தொட்டிச் செடிகள் நான்குக்குத்
….தோட்டம் பார்க்க ஆசையாம்,
இட்டப் பட்டுப் பயனில்லை,
….எட்டி நடக்கக் காலில்லை!

சன்னல் ஓரம் நின்றுதினம்
….சாலை தன்னைப் பார்த்தனவாம்,
‘மின்னல் போலே பாய்ந்தொருநாள்
….மிளிரும் தோட்டம் செல்வோமா?’

அப்போ தங்கே ஒருதேனீ
….அழகாய்ப் பறந்து வந்ததுவாம்,
சப்புக் கொட்டித் தேனுண்ணச்
….சம்மணம் போட்டு அமர்ந்ததுவாம்!

‘தேனை உண்ணும் அண்ணாஉன்
….திகழும் சிறகை எங்களுக்கு
வானைத் தாண்டிப் பறந்திடவே
….வாட கைக்குத் தருவாயா?

தோட்டம் சென்று நாங்களெல்லாம்
….துன்பம் இன்றி வாழ்ந்திடுவோம்,
வாட்டம் நீங்க உதவிடுவாய்,
….வாழ்வாய் நீபல நூற்றாண்டு!’

என்றே செடிகள் சொன்னவுடன்
….எழிலாய்த் தேனீ சிரித்ததுவாம்,
சன்னக் குரலில் விஷயத்தைச்
….சங்கீ தம்போல் சொன்னதுவாம்!

‘தோட்டம் என்று தனியாகத்
….தொகுத்தே பலகை மாட்டணுமா?
கூட்ட மாக நீங்களெல்லாம்
….குழுமி நின்றால் போதாதா?

இந்தச் சாலை வழிநடக்கும்
….எல்லா சனமும் உங்களைதான்
சுந்தரத் தோட்டம் என்றெண்ணிச்
….சுகமாய்ப் பார்த்துச் செல்கின்றார்!

எங்கோ செல்லும் ஏக்கத்தில்
….இருக்கும் இடத்தை இகழாதீர்,
உங்கள் குணத்தை மறவாமல்
….உணர்ந்தால் மகிழ்ச்சி உமதாகும்!’

என்றே தேனீ சொன்னமொழி
….இதமாய் இருந்தது செடிகளுக்கு,
பொன்னைப் போலவை புன்னகைக்கப்
….புதிதாய்த் தோட்டம் பிறந்ததுவே!

***

License

Icon for the Creative Commons Attribution-ShareAlike 4.0 International License

ஆடலாம் பாடலாம் - சிறுவர் பாடல்கள் Copyright © 2015 by என். சொக்கன் is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book