுதுசெய் வாரொடு மர்கிச்

சிந்தை வேறுகொண் டடைந்தவர் திருவமு தருந்தா

துந்து மாளிகைப் புறங்கடை யொருசிறை யிருந்தார்

1868 அமுது செய்தருந் தவரெல்லா மகலவே றிருந்த

அமுத வாரியை யடிபணிந் தடிச்சிய ரைய

அமுது செய்வதற் குள்ளெழுந் தருள்கென வுங்கள்

அமுத னாளையிங் கழைமினென் றருளலு மனையார்

1869 முத்த ராமுகிழ் வாணகை யல்குலாய் முக்கண்

அத்த ரானவர் தமரெலா மமுசெய் தகன்றார்

சித்த ராயொரு தம்பிரான் சிறுநகை யினராய்

இத்த ராதலத் தரியரா யிருக்கின்றா ரென்றார்

சித்தமூர்த்தி பொன்னனையாளை மெலிந்த காரணம் யாதெனல்

1870 நவம ணிக்கலன் பூத்தபூங் கொம்பரி னடந்து

துவரி தழ்க்கனி வாயினாள் சுவாகதங் கிலாவன்

றுவமை யற்றவர்க் கருக்கிய மாசன முதவிப்

பவம கற்றிய வடிமலர் முடியுறப் பணிந்தாள்

1871 எத்த வஞ்செய்தே னிங்கெழுந் தருளுதற் கென்னாச்

சித்தர் மேனியும் படிவெழிற் செல்வமு நோக்கி

முத்த வாணகை யரும்பநின் றஞ்சலி முகிழ்ப்ப

அத்தர் நோக்கினா ரருட்கணா லருள்வலைப் பட்டாள்

1872 ஐய உள்ளெழுந் தருளுக வடிகணீர் ரடியேன்

உய்ய வேண்டிய பணிதிரு வுளத்தினுக் கிசையச்

செய்ய வல்லனென் றஞ்சலி செய்யவுண் ணகையா

மைய னோக்கியை நோக்கிமீ னோக்கிதன் மணாளன்

1873 வடியை நேர்விழி யாய்பெரு வனப்பினை சிறிதுன்

கொடியை நேரிடை யெனவிளைத் தனையெனக் கொன்றை

முடியி னானடி யாரமென் முகிழ்முலைக் கொடிதாழ்ந்

தடிய னேற்குவே றாயொரு மெலிவிலை யையா

1874 எங்க ணாயகர் திருவுருக் காண்பதற் கிதயந்

தங்கு மாசையாற் கருவுருச் சமைத்தனன் முடிப்பேற்கு

கிங்கு நாடொறு மென்கையில் வரும்பொரு ளெல்லாம்

உங்கள் பூசைக்கே யல்லதை யொழிந்தில வென்றாள்

சித்த மூர்த்திகள் சிவனடியார் பெருமை கூறல்

1875 அருந்து நல்லமு தனையவ ளன்புதித் திக்கத்

திருந்து தேனென விரங்குசொற் செவிமடுத் தையர்

முருந்து மூரலாய் செல்வமெய் யிளமைநீர் மொக்குள்

இருந்த வெல்லையு நிலையில வென்பது துணிந்தாய்

1876 அதிக நல்லற நிற்பதென் றறிந்தனை யறத்துள்

அதிக மாஞ்சிவ புண்ணியஞ் சிவார்ச்சனை யவற்றுள்

அதிக மாஞ்சிவ பூசையு ளடியவர் பூசை

அதிக மென்றறிந் தன்பரை யருச்சனை செய்வாய்

1877 உறுதி யெய்தினை யிருமையு முன்பெயர்க் கேற்ப

