வாழ்த்துரை
அழகப்பா பல்கலைக்கழகம் 1985ம் ஆண்டு மே மாதம் ஒன்பதாம் நாள், தமிழ், கணிதம், இயற்பியல், வணிகம் ஆகிய நான்கு முதுகலைத் துறைகளையும் கல்வியியல் கல்லூரி மற்றும் உடற்பயிற்சிக் கல்லூரி ஆகியவற்றையும் ஒன்றிணைத்துத் தோற்றுவிக்கப் பெற்றது, 1986ம் ஆண்டு தமிழ்த்துறைக்கான புதிய பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டபோது அதில் கோயிற்கலையும் ஓர் பாடமாகச் சேர்க்கப்பட்டது, இதனால் அழகப்பா பல்கலைக்கழகத் தமிழ்த்துறை மாணவர்கள், தமிழகத் திருக்கோயில்கள் பலவற்றையும் ஆய்வு செய்து பட்டங்கள் பெற்றுள்ளனர். அவ்வகையில். திருகி. காளைராசன் அவர்கள், திருப்பூவணத் திருக்கோயிலை ஆய்வு செய்து. ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றுள்ளார். அதன் தொடர்ச்சியாகத் திருப்பூவணப் புராணம்–ஓர் ஆய்வு என்ற தலைப்பில் தற்போது முனைவர் பட்டத்திற்காக ஆய்வு செய்துள்ளார்.
தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் தலைமையிலான தமிழக அரசின் முயற்சியால், தமிழ்மொழி. தனிச்செம்மொழியாக அறிவிக்கப் பெற்றுள்ளது, இத்தகைய தருணத்தில். கி.பி.1620ம் ஆண்டு, 1437 பாடல்களால் எழுதப்பெற்ற திருப்பூவணப் புராணத்தை ஆய்வு செய்துள்ளது மிகவும் சிறப்பிற்கு உரியது. முனைவர் பட்ட ஆய்வுடன் இவர் தனது பணியை நிறுத்திக் கொள்ளாமல் ஆய்விற்கான மூலநூற் பிரதி அழிந்துவரும் நிலையில், மக்கள் அனைவரும் பயனுறும் வகையில் திருப்பூவணப் புராணத்தை நூலாகப் பதிப்பித்து வெளியிடுவது மிகவும் பாராட்டிற்கு உரியது.
அழகப்பா பல்கலைக்கழகத்தின் ஆய்வினால் திருப்பூவணப் பகுதி மக்களும் மற்றும் ஆன்மிக அன்பர்களும் நிறைந்த பயனடைவர் என்பது திண்ணம். இவரது நூல் வெளியீடுகள் பல்கலைக்கழகத்திற்குப் பெருமை சேர்த்துள்ளன. ஆய்வாளர் திரு.கி.காளைராசன் அவர்கள் அலுவலகப் பணியினிடையே ஆன்மிகப் பணியையும் ஆற்றிவருவது மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது. இவர் தனது நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து எழுத வேண்டும் என்று எனது விருப்பத்தினைத் தெரிவித்து, திரு.கி.காளைராசன் அவர்கள் மென்மேலும் பல ஆன்மிக நூல்களை எழுத எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.