4

நமது இந்தியாவின் தேசியகீதம்(National Anthem) ஜன கண மன…. என்கிற பாடலாகும்.இதுவே நமது நாட்டுப்பண் எனப்படும் நாட்டு வணக்கப் பாடலாகும்.நாட்டு மக்கள் தங்கள் நாட்டின்மீது அன்பும்,பற்றுணர்வும் தோன்றுமாறு அமைந்த நாட்டுப்பற்றுடைய இசைப்பாடல்.இப்பாடலைப் பாடும்போது நம் நாட்டின் பழக்கவழக்கம்,வரலாறு,உயர்வாக நாம் கடைப்பிடிக்கும் கொள்கை,நாட்டுப்பற்று ஆகியவற்றை உயர்த்திப் பிடிக்கும் ஒரு நாட்டு வணக்கப் பாடல். நாட்டு வணக்கப் பாடல்கள் ஐரோப்பாவில் 19 ஆம் நூற்றாண்டுகளில் பரவலாக தோன்றின. தேசியகீதத்தைப் பாடுபவர்கள் அதன் அர்த்தத்தைப் புரிந்து பாடுவதே நாட்டுக்கு நாம் செய்யும் பெருமை.

இரவீந்திரநாத் தாகூர்:

தேசிய கீதமான ஜன கண மனஎன்கிற பாடலை இரவீந்திரநாத் தாகூர் என்பவரே இயற்றினார்.தேசியகீதம் ஒலித்தால் நம்மையும் அறியாமல் நமது உடல் சிலிர்த்து,ஒரு வலிமையை ஏற்படுத்தும் ஆற்றல் அதற்கு உண்டு.இப்பாடலை இவர் சம்ஸ்கிருதம் கலந்த வங்காள மொழியில் எழுதினார்.இப்பாடல் கீதாஞ்சலி என்னும் கவிதைத் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது.இப்பாடலை 1911 ஆம் ஆண்டு அவர் எழுதினார்.இவரால் எழுதப்பட்ட 5 பத்திகள் கொண்ட இந்தப்பாட்டின் முதல் பத்தி மட்டுமே தேசியகீதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

கொல்கத்தாவில் இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடு 1911 ஆம் ஆண்டு டிசம்பர் 27 அன்று நடந்தது.இந்த மாநாட்டில் முதன்முதலாக இப்பாடல் பாடப்பட்டது.இதனை தாகூரின் உறவினர் சரளாதேவி செளதுராணி பாடினார்.தாகூரும் தானே இசையமைத்துப் பாடினார்.1912 ஆம் ஆண்டு தாகூரின் தத்துவ போதினி பத்திரிகையில் பாரத விதாதா என்னும் தலைப்பின்கீழ் இப்பாடல் வெளிவந்தது. அன்றுமுதல் நாட்டின் பல பகுதிகளில் இப்பாடல் பாடப்பட்டது.1919 ஆம் ஆண்டில் தாகூர் ஆங்கிலத்தில் Morning Song Of India என்று இப்பாடலை எழுதினார்.இவரே தன்னுடைய பாடலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.இவர் கைப்பட எழுதிய மொழியாக்கம் மதனப்பள்ளி தியசஃபிகல் கல்லூரி நூலகத்தின் கண்ணாடி சட்டத்திற்குள் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளது.

இசை:

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள மதனப்பள்ளி என்ற ஊரில் பெசன்ட் தியசஃபிகல் கல்லூரி உள்ளது.இங்கு இரவீந்திரநாத் தாகூர் 1911 ஆம் ஆண்டு சென்றார்.இக்கல்லூரியின் அப்போதைய முதல்வர் ஜேம்ஸ் ஹெச் கசின்ஸ்(James H.Cousins).இவர் தாகூரின் நெருங்கிய நண்பர்.ஜேம்ஸின் மனைவி மார்கரட் கசின்ஸ். இவர் ஒரு மேற்கத்திய இசை வல்லுநர்,ஜன கண மன ….பாடலுக்கு பலவித மெட்டுகளை போட்டுக்காண்பித்தார்.கடைசியாக மனதை கவரும் மெட்டில் 1911 ஆம் ஆண்டு பிப்ரவரி மாத இறுதியில் பாடினார்.இந்த மெட்டில் தான் நாம் அனைவரும் இப்பாடலை பாடுகிறோம்.

நேதாஜி தனது இந்திய தேசிய ராணுவப் படையின் (INA) தேசியகீதமாக இப்பாடலை பயன்படுத்தி வந்தார்..என் .ஏ வுக்காக இந்தப் பாடலை பேண்ட் வாத்திய இசைக் குழுவினர் வாசிக்கும்படி இசை அமைத்தவர் கேப்டன் ராம்சிங், இதற்காக நேதாஜி தங்கப்பதக்கம் வழங்கி ராம்சிங்கை கவுரவித்தார்.

