உ
திருச்சிற்றம்பலம்
என் உரை
அழகப்பா பல்கலைக்கழகம் 1985ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட போது, பல்கலைக் கழகத்தில் முதன் முதலாகப் பணிநியமனம் செய்யப்பட்டவர்களில் நானும் ஒருவன், பல்கலைக்கழகத்தில் 1999ம் ஆண்டு தேர்வுப் பிரிவில் பணியாற்றி வந்தபோது “திசை தெய்வங்களைத் தொழும் திருவள்ளுவர்“, “குறலிலும் சோதிடம்” என்ற தலைப்புகளில் கட்டுரைகளை எழுதினேன். அக்கட்டுரைகளை அப்போது காரைக்குடி ராமசாமி தமிழ்க்கல்லூரி முதவராகப் பணியாற்றி வந்த முருகசாமி ஐயா அவர்களிடம் காண்பித்தேன். அவர்கள் என்னைப் பெரிதும் உற்சாகப் படுத்தி அவற்றை இதழ்களில் வெளியிடுமாறு அறிவுறுத்தினார்கள். இதனால் “வள்ளுவரும் வாஸ்துவும்” என்ற எனது கட்டுரை 2000ம் ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில், முதன் முதலாகத் தினபூமி – ஞாயிறு வார இதழில் வெளியாகியது. கல்வியாளர்கள் மத்தியில் அக்கட்டுரைக்கு நல்ல வரவேற்பு இருந்தது. திருக்குறளின் அதிகார அமைப்பு முறைக்கு யாரும் மறுக்கமுடியாத அளவிற்கு விளக்கம் அளித்ததற்காக அனைவரும் என்னைப் பாராட்டினார்கள். அவ்வாறு பாராட்டியவர்களுள் முனைவர் இரா. பாலசுப்பிரமணியன் ஆவர்கள் குறிப்பிடத்தக்கவர். அவர் என்னிடம் ஒருமுறை “நீங்கள் கட்டுரைகள் எழுதினால் மட்டும் சிறப்புடையது ஆகாது, கல்வித் தகுதியையும் வளர்த்துக் கொள்ளுங்கள்” என்று அறிவுரை வழங்கினார். அவரது அறிவுரையை ஏற்று அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்முதுகலை (M.A. தமிழ்) பயின்றேன்.
பின்னர் அழகப்பா பல்கலைக்கழகத்தில் ஆய்வியல் நிறைஞர் (M.Phil.)பயின்றேன். அப்பாடத்திட்டத்தின் ஒருபகுதியாகத் திருப்பூவணம் திருக்கோயில் பற்றிய ஆய்வினை மேற்கொண்டேன். ஆய்வு தொடர்பாகத் திருமுறைகளையும் மற்றும் பல ஆன்மிக நூல்கனையும் கற்றேன். திருப்பூவணம் தொடர்பான அனைத்து நூல்களையும் சேகரித்துப் படித்தும், திருக்கோயில் அமைப்பை பலவராக ஆராய்ந்தும் எனது ஆய்வினை நிறைவு செய்தேன்.
எனது ஆய்வியல் நிறைஞர் ஆய்வு தொடர்பாகத் திருப்பூவணப் புராணப் புத்தகத்தைத் தேடி அலைந்தேன். எங்குதேடியும் யாரிடம் கேட்டும் கிடைக்கவில்லை. இறுதியாகக் காரைக்குடி ராமசாமி தமிழ்க்கல்லூரியின் அப்போதைய முதல்வர் உயர்திரு. முருகசாமி ஐயா அவர்கள் திருப்பூவணப் புராணப் புத்தகம் ஒன்றைக் கொடுத்து உதவினார்கள். உடனே திருப்பூவணம் சென்று திருப்பூவணநாதரின் திருக்கண் பார்வைக்குப் புத்தகத்தைக் காண்பித்து ஆசி பெற்றேன். புத்தகம் அச்சிடப் பெற்று 100 வருடங்களுக்கும் மேலானதால், தொட்டால் காகிதம் ஒடிந்து விடும் நிலையில் இருந்தது. மிகவும் சிரமம் மேற்கொண்டு புத்தகத்திற்கு எவ்விதமான பாதிப்பும் ஏற்படாமல் நகல் எடுத்துக் கொண்டு மூலப்புத்தகத்தை ஐயா அவர்களிடம் நன்றியுடன் திரும்பக் கொடுத்தேன். ஐயா அவர்கள் செய்த உதவிக்குத் திருப்பூவண மக்கள் அனைவரும் மற்றும் ஆன்மிக அன்பர்கள் அனைவரும் நன்றி உடையோர்களே. புத்தக நகலைக் கொண்டு மீண்டும் புத்தகத்தைப் பதிப்பித்து வெளியிட வேண்டும் என்ற நோக்கில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கணினியின் உதவி கொண்டு தட்டச்சு செய்து வந்தேன். தற்போது புத்தகம் முழுமையடைந்துள்ளது. புத்தகத்தைப் பதிப்பித்து வெளியிடத் திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் நிதியுதவியும் கிடைத்துள்ளது.
எனது தந்தையார் மானாமதுரைத் தாலுகா மாரநாடு கிராமத்தைச் சேர்ந்த நா.ரா.கிருஷ்ணன் அம்பலம் அவர்கள் காவல்துறையில் காவலராகத் (Police Constable) திருப்பூவணத்தில் 1969-74ம் ஆண்டுகளில் பணியாற்றினார். அப்போது நான் திருப்பூவணம் பள்ளியில் பயிலும் காலத்தில் திருக்கோயிலுக்குச் சென்று வழிபடும் பேறு கிடைக்கப் பெற்றுள்ளேன். கடைநிலையிலிருந்த என்னை, கோயில் தொடர்பான நூல்கள் எழுதும் நிலைக்கு உயர்த்திய திருப்பூவணநாதரின் திருவருளை எங்ஙனம் நான் எடுத்துரைப்பது! திருப்பூவணநாதரின் திருவருளால் சுமார் 16 கட்டுரைகளுக்கும் மேலாக எழுதி வெளியிடும் பெருமை கிடைக்கப் பெற்றுள்ளேன்.
முனிவர்கள் ஓதிய புராணத்தைத் தமிழில் 388 ஆண்டுகளுக்கு முன்னர் கந்தசாமிப் புலவர் பாடிய இப்புராணப் பாடல்களின் ஒவ்வொரு எழுத்தையும் தட்டச்சு செய்து பிழைத்திருத்தம் பார்த்து அச்சிட்டு வெளியிடும் பெரும்பேறு கிடைக்கப் பெற்றுள்ளேன். இந்நூலில் பிழைகள் ஏதுமிருந்தால் அவற்றைப் “பிழை பொருத்தருளும் பூவணநாதர்” போல், பொறுத்தருளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். மேலும், அறியப்படும் குறைகளை எனக்குத் தெரிவித்துத் திருத்திக் கொள்ள உதவிடுமாறு அன்புடன் வேண்டுகிறேன். இந்நூலை அகம் மகிழ்ந்து வாசிப்போர் அனைவரும், திருப்பூவணநாதரின் திருவருளால், அவர்களது உயர்ந்த உள்ளம் போல உயர்வான வாழ்வு பெற்று வளமுடன் வாழ்ந்திட திருப்பூவணநாதரின் திருவடி அருளை நினைந்து வாழ்த்துகிறேன்.
திருச்சிற்றம்பலம்
அன்புடன்
கி. காளைராசன்