21

இந்தியாவின் தேசத்தந்தை (Father Of the Nation) அல்லது தேசப்பிதா யார் எனக் கேட்டால் இந்தியாவில் உள்ள ஆசிரியர்கள் ,மாணவர்கள் மற்றும் பெரியவர்கள் அனைவரும் மகாத்மா காந்தி (Mahatma GandhimAHAMA) என்று உடனே பதில் கூறுவார்கள்.இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தை தலைமை ஏற்று நடத்திய போராட்டத் தலைவர்களில் காந்தி மிக முக்கியமானவர்.அதனால் இவர் விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை என அழைக்கப்படுகிறார்.

காந்தி:

குஜராத் மாநிலத்திலுள்ள போர்பந்தர் என்னுமிடத்தில் 1869 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2 ஆம் நாள் காந்தி பிறந்தார்.இவருடைய தாய்மொழி குஜராத்தி ஆகும்.இவர் தன்னுடைய 13 ஆவது வயதில் கஸ்தூரிபாயை திருமணம் செய்துகொண்டார்.இவர் 18 வயதில் இங்கிலாந்து சென்று வழக்கறிஞர் கல்வி பயின்றார்.இந்தியா திரும்பியவுடன் மும்பையில் சிறிது காலம் வழக்கறிஞராக பணிபுரிந்தார்.பின்னர் தென்னாப்பிரிக்கா சென்று அங்கு வழக்கறிஞர் பணி மேற்கொண்டார்.

தென்னாப்பிரிக்க அரசின் இனவெறிக்கு எதிராக போராடி பலமுறை சிறை சென்றார்.இந்தியா திரும்பிய பின்னர் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்.இந்திய தேசியக் காங்கிரஸில் சேர்ந்தார்.1921 ஆம் ஆண்டில் காங்கிரஸின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.ஒத்துழையாமை இயக்கத்தை துவக்கி பிரிட்டிஷ்காரர்கள் தயாரித்த துணி மற்றும் பொருட்களை புறக்கணித்தல் செய்தார்.இது நாடு முழுவதும் பெரும் ஆதரவை பெற்றுத் தந்தது.உப்புக்கு வரி விதித்ததை கண்டித்து 1930 ஆம் ஆண்டில் அகமதாபாத்திலிருந்து தண்டிவரை நடைப்பயணம் மேற்கொண்டார்.23 நாட்கள் நடைப்பயணம் மேற்கொண்டு 240 மைல் தொலைவில் இருந்த தண்டியை அடைந்தார்.அங்கு உப்பு காய்ச்சினார்.காந்தி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.போராட்டம் தீவிரம் அடைந்ததால் ஆங்கில அரசு வேறுவழியில்லாமல் உப்புக்கு விதிக்கப்பட்ட வரியை ரத்து செய்தது.

காந்தி 1942 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 அன்று வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை தொடங்கினார்.நாட்டில் ஏற்பட்ட பல்வேறு போராட்ட வடிவத்தின் காரணமாக இந்தியா 15,ஆகஸ்ட் 1947 ஆம் ஆண்டில் சுதந்திரம் அடைந்தது. அகிம்சையை கடைப்பிடித்து வந்த காந்தியை 1948 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் நாள் நாதுராம் கோட்சே என்னும் கொடியவனால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

காந்தி பிறந்த அக்டோபர் 2 ஐ காந்தி ஜெயந்தியாகக் கொண்டாடப்படுகிறது.அன்று இந்தியாவின் தேசிய விடுமுறை தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.நாட்டிற்காக பாடுபட்ட காந்தியின் உருவம் ரூபாய் நோட்டுகளிலும் இடம் பெறுகிறது.இது காந்திக்கு அளிக்கப்படும் உயரிய மரியாதையாகும்.

தேசத்தந்தை:

மகாத்மா காந்திக்கு தேசத்தந்தை எனப் பட்டம் கொடுத்தது யார்? மகாத்மா காந்தி தேசத்தந்தை ஆனது எப்போது? என லக்னோவைச் சேர்ந்த ஆறாம் வகுப்பு மாணவி ஐஸ்வர்யா பிரசார்(Aishwarya Prashar) பிரதமர் அலுவலகத்திற்கும் ஜனாதிபதி அலுவலகத்திற்கும் கடிதம் எழுதினார்.மகாத்மா காந்தியைப் பற்றிய தகவல்களை தருமாறு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்(RTI) கீழ் மனு அனுப்பியிருந்தார். இக்கேள்வியை இவர் தனது வகுப்பு ஆசிரியரிடமும்,பெற்றோர்களிடமும் கேட்டு பதில் கிடைக்காததால் இக்கேள்விக்கான பதிலைத் தெரிந்து கொள்ள பிரதமர் அலுவலகத்திற்கு எழுதி இருந்தார்.

பிரதமர் அலுவலகம் இவரின் கடிதத்தை உள்துறை அமைச்சக அலுவலகத்திற்கு அனுப்பியது. அங்கிருந்து இந்திய தேசிய ஆவணக் காப்பகம் (National Archives of India) அலுவலகத்திற்கு அனுப்பினர்.ஆவணக் காப்பகத்தில் பதிவான எந்த பதிவுகளும் (Records) கிடைக்கவில்லை.காந்திக்கு தேசத்தந்தை என்ற பட்டம் வழங்கவில்லை என அரசு ஐஸ்வர்யாவிற்கு 2012 ஆம் ஆண்டில் பதில் அனுப்பப்பட்டது.

மகாத்மா காந்தியை முறைப்படி தேசத்தந்தை என அறிவிக்குமாறு குடியரசுத் தலைவருக்கும் பிரதமருக்கும் கடிதம் எழுதினார்.இது தொடர்பாக மீண்டும் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் மனு தாக்கல் செய்தார்.காந்தியை தேசத்தந்தை என அறிவிப்பது தொடர்பாக எந்த நடவடிக்கையும் குடியரசுத் தலைவர் எடுக்கவில்லை என பதிலளித்தது.மேலும் அரசியல் சாசன சட்டம் பிரிவு 18(1) இன்படி யாருக்கும் எந்தவிதமான பட்டத்தையும் அளிக்க இயலாது.கல்வித்துறை மற்றும் ராணுவத்தைச் சார்ந்தோருக்கு மட்டுமே பட்டங்களை கொடுக்க முடியும் எனக் கூறியுள்ளது.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 1944 ஆம் ஆண்டில் சிங்கப்பூர் வானொலியில் பேசியபோது காந்தியை இந்தியாவின் தேசத்தந்தை எனக் குறிப்பிட்டார்.அதன்பிறகே நாட்டில் உள்ளவர்கள் காந்தியை தேசத்தந்தை என அழைத்தனர்.இது மக்களால் அளிக்கப்பட்ட பட்டமே தவிர அரசு கொடுத்த பட்டம் அல்ல.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

இந்திய தேசியச் சின்னங்கள் Copyright © 2014 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 4.0 Unported License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book