அரபுக் கதைகள் சிலவற்றை
….அழகாய்ச் சொன்னேன் மகளுக்கே,
விரும்பி அவளும் ஆவலுடன்
….விழிகள் விரியக் கேட்டனளே!
‘அரிய பொருள்கள் பலவுண்டு,
….அப்பா, இந்தக் கதைகளிலே,
பரந்து விரிந்த நம்ஊரில்,
….பெரிதாய்ச் சொல்ல எதுவுமில்லே!’

மகளின் ஏக்கம் நியாயம்தான்,
….மாயா ஜாலக் கதைகளைப்போல்
சகடை உலகைச் சுவையாக்க
….சற்றே தேவை அற்புதங்கள்,
சுகமும் கூடும், சுமைகுறையும்,
….சலங்கை கட்டும் தினசரிநாள்,
மிகவும் ஆசை எழுந்தென்ன?
….மந்தி ரத்தால் மாவிழுமா?

சோர்வு மிகுந்த அந்நேரம்
….சன்னல் அருகே ஓர்ஆல்பம்,
ஆர்வத் துடனே அதைஎடுத்து
….ஆவல் பெருகச் சிலநிமிடம்
பார்வை யிட்டேன், அவைஎந்தன்
….பால்ய நாளின் பதிவுகளாம்,
சீர்நி றைந்த படங்களினால்
….சிதறிப் போச்சு நிகழ்காலம்!

அஞ்சு நிமிஷம் அதற்குள்ளே
….அரைக்கால் சட்டை வயதினிலே
நெஞ்சு நிறையத் தான்வாழ்ந்து
….நானும் திரும்பி வந்தேனே,
பஞ்சு போலே லேசாகிப்
….பறக்கும் மனசு அதனாலே!
கொஞ்சம் என்ன, ஏராளம்
…கண்டேன் கண்டேன் அற்புதமே!

***

License

Icon for the Creative Commons Attribution-ShareAlike 4.0 International License

ஆடலாம் பாடலாம் - சிறுவர் பாடல்கள் Copyright © 2015 by என். சொக்கன் is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book