3

இந்தியாவின் தேசியச் சின்னம் (Emblem Of India) என்பது அரசு முத்திரைகள், ரூபாய்,நாணயம் போன்றவற்றில் பொறிக்கப்பட்டுள்ளன.அசோகத்தூணில் உள்ள சிங்கத்தலைகள் இந்திய அரசு மற்றும் இந்தியக் குடியரசின் சின்னமாக (இலச்சினை) எடுத்துக் கொள்ளப்பட்டது.கவிழ்ந்த நிலையில் உள்ள ஒரு தாமரை மலர்,அதன்மேல் நான்கு சக்கரங்களை பக்கவாட்டில்கொண்ட முரசு போன்ற அமைப்பு கொண்டது.இதில் உள்ள சக்கரங்களை தர்ம சக்கரங்கள் எனப்படுகின்றன .

தர்ம சக்கரத்தில் 24 ஆரங்கள் உள்ளன .சக்கரங்களுக்கு அருகில் நான்கு பக்கமும் சிங்கம்,குதிரை,எருது,யானை ஆகியவற்றின் உருவங்கள் உள்ளன.முரசின் மேல் சிங்கங்கள் நான்கும் ஒன்றை ஒன்று பின்புறம் ஒட்டியபடி நிற்கின்றன.இந்தச் சிற்பத்தை படைத்தவர் அசோக பேரரசர் ஆவார். இதில் உள்ள தர்ம சக்கரம் நமது தேசியக் கொடியின் மையத்தில் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அசோகச் சக்கரம் என்றும் அழைக்கின்றனர்.

அசோகர்:

இந்தியாவின் பெரும் பகுதியை ஆட்சி செய்தவர் அசோகர் ஆவார்.இவரின் அரசை மௌரிய அரசு என்று அழைத்தனர்.அசோகரின் காலம் என்பது கி.மு 273 முதல் கி.மு 232 வரை ஆகும்.அசோகர் 18 வயதில் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றார்.அசோகர் கி.மு 261 இல் கலிங்க நாட்டின்மீது போர் தொடுத்தார்.இப்போரில் சுமார் 1,50,000 போர்வீரர்கள் மரணமடைந்தனர்.இதைப்போல லட்சக்கணக்கான வீரர்கள் காயமடைந்து ஊனமானர்கள்.இதனைக் கண்டு அசோகர் மனம் வருந்தினார். ஆகவே எவ்வுயிர்க்கும் தீங்குச் செய்யக்கூடாது என்கின்ற புத்த மதத்திற்கு மாறினார். புத்த மதத்திற்கு மாறிய பின்னர் மிகச் சிறந்த அரசராக மாறி மக்களுக்கு பணிபுரிந்தார்.

அவர் சாலை ஓரங்களில் நிழல் தரும் ஆலமரம்,மாமரங்களை நட்டார்.பயணிகள் தங்குவதற்கு சத்திரங்களைக் கட்டினார்.குடி தண்ணீருக்காக கிணறுகளை வெட்டினார். சிறந்த சாலைவசதிகளை ஏற்படுத்தினார்.பொது இடங்களில் மலம் கழிப்பதைத் தடை செய்து பொதுச் சுகாரத்தைப் பாதுகாத்தார்.

பிற நாட்டின்மீது போர் தொடுப்பதை நிறுத்தினார்.மக்களின் வரி பணத்தைக் கொண்டு மக்களின் நலனுக்காக செலவிட்டார்.சாதி,மதவெறி போன்ற நடவடிக்கைகளை தடுத்து மக்கள் ஒற்றுமையை காக்க பாடுபட்டார்.மக்களுக்குச் செய்திகளை சொல்ல முதன்முதலில் கல்வெட்டுகளை பயன்படுத்தினார். புலனடக்கம், தூய எண்ணம்,நன்றியுடைமை,அறக்கொடை புரிதல்,அன்பு,தூய்மை,சத்தியம்,சேவை மனப்பான்மை,ஆதரவு தருதல்,பெரியோர்களை மதித்தல் ஆகிய நன்னெறிகளை கடைப்பிடித்ததோடு,மக்களை கடைபிடிக்க வலியுறுத்தினார்.

