8

இந்தியாவின் தேசிய மலர் தாமரை(Lotus).1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி தேசிய மலராக அங்கீகரிக்கப்பட்டது.தாமரையை தூய்மையின் அடையாளமாகக் கருதுகின்றனர்.ஏனெனில் தாமரை சேறு நிறைந்த,அழுக்கான நீரில் வளர்ந்தாலும் அதன் பூக்கள் அழுக்குபடியாமல் தூய்மையாக இருக்கின்றன.சேற்றில் மலர்ந்த செந்தாமரை என்பதற்குப் பொருத்தமாக உள்ளது.தாமரை மலர் தன்னைதானே தூய்மைபடுத்திக் கொள்கிறது எனக் கூறுவார்கள்.

இந்திய சமய தத்துவங்களில் தாமரைக்கு என்று ஒரு தனி இடம் உண்டு.இதனை நற்குணமாக இந்திய கலாச்சாரத்தில் பார்க்கப்படுகிறது.தாமரை மலர் கடவுள் லட்சுமியின் ஆசனமாக கருதப்படுகிறது.செல்வ வளத்தைக் குறிக்க இரு கைகளில் தாமரை ஏந்தி இருப்பது,வெள்ளைத் தாமரையில் சரஸ்வதி வீற்றிருப்பதாக கூறப்படுவது போன்றவை தாமரை மலருக்குக் கொடுக்கும் முக்கியத்துவமே. இதேபோல் பல தேவதைகளின் கைகளிலும் தாமரை இடம்பெற்றிருக்கும்.புத்தர் உருவிலும் தாமரையுடன் நெருங்கிய தொடர்பு உண்டு.தாமரை மலரை ஆன்மீகத்தோடு தொடர்புப்படுத்தி வைத்திருக்கிறார்கள்.பழங்கால கட்டிடக் கலைகளிலும்,சிற்பங்களிலும் தாமரை மலர் இடம் பெற்றுள்ளன.அது தவிர ராஜாக்களின் ஆட்சிக் காலத்தில் தாமரைச் சின்னம் பொறித்த நாணயங்களும் புழக்கத்தில் இருந்தன.ஒழுக்கம்,சாதனை,நீண்ட வாழ்க்கை நற்பண்புகளை தாமரை போதிக்கிறது என ஆன்மீகவாதிகள் கருதுகின்றனர்.

தாமரை:

தாமரை ஒரு நீர்வாழ்த்தாவரம்.இது பல்லாண்டுகள் வாழும் தன்மை உடையது. இதன் தாவரவியல் பெயர் நெலும்போ நூசிபேரா(Nelumbo nnucifera) என்பதாகும். நீர்நிலைகள் உள்ள இடங்களிலேயே அதிகம் காணப்படும்.குறிப்பாக 25 முதல் 35° cc வெப்பநிலையில் நன்கு வளரும்.பண்டைய எகிப்து நாட்டின் நைல் நதிக்கரையோரம் பரவலாக வளர்ந்தது.எகிப்தியர்கள் இதனைப் புனிதமாக போற்றி வழிபாட்டிற்குப் பயன்படுத்தினர்.தாமரையின் பூக்கள்,இதழ்கள்போன்றவை அக்கால ஆயத்துறை மற்றும் கட்டிடக்கலை அலங்காரங்களிலும் காணப்படுகிறது.எகிப்திலிருந்து அசிரியாவிற்குப் பரவிய தாமரை அங்கிருந்து பாரசீகம், இந்தியா, சீனா முதலிய நாடுகளுக்கும் பரவியது.

தாமரைக்கு மட்டத்தண்டு கிழங்கு உண்டு.இது சேற்றில் புதைந்து இருக்கும்.நீரின் மட்டத்திற்கு ஏற்ப நீண்ட காம்புடன் கூடிய இலைகள் நீரின்மீது மிதக்கும்.தாமரையின் இலையின்மீது தண்ணீர் ஒட்டாது.மழை பொழியும்போது இலையின் மீது தண்ணீர் பட்டு ஓடி விடும்.இதற்கு காரணம் இலைகளில் கெட்டியான மெழுகுப் பூச்சு உள்ளது.இது தூசு மற்றும் பாக்டீரியா போன்றவற்றை ஒட்டாமல் பாதுகாக்கிறது.இதனால் தாமரை இலை சுத்தமாகப் பளிச்சிடுகிறது.சேற்றில் அழுக்கு நீரில் வளர்ந்தாலும் இலையும்,பூவும் சுத்தமாகவே இருக்கும்.

