9

இந்தியாவின் தேசியக் கனி(National Fruit) மாம்பழம் (Mango) ஆகும். உலகிலேயே மக்கள் அதிகமாக உண்ணும் பழம் மாம்பழம் மட்டும்தான்.இந்தியர்களுக்கு பிடித்த பழங்களில் முதன்மையானது.தமிழ் இலக்கியத்தில் மா,பலா.வாழை ஆகிய மூன்றையும் முக்கனிகள் எனக் கூறப்படுகின்றன.பழம் சாறு நிறைந்தது. பழமாகவும், பழச்சாறாகவும் மற்றும் காயாகவும்,பிஞ்சாகவும் பலவித உணவு வகைகளில் பயன்படுத்தப்படுகிறது.

இந்தியாவின் வேதங்களில் மாம்பழம் பற்றிய குறிப்புகள் உள்ளன.வேதங்களில் கடவுளின் உணவாகக் குறிக்கின்றன.மேங்கோ (Mango) என்ற ஆங்கிலப் பெயர் மாங்காய் என்ற தமிழ்ச் சொல்லில் இருந்து திரிந்து உருவானது எனக் கருதப்படுகிறது.இந்தியாவில் சுமார் கி.மு.4000 ஆண்டிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளன . கி.பி.1800 ஆம் ஆண்டுகளில் ஆங்கிலேயர்கள் மரத்தை ஐரோப்பாவிற்கு அறிமுகம் செய்தனர்.

மாம்பழத்தில் சுமார் 35 சிற்றினங்கள் உள்ளன.மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரகங்கள் வெவ்வேறு குணங்களுடன் கிடைக்கின்றன.உலகிலேயே அதிகப்படியாக விளையக் கூடியதும்,அதிகப்படியாக உண்ணக்கூடிய பழம் என்ற சிறப்பு மாம்பழத்தையே சாரும். மாமரங்கள் பூமியின் மையப்பகுதியின் வெப்பமண்டல பிரதேசங்களில் அதிகம் வளர்கின்றன.இவற்றுள் இந்தியாவை தாயகமாக கொண்ட சிற்றினமான மாஞ்சிபெரா இண்டிகா(Manjifera indica) என்பதே உலகளவில் அதிகளவில் விளைவிக்கப்படுகிறது.

இந்தியாவில் வெவ்வேறு உருவத்தில்,அளவில்,நிறத்தில் நூறுக்கும் மேற்பட்ட ரகங்கள் உள்ளன.மாம்பழத்தின் பெருமையை கவி காளிதாசர் (Kalidasar)கி.மு 4 ஆம் நூற்றாண்டில் தமது கவிதைகளில் புகழ்ந்து பாடியுள்ளார்.மாவீரர் அலெக்ஸாண்டரும் ,சீனப் பயணி யுவான் சுவாங் (Hieun Tsang) ஆகியோரும் மாங்கனியை சுவைத்து புகழ்ந்துள்ளனர்.16 ஆம் நூற்றாண்டில் மொகலாயப் பேரரசர் அக்பர்(Akbar) சுமார் ஒரு லட்சம் மாமரங்களை பீகாரில் உள்ள தர்பங்காவில் வளர்த்தார்.தற்போது இந்த இடம் லாகி பாஹ் என அழைக்கப்படுகிறது.இந்திய தவிர பாகிஸ்தானின் தேசியக் கனியும் மாம்பழமே.

மாமரம்:

மாமரம் 30 முதல் 40 மீட்டர் உயரம்வரை வளரக்கூடியது.இதன் இலை எப்போதும் பசுமையாக இருக்கும். நல்ல நிழல் தரும் மரம்,கொழுந்து இலைகள் கருஞ்சிவப்பாகவும்,வளர வளர பச்சையாக மாறுகின்றன.பூக்கள் கிளை நுனியில் கொத்துக்கொத்தாக இருக்கும்.பூங்கொத்தில் சுமார் 4000 பூக்கள்வரை இருக்கும்.இவற்றில் பெரும்பாலான பூக்கள் ஆண் மலர்களே.மற்றவை இருபால் மலர்களாகும்.குறிப்பாக நிழலில் வளரும் பூக்கள் இருபால் மலர்களாக இருக்கும்.குளிர்ந்த தட்பவெட்பமும்,உலர்ந்த சூழலும் மாமரம் பூப்பதை தூண்டுகிறது.பூக்கள் சிறியதாகவும்,வெண்ணிறமாகவும்,குறைந்த மணத்துடனும் இருக்கும்.

பூக்கள் முடிந்த பிறகு 3 முதல் 6 மாதத்தில் காய்கள் கனிகின்றன.நீண்ட காம்புடன் மரக்கிளைகளில் கனிகள் தொங்கும்.மாங்காய் நன்கு முற்றியவுடன் அதன் நிறம் பச்சையிலிருந்து மஞ்சளாக மாறும்.பழத்தின் சதையும் உள்ளிருந்து வெளி நோக்கி மஞ்சளாக மாறும்.முழுவதும் பழுக்காமல் பாதியளவு மஞ்சளாக இருக்கும்போதே இவை அறுவடை செய்யப்படுகின்றன.

