பேரரசர் அக்பர் வாழ்க்கையில் நடந்ததாகச் சொல்லப்படும் ஒரு கதை, பாடலாக இங்கே:

அக்பரும் ஒருநாள் தன்னுடைய
….அழகிய குதிரை மேலமர்ந்தார்,
திக்குகள் எட்டும் நடுநடுங்க
….திமிருடன் பாய்ந்தது அக்குதிரை
கொக்குடன் மீன்கள் நடனமிடும்
….குளமதைத் தாண்டி அவர்சென்றார்,
சிக்கிய மிருகம், பறவையெல்லாம்
….சீக்கிரம் வேட்டை ஆடிவிட்டார்!

சூரிய ஒளியும் மங்கியது,
….சுந்தர மாலை மயக்கியது,
தூரிகை கொண்டு யார்வரைந்தார்
….துள்ளிடும் இயற்கை ஓவியத்தை?
கூரிய அம்பைப் புறமொதுக்கிக்
….கும்பிட அக்பர் மண்டியிட்டார்,
சீரிய இறையைத் தொழுதபடி
….சிந்தையில் அன்பைக் குவித்திட்டார்!

அப்பொழு தங்கே ஒருபெண்ணும்
….அலறிய படியே ஓடிவந்தாள்,
ஒப்பெதும் இல்லா அவள்கணவன்,
….உத்தமன் தன்னைத் தேடிவந்தாள்,
தொப்பென அவளும் அக்பர்மேல்
….துவண்டுவி ழுந்தாள், பின்எழுந்தாள்,
அப்புறம் எங்கோ விரைந்துசென்றாள்
….அவளது சுவடே காணவில்லை!

தொழுதுமு டித்த மன்னவரும்
….துள்ளிஎ ழுந்தார், அக்கணத்தில்,
அழுகைம றந்து சிரிப்போடு
….அம்மகள் வந்தாள் கணவனுடன்.
கழுகெனக் கோபப் பார்வையுடன்
….கனலென அக்பர் கர்ஜித்தார்,
‘கொழுப்பது உனக்கு அதிகமுண்டோ?
….கொற்றவன் என்மேல் ஏன்விழுந்தாய்?’

‘கணவனைத் தேடி இங்குவந்தேன்,
…காட்டினில் பதறி அலைந்திட்டேன்,
கணமதும் வேறு கருத்தில்லை,
….காதலுடன் நான் திரிந்திட்டேன்.
குணம்நிறைக் கொழுநன் எங்கென்று
….குமுறிடும் மனத்தால், நானும்மை
வணங்கிட வில்லை, மேல்விழுந்தேன்,
….வஞ்சியை மன்னியும்’ அவள்சொன்னாள்.

‘நாதனைத் தேடும் நேரத்தில்
….நடந்தவை ஏதும் நானறியேன்,
காதலில் மனமும் குவிந்ததனால்
….கருத்தினில் வேறு கவனமில்லை!
பேதமில் இறைவன் தொழுகையிலும்,
….பிள்ளைகள் நமக்கு அந்நிலையே,
ஆதலி னால்நீர் எனைக்கண்ட
….அதிசயம் எனக்குப் புரியவில்லை!’

சுருக்கெனத் தைக்கிற அப்பெண்ணின்
….சொற்களைக் கேட்ட அக்பருக்குக்
கருவமும் கலைந்து போனதுவாம்,
….கண்களில் நீர்தான் பொங்கியதாம்,
ஒருவனைத் தொழுது வணங்கையிலே
….உலகினை மறத்தல் தான்முறையாம்,
தெருத்தெரு அலையும் நம்மனத்தின்
….திரிதலைத் தடுத்தல் பெரும்தவமாம்!

***

License

Icon for the Creative Commons Attribution-ShareAlike 4.0 International License

ஆடலாம் பாடலாம் - சிறுவர் பாடல்கள் Copyright © 2015 by என். சொக்கன் is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book