தேசியகீதம் முதன்முதலாக பாடப்பட்டு 100 ஆண்டுகள் 2011 ஆம் வருடம் டிசம்பர் 27 இல் நிறைவடைந்தது.அதை நாடு முழுவதும் கொண்டாடினர்.இதில் ஒரு சிறப்பம்சமாக ஆந்திராவில் மதனப்பள்ளி என்ற இடத்தில சுமார் ஒரு லட்சம் குழந்தைகள் கலந்துகொண்டு தேசியகீதத்தைப் பாடினார்கள்.பொதுமக்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

தேசியகீதம்:

ஜன கண மன…. பாடலை இந்தி மொழியில் ஆபித் அலி என்பவர் மொழிபெயர்த்தார்.இப்பாடல் பல ஆண்டுகள் கழித்து இந்திய அரசியல் அமைப்பால் தேசியகீதமாக எடுத்துக்கொள்ளப்பட்டது.1950 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் தேதி ஜன கண மன.. பாடல் இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் டாக்டர்.இராஜேந்திர பிரசாத்தால் தேசிய கீதமாக அறிவிக்கப்பட்டது.

ஜன கண மன அதிநாயக ஜய ஹே

பாரத பாக்ய விதாதா

பஞ்சாப ஸிந்து குஜராத மராட்டா

திராவிட உத்கல பங்கா

விந்திய ஹிமாசல யமுனா கங்கா

உச்சல ஜலதி தரங்கா

தவ சுப நாமே ஜாகே

தவ சுப ஆசிஸ மாகே

காஹே தவ ஜய காதா

ஜன கண மங்கள தாயக ஜய ஹே

பாரத பாக்ய விதாதா

ஜய ஹே ஜய ஹே ஜய ஹே ,

ஜய ஜய ஜய ஜய ஹே !

தமிழாக்கம் செய்து இதற்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.தமிழக அரசின் அதிகாரபூர்வ மொழிபெயர்ப்பு அரசு பாட நூல்களில் பயன்படுத்தப்படுகின்றது. தேசியகீதத்தின் அர்த்தத்தைக் காண்போம்..

இந்தியத் தாயே! மக்களின் இன்ப துன்பங்களைக் கணிக்கின்ற நீயே எல்லோருடைய மனத்திலும் ஆட்சி செய்கிறாய்.

நின் திருப்பெயர் பஞ்சாபையையும்,சிந்துவையையும்,கூர்ச்சரத்தையும்,

மராட்டியத்தையும்,திராவிடத்தையும்,ஒரிசாவையும்,வங்காளத்தையும் உள்ளக் கிளர்ச்சி அடையச் செய்கிறது.

நின் திருப்பெயர் விந்திய,இமய மலைத் தொடர்களில் எதிரொலிக்கிறது; யமுனை,கங்கை ஆறுகளின் இன்னொலியில் ஒன்றுகிறது;இந்தியக் கடலலைகளால் வணங்கப்படுகிறது.

அவை நின்னருளை வேண்டுகின்றன;நின் புகழைப் பரவுகின்றன.

இந்தியாவின் இன்ப துன்பங்களைக் கணிக்கின்ற தாயே! உனக்கு

வெற்றி! வெற்றி! வெற்றி!

விதிமுறை:

தேசியகீதத்தை ஒரு நிமிடத்திற்கு மேல் பாடக்கூடாது.முழுப் பாடலையும் 52 வினாடிகளில் பாடி முடித்து விடலாம்.தேசியகீதம் பாடும்போது ஆடாமல் அசையாமல் தலை நிமிர்ந்து நிற்க வேண்டும்.முழு பாடலும் பாடாமல் சுருக்கமாக முதல் அடியும் கடைசி அடியும் மட்டுமே சில சந்தர்ப்பங்களில் பாடப்படுகிறது.குறுகியதை 20 வினாடிகளில் பாடி முடிக்க வேண்டும்.சுதந்திர தினம் , குடியரசு தினம் ஆகிய நாட்களில் நாட்டின் தலைநகரான புதுதில்லி செங்கோட்டையில் நமது நாட்டின் தேசியக் கொடி ஏற்றப்பட்டு தேசியகீதம் இசைக்கப்படுகிறது.

இந்தியாவின் அனைத்து விதமான அரசு நிகழ்சிகளின் இறுதியில் இப்பாடல் பாடப்பெறுகிறது.தேசிய கீதம் பாடும் போது அனைவரும் எழுந்து நின்று அசையாமல் மரியாதை செலுத்தும் பழக்கம் உள்ளது.தேசிய கீதம் அங்கீகரிக்கப்பட்ட காலத்தில் அனைத்திந்திய வானொலியில் அன்றாட நிகழ்ச்சிகளின் இறுதியில் இப்பாடல் ஒலிபரப்பப்பட்டது.ஆரம்பக் காலத்தில் திரையரங்குகளிலும் தேசியகீதம் ஒலிக்கப்பட்டது.அதாவது திரைப்படத்தின் முடிவில் தேசியக் கொடி திரையிலும் ,தேசியகீதம் ஒலியிலும் வந்தன.திரையரங்கில் உள்ள மக்கள் எழுந்து நின்று மரியாதை செய்த பின்னரே சென்றனர்.தற்காலத்தில் இது நடைமுறையில் இல்லாமல் போய்விட்டது.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

இந்திய தேசியச் சின்னங்கள் Copyright © 2014 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 4.0 Unported License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book