11

அறிவை வளர்க்கும் ஆலயங்கள் என நூலகங்களை அழைக்கின்றனர். இந்தியாவின் தேசிய நூலகம் (National Library of India) கொல்கத்தாவில் உள்ளது.இதுவே இந்தியாவின் மிகப் பெரிய நூலகம். இது கொல்கத்தா நகரில் அலிபூர் என்னுமிடத்தில் இயங்கி வருகிறது.இந்நூலகம் சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இது இந்திய அரசின் சுற்றுலா மற்றும் பண்பாட்டுத்துறையால் பராமரிக்கப்படுகிறது.

நூலக வரலாறு:

உலகளவில் நூலகம் என்பது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியது.மெசபடோமியாவில் வாழ்ந்த மக்கள் களிமண்ணைத் தகடுகளாக்கினர். அதில் தங்கள் கதைகளை கோட்டு ஓவியங்களாகக் கிறுக்கி கோவில்களிலும், அரண்மனைகளிலும் வைத்துப் பாதுகாத்தனர்.அதுதான் நூலகத்தின் தொடக்கக் காலமாக கருதப்படுகிறது.

எகிப்தியர்கள் கி.மு.300 ஆம் நூற்றாண்டுகளில் அலெக்சாண்டிரியாவில் 7 லட்சம் பேப்பர் உருளைகளை சேகரித்து வைத்திருந்தனர்.இதுவே முதல் நூலகமாக அறியப்படுகிறது.கி.மு.4 ஆம் நூற்றாண்டில் ஜூலியஸ் சீசர் பல நூலகங்களை உருவாக்க முயற்சி எடுத்துள்ளார்.

அச்சுத்துறையில் மறுமலர்ச்சி ஏற்பட்ட பின்னரே நூலகத்தில் மிகப் பெரிய வளர்ச்சி ஏற்பட்டது.கி.பி.18 ஆம் நூற்றாண்டில் பொது நூலகத்தின் தேவை அனைவராலும் உணரப்பட்டது.1897 ஆம் ஆண்டில் நூலகச் சங்கம் ஒன்று உலகில் உருவானது.இங்கிலாந்து நாட்டில் பொது நூலகச் சட்டம் நடைமுறைக்கு வந்தது.இதன்மூலம் இங்கிலாந்து முழுவதும் பொதுநூலகம் நடைமுறைக்கு வந்தது.இதேபோல் பிரிட்டிஷ் காலனி நாடுகளிலும் பொது நூலகங்கள் துவங்கப்பட்டன.

பெரிய நூலகம்:

உலகின் மிகப் பெரிய நூலகம் அமெரிக்காவில் உள்ளது.அமெரிக்காவில் உள்ள லைப்ரரி ஆப் காங்கிரஸ் நூலகமே உலகில் பெரியது.இது 1800 இல் தொடங்கப்பட்டது.இந்த நூலகத்தில் சுமார் 6 கோடி கையெழுத்துப் பிரதிகளும்,லட்சக்கணக்கான நூல்களும் உள்ளன.இதுதவிர ஒலி,ஒளி நாடாக்களும் உள்ளன.இதேபோல் இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் போட்லி என்ற நூலகம் செயல்படுகிறது. இதுவே உலகின் மிகப்பெரிய பல்கலைக்கழக நூலகம் ஆகும்.

இந்தியா:

கொல்கத்தாவில் உள்ள தேசிய நூலகம் 1830 ஆம் ஆண்டில் பொது நூலகமாக செயல்படத் துவங்கியது.1903 ஆம் ஆண்டில் கர்சன்பிரபு என்பவர் இந்த நூலகத்துடன் அபிஷியல் இம்பிரியல் நூலகத்தை இணைத்து தி இம்பீரியல் நூலகத்தை உருவாக்கினார்.இந்த நூலகமே 1953 ஆம் ஆண்டு பிப்ரவரி 1 அன்றுமுதல் இந்திய தேசிய நூலகம் என்ற பெயரில் செயல்படத் துவங்கியது.1990 ஆம் ஆண்டுவரை இங்கு 15 லட்சம் நூல்கள் இருந்தன. தற்போது 22 லட்சம் நூல்கள் ,மற்றும் கையெழுத்துப் பிரதிகளுடன் நூலகம் செயல்பட்டு வருகிறது.

இந்திய தேசிய நூலகத்தில் இந்தியாவின் அனைத்து மொழி நூல்களும் உள்ளன.இதுதவிர உலக மொழிகளில் எழுதப்பட்ட நூல்களும் உள்ளன.வங்காள மொழி,இந்தி,தமிழ் ஆகிய மொழிகளைச் சேர்ந்த நூல்களே அதிகளவில் உள்ளன.இதேபோல் ரஷ்ய,அரபி,பிரெஞ்சு மொழிகளைச் சேர்ந்த பிற நாட்டு மொழி நூல்களும் அதிகளவில் உள்ளன.இந்தியாவில் வெளியாகும் அனைத்து நாளிதழ்களும் இங்கு சேர்க்கப்படுகின்றன.தமிழின் அறிய சுவடிகளும் இங்குள்ளது என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.

