14

இந்தியாவின் தேசிய நதி கங்கை (Ganga River) ஆகும்.இது இந்தியாவின் மிக நீளமான நதி.இதனை கேன்ஜஸ்(Ganges) என்றும் அழைப்பார்கள்.கங்கையை இந்துக்கள் புனித நதியாகக் கருதுகின்றனர்.கங்கையை ஒரு நதி என்று மட்டும் கூறி விட முடியாது.இது இந்திய நாடு முழுவதும் ஒன்றிணைக்கும் அம்சமாக உள்ளது.இது 2510 கி.மீ தூரத்திற்கு பாய்ந்து ஓடி கடலில் கலக்கிறது.

கங்கை நதி இமயமலையில் உற்பத்தியாகிறது.கங்கோத்திரி என்னும் உருகும் பனிப்பாறைகள் நிறைந்த பனிப்பகுதியில் பாகீரதி என்ற பெயரில் உற்பத்தியாகிறது. இதன் பின்னர் அலகானந்தா,யமுனா,சன்,கெளதமி,கோசி,காஹரா ஆகிய நதிகளோடு இணைந்து பெரும் நதியாக உருவெடுக்கிறது.பிறகு உத்தரப்பிரதேசம்,பீகார் ஆகிய மாநிலங்கள் வழியாகச் சென்று ஹூக்ளி,பத்மா என இரு ஆறுகளாகப் பிரிந்து முறையே மேற்கு வங்காளம் ,வங்கதேசம் வழியாகச் சென்று மிகப் பெரிய வளமான கழிமுகத்தை உருவாக்குகிறது.இது வங்காள விரிகுடாவில் கடைசியாக கலக்கிறது.வங்கதேசத்தில் கங்கையானது பத்மா என்ற பெயரில் ஓடுகிறது.

கங்கையைச் சார்ந்து மனிதன் உள்பட பல்லாயிரக்கணக்கான உயிர்கள் வாழ்கின்றன.உலகிலேயே மிகவும் வளமான பகுதி கங்கை நிலப்படுகையாகும்.இங்கு அதிகமாக மக்கள் வாழ்வதோடு விவசாயம் அதிகம் செய்கின்றனர்.கங்கை பாய்ந்து செல்லும் பகுதி சுமார் ஒரு கோடி கி.மீ சதுரப் பரப்பளவை உள்ளடக்கியது.கங்கையின்மீது இரண்டு அணைகள் கட்டப்பட்டுள்ளன.இவற்றில் ஒன்று ஹரித்துவாரில் உள்ளது.மற்றொன்று பராக்காவில் உள்ளது.

கங்கை ஆற்றின் கரையோரம் ரிஷிகேஷ், ஹரித்துவார், அலகாபாத், வாரணாசி, பாட்னா,கொல்கத்தா ஆகிய பெருநகரங்கள் அமைந்துள்ளன.கங்கைக்கரையில் அமைந்துள்ள பெருநகரங்களில் முக்கியமான சமய சடங்குகள் நடக்கின்றன.கங்கையின் பயணம் வங்காள விரிகுடாவில் சென்று கலப்பதற்கு முன்பாக பங்களாதேஷில் உள்ள சுந்தரவனச் சதுப்பு நிலத்தின் கழிமுகப் பகுதியில் இது அகன்று விரிவடைந்து காணப்படுகிறது.

மாசு:

கங்கை புனித நதி என்று கூறப்பட்டாலும் , இது உலகிலேயே அதிகம் மாசு அடைந்த ஒரு நதியாக உள்ளது.மலம்,பிளாஸ்டிக் குப்பைக்கூளங்கள்,பூ,மாலை,பாதி எரிந்த பிணங்கள் என கங்கையில் சேர்கின்றன.கங்கை நதிக்கரை ஓரத்தில் 90 சுடுகாடுகள் உள்ளன.பிணத்தின் உறவினர்கள் எரியூட்டிய உடன் வெட்டியானிடம் பணம் அதிகம் தந்து,பாதி வேகும்போதே நதியில் தள்ளிவிடச் சொல்கின்றனர்.ஏனென்றால் இறந்தவர் அப்போதுதான் நேராக சொர்க்கத்திற்குச் செல்ல முடியும் என நம்புகின்றனர்.இதனை பி.பி.சிடாக்குமெண்டரியில் காணலாம்.

