கணக்குப் பாடம் நடத்துகிற
….கண்ணன் என்ற ஆசிரியர்,
இணக்க மாகப் பேசிடுவார்,
….எல்லாம் அழகாய்ப் பயிற்றுவிப்பார்,
வணக்கம் சொல்லும் மாணவர்க்கு
….வாஞ்சை யாகச் சிகைகலைப்பார்,
மணக்கும் பள்ளி முழுவதுமே
….மஞ்சள் கொத்தாய் அவர்பெருமை!

பள்ளிக் காரும் தாமதமாய்
….பைய வந்தால் மட்டுமவர்
துள்ளிக் கோபம் கொண்டிடுவார்,
….துவைப்பார் பிரம்பால் அவர்களைத்தான்,
‘வெள்ளிக் காசுக் கிணையாகும்
….வெற்றிக் காசு நேரம்தான்!
அள்ளி அதனை வீணாக்கல்
….அந்தோ! பெரிய பிழையாகும்!

’சொல்லிச் சொல்லிப் பயனென்ன,
….சுந்தர் என்ற ஒருபையன்
எல்லா நாளும் தாமதமாய்
….இங்கே வந்து அடிபடுவான்,
ஒல்லிப் பிரம்பு தாளாமல்
….உடைந்தே நைந்து போனாலும்
பல்லைக் காட்டி இளித்திடுவான்,
….’பரவா யில்லை சார்’என்பான்.

ஒருநாள் சுந்தர் ரயிலினிலே
….ஊருக் கெங்கோ புறப்பட்டான்,
இருபை, பெட்டி ஒன்றேந்தி
….ஏழு மணிக்குக் கிளம்பிட்டான்,
கருவத் தோடு மெதுவாகக்
….காளை அவனும் நடந்துவர,
தருணம் மீறிப் போனதுவே,
….தாண்டிச் சென்றது ரயிலும்தான்!

வண்டி சென்று விட்டதென
….வாடி அவனும் நிற்கையில்
அண்டி அவன்தோள் பற்றியவர்,
….அடடா! கண்ணன் ஆசிரியர்!
’கண்ணா, நீயும் வரும்வரையில்
….காத்துக் கிடக்கார் யாரெவரும்,
தண்ணீர் தேங்கச் சேறாகும்,
….தாவிச் சென்றால் ஆறாகும்!’

’நேரம் கடந்து நீவந்தாய்,
….நிற்க வில்லை உன்வண்டி,
வாரம் மாதம் தாமதமாய்
….வரினும் இருக்கும் உன்பள்ளி,
ஈரப் பிரம்பால் அடித்தாலும்
….என்றும் உன்னை வரவேற்கும்!
தீரத் தீர இவ்வாழ்க்கை
….திரும்பா தென்றும், அறிந்துகொள்வாய்!’

அடியால் படியா அவன்மனமும்
….அன்புப் பேச்சில் மாறியதே,
‘படிப்பில் கவனம் வைப்பதுபோல்
….பாங்காய்ப் பொழுதை ஆண்டிடுவேன்,
நொடிகள் தின்னும் தாமதமாம்
….நோய்என் வாழ்வில் இனிஇல்லை!’
துடிப்பாய்ச் சொல்லி அவனெழுந்தான்,
….துயரம் வென்ற திருமகனாய்!

***

License

Icon for the Creative Commons Attribution-ShareAlike 4.0 International License

ஆடலாம் பாடலாம் - சிறுவர் பாடல்கள் Copyright © 2015 by என். சொக்கன் is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book