15

இந்தியாவின் தேசிய நீர்விலங்கு டால்பின் (Dolphin)ஆகும்.டால்பின் என்றால் கடலில் வாழும் டால்பின் அல்ல .டால்பின்களில் பல இனங்கள் இருந்தாலும் அவற்றில் ஒரு சில இனங்கள் மட்டுமே ஆற்றுநீரில் அதாவது நன்னீரில் வாழ்கின்றன.அந்தவகையில் இந்தியாவின் கங்கை நதியில் டால்பின்கள் வாழ்கின்றன.இதனை கங்கை டால்பின்கள் (Gangetic Dolphin) என்கின்றனர்.இதன் விலங்கியல் பெயர் பிளாடானிஸ்டா கேன்ஜிட்டிக்கா(Platanista gangetica) என்பதாகும்.கங்கை டால்பினை இந்தியாவின் தேசிய நீர்விலங்காக (National Aquatic Animal) 2009 ஆம் ஆண்டு அக்டோபர் 5 அன்று அறிவிக்கப்பட்டது.இந்த கங்கை டால்பின் மட்டுமே சுத்தமான மற்றும் நன்னீரில் வாழக்கூடிய டால்பின் ஆகும்.

டால்பின்:

டால்பின்களை தமிழில் ஓங்கில் என்கின்றனர்.இது நீரில் வாழும் ஒரு பாலூட்டி.சுமார் 40 இனங்கள் இதில் உள்ளன.வால் துடுப்பு குறுக்கு நிலையில் தட்டையானது.அதன் நுனி கூர்மையாய்,விளிம்பில் சுழியுடையதாக இருக்கிறது . டால்பின்கள் 1.2 மீட்டர் நீளம்முதல் 9.5 மீட்டர்வரை உள்ளன.இவற்றின் எடை 40 கிலோமுதல் 10 டன்வரை உள்ளன.இவை மீன்களை உணவாக உண்கின்றன. அனைத்து டால்பின் இனங்களும் ஊன் உண்ணிகளே.இவை உலகம் முழுவதும் ஆழம் குறைவான கடல்பகுதிகளில் வாழ்கின்றன . இதன் சராசரி வயது 20 ஆண்டுகள்.

டால்பின்கள் அறிவு வாய்ந்தவை.இவை மனிதர்களுடன் நன்கு பழகுகின்றன.இதற்கு மூளை பெரியதாக உள்ளது.அதே சமயத்தில் சிக்கலான அமைப்பு கொண்டது. பாலூட்டிகளுக்கு முடிகள் இருப்பதுபோல் டால்பின்களுக்கு உடலில் முடி கிடையாது. பிறப்பதற்கு முன்பு அல்லது பிறந்த பின்பு அலகைச் சுற்றி ஒரு சில முடிகள் மட்டுமே இருக்கும்.நீரில் எளிதாக நீந்திச் செல்லும் வகையில் இதன் உடல் நீள் வடிவில் உள்ளது.சில டால்பின் இனங்களுக்கு 250 பற்கள்வரை முளைக்கும்.டால்ஃபின்கள் தங்கள் தலைக்குமேல் ஒரு உறிஞ்சும் துளைமூலம் மூச்சு விடுகின்றன.இதன் மூச்சுக்குழாயானது மூளையின் பின்புறம் உள்ளது.

டால்பின்கள் பகுத்தறிவோடு வாழும் விலங்கு என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.மனிதனிடம் பழகும் நாய்,யானை போன்ற விலங்குகளைப் போலவே டால்பின்களும் மனிதனிடம் நெருக்கமாக பழகுகின்றன.கடல் டால்பின்களை பயிற்சியளித்து மனிதர்கள் பயன்படுத்துகின்றனர்.அமெரிக்காவில் டால்பின்களை உளவு பார்க்கும் பணிக்கும் பயன்படுத்துகின்றனர்.

டால்பின்கள் சோனார்(Sonar Sensesense) எனப்படும் ஒலியலைகளை கிரகித்துக்கொள்ளும் தன்மையைக் கொண்டுள்ளன.குறிப்பாக நீரில்வாழும் பாலூட்டிகளில் டால்பின்களுக்கு மட்டுமே இந்த சிறப்பான பண்பு உண்டு.ஒலியலைகளை உணர்வதன் மூலமாகவே இவை இரையைத் தேடுகின்றன. டால்பின்களால் 2 லட்சம் ஹெர்ட்ஸ் அளவுக்கான அல்ட்ராசோனிக் ஒலியலைகளை ஏற்படுத்த முடியும்.இதற்கு காரணம் இவைகளுக்கு பார்வைக் குறைபாடு உள்ளது.ஆகவே இக்குறைபாட்டை ஒலிகள் மூலமாகவே டால்பின்கள் தவிர்க்கின்றன.மனிதர்களின் காது 18,000 ஹெர்ட்ஸ் அளவுக்கே கேட்கும் சக்தியைப் பெற்றுள்ளன.ஆனால் டால்பினின் கேட்கும் சக்தி மனிதர்களைவிட 10 மடங்கு அல்லது அதற்கு மேற்பட்ட அளவில் உள்ளது.

ஒவ்வொரு டால்பினும் தனித்துவமான சமிக்கை ஒலியை எழுப்புகின்றன . மனிதர்களின் கைரேகையானது ஒவ்வொரு மனிதனுக்கும் வேறுவேறாக இருக்கும் . அதுபோலவே டால்ஃபின்கள் சமிக்கை ஒலியும் வேறுபாடுடன் தனித்தன்மை கொண்டதாக உள்ளது.