காசி நகரத்தின் சாக்கடை முழுவதும் கங்கையில்தான் நாள்தோறும் கலக்கிறது.இதன் அளவு 20 மில்லியன் காலனாகும்.நாள் ஒன்றுக்கு 400 பிணங்கள் கங்கைக்கரையில் எரிக்கப்பட்டு கங்கையில் கரைக்கப்படுகின்றன.ஆண்டுதோறும் மோட்சத்துக்காக 9000 கிழப் பசுக்கள் உயிரோடு கங்கையில் தள்ளப்பட்டு கொல்லப்படுகின்றன.இதன் விளைவாக 1927,1963 மற்றும் 1970 ஆகிய ஆண்டுகளில் காசி அதன் சுற்றுப் பகுதிகளில் உள்ள மக்கள் கடுமையான நோய்க்கு ஆளாகி ஆயிரக்கணக்கில் மாண்டனர்.

இன்னொரு புள்ளி விவரம் முக்கியமானது இந்தியாவில் மற்ற பகுதிகளில் எல்லாம் குழந்தைகள் மரணம் ஆயிரத்திற்கு 94 என்றால் கங்கை பாயும் காசி வட்டாரத்திலோ 133.94 ஆகும்.மேலும் கங்கை நதிக்கரை நகரங்களில் வசிக்கும் மக்கள் பத்துக்கு மூன்று பேர் வீதம் நீர் தொடர்பான நோய்களால் இறக்கின்றனர்.

பீகாரில் துர்க்காபூர்,பொகாரோ,பிலாய்,டாடா ஸ்டீல் இன்டஸ்ட்ரீஸ் ஆகிய தொழிற்சாலைகளிலிருந்தும்,உரத் தொழிற்சாலைகளிலிருந்தும் அமோனியா ,சயனைடு,நைட்ரேட் முதலிய நச்சுக் கழிவுகள் ஏராளமாக கலக்கின்றன.பீகார் தலைநகரமான பாட்னாவில் மட்டும் நிமிடம் ஒன்றுக்கு 34 முதல் 41 பிணங்கள் எரிக்கப்பட்டு மோட்சத்திற்குச் செத்தவர்களை அனுப்புவதற்காக, அந்த சாம்பல் கங்கைக்கரையில் கரைக்கப்படுகின்றன.

கொல்கத்தாவில் மட்டும் 296 தொழிற்சாலைகளின் ஒட்டு மொத்த கழிவுகளும் சங்கமம் ஆவது அந்த கங்கையில்தான்.இவற்றை எல்லாம் விட இன்னும் அதிர்ச்சி தரும் தகவல்கள் உண்டு.கங்கை புனித நதி பாயும் பகுதிகளில்தான் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகும். அந்தளவிற்கு கங்கைக்கரை ஓரம் விபச்சாரம் கொடி கட்டிப் பறக்கிறது.

சுவிஸ் அரசின் நிதி உதவியால் இப்புனித நகரங்களில் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது.அந்த ஆய்வுதான் இந்த அதிர்ச்சியான தகவலை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளது.(தி பயணியர் 27.7.1997).

டைம்ஸ் ஆஃப் இந்தியா ஏடு (19.6.2003) வேறு பல ஒழுக்கக் கேடான தகவல்களை வாரிவாரி இறைத்துள்ளது.

காலையில் புனித கங்கையில் முழுக்கு, இரவோ மது,மாது, மாமிச விருந்து தடபுடல்கள்.சிரகான் இடைத் தேர்தலுக்காகக் கடுமையான பிரச்சாரத்தில் நாள் முழுவதும் ஈடுபட்ட பிரச்சாரக்காரர்கள் ஒரு பெருங் கொண்டாட்டத்தை எதிர் நோக்கியிருந்தனர்.இந்தப் பெருவிருந்து வேறு எந்த ஓட்டலிலும் நடைபெறவில்லை.கங்கையில் குளிக்கும் இடத்தில் இருந்த இரு தோணிகள் மற்றும் ஒரு பெரிய படகில்தான் அந்த விருந்து நடந்தது.மது,பீர்,கோழிக்கறி,புலவு,ரொட்டி மற்றும் இனிப்பு வகைகள் மிகப் பொருத்தமாக இருந்தன என்று விலாவரியாக எழுதியது டைம்ஸ் ஆஃப் இந்தியா (விடுதலை தலையங்கம் 27-4-2013).கங்கையை புனித நதியாகக் கருதாமல் இவ்வாறு இதனை மாசு அடையச் செய்கின்றனர்.

