குளிர்ந்த யமுனைக் கரையினிலே
….குழந்தைகள் பற்பலர் ஆடிவந்தார்,
வளியும் அவரது தோழனென
….வலமும் இடமும் சுற்றியது,
களிப்பாய் ஆடிப் பிள்ளைகளும்
….களைத்தே நீரைப் பருகவந்தார்,
உளியால் கொத்திய சிலையைப்போல்
….உருண்டும் புரண்டும் விழுந்துவிட்டார்!

நதிநீர் விஷமாய் ஆனதென
….நைந்தே துடித்தார் மக்களெல்லாம்
’கொதிக்கும் நஞ்சைத் தன்னிடத்தில்
….கொண்டுள நாகம் யமுனையினை
அதிரச் செய்யும், விஷமாக்கும்
….அந்தோ கொடுமை, என்சொல்ல!
கதிநீ தானே கா’என்று
….கண்ணன் காலில் விழுந்துவிட்டார்!

நீலக் கண்ணன் அதுகேட்டு
….நெஞ்சில் கோபம் கொண்டெழுந்தான்,
ஆலம் அணையாய்க் கொண்டவனும்
….அம்பைப் போலே பாய்ந்துவந்தான்,
பாலன் அல்ல இப்போது,
….பாறை பிளக்கும் இடியானான்!
சாலப் பெருத்த மரமொன்றில்
….சட்டென அவனும் ஏறிவிட்டான்!

நதியின் நடுவே உக்கிரமாய்
….நாகம் ஒன்று வாலாட்ட,
குதித்தான் பாம்பின் படம்மீது,
….குலைந்தே நடுங்கிய தந்நாகம்,
மதிகெட் டந்தக் காளிங்கன்
….மதயா னைபோல் சத்தமிட்டான்,
மிதித்தே அவனை முடமாக்கி,
….மிளிர்ந்தே கண்ணன் ஆடுகிறான்!

நாகத் தலைகள் அரங்காக,
….நஞ்சின் உமிழ்வே ஒலியாக,
வேகக் குதிப்பே தாளமென,
….வெற்றிக் களிப்பே பாடலென,
தாகம் கொண்ட நன்னிலமும்
….தண்ணீர்த் துளியை உறிஞ்சுதல்போல்,
மேகக் கூட்டம் மலைத்தொடரின்
….மேலே சென்று தோய்வதுபோல்…

கண்ணன் ஆட்டம் தாளாமல்
….கதறித் துடித்தான் காளிங்கன்,
’உண்ணும் நீரில் இனிமேல்நான்
….ஒன்றும் விஷமம் செய்வதில்லை,
அண்ணல் உன்றன் அபயம்’என்றே
….அவனும் சொல்லக் கண்ணனும்தான்
தண்ணீர் மொத்தம் தூய்தாக்கித்
….தரணிக் களித்தே சிரித்துநின்றான்!

***

License

Icon for the Creative Commons Attribution-ShareAlike 4.0 International License

ஆடலாம் பாடலாம் - சிறுவர் பாடல்கள் Copyright © 2015 by என். சொக்கன் is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book