இறுதி யில்லவன் றிருவுரு வீகையாற் காணப்

பெறுதி யாகநின் மனைக்கிடைப் பித்தளை யீயம்

அறுதி யானபல் கலன்களுங் கொணர்தியென் றறைந்தார்

1878 ஈயஞ் செம்பிரும் பிரசிதங் மென்பவும் புணர்ப்பாற்

றோயம் பித்தளை வெண்கலந் தராமுதற் றொடக்கத்

தாயும் பல்வகை யுலோகமுங் கல்லென வலம்பத்

தேயுஞ் சிற்றிடை கொண்டுபோய்ச் சித்தர்முன் வைத்தாள்

சித்தமூர்த்திகள் இரசவாதம் புரிதல்

1879 வைத்த வேறுவே றுலோகமு மழுவுழை கரந்த

சித்த சாமிக ணீற்றினைச் சிதறினர் பாவித்

தித்தை நீயிரா வெரியிலிட் டெடுக்கினன் பொன்னாம்

அத்தை நாயகன் றிருவுருக் கொள்கென வறைந்தார்

1880 மங்கை பாகரை மடந்தையு மிங்குநீர் வதிந்து

கங்குல் வாயமு தருந்தியிக் காரிய முடித்துப்

பொங்கு காரிருள் புலருமுன் போமெனப் புகன்றாள்

அங்க யற்கணா டனைப்பிரி யாரதற் கிசையார்

1881 சிறந்த மாடநீண் மதுரையிற் சித்தர்யா மென்று

மறைந்து போயினார் மறைந்தபின் சித்தராய் வந்தார்

அறைந்த வார்கழ லலம்பிட வெள்ளிமன் றாடி

நிறைந்த பேரொளி யாயுறை நிருத்தரென்று அறிந்தாள்

பொன்னனையாள் உலோகங்களைத் தீயிலிட்டுப் பொன்னாதல்

1882 மறைந்து போயினா ரெனச்சிறி தயர்ச்சியு மனத்தில்

நிறைந்த தோர்பெருங் கவற்சியை நீக்கினா ரென்னச்

சிறந்த தோர்பெரு மகிழ்ச்சியு முடையளாய்ச் சித்தர்

அறைந்த வாறுதீப் பெய்தன ளுலோகங்க ளனைத்தும்

1883 அழல டைந்தபி னிருண்மல வலிதிரிந் தரன்றாள்

நிழல டைந்தவர் காட்சிபோ னீப்பருங் களங்கங்

கழல வாடக மானதா லதுகொண்டு கனிந்த

மழலை யீர்ஞ்சொலாள் கண்டனள் வடிவிலான் வடிவம்

(அறுசீரடி ஆசிரிய விருத்தம்)

1884 மழவிடை யுடையான் மேனி வனப்பினை நோக்கி யச்சோ

அழகிய பிரானோ வென்னா வள்ளிமுத் தங்கொண் டன்பிற்

பழகிய பிரானை யானாப் பரிவினாற் பதிட்டை செய்து

விழவுதேர் நடாத்திச் சின்னாள் கழிந்தபின் வீடு பெற்றாள்

1885 நையநு[ண் ணிடையி னாளந் நாயகன் கபோலத் திட்ட

கையுகிர்க் குறியுஞ் சொன்ன காரணக் குறியுங் கொண்டு

வெய்யவெங் கதிர்கால் செம்பொன் மேனிவே றாகி நாலாம்

பொய்யுகத் தவர்க்குத் தக்க பொருந்துரு வாகி மன்னும்

இரசவாதம் செய்த படலம் முற்றிற்று.

49.திருவாலவாய்க் காண்டம்

(வங்கிய சேகர மன்னனுக்கு மதுரையின் எல்லைகளைக் காட்டுதல்)