கங்கை டால்ஃபின்கள்:

கங்கை டால்பினை குருட்டு டால்பின்கள் எனவும் அழைக்கின்றனர்.ஏனென்றால் இதற்கு பார்வைத்திறன் மிகக் குறைவு.சில டால்பின்களுக்கு கண்களே தெரியாது.இதன் மேல்,கீழ் தாடைகளில் பற்கள் உண்டு.அவை வெளியே தெரியும். உடல் தடித்தும்,வெளிறிய சாம்பல் மற்றும் பழுப்பு நிற தோல் நிறத்தில் காணப்படுகின்றன.இதன் நெற்றி உயர்ந்து புடைத்து இருக்கும்.இதில் மிகச் சிறிய கண்கள் உள்ளன.பெண் டால்பின் ஆண் டால்ஃபினைவிடப் பெரியது.

இவை சுவாசிக்கும்போது ஒருவித ஓசை வெளிப்படுகிறது.இதன் ஒலியைக்கொண்டு உள்ளூர் மக்கள் இதனை சூசு(Susu) என அழைக்கின்றனர்.கங்கை நதியில் வாழும் டால்பின்கள் கடலில் வாழும் டால்பின்களைவிட உருவம்,அளவு,குணம் போன்ற பண்புகளில் முழுவதும் மாறுபட்டு உள்ளன.

இந்தியாவில் சிந்து,கங்கை,பிரமபுத்திரா ஆகிய நதிகளில் டால்பின்கள் வாழ்கின்றன.இந்தியா தவிர கங்கை நதி டால்பின்கள் நேபாளம்,பூடான்,பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் நதிகளில் வாழ்கின்றன.கங்கையில் வாழும் டால்பின்கள் சூசு என்றும்,சிந்து நதியில் வாழும் டால்பின்கள் புலான் என்றும் அழைக்கப்படுகின்றன.

கங்கை டால்பின்கள் நீண்ட மூக்கோடு பெரிய தலையைக்கொண்டுள்ளன.இது 8 அடி நீளம்வரை இருக்கும்.இவை சுமார் 100 கிலோ எடையைக் கொண்டிருக்கும்.இவற்றின் மேல் மற்றும் கீழ் தாடையில் 28 கூரிய பற்கள் உண்டு.இவை பாலூட்டி இனம் என்பதால் மனிதனைப்போல் நுரையீரல் மூலமே சுவாசிக்கின்றன.சுவாசிப்பதற்காக 30-50 நொடிகளுக்கு ஒரு முறை நீரின் மேல் மட்டத்திற்கு வந்து செல்லும்.

டால்பினின் கர்ப்பகாலம் 9 மாதங்கள்.புதியதாக பிறக்கும் குட்டியானது சுமார் 65 செ.மீ நீளம்வரை இருக்கும்.குட்டியாக இருக்கும்போது தாய்ப்பாலைக் குடிக்கும்.சற்று வளர்ந்த பிறகு சிறு மீன்கள்,இறால் போன்றவற்றை உண்ணும்.இந்தவகை டால்ஃபின்கள் சுமார் 35 ஆண்டுகள்வரை உயிர் வாழும்.

ஆபத்து:

கங்கை டால்பின்கள் மிக வேகமாக அழிந்து வருகின்றன.கங்கையில் 600, பிரமபுத்திரா நதியில் 400 என்கிற எண்ணிக்கையில் மட்டுமே உள்ளன.இவைகளுக்கு பார்வைக்குறைபாடு உள்ளதால் எதன் மீதோ மோதி இறக்கின்றன.மனிதர்கள் பயன்படுத்தும் படகுகள்,மீன் வலைகளில் தெரியாமல் மாட்டிக் கொண்டு உயிர் இழக்கின்றன.அதுதவிர நீர்மாசு அடைதல்,பாலம் கட்டுதல்,அணை கட்டுதல்,தடுப்பு வெளி அமைத்தல் போன்ற காரணங்களாலும் டால்பின்கள் இறக்கின்றன.

கங்கை டால்பின் வேகமாக அழிந்து வரும்(Endangered) இனமாக உள்ளது.இதனை பிரிவு 1 என்ற பட்டியலில் பாதுகாப்பு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்திய வன உயிரின பாதுகாப்புச் சட்டம் 1972 (Wildlife PProtection Act) இன்படி இதன் மாமிசத்தை உண்ணவோ, வேட்டையாடவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக டால்பின்களின் மீன் எண்ணைக்காக இவை வேட்டையாடப்படுகின்றன. இதனைக் கொல்பவர்கள்மீது கடுமையான தண்டனை வழங்கப்படுகிறது. வேட்டையாடுபவர்களுக்கு ஒன்றுமுதல் ஆறு ஆண்டுகள்வரை தண்டனை வழங்கப்படுகிறது.இருப்பினும் திருட்டுத்தனமாக வேட்டை நடக்கிறது.

கங்கை டால்பின்கள் வேகமாக அழிந்து வருவதைத் தடுக்க வேண்டும் என பீகார் முதல்வர் நிதீஷ்குமார் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தார்.இதன் முக்கியத்துவத்தை உணர்ந்த மத்திய அரசு டால்பின்களை பாதுகாக்க அதனை தேசிய நீர்விலங்காக 2009 ஆம் ஆண்டில் அறிவித்தது. மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி,மீதி இருக்கும் டால்ஃபின்களைப் பாதுகாக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டு வருகிறது.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

இந்திய தேசியச் சின்னங்கள் Copyright © 2014 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 4.0 Unported License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book