பள்ளி செல்லும் வழியினிலே
….பாறை ஒன்றைக் கண்டேனே,
அள்ளி வைத்த இருட்டைப்போல்,
….அதுவும் கருப்பாய் இருந்ததுவே,
கிள்ளிப் பார்த்தால் கைவலிக்கும்,
….கிட்டப் போனால் பயமெடுக்கும்,
கள்ளத் தனமாய் அதைப்பார்த்துக்
….கடந்தே தினமும் சென்றிடுவேன்!

ஒருநாள் அந்தப் பாறையின்கீழ்
….ஒளியின் கீற்றாய்ச் சிறுசெடிதான்,
உருவம் காட்டிச் சிரித்ததுவே,
….உலகைப் பார்த்து மகிழ்ந்ததுவே,
தெருவின் ஓரம் அதைக்கண்டேன்,
….திகைத்தே பார்த்தேன் அச்செடியைக்,
‘கருவம் கொண்ட பாறைஉனைக்
….கடிக்கும், நசுக்கும், அச்சச்சோ!’

அதனைக் கேட்ட அச்செடியும்
….அழகாய் மீண்டும் சிரித்ததுவே,
‘பதற்றம் வேண்டாம் என்அண்ணா,
….பாறைக் குள்ளும் ஈரமுண்டு!
இதனைத் தோழன் என்றேநான்
….ஏற்றுக் கொண்டேன் ஏற்கெனவே,
இதமாய்ப் பாறை உதவியுடன்
….இனிதே வளர்வேன் மிகப்பெரிதாய்!

சிலமா தத்தில் அச்செடிதான்
….செழிப்பாய்ச் சிறப்பாய் வளர்ந்ததுவே,
கலக்கம் இன்றிப் பாறையுடன்
….கைகள் கோத்து நின்றதுவே,
பலத்தை எதிர்க்கப் பலம்வேண்டாம்,
….பணிவும் நட்பும் போதுமென்று
நலமாய்ப் பாடம் சொன்னதுவே,
….நானும் கேட்டுக் கொண்டேனே!

 

License

Icon for the Creative Commons Attribution-ShareAlike 4.0 International License

ஆடலாம் பாடலாம் - சிறுவர் பாடல்கள் Copyright © 2015 by என். சொக்கன் is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book