ஆசியக் கண்டத்தில் தண்ணீர் தோட்டங்களில் தாமரை பெருமளவில் வளர்க்கப்படுகிறது.தாமரையின் விதைகள் பல ஆணடுகளுக்கு முளைக்கும் திறன் கொண்டவை.தாமரை மலரின் நடுவில் இருக்கும் மகரந்த பகுதியை உடைத்துப் பார்த்தால் அதனுள் விதைகள் காணப்படும்.இவ்விதைகள் மிகக் கடினமாக இருக்கும்.

வளர்ப்பு:

இது ஒரு சதுப்பு நிலத்தாவரமாகும்.இதை நமது வீடுகளில் வளர்ப்பதில் சிரமம் இல்லை.ஆனால் வளர்க்கும் முறை தெரிந்திருக்க வேண்டும்.விதைகளில் வளர்ப்பது மிகவும் சிரமம்.விதை கடினமானதாக இருப்பதால் விதையை மெதுவாக உப்புத் தாளால் தேய்த்துவிட வேண்டும்.இதனால் நீர் உள்ளே புகும்.அதனால் முளைக்க வாய்ப்பு ஏற்படுகிறது.விதையின் வெளிப்புற உறை கடினமாக இருந்தால் பல நூறு ஆண்டுகளுக்கு முளைப்புத் திறனோடு இருக்கும். நீரில் அப்படியே வைத்திருந்தால் முளைக்க பல ஆண்டுகள் ஆகும்.உடனே முளைக்க செய்வதற்காகத்தான் உப்புத்தாளில் தேய்க்க வேண்டும்.

விதையை உப்புதாளில் தேய்த்து நீரில் வைத்தால் அது 24 மணி நேரத்தில் இரண்டு மடங்கு பெரிதாக வேண்டும்.அப்படி ஆகவில்லை என்றால் மீண்டும் உப்புகாகிதத்தால் தேய்க்க வேண்டும்.24 மணி நேரத்தில் விதை 2 மடங்கு பெரிதாக வேண்டும். அப்படி ஆகவில்லை என்றால் மீண்டும் தேய்க்க வேண்டும்.விதையை நீரில் வைத்திருந்தாலே போதும்.

விதை முளைக்க உகந்த வெப்பநிலை 29-28° cc ஆகும்.இந்த வெட்பநிலையில் ஒரு வாரத்தில் விதை முளைத்துவிடும்.முதல் இலை வெளிவந்தவுடன் ஒரு சதுப்பான அடித்தளத்தில் அல்லது ஒரு தொட்டியில் நட வேண்டும்.நீர் 30 செ.மீ உயரத்திற்கு மேல் இருக்க வேண்டும்.நீர்த்தொட்டியின் அடிப்புறத்தில் சரளையாக இருந்தால் நல்லது. இதில் மீன்கள் இருந்தால் இந்த தாமரை நன்கு வளரும்.கோடைக் காலத்தில் இதனை குளத்திற்கு மாற்றலாம்.வீடுகளில் கான்கீரிட் தொட்டிகளில் வளர்க்கலாம்.

பயன்கள்:

தாமரை ஒரு மூலிகைத் தாவரம்.தாமரையின் அணைத்து பாகங்களும் உண்ணக் கூடியவை.விதையை உடைத்து உண்ணலாம்.தாமரை கிழங்கு,தண்டுகளை சமைத்து உண்ணலாம்.விதைகளை உலர்த்தி பாப்கார்ன்போல பொரிக்கப்பட்டு சாப்பிடலாம். மூன்கேக் போன்ற சீன இனிப்பு வகைகளில் தாமரை விதைப் பசை அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.தாமரையின் கிழங்கும், விதையும் முகுந்த ஊட்டச்சத்து மிக்கவை.

கிழங்கில் நார்ச்சத்து அதிகம் உள்ளது.வைட்டமின் சி,மாங்கனீஸ் ஆகியவையும் உள்ளன.தாமரை மலரை நிழலில் உலர வைத்து,இதனை கஷாயம் செய்து குடிக்கின்றனர்.தாமரை விதையின் பருப்பை சாப்பிட்டால் இதயம் பலப்படும். சிறுநீரகங்கள் வலுப்படும்.

சித்தவைத்தியத்தைவிட ஆயுர்வேதத்தில் தாமரை அதிகம் பயன்படுகிறது.நமது நாட்டைப் பொறுத்தவரை தாமரையை ஒரு மூலிகையாகப் பார்ப்பதில்லை.அதனை ஒரு ஆன்மீக மலராகத்தான் பார்க்கின்றனர்.தாமரையை ஒரு மங்களப் பொருளாகவே பார்க்கின்றனர்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

இந்திய தேசியச் சின்னங்கள் Copyright © 2014 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 4.0 Unported License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book