20

இந்தியாவின் தேசிய விளையாட்டு ( National Game) எது என்று கேட்டால் உடனே ஹாக்கி(Hockey) எனப் பதில் கூறுகின்றனர்.ஹாக்கி விளையாட்டில் இந்தியா 1928 ஆம் ஆண்டுமுதல் 1956 ஆம் ஆண்டுவரை உலகளவில் சிறந்து விளங்கியது.இக்காலத்தில் இந்தியா 6 ஒலிம்பிக் தங்கப்பதக்கங்களை தொடர்ந்து வென்று சாதனை படைத்தது.ஆகவே இக்காலக்கட்டம் இந்திய ஹாக்கியின் பொற்காலம் எனப் போற்றப்பட்டது.இந்தியாவின் ஹாக்கிப் பயணம் பெரும் வெற்றியை ஈட்டி தந்தது.இது விளையாடிய 21 போட்டிகளில் 18 போட்டிகளில் வெற்றி பெற்றது.

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு 1948 ஆம் ஆண்டில் நடந்த லண்டன் ஒலிம்பிக் போட்டியிலும்,1952 ஆம் ஆண்டு நடந்த ஹல்சினிக் விளையாட்டுகளிலும் , மெல்பேர்ன் ஒலிம்பிக்கிலும் ஒரு ஹாட்ரிக் சாதனையை நிகழ்த்திக் காட்டியது . அப்போது இந்தியா கலந்து கொண்ட 24 போட்டிகளிலும் வெற்றி பெற்றது.இதுதவிர 1964 மற்றும் 1980 களில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளிலும் தங்கப் பதக்கம் வென்றது.

இந்தியா ஹாக்கி விளையாட்டில் கொடி கட்டிப் பறந்த இக்காலத்தில் ஹாக்கி தேசிய விளையாட்டாகக் கருதப்பட்டது.பலர் ஹாக்கி தேசிய விளையாட்டு எனக் கூறினாலும் ஹாக்கி இந்தியாவின் தேசிய விளையாட்டு அல்ல. ஆம். உண்மைதான் . இந்தியாவில் தேசிய விளையாட்டு என்ற அந்தஸ்து எந்த விளையாட்டுக்கும் அளிக்கப்படவில்லை என்று மத்திய விளையாட்டு அமைச்சகம் கூறியுள்ளது.

லக்னோவைச் சேர்ந்த 10 வயது சிறுமி ஐஸ்வர்யா பிரஷார்(Aishwarya Parashar) சார்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் பிரதமர் அலுவலகத்திற்கு ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்தியாவின் தேசியகீதம்,விளையாட்டு,விலங்கு,மலர்,தேசிய சின்னம் ஆகியவை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகளின் நகல்களை அளிக்குமாறு கோரியிருந்தார்.இந்த மனு பிரதமர் அலுவலகத்தில் இருந்த உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டது.அங்கிருந்து இது விளையாட்டு அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்திய விளையாட்டு அமைச்சகத்தின் செயலாளர் சிவ பிரதாப் சிங் அவர்கள் ஐஸ்வர்யாவுக்கு இது தொடர்பான கடிதம் எழுதினார்.அதில் இந்தியாவின் தேசிய விளையாட்டு என்று எதையும் விளையாட்டு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்று 2012 ஆம் ஆண்டில் தெரிவித்தார்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

இந்திய தேசியச் சின்னங்கள் Copyright © 2014 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 4.0 Unported License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book