7

இந்தியாவின் தேசியப் பறவை மயில்(Peacock) ஆகும். இந்தியாவில் சுமார் 2000 வகையான பறவைகள் உண்டு. இந்தியப் பறவைகளில் மிகவும் கவர்ச்சியானது மயில் மட்டுமே. மயில் இந்தியாவில் நீண்ட காலமாக வாழ்ந்து கொண்டிருக்கிறது.இதனைப் பற்றி ரிக் வேதத்தில் எழுதப்பட்டுள்ளது. இந்திய கலாச்சாரத்தில் மயில் மிக முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.சமஸ்கிருதத்தில் மயிலை மயியூரா(Mayura) என அழைக்கப்படுகிறது.

இந்திய கோவில் சிற்பங்கள்,கவிதைகள்,கிராமிய இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளில் மயிலுக்கான சிறப்பு கொடுக்கப்படுகிறது.பல இந்துக் கடவுள்களுடன் மயிலைத் தொடர்புப்படுதியுள்ளனர்.கிருஷ்ண பகவான் மயில் இறகை தனது தலை கிரீடத்தில் செருகி வைத்துள்ளார்.முருகன் கடவுளின் வாகனமாக மயில் சித்தரிக்கப்படுகிறது.இதேபோல் புத்த மதத்திலும் மயில் அறிவு சார்ந்ததாக வர்ணிக்கப்படுகிறது.தவிர இதன் இறகுகள் ஒரு புனித அலங்காரப் பொருளாகக் கருதப்படுகிறது.இந்திய கோயிலின் கட்டிடக்கலையிலும் பழைய நாணயங்களிலும், துணி,திரைச்சீலைகளிலும்,நவீன கலைகளிலும் மயிலை பொறித்துள்ளனர்.

மயில் வகை:

மயில்களில் பலவகை உண்டு .குறிப்பாக இந்திய மயில் (Paro cristarus) மற்றும் பச்சை மயில் (Pavo mmuticus) ஆகிய மயில் வகைகள் பிரபலமானவை.இந்திய மயிலை நீல மயில் என்பர். இது இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் மட்டுமே காணப்படுகிறது. பச்சை மயில் பர்மா மற்றும் தெற்கு ஆசியப் பகுதிகளில் காணப்படுகிறது.வெண்மை நிற மயில்களும் பரவலாகக் காணப்படுகிறது.

பச்சை நிற மயில் அழியும் அபாயத்தில் உள்ளது.இதே போல் இந்திய மயில்களும் அழிந்து கொண்டிருக்கின்றன.மயிலை ஆங்கிலத்தில் பீக்காக் என அழைக்கிறோம்.இது ஆண் மயிலை மட்டுமே குறிப்பதாகும்.ஆண் மற்றும் பெண் மயில் இரண்டையும் சேர்த்து பீபௌல்(Peapowl) என ஆங்கிலத்தில் அழைக்கின்றனர்.

இந்திய மயில்:

இது பிரகாசமான பெரிய கோழி இனப் பறவையாகும்.மயில்கள் தோகைக்காகவே பிரபலம் அடைந்தன.நீண்ட தோகையும்,கொண்டையும் கொண்டிருக்கும்.கொண்டை விசிறி போன்ற இறகுகளை உடையது.கண்ணுக்கு அடியில் வெள்ளை நிறப் பட்டை புருவம்போல் காணப்படுகிறது.நீண்ட கழுத்தும்,உறுதியான மார்பும் இருக்கிறது.ஆண் மயில் பெண் மயிலைவிட பெரியது.அதுமட்டும் அல்லாமல் பெண் மயிலைவிட ஆண் மயிலே அழகானது.

ஆண் மயில் வண்ணமயமாக இருக்கும்.இதன் மார்பும்,கழுத்தும் சற்று ஒளிரும் நீல நிறத்தில் இருக்கும்.ஆண் மயிலுக்கு நீண்ட தோகை இருக்கும்.இது பெண் மயிலை கவர்ந்து இழுப்பதற்காக தோகையை விரித்தாடும்.சுமார் 200 நீண்ட தோகைகள் இதன் வால்பகுதியில் இருக்கின்றன.ஒவ்வொரு தோகையிலும் கண் வடிவங்கள் உள்ளன. தோகையை விரிக்கும்போது இவை மிகவும் அழகாக அனைவரையும் கவரும் வகையில் காட்சி தருகிறது.ஆண் மயில் தன் துணையை கவர்ந்து இழுக்க கார்மேகம் சூழ்ந்திருக்கும் சமயத்தில் தோகையை விரித்து ஆடும்.