பழுத்த மாம்பழம் மஞ்சள்,ஆரஞ்சு,சிகப்பு ஆகிய நிறங்களில் பிரகாசிக்கும்.தரத்தைப் பொறுத்து கனியின் நிறம் இருக்கும்.பொதுவாக சூரியனின் ஒளிபடும்பாகங்கள் சிவப்பாகவும்,மற்ற இடங்கள் மஞ்சள் நிறத்திலும் இருக்கும்.பழுத்த பழம் இனிய மணம் கொண்டிருக்கும்.பழத்தின் நடுவே கடின ஓடுடன் கூடிய ஒற்றை விதை இருக்கும்.ஓட்டினுள் விதைப் பருப்பு இருக்கிறது.ரகத்தைப் பொறுத்து இந்த ஓடு நார்களுடன் அல்லது வழுவழுப்பாக இருக்கும்.மாங்கொட்டை ரகத்திற்கு தகுந்தாற்ப் போல் அளவு மாறுபடும்.சில ரகங்களின் பழங்கள் 2.5 கிலோ கிராம் எடை கொண்டிருக்கும்.சுவையும் ரகத்திற்குத் தகுந்தாற்போல் மாறுபடும்.தற்போது பீகார் மாநிலத்தில் விதையில்லா மாம்பழத்தை உருவாக்கியுள்ளனர்.

பயன்கள்:

மா இலைகள் மங்கள நிகழ்ச்சிகள்,விஷேச நாட்கள்,வாயிலில் தோரணம் கட்ட பயன்படுகிறது.மாம்பழம் அப்படியே பழமாக உண்கின்றனர்.பழங்களை துண்டுகளாக்கி உண்பது இந்தியர்களின் வழக்கம்.பழத்தை கூழாக்கி மாம்பழச் சாறாக பருகுகின்றனர். சாருடன் சர்க்கரை சேர்த்து மிட்டாய் தயாரிக்கின்றனர்.பாலுடன் கலந்து குளிர்பானமாகவும் பருகுகின்றனர்.ஐஸ்கிரீம் தயாரிக்கவும் பயன்படுகிறது. மாம்பழத்தையும்,தயிரையும் கலந்து லஸ்ஸி தயாரிக்கின்றனர்.

மாங்காயும் உலகமெங்கும் உண்ணப்படுகிறது.மாங்காயைக் கொண்டு குழம்பு, ஊறுகாய்கள்,பச்சடிகள் தயாரிக்கின்றனர். மாங்காய் சட்னியை பல நாடுகளில் தயாரிக்கின்றனர்.மாங்காயை உலர்த்தி அதனை அரைத்து ஆம்ச்சூர் என்ற சமையல் பொடியைத் தயாரிக்கின்றனர்.சாம்பார் மற்றும் குழம்புகளில் புளிக்குப் பதிலாக இப்பொடியைப் பயன்படுத்துகின்றனர்.

மாம்பழம் சத்துகள் நிறைந்த பழம்.சாறு நிறைந்த இப்பழத்தில் வைட்டமின் A,C,D ஆகியவவை உள்ளன.தாதுப்பொருட்கள்,என்சைம்கள், ஆகியவையும் அடங்கியுள்ளன. இவை சீரணத்துக்கு உதவும்.மாம்பழ சதையில் 15 சதவீதம் சர்க்கரை, 1 சதவீதம் புரதம் உள்ளது. பெரும்பாலான மாம்பழ வகைகள் இனிப்பாகவே இருக்கும்.சில மட்டுமே சற்று புளிப்பாக இருக்கும்.

மாங்காயில் பால் இருக்கும்.இதில் அமிலப்பொருட்கள் இருக்கின்றன.இது தோலில் பட்டால் சிலருக்கு எரிச்சலும்,கொப்புளங்களும் உண்டாகும்.தோலை உண்டால் பலருக்கு உடல் உபாதைகள் ஏற்படுவதுண்டு.மாங்காய் தோலில் பல ஆண்டிஆக்ஸிடண்ட் பொருட்கள் உள்ளன.ஆகவே தோலை பதனிட்டு ஆண்டிஆக்ஸிடாண்ட் உணவுடன் சேர்த்துக் கொள்ளலாம்.

இந்திய மாம்பழங்களை உண்பதால் வயிற்றுத் தொல்லைகள் சரியாகும்.ரத்த இழப்பு நிற்கும்,இதயம் நலம் பெறும் என நம்பப்படுகிறது.மாங்காயில் மாவுச்சத்து அதிகம்..இதுதவிர சிட்ரிக்,ஆக்ஸாலிக் போன்ற அமிலங்களும் உள்ளன.இது பித்த நீர் சுரக்கவும்,வயிற்றை கிருமிகளிலிருந்து பாதுகாக்கிறது.மிருதுவான முற்றாத காயில் பெக்டின் என்ற பொருள் உள்ளது.இது பேதியை குறைக்கும்.மாம்பழங்களில் மேலும் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

இந்திய தேசியச் சின்னங்கள் Copyright © 2014 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 4.0 Unported License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book