22

இந்தியாவின் தேசிய மொழி(National Language) எது எனக் கேட்டால் பலர் இந்தி(Hindi) என்று பதில் கூறுகின்றனர்.வட இந்தியாவைச் சேர்ந்தவர் ஹிந்திதான் தேசிய மொழி என்கின்றனர்.ஆனால் உண்மையில் ஹிந்தி தேசிய மொழி அல்ல.இந்தியாவின் அரசு ஏற்பு பெற்ற 22 மொழிகளில் இந்தியும் ஒன்று.வட மாநிலங்களில் அதிகமாக பேசப்படும் மொழியாக இந்தி உள்ளது.அவ்வளவுதானே தவிர இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல.

இந்தியாவில் தில்லி, ராஜஸ்தான், அரியானா, உத்தரகண்ட், உத்திரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம்,சத்திஸ்கர்,இமாச்சலப் பிரதேசம், ஜார்கண்ட் மற்றும் பீகார் போன்ற மாநிலங்களில் இந்தி பேசப்படுகிறது.பிற மாநிலங்களில் இரண்டாவது ,மூன்றாவது மொழியாக இந்தி பயிற்றுவிக்கப்படுகிறது.தமிழ்நாட்டில் இந்தி பயிற்றுவிக்கப்படுவதில்லை.வட மொழியை அடிப்படையாகக் கொண்ட இந்தி மொழியில் உருது ,பாரசீக மற்றும் அரேபிய மொழிகளின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.

வழக்கு:

குஜராத் உச்ச நீதிமன்றத்தில் சுரேஷ் கச்சாடியா (Suresh Kachhadia) என்பவர் 2009 ஆம் ஆண்டில் ஒரு பொதுநல வழக்கு தொடுத்திருந்தார்.அந்த வழக்கில் இந்தி மொழி இந்தியாவின் தேசிய மொழி என்பதால் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பொருட்கள் அடைக்கப்பட்ட பெட்டிகளின்மேல் அப்பொருளைப் பற்றிய விலை,உள்ளடக்கம்,தரம் குறித்த தகவல்களை இந்தி மொழியில்தான் அச்சிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.இது தொடர்பான உத்தரவை மத்திய அரசானது மாநில அரசாங்கங்களுக்கு உத்திரவிட வேண்டும் என விண்ணப்பித்திருந்தார்.

இந்த வழக்கு குஜராத் தலைமை நீதிபதி முகோபாத்யாயா(Mukhopadhaya) தலைமையிலான நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.இந்தி மொழி இந்தியாவின் தேசிய மொழி அல்ல என்பதை நீதிமன்றம் தெளிவுபடுத்தி தீர்ப்பளித்தது.இந்தியாவில் பெரும்பாலான மக்களால் இந்தி மொழி பேசப்பட்டாலும் அதனை தேசிய மொழி என்று வாதிடுவதை ஏற்க முடியாது.தேசிய மொழி என்று எந்த அறிவிப்பும் அதிகார பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அதற்கான ஆதாரங்களும் ஏதுமில்லை என தீர்ப்பு வழங்கினார்.இந்தி என்பது ஆட்சிமொழி மட்டுமே தவிர அது தேசிய மொழி அல்ல என குஜராத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தேசிய மொழி:

இந்தியாவில் 22 மொழிகள் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மொழிகளாக உள்ளன. இந்தியாவில் அஸ்ஸாமி,பெங்காலி,குஜராத்தி,இந்தி,கன்னடம்,காஷ்மீரி, மலையாளம், மராத்தி, ஒரியா, பஞ்சாபி, சமஸ்கிருதம், தமிழ், தெலுங்கு, உருது ஆகியவை அங்கீகரிக்கப்பட்ட மொழிகளாக 1950 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட எட்டாவது அட்டவணையில் இடம் பெற்றுள்ளது. அதன் பிறகு இந்தப் பட்டியல் 3 முறை விரிவாக்கப்பட்டது.அதன்படி சிந்தி முதலில் இந்தப் பட்டியலில் இடம் பெற்றது.பின்னர் கொங்கனி,மணிப்பூரி,நேபாளி ஆகியவை சேர்க்கப்பட்டன.பின்னர் போடோ,சந்தாலி,மைதிலி,டோக்ரி ஆகியவை சேர்க்கப்பட்டு தற்போது 22 மொழிகள் எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ளன.இந்தப் பட்டியலில் மேலும் சில மொழிகளைச் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையும் தொடர்ந்து இருந்து வருகிறது.அது பரிசீலனையிலும் உள்ளது.

அலுவலக மொழி:

இந்திய அரசியல் அமைப்பு பிரிவு 343(1) இன் கீழ் இந்தி மொழியானது மத்திய அரசின் மொழிகளுள் ஒன்றாகும்.இந்தியக் குடியரசுக்கு தேசிய மொழி கிடையாது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டமும்,பிற சட்டங்களும் தேசிய மொழி என்று ஒன்றை வரையறுக்கவில்லை.அலுவல் மொழிகள் மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளன.தேசிய அளவில் இந்தி அலுவல் மொழியாகவும்,ஆங்கிலம் கூடுதல் அலுவல் மொழியாகவும் உள்ளன.

அதே சமயத்தில் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலமும் தங்கள் மாநிலத்திற்கான அலுவல் மொழிகளைத் தேர்ந்தெடுக்கும் உரிமை பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதன்படி பார்த்தால் தமிழ்நாட்டில் தமிழ்மொழி,கேரளாவில் மலையாளம்,கர்நாடகாவில் கன்னடம்,ஆந்திராவில் தெலுங்கு,குஜராத் மாநிலத்தில் குஜராத்தி என அந்தந்த மாநில மொழிகளே அலுவலக மொழியாக உள்ளன.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

இந்திய தேசியச் சின்னங்கள் Copyright © 2014 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 4.0 Unported License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book