சுப்பன் என்ற விவசாயி,
….சுமதி என்பாள் அவன்மனைவி,
குப்பன் என்ற மகனோடு,
….குடிசை ஒன்றில் வாழ்ந்திருந்தார்,
தப்புத் தண்டா இல்லாத
….தனயன் அந்தக் குப்பனுமே
அப்பா செய்யும் பணிகளிலே
….அவ்வப் போது உதவிடுவான்!

ஒருநாள் சுப்பன் தன்பசுவை
….உயர்ந்த விலையில் விற்பதற்குத்
தருணம் இதுவாம் எனஎண்ணி
….தானாய்ச் சென்றான் சந்தைக்கு,
‘வருவேன் நானும் உன்னோடு’
….வாஞ்சை யாக மகன்சொல்ல
இருவர் உடனே புறப்பட்டார்,
….எட்டித் தாவும் பசுவோடு!

எதிரில் வந்த ஒருபெண்ணும்
….இகழ்ந்தே சிரித்துச் சொன்னாளாம்,
‘குதிரை போலே மாடிருக்க,
….கொளுத்தும் வெயிலில் நடப்பதுஏன்?’
இதிலே நியாயம் உண்டென்று
….இவரும் உணர்ந்து கொண்டாராம்,
குதித்தே பசுவின் மேலேறிக்
….குஷியாய்ப் பயணம் சென்றாராம்!

அடுத்து வந்த ஒருமனிதர்
….அழுகைக் குரலில் கேட்டாராம்,
‘கொடுமை அன்றோ ஒருபசுவில்
….கொழுத்த இருவர் ஏறுவது?
அடுக்காக் குற்றம் செய்துவிட்டீர்!
….ஆஹா! தெய்வம் பொறுத்திடுமா?’
சுடுசொல் கேட்டுச் சட்டென்று
….சுப்பன் கீழே இறங்கிவிட்டான்!

கொஞ்சத் தொலைவில் இன்னொருவர்
….கோபக் குரலில் இடித்துரைத்தார்,
‘கொஞ்சி உன்னை வளர்த்தவனும்
….கொதிக்கும் தரையில் நடந்துவர,
பஞ்சுப் பொதிபோல் இளைஞன்நீ
….பசுவின் மேலே ஊர்வதுஏன்?’
அஞ்சிக் குப்பன் இறங்கிவிட்டான்
….அப்பன் பசுவில் ஏறிவிட்டான்!

பின்னர் ஒருவர் நடந்துவந்தார்
….பேச்சில் மூர்க்கம் தெளித்ததுகாண்,
‘கன்னிப் பையன் கால்வருந்த,
….காளை உனக்கேன் வாகனமோ?’
என்றே அவரும் கேட்டிடவே
….இங்கே இருவர் குழம்பிநின்றார்,
இன்னும் எதைத்தான் செய்வதுவோ?
….எதுவும் புரியா நிலையாச்சு!

’சும்மா நடந்தோம், அதுகுற்றம்
….சுகமாய் ஏறிச் செல்லென்றார்,
அம்மாப் பசுவின் மேலேற
….அதுவும் குற்றம் என்கின்றார்
வம்பும் வேண்டாம் இனிமேலே
….வசையே வேண்டாம்’ என்றவர்கள்
தம்கை யாலே அப்பசுவைத்
….தாங்கி நடந்தார் சந்தைக்கு!

உலகம் சொல்லும் பலநியாயம்
….ஒன்றுக் கொன்று பொருந்தாது,
கலங்கிக் குழம்பித் திரும்பிவிட்டால்
….கஷ்டம் நமக்கே, பிறர்க்கேது?
பலரும் சொல்லும் கருத்தெல்லாம்
….பாங்காய்க் கேட்டு, அதன்பின்னே
நலனைத் தருமோர் இன்வழியை
….நாமே தேர்ந்து நடந்திடணும்!

License

Icon for the Creative Commons Attribution-ShareAlike 4.0 International License

ஆடலாம் பாடலாம் - சிறுவர் பாடல்கள் Copyright © 2015 by என். சொக்கன் is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book