12

இந்தியாவில் தேசிய அருங்காட்சியகம் (National Museum) புதுடில்லியில் உள்ளது.இதுவே இந்தியாவின் மிகப் பெரிய அருங்காட்சியகமாக விளங்குகிறது.இங்கு வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தைச்(Pre-history) சேர்ந்த பொருட்கள்முதல் தற்காலக் கலைப் பொருள்கள்வரை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.இது இந்திய அரசின் பண்பாட்டு அமைச்சகத்தின்கீழ்(ministry Of Culture) செயல்பட்டு வருகிறது.இது ஜன்பாத்தும்,மௌலான ஆசாத் சாலையும் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது.

அருங்காட்சியகம்:

மிகவும் அரிதான அரும்பொருட்களை சேகரித்து அதனைப் பாதுகாத்து, மக்களின் காட்சிக்காக வைத்து மகிழ்ச்சி,கல்வி,ஆராய்ச்சி போன்ற நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது.இது சமுதாயத்தின் வளர்ச்சிக்கும்,மனிதன்,உயிரினங்கள், இயற்கை ஆகியவை கடந்து வந்த பாதைகளை அறிய உதவுகிறது.இன்று உலகின் அனைத்துப் பகுதிகளிலும் அருங்காட்சியகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அருங்காட்சியகங்கள் அறிவியல்,கலை,பண்பாடு மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொருட்களை சேகரித்துப் பாதுகாத்து வருகிறது. இப்பொருட்கள் மக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்படுகின்றன.பெரிய அருங்காட்சியகங்கள் யாவும் உலகின் பெரிய நகரங்களில் இயங்கி வருகின்றன. சிறியவர்கள், பெரியவர்கள், மாணவர்கள், குறிப்பிட்ட தொழில் துறைகளைச் சேர்ந்தவர்கள் எனப் பலதரப்பட்ட பார்வையாளர்களுக்காக விளக்கம் அளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான அருங்காட்சியகங்களில் பொருட்களை தொட்டுப் பார்க்க அனுமதிப்பதில்லை.

வகைகள்:

அருங்காட்சியகங்களில் பல வகைபாடுகள் உள்ளன.நுண்கலைகள்,பயன்பாடு கலைகள்,கைப்பணி,தொல்லியல்,மானிடவியல்,ஒப்பாய்வியல்,வரலாறு,பண்பாட்டு வரலாறு,அறிவியல்,தொழில்நுட்பம்,இயற்கை வரலாறு, தாவரவியல், விலங்கியல், நாணயவியல் எனப் பல வகைபாடுகளுடன் பொருட்கள் அருங்காட்சியகத்தில் இடம் பெற்றுள்ளன.இது தவிர ஓவியங்கள், நவீன ஓவியங்கள்,வானூர்தி பயண வரலாறு,பிரபஞ்சவியல் என அருங்காட்சியகத்தில் இடம் பெற்றுள்ளன.மேலும் புதியபுதிய பிரிவுகளும் உருவாகிக்கொண்டே இருக்கின்றன.

தேசிய அருங்காட்சியகம்:

இந்திய தேசிய அருங்காட்சியகம் 1949 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி புதுடில்லியில் ஆரம்பிக்கப்பட்டது.அப்போதைய கவர்னர் ஜெனரலாக இருந்த சி.ஆர்.ராஜகோபாலாச்சாரி அவர்களால் ஜனாதிபதி மாளிகையில் திறந்து வைக்கப்பட்டது.பின்னர் 1955 ஆம் ஆண்டு மே 12 ஆம் தேதி அருங்காட்சியகத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல்லை முந்தைய பிரதமர் ஜவஹர்லால் நேரு நாட்டினார்.கட்டிடம் 1960 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.இது 18,டிசம்பர் 1960முதல் அருங்காட்சியமாக மக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டது.

இந்த அருங்காட்சியகத்தில் பல அரிய பொருட்கள் காட்சிக்கு உள்ளன.இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் இங்கு இடம்பெற்றுள்ளன.இவை சுமார் 5000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட இந்தியாவின் பண்பாடு,கலை,வரலாறு,அறிவியல் ஆகியவற்றை விளக்குகின்றன. இங்கு தொல்லியல் பொருட்கள்,படைக்கலங்கள்,அழகுக் கலைப்பொருட்கள், அணிகலன்கள், கையெழுத்துப் பிரதிகள், ஓவியங்கள் போன்றவையையும் உள்ளன.

மானிடவியல்,இன ஒப்பாய்வியல், கட்டிடக்கலை, நாணயங்கள், ஆபரணங்கள், நெசவு, பதப்படுத்திய மம்மிகள், பழங்கால விலங்குகளின் தொல்படிமங்கள் எனக் காட்சிக்கு வைக்கப்படுள்ளன.நாம் இதுவரை கண்டிராத,கேட்டறியாத பல பொருட்களை இங்கு காணலாம்.தொன்மையான கட்டிடங்கள்,சமூகப் பொருளாதார வாழ்க்கை முறைகளைக் காட்டும் நாட்டுப்புற வாழ்விடக் காட்சிகள்,தொழில்நுட்பவரலாறு,நாட்டுப்புற மக்களின் கலை,வரலாறு போன்றவற்றையும் கண்டு நமது பண்பாட்டு வரலாறுகளைத் தெரிந்துகொள்ளலாம்.

இந்த அருங்காட்சியகத்தில் தஞ்சாவூர்,மைசூர் ஓவிய அரங்குகளும் உள்ளது.தஞ்சாவூர் மற்றும் மைசூர் ஓவியங்கள் பெரும்பாலும் மூன்று பிரிவுகளில் உள்ளன.தஞ்சாவூர் ஓவிய அரங்கில் உள்ள ஓவியங்கள் 1830 ஆம் ஆண்டைச் சேர்ந்தவை. தஞ்சையை ஆண்ட இரண்டாம் சிவாஜி,நவநீத கிருஷ்ணனுடன் இருக்கும் ஓவியம்,19ஆம் நூற்றாண்டின் நடராஜர்,ராமர் பட்டாபிஷேகம்,இரண்டாம் சரபோஜி மன்னரின் தர்பார் ஆகிய ஓவியங்களும் உள்ளன.

இந்த அருங்காட்சியகத்தை ஒரே நாளில் சுற்றிப் பார்ப்பது சாத்தியமில்லை. அருங்காட்சியகத்தை திங்கட்கிழமை தவிர தினமும் காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை மக்கள் பார்வையிடலாம்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

இந்திய தேசியச் சின்னங்கள் Copyright © 2014 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 4.0 Unported License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book