17

இந்தியாவின் தேசிய பாரம்பரிய விலங்கு (National Heritage Animal) என்பது ஆசிய யானை (Asian Elephant)ஆகும்.இதன் எண்ணிக்கை குறைந்து வருவதைத் தடுக்கவே இதனை தேசிய பாரம்பரிய விலங்காக அறிவித்துள்ளனர்.யானையை தேசிய பாரம்பரிய விலங்காக மத்திய வனத் துறை அமைச்சகம் 2010 ஆம் ஆண்டு அக்டோபர் 22 அன்று அறிவித்தது.இந்திய கலாச்சார வரலாற்றைப் பொறுத்தவரை யானையைத் தனியாக பிரித்துப் பார்க்க முடியாத அளவிற்கு இரண்டறக் கலந்துள்ளது.

இந்தியாவின் பாரம்பரியத்தோடு ஒன்றிவிட்ட யானை சமீப காலமாக அழிந்து வருகிறது.நாடு முழுவதும் 29000யானைகள் மட்டுமே உள்ளன.இதனைப் பாதுகாக்க வேண்டும் என்கிற கோரிக்கை வனச் சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடம் வலுவாக உள்ளது.புலிகளைப் பாதுகாப்பது போல் யானைகளையும் சட்ட ரீதியாக பாதுகாக்க வேண்டும் என யானை திட்டக்குழு முடிவு செய்தது.இக்குழு தங்களின் பரிந்துரையை வனவிலங்கு வாரியத்திடம் ஆகஸ்ட்,2010 இல் சமர்ப்பித்தது.வனவிலங்கு வாரியம் இதனை ஏற்றுக்கொண்டு தேசிய யானை பாதுகாப்பு ஆணையம் அமைத்தது.இதனால் தேசிய பாரம்பரிய விலங்காக யானை அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் 25000 யானைகள் காட்டிலும்,3500 யானைகள் மிருகக் காட்சி சாலை,கோவில்கள்,குறிப்பாக கேரளக் கோவில்கள் மற்றும் நாட்டின் வடகிழக்குப் பகுதிகளிலும் காணப்படுகின்றன.

யானை:

மனிதர்கள் வியந்து பார்க்கப்படும் ஒரு விலங்கு யானை.யானைகள் உருவத்தில் மிகப் பெரியதாக இருந்தாலும் மனிதர்களிடம் இயல்பாக பழகும் குணம் கொண்டது.யானையே நிலத்தில் வாழும் விலங்குகளில் மிகப் பெரியது.இது தாவர உண்ணி.இது சுமார் 70 ஆண்டுகள் வரை உயிர் வாழும்.யானை மிக வலிமையானது.மனிதர்களைத் தவிர யானையை யானையை எந்த விலங்கும் வேட்டையாடுவது கிடையாது.

யானைகளில் மூன்று சிற்றினங்கள் உள்ளன.ஆப்பிரிக்கப் புதர்வெளி யானைகள்,ஆப்பிரிக்கக் காட்டு யானைகள் மற்றும் ஆசிய யானைகள் இவற்றிற்கு இடையே பல வேறுபாடுகள் உள்ளன.ஆப்பிரிக்க யானைகள் ஆசிய யானைகளை விட உருவத்தில் பெரியவை. ஆப்பிரிக்க யானையின் காது மிகப் பெரியது.ஆண்,பெண் ஆகிய இரண்டும் தந்தங்களை கொண்டிருக்கின்றன. முதுகுப்புறம் தலைக்கு அடுத்து சற்று உள்நோக்கி வளைந்தும்,புடைத்த நெற்றி மேடுகள் இல்லாமல் சமனாகவும் இருக்கும்.இவற்றின் துதிக்கை நுனியில் இரண்டு நீட்சிகள் இருக்கும்.முன்னங்கால்களில் நான்கு அல்லது ஐந்து நகங்கள் இருக்கும்.பின்னங்கால்களில் மூன்று நகங்கள் இருக்கும்.

யானைகள் 16 மணி நேரம் உணவு தேடுகின்றன.இதற்குக் காரணம் இவற்றின் செரிமானத்திறன் மிகவும் குறைவு.எனவே உண்ணும் உணவில் 40 சதவீதம் மட்டுமே செரிக்கப்படுகிறது.எனவே அதிக உணவை உட்கொள்ள வேண்டும்.நன்கு வளர்ந்த யானை தினமும் 140-270 கிலோவரை உணவு உட்கொள்கின்றன.

யானைகளில் ஆண் யானையானது உயரமாக இருக்கும்.இது 3 மீட்டர் உயரமும்,6000 கிலோ எடையும் கொண்டிருக்கும்.யானையின் தோல் மிகவும் தடிப்பானவை.இருப்பினும் தோல் மெத்தென இருக்கும்.யானைக்கு நான்கு கால்கள் தூண்போல இருக்கும்.பெருத்த உடலைக் கொண்டிருந்தாலும் நெடுங்குத்தான மலைமீது இதனால் எளிதாக ஏற முடியும்.