இந்திய அரசு ஆவணங்கள்,ஐக்கிய நாடுகள் சபையின் ஆவணங்கள் போன்றவையும் இங்கு சேமித்து வைக்கப்பட்டுள்ளன.இதுதவிர அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த பல அறிய நூல்களும் சேமித்து வைக்கப்பட்டுள்ளன.

பிற நூலகங்கள்:

இந்தியாவின் மிகப் பழமையான நூலகம் கொல்கத்தாவில் செயல்பட்டு வருகிறது. இது கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் மைய நூலகம் 12,டிசம்பர் 1856 இல் துவங்கப்பட்டது. இது ஆரம்பத்தில் செனெட் இல்லத்தில் செயல்பட்டு வந்தது.1912 ஆம் ஆண்டில் தனிக்கட்டிடத்திற்கு மாறியது.இது 1935 ஆம் ஆண்டுவரை மாணவர்களுக்கு நூல்கள் வழங்கும் நூலகமாக செயல்பட்டது. தற்போது ஆராய்ச்சி மாணவர்களுக்கு உதவுகிறது.இங்கு தற்போது சுமார் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட நூல்கள் இருக்கின்றன.

இந்திய அரசும், யுனெஸ்கோ அமைப்பும் இணைந்து உருவாக்கிய நூலகம் டெல்லி பொதுநூலகமாகும்.1951 ஆம் ஆண்டில் இந்நூலகம் உருவாக்கப்பட்டது.இந்த நூலகமே ஆசியாவிலேயே மிகவும் சுறுசுறுப்பாக நூல்களை வழங்கும் நூலகமாகும் என்ற சிறப்பைப் பெற்றுள்ளது.இங்கு பார்வையற்றோருக்கான பிரெய்லி நூலகப் பிரிவும் செயல்படுகிறது.

தமிழ்நாட்டில் கண்ணிமரா பொதுநூலகம் பிரபலமானது.இது 1896 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது.இங்கு இந்தியாவின் அனைத்து வெளியீடுகளும், யுனெஸ்கோ வெளியீடுகளும் சேமித்து வைக்கப்பட்டுள்ளன.

சென்னை ஆளுநராக இருந்த கல்வியாளர் கண்ணிமரா பிரபு 1890 ஆம் ஆண்டில் ஒரு நூலகத்தை சென்னையில் கட்ட முடிவு செய்தார்.1890 ஆம் ஆண்டு மார்ச் 22 அன்று பாந்தியன் திடலில் 6 லட்சம் ரூபாய் செலவில் நூலகத்திற்கான கட்டிடப் பணிகளைத் தொடங்கி வைத்தார்.கலை நுணுக்கங்களுடன் இக்கட்டிடம் 1896 இல் கட்டி முடிக்கப்பட்டது.கட்டிடம் கட்டி முடிப்பதற்கு முன்பே கண்ணிமரா பிரபு பணி உயர்வு பெற்று லண்டன் சென்று விட்டார்.இருப்பினும் அவரின் சேவையைப் போற்றும் வகையில் கண்ணிமரா என்ற பெயரையே நூலகத்துக்கு சூட்டினார்கள்.

ஆரம்பத்தில் 40 ஆயிரம் நூல்களோடு கண்ணிமரா நூலகம் தொடங்கப்பட்டது.தற்போது 7 லட்சத்து 50 ஆயிரம் நூல்கள் உள்ளன.இவற்றில் தமிழ்நூல்கள் மட்டும் 1 லட்சம் .உலக அளவில் தமிழ் நூல்கள் அதிகம் உள்ள நூலகம் கண்ணிமரா நூலகம்தான்.இதுதவிர 2 லட்சத்துக்கும் மேற்பட்ட இதழ்கள், பிரெய்லி நூல்களும் உள்ளன.

ஆன்லைன் மூலம் சுமார் 4 லட்சம் புத்தகங்களின் தலைப்புகளில் பார்க்கும் வாய்ப்பு கண்ணிமரா நூலகத்தில் உள்ளது.இதுதவிர 5000 தமிழ் நூல்கள் ஸ்கேன் செய்யப்பட்டுள்ளன.இங்கு விக்டோரியா மகாராணிக்காக தயாரிக்கப்பட்ட பிரமாண்டமான அட்லஸ் உள்ளது.1781 இல் வெளியிட்ட கிறிஸ்தவ பிரச்சார நூல்களும் உள்ளன.குறிப்பாக 1600 ஆம் ஆண்டில் பருத்தி நூலிழை காகிதத்தில் அச்சிடப்பட்ட பைபிள் உள்ளிட்ட ஏராளமான பழைமையான நூல்களும் உள்ளன.இங்கு நிரந்தர புத்தகக் கண்காட்சியும் உண்டு.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

இந்திய தேசியச் சின்னங்கள் Copyright © 2014 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 4.0 Unported License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book