பெண் மயில்களின் உடல் மங்கலான பச்சையும்,பளபளப்பான நீளமும்,பச்சை கலந்த சாம்பல் நிறமும் கொண்டிருக்கும்.பெண் மயிலுக்கு நீண்ட தோகை கிடையாது .மயில்களால் அதிக உயரம் பறக்க முடியாது.ஆகவே மரங்களில் ஏறி அமர்ந்திருக்கும்.மயிலின் குரல் கரடுமுரடாக இருக்கும். ஆனால் கேட்பதற்கு இனிமையாக இருக்கும்.பிஹூன்,பிஹூன் என்று கிரீச்சிட்டுக் கூவும் .இது பலவிதங்களில் கூவும். சருகுகளின்மீது நடக்கும்போதும்,பொழுது சாயும்போதும் ஒரு ஒலியும்,அதிகாலை விடியும் போது ஒரு விதமான ஒலியுடன் கூவும்.

மயில் கூடு கட்டி ,முட்டை இட்டு குஞ்சு பொரிக்கும்.சருகுகளை ஒன்று சேர்த்து,லேசான பள்ளத்தை உண்டாக்கி அதில் முட்டை இடும்.நான்கு முதல் ஆறு முட்டைகளை இடும்.அரிதாக வேறு பறவையின் கூட்டிலும் முட்டை இடும்.மயில் தாவரங்கள் மற்றும் புழு,பூச்சிகளை சிறு பிராணிகளை உண்ணும். அத்திப்பழத்தை விரும்பி உண்ணும். கிழங்குகள், இலைகள்,தேன் ஆகியவற்றையும் உண்ணும். தவளைகள்,பாம்புகளைக் கண்டால் கொத்தி தின்று விடும்.

தேசியப் பறவை:

அரசர்கள் காலத்தில் பொன்னுக்குச் சமமாக மதித்தனர்.சாலமோன் மன்னனுக்கு இந்திய மன்னர்கள் மயில்களை அன்பளிப்பாக வழங்கினர்.மாவீரன் அலெக்சாண்டர் இந்தியாவிலிருந்து தன் நாட்டிற்கு மயில்களை கொண்டுச் சென்றார்.இதன்மூலம் மயில் ரோம் நாட்டுக்கும் மற்ற நாட்டிற்கும் மயில் பரவியது.இந்தியாவிலிருந்தும் இலங்கையிலிருந்தும் மயில் தோகை அரேபியாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.

மயிலின் அழகைக் கண்டு ரசிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது.மயில் இந்தியாவின் தேசியப் பறவையாக 1963 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது.எனினும் மயிலை வேட்டையாடப்படுவதாலும்,அது வழித்தடத்தின் பரப்பளவு குறைவதாலும் இந்த இனம் அழிந்துகொண்டிருக்கிறது.விவசாய நிலங்களில் புகுந்து விளைபயிர்களை உண்பதால் இதனை கொல்லவும் செய்கிறார்கள்.மயில் கறியில் மருத்துவ குணம் உள்ளது என நம்புகிறவர்கள் உண்டு.இதனாலும் இதனைக் கொன்று உண்கின்றனர்.மயில் கறியில் மருத்துவ குணம் உள்ளது என்பது தவறான மூட நம்பிக்கை.ஆகவே மயில்களை பாதுகாக்க 1972 ஆம் ஆண்டில் ஒரு சட்டத்தை அரசு இயற்றியுள்ளது.இந்தியாவில் மயிலை வேட்டையாடுவது குற்றமாகும். வேட்டையாடுவது தண்டனைக்குரிய குற்றமாகும்.மயிலை பாதுகாப்பது நமது தேசிய கடமை என்பதை மறந்து விடாதீர் !!!

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

இந்திய தேசியச் சின்னங்கள் Copyright © 2014 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 4.0 Unported License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book