யானைக்கு துதிக்கை இருக்கும்.மற்ற விலங்குகளுக்கு இல்லாத ஒரு சிறப்பம்சம் துதிக்கையே.துதிக்கை என்பது நீண்ட மூக்குதான்.துதிக்கையின் மூலமாக யானை மூச்சு விடும்.துதிக்கையின் நுனியில் மூக்குத்துளைகள் உள்ளன.அது தவிர விரல் போன்ற நீட்சியும் இருக்கின்றன.இது மிகவும் உணர்வுள்ளது.விரல் நீட்சியால் சிறிய குண்டூசிகளைக் கூட இதனால் எடுக்க முடியும்.துதிக்கையால் பெரிய பெரிய மரங்களைக்கூடத் தூக்க முடியும்.துதிக்கையானது நாலாபுறமும் எளிதில் வளையக் கூடியது.இதில் சுமார் 40000 தசைகள் உள்ளன.நீர் பருகுவது,உணவை எடுப்பது,பகை விலங்குகளை தாக்குதல் ஆகிய அனைத்திற்கும் துதிக்கையையே யானை பயன்படுத்துகிறது.

ஆசிய யானை:

ஆசிய யானையை இந்திய யானை என்பர்.இதன் விலங்கியல் பெயர் எலிஃவாஸ் மேக்சிமஸ் என்பதாகும்.இவை இந்தியா,இலங்கை,இந்திய சீனத் தீபகற்பம் போன்ற இடங்களில் அதிகம் வாழ்கின்றன. இந்தோனேசியாவில் சில பகுதிகளில் மட்டுமே காணப்படுகின்றன.ஆசிய யானைகளின் காதுகள் ஆப்பிரிக்க யானையைவிடச் சிறியவை.வளர்ந்த யானை காதுகளின் ஓரம் வெளிப்புறமாக மடிந்து இருக்கும்.இவை 7 முதல் 12 அடி உயரம் வரை வளர்கின்றன.சுமார் 3000 முதல் 5000 கிலோவரை எடை கொண்டவையாக உள்ளன.

யானைகளுக்குத் தந்தம் இருக்கும்.இது கடைவாய்ப் பற்களின் நீட்சியாகும்.ஆசியப் பெண் யானைகளுக்குத் தந்தம் கிடையாது.ஆண் யானைகளுக்கு மட்டுமே தந்தங்கள் உண்டு.ஆசிய யானைகளின் முதுகு சற்று உயர்ந்து மேடாக இருக்கும்.துதிக்கையானது மேலுதடும் ,மூக்கும் நீண்டு உயர்வானது.துதிக்கையின் நீளம் 1.5 முதல் 2 மீட்டர்வரை இருக்கும்.துதிக்கையில் ஏறத்தாழ 60,000 தசைகள் உள்ளன.யானைக்கு அதன் துதிக்கையே மிக முக்கியமானது.

ஆசிய யானையின் துதிக்கையின் நுனியில் ஒரேயொரு விரல் நீட்சி மட்டும் இருக்கும்.முன்னங்கால்களில் 5 நகங்களும் ,பின்னங்கால்களில் 4 நகங்களும் இருக்கின்றன.யானையின் துதிக்கையானது பல்வேறு பொருட்களைப் பற்றி எடுக்கவும்,பல்வேறு விதமான வேலைகளை செய்யவும் பயன்படுகிறது. தும்பிக்கையில் ஏறத்தாழ 4 லிட்டர் தண்ணீர் எடுக்க முடியும்.

தரையில் வாழும் விலங்குகளில் யானையின் மூளையே மிகப் பெரியது.நினைவாற்றலும் ,புத்திசாலிகளாகவும் யானைகள் இருக்கின்றன.அன்பு காட்டினால் 10-20 ஆண்டுகள் ஆனாலும் மறப்பதில்லை.யானைகள் 60 கட்டளைகளைப் புரிந்துகொள்ளும். யானைகள் தமக்குள் பேசிக்கொள்கின்றன.முனகல் மூலமாகவும்,உரக்கப் பிளிறுதல் மற்றும் பலவித ஓசைகள் மூலம் செய்திகளை பரிமாறிக் கொள்கின்றன.யானைகள் மிகச் சிறந்த கேட்கும் திறனையும், மோப்பத்திறனையும் பெற்றுள்ளன.தண்ணீர் இருக்கும் இடத்தை 5 கி.மீ தொலைவிலிருந்தே வாசனை மூலம் தெரிந்து கொள்கின்றன. யானை ஒரு நாளைக்கு 350 லிட்டர் தண்ணீர் குடிக்கும்.24 மணி நேரம் தொடர்ந்து தண்ணீர் குடிக்கவில்லை என்றால் உயிரை விட்டுவிடும்.

யானையால் துள்ளிக் குதிக்க முடியாது.நோயுற்ற யானைக்கு தண்ணீரையும் , உணவையும் எடுத்து வந்து ஊட்டும்.நோயுற்ற யானையை தடவிக் கொடுத்து ஆறுதல்படுத்தும்.யானை தன்னுணர்வு கொண்டவை.யானைகள் கண்ணாடி முன் நின்றால தன்னை அடையாளம் கண்டு கொள்கின்றன.

ஆசியக் கண்டத்தில் 60 சதவீத யானைகள் இந்தியாவிலேயே வாழ்கின்றன. இந்தியாவில் 18 மாநிலங்களில் யானைகள் உள்ளன.யானைகளின் வாழிடங்கள் அழிக்கப்படுவதால் அதன் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது. யானைகள் இல்லாத இந்தியாவை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது.ஆகவே நமது தேசிய பாரம்பரிய விலங்கான யானையை பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியம்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

இந்திய தேசியச் சின்னங்கள் Copyright © 2014 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 4.0 Unported License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book