19

உலகில் உள்ள பெரும்பாலான நாட்டிற்கு தேசிய பானம் உள்ளது.இந்தியாவிற்கும் தேசிய பானமாக (National Drink) தேநீர் அறிவிக்கப்பட உள்ளது.இத்தகவலை 2012 ஆம் ஆண்டில் மத்திய திட்டக்குழு துணைத்தலைவர் (Planning Commission Deputy Chairman ) மாண்டெக்சிங் அலுவாலியா(Montek Singh Aluwalia) தெரிவித்துள்ளார்.

அசாம் மாநிலத்தில் தேயிலை பயிரிடுவோர் சங்கத்தின் பவளவிழாவில் அவர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றும்போது இத்தகவலை வெளியிட்டுள்ளார் . முதன்முதலாக அசாமில் தேயிலை பயிரிட்டவர் மணிராம் திவான் (Maniram Dewan) என்பவராவார்.இவரை இந்தியாவின் முதல் தேயிலை விவசாயி என்றும்

அழைக்கின்றனர்.இவர் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட சுதந்திரப் போராட்டத் தியாகியும் ஆவார்.இவரின் 212 ஆவது பிறந்த நாள் 17,ஏப்ரல் 2013 ஆம் ஆண்டில் வந்தது.அத்தினத்தில் தேநீர் இந்தியாவின் தேசிய பானமாக அறிவிக்கப்பட உள்ளது என்பதனை அவர் தெரிவித்தார்.இதற்கான அணைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுளதாக தெரிவித்தார்.ஆனால் அறிவிப்பு வெளிவந்ததற்கான தகவல் கிடைக்கவில்லை.

தேநீர்:

மக்களின் அன்றாட வாழ்க்கையில் மிக முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது தேநீர்.ஏழை,பணக்காரன்,கோடீஸ்வரன் என்கிற பாகுபாடு இல்லாமல் அனைவரும் விரும்பிப் பருகும் பானமாக தேநீர் உள்ளது.உற்சாகம் ஊட்டக்கூடிய பானமாக தேநீர் விளங்குகிறது.உலகில் தண்ணீருக்கு அடுத்தபடியாக அதிகமாக அருந்தக்கூடிய பானம் தேநீர்தான் .இந்தியாவில் 83 சதவீதம் மக்கள் தேநீரை விரும்பி அருந்துகின்றனர்.ஆகவே தேநீரைவிட தேசிய பானமாக மாற வேறு எந்த பானத்திற்கும் தகுதி இல்லை என்றே கூறவேண்டிய நிலை உள்ளது.அதேபோல் இந்தியாவின் பொதுவாழ்விலும் தேநீரைப் போல் செல்வாக்கு மிக்க வேறுபானங்களையும் காணமுடிவதில்லை.

உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் தேநீர் விரும்பி அருந்தும் பானமாக உள்ளது.தேநீர் அருந்தவில்லை என்றால் சிலருக்கு எந்த வேலையும் செய்யமுடியாத நிலை ஏற்படும் .காலையில் எழுந்தவுடன் தேநீர் அருந்திவிட்டுத்தான் எந்த வேலையும் செய்ய முடியும் என்ற பழக்கத்திற்கு ஆட்பட்டுவிட்டனர்.தற்போது தேநீர் கடை இல்லாத கிராமமே இல்லை என்கிற நிலை உள்ளது.அந்தளவிற்கு தேநீர் மக்களின் வாழ்க்கையில் இரண்டறக் கலந்துவிட்டது.

தேயிலையை சூடான நீரில் கொதிக்க வைத்து,சர்க்கரை கலந்து அருந்துகின்றனர்.சிலர் கொதிக்க வைத்த நீரை மட்டுமே அருந்துவர்களும் உண்டு.தேநீரை குளிரவைத்து குளிர்பானமாகக் குடிப்பவர்களும் உண்டு.தேநீர் இதயத்திற்கு நல்லது.அதே சமயத்தில் அதிகம் தேநீர் குடிப்பவர்களுக்கு வயிற்றுப்புண்,அஜீரணக் கோளறு போன்றவை ஏற்படுகிறது.

தேயிலைச் செடி என்று கூறினாலும் அது வளரவிட்டால் மரமாக வளரும்.அதனை இடுப்பளவிற்கு வெட்டிவிடுவதால் நிறைய இளந்தளிர்கள் வளர்கின்றன.தேயிலையின் தாவரவியல் பெயர் கேமலியா சினென்சிஸ்(Camellia sinensis) என்பதாகும்.காப்பியில் பல ரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு இருந்தாலும் தேயிலையில் இரண்டு மூன்று ரகங்களுக்கு மேல் இல்லை.தேயிலையில் சீனத் தேயிலை மற்றும் அசாம் தேயிலை என இரண்டு ரகங்கள் உள்ளன.அசாம் தேயிலை பெரிய இலைகளையும்,சீனத் தேயிலை சிறிய இலைகளையும் கொண்டிருக்கின்றன.

தேயிலையின் தாயகம் வடகிழக்கு இந்தியா,வடக்கு பர்மா,தென்மேற்கு சீனா,திபெத்து ஆகிய பகுதிகளைக்கொண்ட நிலப்பகுதியாகும்.இந்தப் பகுதிகளில் இருந்தே உலகின் பல பகுதிகளுக்கு தேயிலை அறிமுகம் செய்யப்பட்டது.இது ஒரு பசுமைமாறத செடியாகும்.கடல் மட்டத்திலிருந்து 1500 மீட்டர் உயரம் உள்ள இடங்கள்வரை வளர்கின்றன.முதிர்ந்த தேயிலைச் செடியின் மேற்பகுதியில் 1-2 அங்குலப் பகுதி கொண்ட இலையுடன் கூடிய குருத்துகளை கிள்ளி எடுக்கின்றனர்.இதனை கொழுந்து என்கின்றனர்.இதுவே தேயிலையாகப் பயன்படுகிறது.

தேயிலையை முதன்முதலாக கி.மு.2737 ஆம் ஆண்டில் சீனாவில் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. தேயிலையிலிருந்து பலவகையான தேநீர் தயாரிக்கப்படுகிறது.குறிப்பாக கருந்தேநீர்,ஊலாங்கு தேநீர்,பசுந்தேநீர்,வெண்தேநீர்,புவார் தேநீர் என ஐந்து வகையான தேநீர்கள் கிடைக்கின்றன.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

இந்திய தேசியச் சின்னங்கள் Copyright © 2014 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 4.0 Unported License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book