அசோகத் தூண் :

வட இந்தியாவின் பல்வேறு இடங்களில் அசோகரால் கி .மு 3 ஆம் நூற்றாண்டில் பல தூண்கள் நிறுவப்பட்டன.இவற்றில் மிகவும் பிரபலமாக கொண்டாடப்படும் தூண் சாரநாத் தூண் ஆகும்.இது கி .மு .250 ஆம் ஆண்டுகளில் சாரநாத்தில் உருவாக்கப்பட்டது.புத்தர் தமது முதல் போதனைகளை சாரநாத்தில் வெளியிட்டார்.ஆகவே அவ்விடத்தில் அசோகர் ஒரு உயரமான கல்தூணை நிறுவினார்.அதன் உச்சியில் சிங்கங்களும்,மற்ற உருவங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. கம்பீரமாக நான்கு சிங்கங்கள்,அடிபீடத்தின் மையத்தில் தர்ம சக்கரம் (Dharma Chakra) உள்ளது.இந்த கல்தூண் தற்போது உத்திரப்பிரதேசத்தில் வாரனாசியின் புறநகரப் பகுதியான சாரநாத்தில் உள்ள சாரநாத் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த தூணில் நான்கு ஆசியச் சிங்கங்கள் அடுத்தடுத்து நிற்கின்றன.இவை அதிகாரம்,வீரம்,பெருமை,நம்பிக்கை ஆகிய நான்கு பண்புகளைக் குறிக்கின்றன.இவை வட்ட வடிவ பீடத்தில் நிறுவப்படுள்ளன.இந்த பீடத்தின் கிழக்கில் யானை,மேற்கில் குதிரை,தெற்கே எருது,வடக்கில் சிங்கம் பொறிக்கப்பட்டுள்ளன.இந்த பீடம் ஒரு மலர்ந்த தாமரை வடிவத்தில் அமைந்துள்ளது.மலர்ந்த தாமரை மலரும் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது.தூணின் மகுடமாக தர்ம சக்கரம் விளங்குகிறது.

தேசியச் சின்னம்:

இந்தியாவின் தேசியச் சின்னம் அசோகர் தூணை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.அசோகத் தூணின் மேற்பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட சின்னமே நமது நாட்டின் தேசியச் சின்னமாகும்.இது 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று இந்தியா குடியரசு நாடாக ஆன தினத்தில் தேசியச் சின்னமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

மாதவ் சாஹ்னி (Madhav Sawhney) என்பவர் அசோகத் தூணிலிருந்து சின்னத்தை எடுத்து நமது தேசியச் சின்னத்தை 1958 ஆம் ஆண்டில் வடிவமைத்தார்.இதில் மூன்று சிங்கங்கள் மட்டுமே தெரிகிறது.நான்காவது சிங்கம் பார்வையிலிருந்து மறைக்கப்பட்டு உள்ளது.அசோகச் சக்கரம் பீடத்தின் நடுவில் அமைந்துள்ளது.வலது புறத்தில் எருதும்,இடதுபுறத்தில் பாயும் குதிரையும் அமைந்துள்ளது.வலது,இடது கோடிகளில் தர்மசக்கரத்தின் விளிம்புகள் தெரிகின்றன.பீடத்தின் கீழிருந்து தாமரை நீக்கப்பட்டுள்ளது.

பீடத்தின் கீழே வாய்மையே வெல்லும் என்னும் பொருள் கொண்ட ”சத்ய மேவ ஜெயதே” என்ற குறிக்கோள் கொண்ட வார்த்தை தேவநாகரி எழுத்துகளால் பொறிக்கப்பட்டுள்ளன.இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு பிரிட்டிஸ் ஆட்சியில் ஸ்டார் ஆப் இந்தியா (Star Of India) என்கிற சின்னம் 1857 முதல் 1947 வரை பயன்படுத்தப்பட்டது.இச்சின்னம் இன்றைக்கு கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI)பயன்படுத்தி வருகிறது.

தேசியச் சின்னத்தின் முத்திரையை மத்திய,மாநில அரசு அலுவலகங்களின் நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.மத்திய அமைச்சர்கள்,ஆளுநர்கள், குடியரசுத் தலைவர் ஆகியோரின் அதிகாரபூர்வமான முத்திரையாக இச்சின்னம் உள்ளது.

தேசியச் சின்னம் அமைச்சர்கள் பயன்படுத்தும் எழுதுதாள்களில் நீல வண்ணத்திலும்,அதிகாரிகள் பயன்படுத்தும் தாள்களில் சிவப்பு வண்ணத்திலும் அச்சிடப்பட வேண்டும்.மக்களவை உறுப்பினர்கள் பச்சை நிறத்திலும், மாநிலங்களவை உறுப்பினர்கள் சிவப்பு நிறத்திலும் சின்னத்தைப் பயன்படுத்த வேண்டும்.தேசியச் சின்னத்திற்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும்.இதை அவமதிப்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படுகிறது.

இந்திய உச்ச நீதிமன்றத்திற்கு(Supreme Court of India) என்று தனிச்சின்னம் உண்டு. அதேபோல் மத்திய புலனாய்வு துறைக்கும் (CBI) தனிச்சின்னம் உண்டு.ஆனால் இவற்றிலும் ஒரு சில மாற்றங்களைத் தவிர தேசியச் சின்னமே இடம் பெற்றுள்ளது.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

இந்திய தேசியச் சின்னங்கள் Copyright © 2014 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 4.0 Unported License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book