சித்தரை மன்னன் பணிந்து வேண்டுதல்

2338 கறையணி கண்டனைத் தாழ்ந்து கைதொழு

திறையவ நின்னருள் வலியி னிந்நிலப்

பொறையது வாற்றுவேற்கு ஈண்டிப் போதொரு

குறையதுண் டாயினது என்று கூறுவான்

2339 இத்தனை மாக்களும் இருக்கத் தக்கதாப்

பத்தனங் காணவிப் பதிக்க ணாதியே

வைத்தறை செய்திடும் வரம்பு காண்கிலேன்

அத்தமற் றதனையின் றறியக் காட்டென்றான்

2340 நுண்ணிய பொருளினு நுண்ணி தாயவர்

விண்ணிழி விமானநின் றெழுந்து மீனவன்

திண்ணிய வன்பினுக் ​கெளி சித்தராய்ப்

புண்ணிய அருட்கடல் ஆகிப் போதுவார்

சித்தர் வடிவில் சிவபெருமான் அருள் செய்தல்

2341 பாம்பி னாற்கடி சூத்திரங் கோவணம் பசுந்தாட்

பாம்பி னாற்புரி நூல்சன்ன வீரம்வெம் பகுவாய்ப்

பாம்பி னாற்குழை குண்டலம் பாதகிண் கிணிநாண்

பாம்பி னாற்கர கங்கணம் பரிந்தனர் வந்தார்

2342 வந்த யோகர்மா மண்டப மருங்குநின் றங்கைப்

பந்த வாலவா யரவினைப் பார்த்துநீ யிவனுக்

கிந்த மாநக ரெல்லையை யளந்துகாட்டு என்றார்

அந்த வாளரா வடிபணிந் தடிகளை வேண்டும்

2343 பெரும விந்நகர் அடியனேன் பெயரினால் விளங்கக்

கருணை செய்தியென் றிரந்திடக் கருணையங் கடலும்

அருண யந்துநேர்ந்து அனையதே யாகெனப் பணித்தான்

உருகெ ழுஞ்சின வுரகமும் ஒல்லெனச் செல்லா

பாம்பு எல்லையைக் காட்டுதல்

2344 கீட்டி சைத்தலைச் சென்றுதன் கேழ்கிளர் வாலை

நீட்டி மாநகர் வலம்பட நிலம்படிந் துடலைக்

கோட்டி வாலைவாய் வைத்துவேற் கொற்றவற்கு எல்லை

காட்டி மீண்டரன் கங்கண் மானது கரத்தில்

மதில் அமைத்தல்

2345 சித்தர் தஞ்சின கரத்தெழுந் தருளினார் செழியன்

பைத்த வாலவாய் கோலிய படிசுவர் எடுத்துச்

சுத்த நேமிமால் வரையினைத் தொட்டகழ்ந் தெடுத்து

வைத்த தாமென வகுத்தனன் மஞ்சுசூ ழிஞ்சி

2346 தென்றி சைப்பரங் குன்றமும் வடதிசை இடபக்

குன்ற முங்குடக்கு ஏடக நகரமுங் குணபாற்

பொன்ற லங்கிழித் தெழுபொழிற் பூவண நகரும்

என்ற நாற்பெரு வாயில்கட்கு எல்லையா வகுத்தான்

2347 அனைய நீண்மதில் ஆலவாய் மதிலென அறைவர்

நனைய வார்பொழில் நகரமு மாலவாய் நாமம்

புனைய லாயதெப் போதுமப் பொன்னகர் தன்னைக்

கனைய வார்கழற் காலினான் பண்டுபோற் கண்டான்

2348 கொடிகள் நீண்மதின் மண்டபங் கோபுரம் வீதி

கடிகொள் பூம்பொழில் இன்னவும் புதியவாக் கண்டு

நெடிய கோளகை கிரீடம்வா ணிழன்மணி யாற்செய்

தடிகள் சாத்திய கலன்களும் வேறுவே றமைத்தான்

2349 பல்வ கைப்பெருங் குடிகளின் பரப்பெலா நிரப்பிச்

செல்வ வானவர் புரந்தரன் புரத்தினுஞ் சிறப்ப

மல்லல் மாநகர் பெருவளந் துளும்பிட வளர்த்தான்

தொல்லை நாட்குல சேகரன் போல்வரு தோன்றல்

திருவாலவாயான படலம் முற்றிற்று.

திருவிளையாடற் புராணம். கழுவேறிய திருவிளையாடல்

வேசமுற விருந்த கழு திரைமுடிந்த வடமின்றும்

பூசுரர்கள் பணிந்தேத்தும் பூவணநன்னகர் மருங்கிற்

காசின் மேல் விளங்கியது கழுவர் படைவீடெனவே

செல்லிநகர்ப் பெரும்பற்றப் புலியூர் நம்பி. திருவாலவாயுடையார் பாடல் எண்.50

இத்தலத்தைப் பற்றி வேறு தலங்களில் வழங்கும் தேவாரப் பாடல்கள்

பூவண மேவும் பூவண நாதர்

பூவண நாயகி புந்திகூர் வைகை (சிவ.)

பூவணமும் புறம்பயமும் பொருந்தினானை

ஆலம் பொழில் . திரு நா.

பூவணத்தவன் புண்ணியன் குடமூக்கு திருநா.

பூவணமோ புறம்பயமோ வன்றாயிற்றால் ஆரூர். திருநா.

புகலூரும் பூவணமும் பொருந்தினான்காண் ஆருர். திருநா.

பூவணமும் வலஞ்சுழியும் பொருந்தினானை வெண்ணியூர். திருநா.

புகலூரும் பூவணமும் பொருந்தினாரும் வெண்ணியூர். திருநா.

திருச்செம்பொன்பள்ளி திருப்பூவணம் அதிகை. திருநா

புத்தூருறையும் புனிதனைப் பூவணத் தெம் போரேற்றை பொது. திருநா

புறம்பயம் பூவணம் பொய்கை நல்லூர் பொது. திருநா

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

திருப்பூவணப் புராணம் Copyright © 2015 by மு​னைவர். கி. காளைராசன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book