புற்றுநோய்:

புனித நதியாக கருதப்படும் கங்கை நதி மாசடைந்து பல ஆண்டுகளாகிவிட்ட நிலையில்,தற்போது கங்கை நீரில் புற்றுநோயை உண்டாக்கக்கூடிய காரணிகள் இருப்பது தெரியவந்துள்ளது.பல லட்சம் இந்தியர்களின் ஜீவநதியாக விளங்கும் கங்கை இந்துக்களின் புனித நதியாகவும் கருதப்படுகிறது.

இந்த நதியில் மூழ்கி எழுந்தால் தீராத பாவமெல்லாம் தீர்ந்துவிடும் என்ற நம்பிக்கையில் தினமும் ஆயிரக்கணக்கானோர் இந்த புனித நதியில் மூழ்கி எழுகின்றனர்.அதே சமயத்தில் சொர்க்கத்திற்கு செல்வார்கள் என்ற நம்பிக்கையில் இறந்தவர்களின் உடலை கங்கை நதியில் விட்டுவிடுவதாலும் தினமும் இறந்தவர்களின் அஸ்தியை அங்கு கரைப்பதாலும் கங்கை நீர் பல ஆண்டுகளாக அழுக்கடைந்து,மாசுபட்டு வருகிறது.

தற்போது கங்கை நதிக்கு செல்பவர்கள் புனித நீராடலாம் என்று மூழ்கி எழுந்தால் , அவர்களை உரசிக்கொண்டு ஒரு பிணம் மிதந்து செல்வதை சர்வ சாதாரணமாக காணலாம்.

இந்நிலையில் இந்த அளவுக்கு மாசடைந்து போயிருக்கும் கங்கை நீரில் , புற்றுநோயை உண்டாக்கும் கார்சினோஜென்ஸ் (carcinogens) எனப்படும் புற்றுநோயை உண்டாக்ககூடிய காரணிகள் இருப்பது தெரியவந்துள்ளது.தேசிய புற்றுநோய் பதிவு மையம் மேற்கொண்ட ஆராய்ச்சியிலேயே இத்தகவல் தெரியவந்துள்ளது.

குறிப்பாக கங்கை நதியையொட்டிய பகுதிகளில் வசிப்பவர்களுக்கு நாட்டின் பிறப்பகுதிகளில் வசிப்பவர்களைக் காட்டிலும் மிக எளிதில் புற்றுநோய் தாக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாக அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கங்கை நீரில் மிக அதிக உலோகத்தன்மையும்,நச்சு ரசயானமும்,குறிப்பாக உத்திரப்பிரதேசம்,பீகார் மற்றும் மேற்குவங்க மாநிலங்களில் உள்ள கங்கை நதிப்படுகை பகுதிகளில் இது அதிகமாக காணப்படுவதாகவும் அதில் மேலும் கூறப்படுள்ளது.

தேசிய நதி:

கங்கை நதியைப் பாதுகாக்க வேண்டும் என்கிற நோக்கில் 4,நவம்பர் 2008 ஆம் ஆண்டில் முன்னால் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களால் கங்கை இந்தியாவின் தேசிய நதியாக அறிவிக்கப்பட்டது.2009 ஆம் ஆண்டு பிப்ரவரி 20 அன்று தேசிய கங்கை நதி ஆணையம் ஒன்று உருவாக்கப்பட்டது.இதன்மூலம் கங்கை நதியை தூய்மைப்படுத்தும் திட்டம் உருவானது.2014 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிரதமர் மோடி அரசு கங்கையை தூய்மைப்படுத்தும் பணியில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

இந்திய தேசியச் சின்னங்கள் Copyright © 2014 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 4.0 Unported License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book